இந்திய-இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டும்! – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய – இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்தியாவும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள தொலைநோக்கு அறிக்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் இலங்கை – இந்திய சமூகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையை நினைவுகூரும் வகையில் விசேட நினைவுச் சின்னமொன்றும், இந்திய – இலங்கை உறவுகளில் அண்மையில் இடம்பெற்ற விசேட தருணங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.