கனடா உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகருடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சந்திப்பு!

அரசியல் தீர்வு, மனித உரிமைகள், புதிய சட்டமூலங்கள், காணி அபகரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு இசபெல்லா மார்டின் அம்மையாருக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு 11.11.2026 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ரெலோவின் தேசிய அமைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வும் பொருளாதார அபிவிருத்தியும்

இதன்போது, தமிழ் மக்களின் நிரந்தரமான அரசியல் தீர்வு மற்றும் காத்திரமான பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்த தற்போதைய அரசாங்கம், இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூட்டணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

PSTA, OCB சட்டமூலங்கள் தொடர்பில் கடும் கரிசனை

அரசாங்கம் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம் (OCB) ஆகியவற்றால் நாட்டின் ஜனநாயகச் சூழலுக்கும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்களை இச்சட்டமூலங்கள் ஒடுக்குவதற்கும், தனிநபர்களைக் குறிவைத்து தன்னிச்சையான கைதுகளை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், அதற்குப் பதிலாக வேறு பெயர்களில் ஆபத்தான சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவிக்கப்பட்டது.

காணி அபகரிப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்திவைப்பதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக வெற்றிடம் ஏற்பட்டு, காணி அபகரிப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு வழிவகுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கில் அபகரிக்கப்பட்ட காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், கிழக்கில் மாதவனை – மயிலத்தமடு பாரம்பரிய மேய்ச்சல் தரைப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோதக் குடியேற்றங்களால் தமிழ் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியும் மக்களின் வாழ்வாதாரமும்

அதிகரித்து வரும் வரிச்சுமை, கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வு ஆகியவற்றால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் மட்டுமன்றி, ஏனைய மக்களும் கடுமையான வாழ்வாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூட்டணியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கனேடிய உயர்ஸ்தானிகரின் பதில்

இதற்குப் பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்டின் அம்மையார், ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளில் கனேடிய மக்களின் பிரதிநிதியாகவும், குறிப்பாக கனடாவில் வாழும் இலங்கை மக்களின் குரலையும் பிரதிபலிக்கும் வகையிலும் தாம் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முயற்சிகளையும் கனடா உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே தமது கரிசனைகளை இலங்கை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் இலங்கையை மட்டுமன்றி கனடையையும் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றைக் கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற போதிலும், அடக்குமுறைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கும் சட்டங்களைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கு கனடாவின் பங்களிப்பு

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு கனடா பங்களித்து வருவதுடன், குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்து வருவதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை வடக்கு, கிழக்கில் ஊக்குவித்து, அதன் ஊடாக பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கனடா தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் எனவும் அவர் உறுதியளித்தார்
.
இதனையடுத்து, இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவடைந்தது.

கு. சுரேந்திரன்
உப தலைவர் /பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி