டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் துறைமுகத்தில்

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க முடியாத காரணத்தினால் நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 18 ஆம் திகதி வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரிக்கை

இலங்கையில் வீழ்ச்சி கண்டுவரும் பொருளாதார நிலைமை தொடர்பில் கனடா அந்நாட்டு பிரஜைகளை எச்சரித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை தேவைகளின் பற்றாக்குறையை நோக்கி நகர்வதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துப்பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு என்பன இதில் உள்ளடங்குகின்றன.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சுகாதாரம் உள்ளிட்ட பொதுச்சேவைகளையும் இது பாதிக்கும் என இலங்கையிலுள்ள கனேடிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

எனவே, உணவு, நீர் மற்றும் எரிபொருளை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் பலசரக்கு கடைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களிலும் நீண்ட வரிசைகளில் நிற்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பிலான தகவல்களை உள்நாட்டு ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளுமாறும் இலங்கையிலுள்ள கனேடிய பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து அபிவிருத்தியை முன்னெடுக்கும் -சீனா

இலங்கையானது நிச்சயமாக கூடிய விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சிறந்த அபிவிருத்தியை முன்னெடுக்கும் என சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் நாடு நிச்சயமாக தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து, பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அரச சபை உறுப்பினரும் சீன வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடினார் என்றும் அவர் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் இலங்கைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரச விஜயமானது இருதரப்பு நட்புறவு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்ததுடன், தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா உறுதியாக ஆதரவளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் கடன் விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர் வென்பின், இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததில் இருந்து, சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா தனது சக்திக்கு ஏற்றவாறு உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் மேலும் எதிர்காலத்திலும் அதனைத் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் ஜெனரல்களை பிரித்தானியாவின் உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தின் கீழ் தடைசெய்ய வேண்டிய நேரம்

“ஜொகானஸ்பேர்க்- 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப்போரின் இறுதிப்பகுதியில் நடந்ததாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பான கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த சிறிலங்காவின் ஜெனரல்களை உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தைப் பயன்படுத்தி ஜக்கிய இராச்சிய அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என பிரித்தானிய தமிழ் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.” என ITJP தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் – திஸ்ஸ விதாரண

நாட்டின் பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலம் மக்களின் உதவியுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் தொற்றுடன் அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களுமே காரணமாகும்.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் என்றவகையில் தீர்மானங்களை மேற்கொள்ளும்போது எம்முடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்வதில்லை என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் சோசலிச மக்கள் முன்னணியின் புதிய செயலாளருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்துவருகின்றது. அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உணவு பிரச்சினைக்கும் முகம்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கின்றது.

இந்த நிலை ஏற்படுவதற்கு கொவிட் தொற்று பிரதான காரணமாக இருந்தாலும் அரசாங்கம் மேற்கொண்ட திடீர் தீர்மானங்களும் இதற்கு பாரியளவில் தாக்கம் செலுத்தி இருக்கின்றது. குறிப்பாக எமது ஏற்றுமதி 30வீதம் குறைவடைந்துள்ளது.

அதேபோன்று கடந்த மூன்று மாதங்களில் இறக்குமதி செலவு பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. ஏற்றுமதி குறைவதென்பது எமது வருமானம் குறைவடைவதாகும்.

அத்துடன் நாட்டில் இருக்கும் மொத்த வெளிநாட்டு செலாவனி 1.3பில்லியனாகும். இந்த தொகை எமக்கு ஒரு மாதகாலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவே போதுமானது.

அதேபோன்று சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான பிட்ச் ரேடிங் நிறுவனம் எமது பொருளாதாரத்தை மூன்று சீ தரத்தில் இருந்து 2 சீ தரத்துக்கு தரமிறக்கி இருக்கின்றது. இன்னும் ஒரு தரம் குறைந்தால் எமது நாடு பங்குராேத்து நிலைக்கு செல்லும்.

அதன் காரணமாக தற்போது பொருட்களை இறக்குமதி செய்ய வங்கிகளில் நாணய கடிதம் திறக்கும் வசதிகளும் இல்லாமல் போயிருக்கின்றது. அதனால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் நிலையே ஏற்படும்.

அத்துடன் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்களும் பாரிய அர்ப்பணிப்பை செய்தோம். ஆனால் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரம் கிடைத்த பின்னர் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும்போது எம்முடன் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதில்லை.

அரசாங்கம் அமைக்கப்பட்டு இன்றுவரைக்கும் எம்முடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தியதில்லை. நாட்டின் அரசியல் நிலை தொடர்பாக அரண்டுவாரங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாங்கள் நேரம் கேட்டிருந்தோம்.

அதற்கு, அரசியல் தொடர்பில் கைப்பதாக இருந்தால் பிரமத் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் கலந்துரையாடுமாறும் நிதி தொடர்பாக கதைப்பதாக இருந்தால் நிதி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுன் கலந்துரையாடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்தபோதும் நாங்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புக்களை வகித்திருந்தோம். அப்போது அரசியல் நிலைமை தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவருடன் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். அந்த நிலைமை தற்போது இல்லை.

