புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுனர் தயாரா?

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு  மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலிடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் அவர்கள் ஊடகங்களில் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

ஆளுநரின் கோரிக்கைக்கு முன்பாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக முன்னாள் ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்சவும் தற்போதைய ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புலம்பெயர் தமிழர்களிடம் இந்த கோரிக்கையை நேரடியாக முன் வைத்துள்ளனர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு நேரடியாக சென்றும் தமிழர் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்கள் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல கடிதத்தை ஊடகங்களுக்கும் உரிய தரப்புக்களுக்கும் வழங்கியுள்ளனர் அதற்கான ஆரோக்கியமான பதிலை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் வடக்கு ஆளுநரின் கோரிக்கை வந்துள்ளது உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் வடக்கல்ல தமிழர் தாயகத்தை தாண்டியும் முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.

ஆளுநர் ஐனாதிபதியின் நேரடி முகவராக இருப்பதால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஐனாதிபதிக்கு முன் வைத்துள்ள கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்காவுடன் கலந்துரையாடி நிறைவேற்ற தயாரா? அப்படி நிறைவேற்றிய பின்னர் இவ்வாறான கோரிக்கையை முன் வைத்தால் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.