இலங்கை விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து அபிவிருத்தியை முன்னெடுக்கும் -சீனா

இலங்கையானது நிச்சயமாக கூடிய விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சிறந்த அபிவிருத்தியை முன்னெடுக்கும் என சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் நாடு நிச்சயமாக தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து, பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அரச சபை உறுப்பினரும் சீன வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடினார் என்றும் அவர் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் இலங்கைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரச விஜயமானது இருதரப்பு நட்புறவு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்ததுடன், தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா உறுதியாக ஆதரவளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் கடன் விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர் வென்பின், இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததில் இருந்து, சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா தனது சக்திக்கு ஏற்றவாறு உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் மேலும் எதிர்காலத்திலும் அதனைத் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.