கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு

உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் இடம்பெற்ற பேரலங்களில் ஒன்றான முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு சிவில் சமூக அமைப்புக்களால் வியாழக்கிழமை (18) கொழும்பு – பொரளை கனத்தை மயான சந்தியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது , சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு வந்து நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

‘புலிகளுக்கான நினைவேந்தல் எமக்கு வேண்டாம்’ என்ற வசனம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அங்கு சென்ற சிங்கள ராவய அமைப்பினர் , ஏற்பாடுகளை குழப்புவதற்கும் முயற்சித்தனர்.

இதனால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்க முன்னரே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிங்கள ராவய அமைப்பினரால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்ட போது அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டளர்களை அறிவுறுத்தினர்.

எனினும் தாம் எவ்வித குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை என்பதால் , நினைவேந்தலை நிறுத்த முடியாதென ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு தரப்பிடம் தெரிவித்ததாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அங்கு தீபம் ஏற்றப்பட்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதோடு , கஞ்சி வழங்கப்பட்டது.

அத்தோடு எதிர்வரும் திங்களன்று (22) நீர்கொழும்பு – பால்தி சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பிரிதொரு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அங்கும் நினைவேந்தல் இடம்பெறும் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.