உதயமானது ரணிலுக்கு ஆதரவான புதிய கூட்டணி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, அரசியல் கலவரங்களின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிய தரப்பினர் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவில் முக்கிய உறுப்பினர்களாகக் காணப்பட்ட நிமல் லன்சா மற்றும் அனுர பிரியதர்ஷன யாபா உள்ளிட்டோர் தலைமையில் இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டணியின் ஸ்தாபகரான கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயவர்தன ஆகியோர் தலைமையில் நேற்று இக்கூட்டணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராஜகிரிய, லேக் ட்ரைவ் வீதியில் அமைந்துள்ள புதிய அரசியல் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதோடு, முற்பகல் சுப நேரத்தில் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய தேர்தல் பிரசார நடவடிக்கைளை இப்புதிய அரசியல் கூட்டணி நேற்றிலிருந்தே ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் புதிய அரசியல் கூட்டணியின் செயல்பாட்டு தலைவர் அநுர பிரியதர்ஷன யாபா உள்ளிட்ட ஆதரவு வழங்கும் அனைத்து தரப்புகளும் பங்கேற்றிருந்தன. இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லன்சா இக்கூட்டணியில் 71 பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு இக்கூட்டணி பொதுஜன பெரமுனவுடன் இணையாது என்றும் குறிப்பிட்டார்.