ரணில் விரித்திருக்கும் புதிய வலை


புருஜோத்தமன் தங்கமயிலால் எழுதப்பட்டு டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த நாட்களில் வெளியிட்ட இருவேறு கருத்துக்கள் தமிழ் மக்களை எரிச்சலடைய வைத்திருக்கின்றன. முதலாவது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு தமிழ்க் கட்சிகள் முன் நிபந்தனைகள் ஏதுமின்றி வரவேண்டும் என்பது. இரண்டாவது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் முன்வைக்கப்பட்டு தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீள கொண்டுவருவது தொடர்பிலானது.

சுதந்திர இலங்கையில் தமிழ்த் தரப்புக்களுக்கும் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடையில் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை பண்டா -செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் தொடங்கி, நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காண்பது வரையான பேச்சுக்கள் வரை நீண்டிக்கின்றன. பண்டா – செல்வாவுக்கு இடையிலான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால், நாடு நீண்ட நெடிய ஆயுத மோதலைக் கண்டிருக்காது. இன முரண்பாடுகள் பாரியளவில் எழுந்தும் இருக்காது. ஆனால், நாட்டின் நலன், ஒருமைப்பாடு, இன நல்லிணக்கம் கடந்து பௌத்த சிங்கள அடிப்படைவாதத்தின் மேலாண்மையும் அதன் வழியான ஆட்சியமைப்பும் பிரதான இடத்தில் இருப்பதாலேயே நாடு படுபாதாளத்துக்குள் வீழ்ந்தது. பௌத்த சிங்கள மேலாதிக்கத்தினால் தென் இலங்கையின் சிங்கள மக்கள் எதுவித நன்மையையும் அடைந்துவிடவில்லை. மாறாக, ஆளும் வர்க்கமும், அவர்களுக்கு இணக்கமான தரப்புக்களுமே ஆதாயங்களை அடைந்திருக்கின்றன.

அப்படியான நிலையில், நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை ஆளும் வர்க்கமும், பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகளும் தொடர்ச்சியாக தவிர்த்தே வந்திருக்கின்றன. நாட்டில் நீடிக்கும் அரசியல் பிரச்சினையும் அதனால் மேலும் மோசமடையும் இன முரண்பாடுகளுமே ஆட்சியைப் பிடிப்பதற்கும் தக்க வைப்பதற்குமான பிரதான சூத்திரமாக தென் இலங்கையில் பேணப்படுகின்றது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளினால் அரசியல் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு ஆளும் தரப்பு வந்தால், அதனை எதிர்க்கட்சி பலமாக எதிர்க்கும். அந்த எதிர்க்கட்சியே, அடுத்து ஆளும்தரப்பாக வந்ததும் பேச்சுவார்த்தை நடத்தினால், முன்னைய ஆளும்கட்சி அதனை எதிர்க்கும். இதுதான், தென் இலங்கை ஆட்சியாளர்களின் தொடர் செயற்பாடு.

பண்டா – செல்வா ஒப்பந்தம், பௌத்த தேரர்களின் போராட்டத்தினால் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் கிழித்தெறியப்பட்டது. அந்த ஒப்பந்தம் சிலவேளை நடைமுறைக்கு வந்திருந்தால், சிலவேளை, இலங்கை முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும். இலட்சக்கணக்கான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டிருக்கும். பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தல்கள் காணாமல் போதால்களினால் இல்லாமல் ஆகியிருக்க மாட்டார்கள். ஆனால், நடந்ததோ வேறு. சிங்கள மட்டும் சட்டத்தினை முன்னிறுத்தி இனவாத அரசியலை ஆட்சிபீடம் ஏறுவதற்காக முன்னிறுத்திய பண்டாரநாயக்க, அதனை பேரழிவின் பெரும் புள்ளியாக வைத்துச் சென்றார்.

பிரித்தானியாவிடம் இருந்து ஆட்சியுரிமையை தென் இலங்கையின் பெரும் அரசியல் வர்த்தக குடும்பங்கள் பெற்ற போது, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் தென் இலங்கையின் சாதாரண சிங்கள மக்களும் எதுவித நம்பிக்கைகளும் இன்றியே இருந்தார்கள். அந்த நம்பிக்கையீனம் இன்று வரையில் மாறவில்லை. மாறாக இனவாத, வர்க்க முரண்பாடுகள் தென் இலங்கை பூராவும் விதைக்கப்பட்டன. குறிப்பாக, மகா வம்ச மனநிலையோடு, பௌத்த அடிப்படைவாத சிந்தனைகளை முன்னிறுத்தினார்கள்.

அப்படி முன்னிறுத்தியவர்களில் பெரும்பாலானோர், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில், பிரித்தானியரின் மதத்தையும், கல்வியையும் பெற்றவர்கள். அவர்களுக்கு பௌத்தம் குறித்த எந்தவித கோட்பாட்டு விளங்கங்களோ, அறிவோ இல்லை. மாறாக, சுதந்திர இலங்கையில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பௌத்த அடிப்படைவாதத்தை முன்னிறுத்துவதே இலகுவான வழி என்ற புள்ளியில் அவர்கள் அனைவரும் அதனை தெரிவு செய்தார்கள்.

