அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. அதே போல ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றைச் செய்தால் அதனை எடுத்துரைக்காதவர்களும் அல்ல. இதுவே எமது நிலைப்பாடு. அதே போலவே விவசாய அமைச்சை விமர்சித்தது மாத்திரமல்ல, இன்றைய சூழலில் அவரைத் தட்டிக் கொடுத்து நிலைமையினை சீராக்க வேண்டிய பாரிய பொறுப்பும் எங்களுக்குள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாம் கமத்தொழில் அமைச்சு, நீர்பாசன அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். ஒன்றோடொன்று தொடர்புடைய மிக முக்கியமான அமைச்சுகள் இவைகளாகும்.
எனது உரையினை ஜனாதிபதி அவர்களின் வரவு செலவுத்திட்ட உரையின் வாசகங்கள் சிலவற்றுடன் இணைத்து ஆரம்பிப்பது பொருத்தம் என நினைக்கிறேன். சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது நாடு குறித்து எம்மால் திருப்திப்படுத்த முடியுமா? நாம் எங்கே தவறுவிட்டோம். தவறிய இடம் எது என்று அவர், வினவினார்.
அது மாத்திரமல்ல அப்போது ஆசியாவில் யப்பானுக்கு அடுத்த படியாக தனிநபர் வருமானத்தில் இரண்டாம் இடத்தில் நமது நாடு இருந்ததாகவும் கூறினார்.
அதே போன்று ‘இரந்து பெற்று விருந்து உண்ணும்’ போக்கே எமது போக்காக இதுவரை இருந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார். இது உண்மையை உணர்த்துகின்ற உரையாகவே பார்க்கிறேன். ஆனால் இவற்றிற்கு யார் பொறுப்பு. மக்களா, இல்லை சுதந்திரம் பெற்ற காலம் முதல் மாறிமாறி வந்த அரசாங்கங்களா என்பதை எமது ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் கூற மறந்துவிட்டாரா, இல்லை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டாரா என்பது எனக்குத் தெரியாது.
எமது நாடு நான்கு புறமும் கடலால் சூழப்பட்டது. அதனால், மீன்பிடித்துறையும் கமத்தொழிலும் எமது மக்களது பிரதான வருமான மார்க்கமாகும். ஆனால், நாம் எமது விவசாயம், மீன்பிடி ஆகியவற்றில் எமது முழு இயலளவையும் பயன்படுத்தியிருக்கின்றோமா? அல்லது பயன்படுத்துகிறோமா என்றால், கிடைக்கும் பதில் இல்லை என்பதே ஆகும்.
சின்னஞ்சிறிய தீவுக் கூட்டங்களைக் கொண்ட மாலை தீவு தனது கடல் வளத்தை முழுமையாகப் பயன்படுத்துகின்றது. நாம் நாற்புறமும் கடல் சூழ்ந்திருந்தும் பற்றாக்குறையான அன்னியச் செலாவணியைச் செலவழித்து வேறு நாடுகளிலிருந்து ரின் மீன், மாசி, கருவாடு என்பவற்றை இறக்குமதி செய்கிறோம். இதே போலவே விவசாயத்துறைக்கும் போதுமான நிலவளம், நீர்வளம்;, அதற்கு உகந்த காலநிலை இருந்தும் நாம் அரிசிக்காக அயல்நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றோம். இந்நிலைமைக்கு யார் காரணம்.
பராக்கிரமபாகு மன்னன் எமது நாட்டு நீர்வளம் குறித்து கூறிய கூற்று ஒன்று எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ‘எமது நாட்டின் நதிகளினது நீரில் ஒரு சொட்டு நீர் தானும் கடலுக்குச் செல்வதைத் தடுத்து கமத்தொழிலுக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று சூழுரைத்தார். அதனைச் செயல்படுத்தியும் காட்டினார். குளம் கட்டி வளம் பெருக்கி எமது நாட்டின் விவசாயத் துறையை தன்னிறைவடைந்த நாடாக மாற்றினார்.
