ஜே.வி.பி யினரிடம் நாட்டை முன்னேற்றும் கொள்ளை எதுவும் இல்லை – மஹிந்தானந்த

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு வாக்களிக்கும் அளவிற்கு நாட்டு மக்கள் மூடர்கள் அல்ல,  ராஜபக்ஷர்களையும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும்  விமர்சிப்பதை தவிர மக்கள் விடுதலை முன்னணியினரிடம்  நாட்டை முன்னேற்றும் கொள்கை திட்டங்கள் எதுவும் கிடையாது  என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலபிடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 25) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பல்வேறு காரணிகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. எமது அரசாங்கம்  சிறந்த நோக்கத்துடன் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தம்மால் தீர்வு காண முடியும் என தற்போது வீர வசனம் பேசும் மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை ஏற்கவில்லை.இக்கட்டான சூழ்நிலையில்  சவால்களை ஏற்பது தான் சிறந்த தலைமைத்துவம்.

ஒரு கூட்டத்தை மக்கள் விடுதலை முன்னிணியினர் நடத்தினால் அதில் ஒரு பகுதி ராஜபக்ஷர்களை விமர்சிப்பதும்,பிறிதொரு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும் பிரதானமாக காணப்படும் .விமர்சனங்களை தவிர பொருளாதாரத்தை முன்னேற்றும் எவ்வித கொள்கை திட்டம் மக்கள் விடுதலை முன்னணியினரிடம் கிடையாது.

விமர்சனங்களினால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது. மக்கள் விடுதலை முன்னணியினருக்கு வாக்களிக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல, எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஆட்சியை நாங்கள் நிச்சயம் கைப்பற்றுவோம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு இல்லை கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.