சேனநாயக்க குடும்பம், விஜயவர்த்தன குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் என்று இலங்கை ஆட்சி செய்து யார் யாரெல்லாம் சீரழித்தார்களோ, அவர்கள் எல்லாருக்கும் அது பொருந்தும்.

சிங்கள மட்டும் சட்டமும், பௌத்தத்துக்கு முதலிடம் எனும் நிலையும் தென் இலங்கை ஆட்சியாளர்களினால் நாட்டை சீரழிப்பதற்காக வைக்கப்பட்ட பொறிகள். சுதந்திரத்துக்குப் பின்னரான 75 ஆண்டுகளில் இந்த இரு சட்டங்களினாலும் தென் இலங்கையின் சாதாரண மக்கள் கூட எந்தவித நன்மையையும் அடையவில்லை. மாறாக, இன்றைக்கு தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான உணர்வோடு அலைகிறார்கள். இப்போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு மாதக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்கின்றது. வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கடவுச்சீட்டுக்கான வரிசை, காத்திருப்பு காணப்படுவதாக குடிவரவு -குடியகல்வு திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

அப்படியானால், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் தயாராக இருக்கிறார்கள். அதில், பெரும்பான்மையான சாதாரண மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வசதி வாய்ப்பின்றி இருக்கிறார்கள். இல்லையென்றால், ஒருசில மாதங்களிலேயே நாட்டிலிருந்து கணிசமானவர்கள் வெளியேறிவிடுவார்கள். அதுதான் இன்றைய நிலை. இதுதான் பெளத்த சிங்கள அடிப்படைவாதமும், அதனைமுன்னிறுத்தி விட்ட ஆட்சிமுறையும் செய்த சாதனைகள்.

நிலைமை அப்படியிருக்க, தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் இன்றி வர வேண்டும் என்று ரணில் கூறுவதை எவ்வாறு காண வேண்டும். தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனைகள், பௌத்த சிங்கள மேலாதிக்க நிறுவனங்களும், கட்டமைப்பும் வடக்கு கிழக்கில் புரியும் அத்துமீறல்கள் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோருவதாகும். அதனை, அரச இயந்திரம் நினைத்தால் உடனயே நிறுத்திவிடலாம்.

ஏனெனில், அந்த ஆக்கிரமிப்புக்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை. அப்படியான நிலையில், அதனை நிறுத்தக் கோருவது முன் நிபந்தனையாக கொள்ள வேண்டியதே இல்லை. அத்தோடு, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பகுதியில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை கோருவது எவ்வாறு முன் நிபந்தனையாகலாம் என்று தெரியவில்லை. தமிழ் மக்களின் தொடர் கோரிக்கையே, பாரம்பரிய நிலப்பகுதியில், மேலாதிக்கம், ஆக்கிரமிப்புக்கள் அற்ற, ஒருங்கிணைந்த நாட்டுக்குள்ளான ஆட்சி முறையே, அதனையே, சமஷ்டி என்கிற சொல்லின் கீழ் வரையறுக்கிறார்கள். பேச்சுவார்த்தை மேசையில் சமஷ்டி அதிகார பகிர்வு குறித்து பேச வேண்டும் என்று கோருவதை முன் நிபந்தனையாக ரணில் காட்டுவது, மிக மோசமான அணுகுமுறை.

அத்தோடு, ஜே.ஆர். காலத்து மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்கிற முறையினூடாக நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்று அவர் பேச ஆரம்பித்திருப்பது சதி நோக்கிலானது. அது, இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் பிரகாரம் தோற்றம்பெற்ற மாகாண சபைகளையும் இல்லாமற் செய்யும் தந்திரத்துடனானது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை இல்லாமற் செய்ய வேண்டும் என்பது, தென் இலங்கையின் இனவாத மதவாத சக்திகளின் ஒரே நிலைப்பாடு. அப்படியான நிலையில், அதனை நிறைவேற்றுவதற்காக மாவட்ட அபிவிருத்தி சபை என்கிற தோல்வியடைந்த முறையை ரணில் முன்நகர்த்துவது திட்டமிட்ட செயலாகும்.

அதன்போக்கில்தான், சமஷ்டி கோரும் தமிழ்க் கட்சிகளை முன் நிபந்தனைகள் இன்றி பேச்சுக்கு வருமாறு அவர் கோருகிறார். அவர், அதிகபட்சம் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் விடயத்தை முடித்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், தமிழ்க் கட்சிகளோ மாகாண சபை முறைகளைத் தாண்டிய சமஷ்டிக் கோரிக்கைகள் சார்ந்த நிலைப்பாடுகளில் இருக்கின்றன. அப்படியான நிலையில், ரணிலின் பேச்சினை விசமத்தனமாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது. காலங்காலமாக தென் இலங்கை ஆட்சியாளர்கள் தந்திரத்தின் வழியாக தமிழ் மக்களை தோற்கடிக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த முயற்சி தமிழ் மக்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த நாட்டையுமே தோற்கடித்திருக்கின்றது. இப்போதும் அந்த முயற்சிகளிலேயே ரணில் ஈடுபடுகிறார். அவர், தன்னுடைய முன்னோர்கள் வழியில் நின்று விலகுவதற்கு தயாராக இல்லை.