அன்று பராக்கிரமபாகு மன்னனால் முடியுமாக இருந்தது இன்று ஏன், எம்மால் முடியவில்லை என்று ஆட்சியாளர்கள் உங்களது மனச்சாட்சியிடம் வினாவியுள்ளீர்களா? பராக்கிரமபாகு மன்னன் நாட்டையும், தன் நாட்டு மக்களையும் உளமார நேசித்தார். அதன் விளைவுதான் அவரது செயலில் இருந்தது. உங்களைப் போன்று போலித் தேசியவாதியாக பராக்கிரமபாகு மன்னன் இருக்கவில்லை. பராக்கிரமபாகு மன்னன் மாத்திரமல்ல நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களும் நாட்டின் நீர்வளத்தை சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்து விவசாயத் துறையில் பூரண வெற்றி கண்டனர். வடக்கு, கிழக்கு வடமத்தி, வட மேற்கு என்று அனைத்த மாகாணங்களிலும் இருக்கும் குளங்கள் யாவும் மன்னர்கள் காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்ட குளங்களே ஆகும். அப்போது ஊழல், இலஞ்சம், கொள்ளை என்பன இருக்கவில்லை. அதனால் செயற்றிட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால், அவர்களால் முறையாகப் பேணப்பட்ட நீர் முகாமைத்துவத்தைக் கூட எம்மால் முறையாகச் செய்ய முடியவில்லை. மழைக்காலத்தில் குளங்களின் வான் கதவுகளைத் திறக்கின்றோம். நீர் வடிந்தோடியதும் வான்கதவுகளைப் பூட்டுகின்றோம். இறுதியில் பாசனத்துக்கு நீரில்லை. மழை வந்தால் வான் கதவைத் திறந்து மழை நின்றவுடன் வான் கதவைப் பூட்டுவதற்கு ஒரு அமைச்சு, ஒரு அரசாங்கம் தேவையா?
எம்மால் முறையாக நீர் முகாமைத்துவம் செய்ய முடிந்திருக்குமானால் தென்னாசியாவின் தானியக் களஞ்சியமாக நமது நாடு மிளிர்ந்திருக்கும்.
ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால், குறிப்பாக இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையானது நலிவுற்று, நோயாளி நிலையில் இருந்த விவசாயத்துறையினை சமாதி கட்டிய துறையாக மாற்றிவிட்டது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சுமையை புழுவுயு புழு ர்ழுஆநு எனும் அறகலயவிற்கு ஆதார சுருதியாகியது. இதனால் கோட்டா ஜனாதிபதி பதவியை இழந்தது மாத்திரமல்ல, பிரதமர் தனது பதவியை இழக்க வேண்டியும், நிதி அமைச்சர் நாடு கடக்கவும் காரணமாகியது.
எமது விவசாயத்துறையை, மீன்பிடித்துறையை, நீர்ப்பாசனத் துறையை இன்றைய சரிவிலிருந்து மீட்டு கடந்த மன்னராட்சிக் காலங்கள் போல தன்னிறைவு அடையக்கூடிய வாய்ப்பு இன்னமும் குறைந்துவிடவில்லை. ஆனால், அதற்கு உங்களுக்கு உண்மையான அர்ப்பணிப்பும் உண்மையான தேசாபிமானமும் வேண்டும். கமிசன், தரகுப்பணம், இலஞ்சம் என்பவற்றையே இலக்கு வைத்துள்ள உங்களால், மக்களை உசுப்பேற்றுவதற்கு மாத்திரம் போலித் தேசியவாதம் பேசும் உங்களால் இதனை ஏற்படுத்த முடியாது என்பதை இந்த உயரியசபையில் மிகுந்த கவலையுடன், பதிவு செய்கின்றேன்.
நாட்டில் இவ்வளவு அக்கப்போர் நடைபெறும் இன்றைய சூழ் நிலையிலும் கூட பல துறைகளில் கமிசன்களும், தரகுப் பணங்களும் இடம்பெறுவதாக இந்த உயரிய சபையில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதனை வெறுமனே புறந்தள்ளி ஒதுக்கிவிடாதீர்கள் இன்னமும் இவை இப்படிய நடைபெற்றால் எப்படி நாம் இத்துறைகளில் தன்னிறைவடைய முடியும்.
எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் கமத்தொழில் துறையில் பாவனையிலுள்ளது. இதில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் இரு போகப் பயிர்ச்செய்கைக்கு உரிய நிலங்களாகும். கடந்த கால இரசாயன உரக் கொள்கையினால் எமது விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். தமது தங்க ஆபரணங்களை தனியாரிடமோ, வங்கிகளிடமோ, அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ அடகு வைத்து விவசாயத்துறையில் முதலிட்டு அறுவடையின் போது அவற்றை மீட்டெடுத்து மீணடும் முதலீட்டுக்காக அவற்றைப் பயன்படுத்துவதே வழக்கமாகும்.
ஆனால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தாம் பெற்ற கடனையோ, தாம் அடகு வைத்த தம்முடைய தங்க நகைகளையோ மீளப் பெற முடியாது உள்ளனர். நமது நாட்டின் நிலைதான் நமது நாட்டு மக்களுக்கும். நமது நாடு தாம் பெற்ற கடனை எவ்வாறு மீளச் செலுத்த முடியாதுள்ளதோ அவ்வாறே தாம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாது, தாம் அடகு வைத்த நகைகளை மீளப் பெறமுடியாது. அனைத்தையும் இழந்து பொருளாதார நிலையில் அநாதையாகியுள்ளனர் நம் மக்கள்.
எனினும் தற்போது உரக் கொள்கைளில் தளர்வு ஏற்பட்டு இரசாயன உர விநியோகம் நடைபெறுகின்றது. ஒரு அந்தர் இரசாயன உரத்தினைக் கொள்வனவு செய்வதற்கு விவசாயி பத்தாயிரம் ரூபாவுக்கும் சற்றுக் கூடுதலாக செலவு செய்யவேண்டியுள்ளது. இந்த உர விநியோகத்தில் ஆங்காங்கே ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டாலும் இந்த உர விநியோகக் கொள்கையை செயற்படுத்திய அமைச்சரையும், அரசையும் நான் பாராட்டாவிட்டாலும் தட்டிக் கொடுக்கின்றேன். இன்னமும் திறம்படச் செயற்படுங்கள் உங்களைப் பாராட்டுகிறேன்.
இதிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. அதே போல ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றைச் செய்தால் அதனை எடுத்துரைக்காதவர்களும் அல்ல. இதுவே எமது நிலைப்பாடு. அதே போலவே விவசாய அமைச்சை விமர்சித்தது மாத்திரமல்ல, இன்றைய சூழலில் அவரைத் தட்டிக் கொடுத்து நிலைமையினை சீராக்க வேண்டிய பாரிய பொறுப்பும் எங்களுக்குள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரிய குளங்கள், சிறிய குளங்கள் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். நான் முன்பு கூறியது போல நீர்ப்பாசன அமைச்சில் முறையான நீர் முகாமைத்துவக் கொள்கைக்கான திட்டமிடல் செயற்பாடுகள் அவசியம் மேற்கொள்ளப்படவேண்டும். எமது நாட்டில், பொங்கிப் பிரவாகித்து ஆர்ப்பரித்துவரும் நதிகளின் நீர் அனைத்தும் பாசனத் துறைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
வெறுமனே நதிகள் கடலில் கலப்பதுதான் நியதி என்ற பத்தாம் பசிலித்தனமான, கதைகளை உதறி எறிந்து நீர்ப்பாசன முகாமைத்துவத்தை சிறப்பான முறையில் கடைப்பிடிப்பீர்களாக இருந்தால் நிச்சயம் நாம் தென்னாசியாவின் நெற் களஞ்சியமாகத் திகழ்வோம். காலம் இன்னும் கடந்து விடவில்லை. பாசனக் குளங்கள் முறையாகப் பேணப்பட வேண்டும். தூர்வாரப்படவேண்டும். என குறிப்பிட்டார்.