அதனாலே நாங்கள் நாடு எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண எமது கருத்துக்கள் மற்றும் ஆலாேசைகளை நாங்கள் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு அறிவிக்கின்றோம்.

எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. அப்போதுதான் மக்கள் நிலைமையை உணர்ந்து தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறான நடவடிக்கையை அரசாங்கத்திடம் காணமுடியாமல் இருக்கின்றது என்றார்.

Posted in Uncategorized

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விடுதலைப் பொங்கல்

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(13.01.2022) குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.முற்றவெளியில் விடுதலைப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

இன்று முற்பகல்-11.30 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயத்திற்கு அருகில் சிறைக்கூண்டு மாதிரி அமைத்து அதனுள் இடம்பெற்ற நிகழ்வில் பொங்கல் பொங்கிச் சூரியனுக்குப் படைக்கப்பட்டு இலங்கைச் சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்யப்பட்டதுடன் அவர்களின் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என அரசாங்கத்திடமும் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதிகள் உள்ளிட்ட சிலர் அரசியல் கைதிகளின் ஆடைகள் அணிந்து கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வுகளில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு.வேலன் சுவாமிகள், யாழ்.மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்திரு. ஜெபரட்ணம் அடிகளார், தமிழ்த்தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த தமிழ் அரசியல்வாதியுமான எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்,ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும் யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வருமான து.ஈசன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்மக்கள் கூட்டணியின் இளைஞரணி இணைப்பாளர் கே.கிருஷ்ணமீனன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் வடமாகாண இணைப்பாளர் சி. இளங்கோவன்யாழ்.மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், வலி.வடக்குப் பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கனகசபை விஷ்ணுகாந், சிறையிலிருந்து முன்னாள் தமிழ் அரசியல் கைதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்ட சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள் ஆகியோரால் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தி நிகழ்வில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அங்கொட லொக்காவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளரான சபேசன் உள்ளிட்ட சிலருக்கும், இலங்கை நிழல உலகதாதா அங்கொட லொக்காவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தபோது கடந்த 2020 ஜூலையில் திடீர் மாரடைப்பால் இறந்தார்.

அவரது உடல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டமை தொடர்பாக அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த வழகறிஞர் சிவகாம சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்து தமிழ்நாட்டு சிபிசிஐடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கொடலொக்காவின் நெருங்கிய கூட்டாளியான சானுகா தனநாயக்கா, ஜெயபால் என்ற இருவரும் பெங்களுரில் தலைமறைவாக இருந்தபோது கைதாகியுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரித்த பொழுது அங்கொட லொக்காவிற்கும், சானுகா தனநாயக்காவிற்கும் விடுதலை புலிகளின் முன்னாள் உளவுபிரிவை சேர்ந்த சபேசன் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

முன்னாள் விடுதலை புலி நிர்வாகி சபேசன் குறித்து சிபிசிஐடி பொலிசார் விசாரணை செய்த போது சபேசன், இலங்கையை சேர்ந்த சின்ன சுரேஷ், சென்னையைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் போது NIA அமைப்பினரால் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் கொச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிபிசிஐடி பொலிசார் சிறையில் இருந்த சபேசன் உட்பட 3 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அங்கொட லொக்கா மற்றும் சனுக்கா தனநாயக்கா ஆகியோருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து வெளியேறிய அங்கொட லொக்கா மற்றும் சனுக்க தனநாயக்க ஆகியோர் சபேசன், சின்னசுரேஷ்,இ ஜெயபால் ஆகியோர் மூலம் இலங்கைக்கு போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தி வந்திருப்பதும் கோவையை மையமாக வைத்து இந்த வேலைகளை இரகசியமாக செய்து வந்து இருப்பதும் சிபிசிஐடி பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதை ஊடகங்களில் பார்த்ததாகவும், அவர்கள் ஆங்காங்கே சொல்லித் திரிவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சரவையில் இருப்பதால் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றும் தனியே மொட்டுக் கட்சி மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மொட்டுக் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும் ஏனெனில் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கொள்கைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லையென்றால், வேறு கொள்கைகளைக் கேட்பார்களானால் கட்சித் தலைமைகள் வெவ்வேறு கூட்டங்களில் விமர்சித்துக்கொண்டிருக்காமல் கண்ணியமாகப் பேசுவது நல்லது என்று நாமல் கூறியுள்ளார்.

மாட்டு வண்டிகளில் மண்ணெண்ணெய் விற்பனை நாடு எங்கே செல்கிறது!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு நிலையில், அதனை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் நீண்ட வரிசையில் கால் வலிக்க காத்து கிடக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது கொழும்பின் சில பகுதிகளில் மண்ணெண்ணெய் வண்டிகளை வைத்திருந்தவர்கள் மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனையை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மக்களுக்கு மண்ணெண்ணைய் அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மண்ணெண்ணெய்க்கு கடும் கிராக்கி நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வரிசையில் கால் வலிக்க காத்திருந்து வாக்குவதை விட வீட்டிற்கு அருகில் வரும் மண்ணெண்ணெய் வண்டியில் இருந்து மண்ணெண்ணெய் வாங்குவது இலகுவானது என்பதால், கொழும்பில் மண்ணெண்ணெய் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

5 தமிழ் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 05 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க, நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.