அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது – வினோ எம்.பி

மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களினதும் விருப்பத்திற்கு முரணாக உள்ளுராட்சிமன்றங்களின் எல்லை தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயம், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொகுதி தொடர்பான எல்லை நிர்ணய குழுவின் கூட்டங்கள் மாவட்ட ரீதியில் இடம்பெறுகின்றன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமாக இருந்தாலும் அவசர அவசரமாக எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களின் விருப்பமில்லாமல், அதிகாரிகளின் விருப்பத்திற்கமைய எல்லை நிர்ணயம் செய்யப்படுவது. உண்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கமைய மாத்திரம் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயங்களை தமது விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் நிர்ணயம் செய்ய முயற்சிக்கிறது, இது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.

வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் பயிர்செய்கைகளுக்காக வழங்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிட்டார், ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் வடக்கு மாவட்டத்தில் மக்கள் காலம் காலமாக விவசாயம் செய்த காணிகளை வனவளத்துறை திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள வேண்டுமாயின் நாட்டில் விவசாயத்துறை மேம்படுத்த வேண்டும். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய காணிகளை வனவளத்துறை திணைக்களம் ஏதாவதொரு காரணத்தை குறிப்பிட்டுக் கொண்டு சுவீகரிப்பதையே பிரதான இலக்காக கொண்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் மீனவர் பிரச்சினை, விவசாய பிரச்சினை தொடர்பான கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதில்லை. வடக்கு மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்படாத காரணத்தினால் அரச அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்படுகிறார்கள்.

மக்கள் பிரநிதிகள் மக்கள் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்த உரிய வழிமுறை காணப்படவில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரம் தீர்வு காண முடியாது, ஆகவே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். என தெரிவித்தார்.