எல்லை நிர்ணயங்களின் போது வெளிப்படைத் தன்மை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

உள்ளுராட்சி வட்டாரங்களை குறைக்கும் வகையில் அவற்றை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிராகரித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (டிச. 20) காலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மகிந்த தேசபிரியவின் தலைமையில்  அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கட்சித் தலைவர்கள்  மேற்படி நடவடிக்கையினை கூட்டாக நிராகரித்துள்ளனர்.

அத்தோடு புதிய எல்லை நிர்ணயம் தொடர்பில்  தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ள கட்சித் தலைவர்கள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படுகின்ற போது அதில் பல்வேறு குறைபாடுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.

பல்லின சமூகங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்கள் பாதிக்கப்படாத வகையில் அல்லது அவர்களது பிரதிநிதித்துவம் திட்டமிட்டு இல்லாது செய்யும் வகையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படக் கூடாது.

ஆதாவது அந்தந்த பிரதேசங்களில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு தவிர்க்கும் வகையில் வட்டார எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படுவதாக பொது அமைப்புகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

கட்சித் தலைவர்கள் எல்லை நிர்ணயங்களின் போது வெளிப்படைத் தன்மையுடனும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளினதும் கருத்துக்களும் பெறப்பட வேண்டும் எனவும் தனியே அதிகாரிகளால் மட்டும் இவற்றை தீர்மானிக்க விட முடியாது என்றும்  கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.