சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு அமைவாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தை (26) முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

சித்திரவதைகளிலிருந்து விலக்கீடு பெறுதல் என்பது எந்தவொரு சூழ்நிலையிலும் மட்டுப்படுத்தப்படமுடியாத மனித உரிமையாகும்.

இருப்பினும் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

இந்த மிகமோசமான மனித உரிமை மீறலின் பாரதூரமான பின்விளைவுகளை சித்திரவதைக்கு உள்ளான தரப்பினர் மாத்திரமன்றி, அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்களும் அனுபவிக்கவேண்டியுள்ளது.

எனவே சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தில் (நேற்று முன்தினம்) மேற்குறிப்பிட்டவாறு பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சாட்சியங்களுக்கு அவசியமான ஆதரவு அனைத்து வழிகளிலும் வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டுமென மீளவலியுறுத்துகின்றோம்.

நாம் எமது விசாரணை செயன்முறையின் ஊடாக எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்கீழ் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நியாயத்தையும், இழப்பீட்டையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுக்கு அப்பால், அவர்கள் முழுமையாக மீள்வதற்கு அவசியமான உளவியல் ஆலோசனை வழங்கல் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன அவசியமாகின்றன.

அதேவேளை ஒடுக்குமுறைகள் தொடர்பான அச்சம் மற்றும் கடந்தகாலங்களில் பதிவாகியுள்ள தண்டனைகளிலிருந்து விலக்கீடு பெறும் போக்கு என்பவற்றின் காரணமாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியங்களும் அநேக சந்தர்ப்பங்களில் நீதிக்கட்டமைப்பை அணுகுவதிலிருந்து விலகியிருக்கின்றனர்.

எனவே இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக எவ்வித ஒடுக்குமுறைகளுமின்றி பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய மருத்துவ, சட்ட, சமூக மற்றும் உளவியல்சார் உதவிகளை வழங்குவதை முன்னிறுத்தி சமூக நலனோம்பு அமைப்புக்கள், விசேட நிபுணர்கள், தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.