அரசாங்கத்துடன் ஆரம்பிக்க உள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் அவர்கள் சில பொறி முறைகள் குறித்து ஊடகத்திற்குக் தெரிவித்திருந்தார். அதில் ஏனைய கட்சிகளும் தமது ஆலோசனைகளை முன்வைக்குமாறும் கோரியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது கருத்துகளை முன்வைத்துள்ளது.
தமது கட்சியின் கருத்துகளை முன் வைத்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-
ரெலோ அமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பான பொறிமுறை ஒன்றை 09. 12.2022 அன்று பொதுவெளியில் வெளியிட்டிருப்பதுடன் அவை தொடர்பான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ளோரிடமிருந்து கோரியிருக்கின்றது. இந்தக் கோரிக்கை பொதுவெளியில் இருப்பதன் காரணமாக, அதற்கான எமது கருத்துக ளையும் ஆலோசனைகளையும் பொது வெளியில் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
முதலாவதாக, அரசாங்கம் குறிப்பிட் டுள்ள தமிழர் தரப்பினருடனான பேச்சு வார்த்தையானது வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பானதா? அல்லது புதியதோர் அரசியல் யாப்பு தொடர்பானதா? அல்லது வடக்கு – கிழக்கு மக்களின் அன்றாட பிரச் சினைகளுக்கான தீர்வு தொடர்பானதா? என்பதை முதலில் அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.
தமிழர் தரப்பும் தாம் எது தொடர்பில் பேசப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில்தான் பேச்சுவார்த்தைகளுக்கான ஒருபொறிமுறையை வகுக்க முடியும். ரெலோ அமைப்பு வெளியிட்டுள்ள பொறிமுறையைப் பார்க்கின்றபொழுது, அது தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கான பொறிமுறையாகவே தோன்றுகின்றது.
தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு வரையறுக்கப்பட்டாலே அந்தத் தீர்வை உள்ளடக்கியதான அரசியல் யாப்பை உருவாக்க முடியும். ஆகவே அந்த வகையில் அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை என்பது முதன்மையானது. ஏற்கனவே அரசாங்கம் நியமித்த பல ஆணைக்குழுக்கள் பல அறிக்கைகளைத் தயார் செய்தும் சகல அரசாங்கங்களாலும் அவை குப்பைத் தொட்டியில் வீசியெறியப் பட்டனவேயொழிய அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்த நிலையில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் என்பது வரவேற்கப்படக்கூடிய ஒரு விடயமே. ஆனால் அரசாங்கம் உள்நாட்டிலேயே எமது பிரச்சினையைத் தீர்க்க விரும்புவதாகக் கூறுகின்றது. அதே சமயம் அவர் கள் இதைத் தீர்க்கமாட்டார்கள் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
எனவே, உண்மையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதில் இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்படுவதாக இருந்தால், அது மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த பேச்சுவார்த் தைகளுக்கு முன்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் போன்ற கட்சிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. அந்த வகையில், காணிகள் தொடர்ந்து பறிமுதல் செய்வதை நிறுத்துவதுடன், யுத்தத்தின் பொழுதும், அதன் பின்னரும் மக்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே கையளிப்பதற்கான காலவரையறை ஒன்றை வகுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கால எல்லை மிகக்குறுகிய காலஎல்லையாக இருத்தலும் வேண்டும்.
இரண்டாவதாக, 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து இயற் றப்பட்ட அதிகாரப்பகிர்விற்கான சட்டங்க ளும் முழுமையாக நிறைவேற்றப்படல் வேண்டும். ஏற்கனவே இவை சட்டங்களாக இருப்பதன் காரணத்தினால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி கால தாமதமின்றி இவற்றை நிறைவேற்று வதற்கான வழிவகைகளையும் செய்ய முடியும்.
மூன்றாவதாக, தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கான ஒருகுழு வினை தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் இணைந்து உருவாக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறான தேசிய இனப் பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆலோசனைகளையும் ஆக்கபூர்வமான கருத்து களையும் பெற்றுக்கொள்ளும் வகையில், இந்தத்துறையில் பரிச்சயம் பெற்ற, நிபு ணத்துவம் பெற்றவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களையும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நிபுணத்துவம் உள்ளவர்களையும், புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கியும் ஓர் ஆலோசனைக்குழுவும் அமைக்கப்படல் வேண்டும். இவை தவிர, இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பிரதிநிதிகள், அமெரிக்க, ஐரோப்பிய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு குழுவானது மத்தியஸ்தம் வகிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடலாம். இவை தொடர்பாக இந்தியா, ஐ.நா. மற்றும் ஏனைய நாடுகளுடன் பேசி அத்தகையதொரு நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிக்க வேண்டும். இவை பேச்சுவார்த்தை தொடர்பான சில அடிப்படையான அம்சங்கள் என்பதை முன் வைக்க விரும்புகின்றோம். – என்றுள்ளது.