நாடாளுமன்றத்தில் இன்று (6) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோநோகராதலிங்கம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சி.சிறிதரன், இராசபுத்திரன் சாணக்கியன், தவராசா கலையரசன், மலையக மக்கள் முன்னணியின் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர் நிலங்களை அழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என கோசமெழுப்பியபடி நாடாளுமன்றத்தின் மன்றத்தின் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (6) முற்பகல் 9.30க்கு குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடந்து, சபையில் விசேட கூற்றை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன், மயிலத்தமடு மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து ”எமது நிலம் எமக்கு வேண்டும்”, ”எமது வளம் எமக்கு வேண்டும்”, மகாவலி ”அதிகாரசபை கெடுபிடிகளை நிறுத்து” என்று கோசங்களை எழுப்பியும் பதாகையை ஏந்தியவாரும் சபைக்கு நடுவே சென்றார்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களும் அவ்விடத்திற்கு வந்ததுடன் கைகளில் ‘மயிலத்தமடு மக்களுக்கு வேண்டும்’, ‘மகாவலி ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சபாபீடத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், உங்கள் பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதாகவும் சபையின் தினப் பணிகளுக்கு இடமளிக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தார்.
எனினும் அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இல்லை. அது தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்று கூறினார். இவ்வேளையில் சபை முதல்வருடன் சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவ்வேளையில் ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, சாணக்கியனை நோக்கி கடுமையாக பேசாமல் போய் அமருங்கள் என்று கூச்சலிட்டார். அவரை நோக்கி பதிலளித்த சாணக்கியன். நாங்கள் எங்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போராடுகின்றோம். தேவையில்லாத விடயத்தில் நீங்கள் தலையிடாது உங்களின் வேலையை பாருங்கள் என்று கூறினார். இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதேவேளை இராஜாங்க அமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் இருந்ததுடன், அவர் நடப்பவற்றை நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பியான வீ.இராதகிருஷ்ணனும் சபை நடுவே சென்று சிறிது நேரம் அவர்களுடன் நின்றுவிட்டு பின்னர் தனது ஆசனத்திற்கு சென்று அமர்ந்துகொண்டார்.
தொடர்ந்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபையின் தினப் பணிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், ஆசனங்களில் சென்று அமருமாறும் சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் அடிக்கடி வலியுறுத்திய நிலையில், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரிவித்து தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு தமது ஆசனங்களில் சென்று அமர்ந்துகொண்டனர்.