ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறும் துமிந்த சில்வா

2022 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிறைச்சாலை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துமிந்த சில்வா ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் நீதிமன்றம் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், துமிந்த சில்வாவுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியர் திணைக்களத்தின் கோரிக்கையை மீறி, அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சிபாரிசு செய்திருந்தார்.

துமிந்த சில்வாவின் வைத்தியர்களின் சிபாரிசுகளுக்கு அப்பால் செல்வதற்கு விசேட வைத்தியர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியதை அடுத்து, துமிந்த சில்வா 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.