13+ க்கு செல்லும்போது ஒற்றையாட்சி ஐக்கிய என்ற வசனங்களில் தொங்ககக் கூடாது – டிலான் பெரெரா

நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 பிளஸ் முறைக்கு கட்டாயம் செல்ல வேண்டும். அவ்வாறு 13 பிளஸ் திட்டத்துக்கு செல்லும்போது ஒற்றையாட்சி அல்லது ஐக்கிய இலங்கை என்ற வசனங்களில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

மாறாக எவ்வாறான அதிகாரப்பகிர்வு எமக்குக் கிடைக்கிறது என்பதையே இங்கு பார்க்க வேண்டும் என்று பொது ஜன பெரமுன விலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் காங்கிரசின் பிரதி நிதி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 பிளஸ் திட்டத்தின் ஊடாக தீர்வு காண்பதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

எனவே இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த நோக்கம் உண்மையானதாக இருக்கவேண்டும்.

இது வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையாக அமையக் கூடாது என்றும் உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இது தொடர்பில் வினவியபோதே பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

டிலான் பெரெரா இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்

தற்போது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இது ஒரு சிறந்ததொரு யோசனையாக காணப்படுகிறது.

ஆனால் இது உண்மையில் நேர்மையானதாக இருக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்டத்திற்கு கூட்டமைப்பின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இப்படி ஒரு அனுகுமுறையை முன்னெடுக்கக் கூடாது.

மாறாக உண்மையிலேயே பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சி இதனூடாக இடம்பெறவேண்டும். ஆனால் எப்படியோ இந்த இடத்தில் 13 பிளஸ் திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தார்.

அப்படியானால் தற்போது 13 பிளஸ் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே 13 பிளஸ் என்ற அடிப்படையில் அதிகாரப் பகிர்வை நோக்கி செல்லும்போது ஒற்றையாட்சி ஐக்கிய இலங்கை என்று வசனங்களில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது ஒற்றையாட்சி என்பதில் தென்னிலங்கை தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அதே போன்று ஐக்கியம் என்ற வசனத்தில் வடக்கு கிழக்கு தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

மாறாக எவ்வாறான ஒரு அதிகார பகிர்வு எமக்குக் கிடைக்கிறது என்பது தொடர்பாகவே இங்கு சென்று பார்க்க வேண்டும்.

ஆனால் ஒற்றையாட்சி என்ற தொங்கினால் 13 பிளஸ் என்ற திட்டத்திற்கு செல்ல முடியாது.

எனவே இங்கு ஏதோ ஒரு முறை யிலான ஒரு அணுகுமுறைக்கு அல்லது ஒரு திட்டத்துக்கு அனைவரும் செல்ல வேண்டும்.

அதேபோன்று 13 பிளஸ் எனும் போது அதில் ஒரு புதிய விடயத்தை இணைத்துக் கொள்ளலாம்.13 ஆம் திருத்தம் என்பது தற்போது அரசியலமைப்பில் காணப்படுகின்றது.

எனவே 13 பிளஸ் எனும் போது அதில் ஒரு புதிய விடயம் இணையவேண்டும். அந்த புதிய விடயமாக செனட் சபையை இணைத்துக்கொள்ள முடியும் என நான் கருதுகிறேன்.

அதாவது தற்போது இருக்கின்ற பாராளுமன்றத்துக்கு மேலதிகமாக மேலும் ஒரு சபையை உருவாக்கி அதில் மாகாண சபைகளின் உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் அங்கத்துவம் பெற முடியும்.

இதனூடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

எனவே 13ஆம் திருத்தத்தின் ஊடாக செனட் சபையையும் இணைத்துக்கொள்ள முடியும் என்பதே எனது நிலைப்பாடு அமைந்திருக்கின்றது என்றார்.

இதனிடையே ஜனாதிபதியுடனான அழைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்ற சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும் ஒற்றையாட்சியின் கீழ் அதிகார பகிர்வுக்கு ஒத்துழைப்பதாகவும் அறிவித்துள்ளார்.