‘தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை நிறைவேற்றவேண்டும்’- வைகோவின் கேள்விக்கு அமைச்சர் பதில்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? என கேள்வி எழுப்பி ஆறு முக்கிய கேள்விகளை முன் வைத்திருந்தார்.

அதாவது,

1.இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு நீதி விசாரணை கோரி இருக்கின்றார்களா?

அவ்வாறு இருப்பின், அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
இலங்கை அரசு இதுவரை எந்தவிதமான உள்ளக விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில், இனியும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில், பன்னாட்டு நீதி விசாரணை நடைபெறுவதற்கான முயற்சிகளை, இந்திய அரசு மேற்கொள்ளுமா?
இலங்கையில் முஸ்லிம்கள் உடல் அடக்க உரிமைகளைத் திரும்பத் தருவதற்கும், தமிழர்களுடைய நிலங்களில் இலங்கைப் படையினர் நிலை கொண்டு, தமிழர்களைக் கண்காணித்து வருவதையும், அவர்கள் மீது தொடர் அடக்குமுறைகளைத் தடுப்பதற்கும், தூதரக முறையில் இந்தியா ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டதா?
அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக;
இல்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன?
வைகோவின் குறித்த ஆறு கேள்விகளுக்கும் உள்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளிக்கையில்,

இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு விசாரணை கோரி இருக்கின்றன. பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சமயங்கள் கொண்ட இலங்கை நாட்டில், தமிழர் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் சமமாக வாழ்வதற்கும், பாதுகாப்பு மற்றும் சமய நல்லிணக்கம் நிலவுதற்கும், அவர்களுடைய முன்னேற்றம், எதிர்காலக் கனவுகளை, ஒன்றுபட்ட இலங்கை என்ற நாட்டுக்கு உள்ளே நிறைவேற்றிக் கொள்வதற்கும், இந்தியா எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றது.

இந்தப் பொருண்மையில், இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருகின்றது; பல்வேறு நிலைகளில் இருதரப்பு பேச்சுகள் நடைபெற்று உள்ளன; இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றது.

2019, 2020 ஆம் ஆண்டுகளில், இலங்கைக் குடிஅரசின் தலைவர் இந்தியா வருகை தந்தபோதும், 2020 செப்டெம்பர் 26 ஆம்நாள், இரண்டு நாடுகளின் பிரதமர்கள் இணையக் காணொளி வழியாக நடத்திய இருதரப்புப் பேச்சுகளிலும், 2021 ஜனவரி மாதம், இந்திய அயல் உறவு அமைச்சர் இலங்கை சென்றபோதும், மேற்கண்ட கருத்துகளை, இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தின் (United Nations Human Rights Council – UNHRC), 46 ஆவது கூட்டத் தொடரில், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணிய வாழ்வு என்ற தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்தியது.

தமிழர்களின் உரிமைகளை மதிக்கின்ற வகையில், உண்மையான அதிகாரப் பகிர்வுதான், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் என்பதையும் எடுத்துக் கூறியது.

கூடுதலாக, இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், மறுவாழ்வுப் பணிகளைச் செயல்படுத்தவும், தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், பன்னாட்டு சமுதாயத்துடன் இணைந்து அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும், விடுதலை உணர்வுடன், மனித உரிமைகள் பாதுகாப்புடன் வாழ வகை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது.

இந்நிலையில், இலங்கையில் மனித உரிமை மீறல்களிற்கு பெறுப்புக்கூறுவது உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் சாத்தியமில்லை என்பதால் இந்தியா சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் வி முரளீதரன் நேரடியான பதிலை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கிராம மட்டத்தில் சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தார் மைத்திரிபால சிறிசேன

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படுகின்ற கருத்தரங்கு இன்று காலியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

காலி மாவட்டத்தின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள், முகாமையாளர்களும் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கருத்தரங்கு நிறைவு பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார்.

இலங்கை வரலாற்றில் அதிக பெறுமதியான பணம் அச்சிடப்பட்டது

இந்த வருடம் ஒரே நாளில் அதிக பெறுமதியான பணம் 28-07-2021 அச்சிடப்பட்டுள்ளது.

நேற்று 213.48 பில்லியன் ரூபா புழக்கத்திற்கு விடுவிக்கப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு கடன் செலுத்தப்பட்டதை அடுத்து, இந்த பணம் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் பொருளாதார ஸ்திரநிலை உள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வெளியுறவு செயலகத்திடம் ரெலோ அவசர விடயங்கள் கோரிக்கை 

பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின்  இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் உதவி இயக்குநராக லிசா பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரின் பதவியேற்பின் பின் 28-07-2021ரெலோ   பிரித்தானிய  கிளை  தலைவரும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவராகவும் செயலாற்றிவரும் சாம் சம்பந்தன் அவர்களுடன் சந்திப்பு ஒன்று நடைபெற்றது . 

இலங்கை விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப் பட்ட வேளையில் தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை பிரித்தானிய அரசு உடனடி கவனத்தில் கொள்வதோடு உரிய செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என திரு. சம்பந்தன் அவர்களால் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன. 

 குறிப்பாக தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரிவரும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நமது பாரம்பரிய தாயகமாக அங்கீகரிக்கும் அரசியல் தீர்வை அடைய தமிழ் சமூகத்திற்கு சர்வதேச மத்தியஸ்தத்தின் முலம் உதவுதல்.

 அரசியல் தீர்வை எட்டும் வரை  நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரப் பகிர்வுடன் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை UNHRC தீர்மானம் 46/1 இல் பிரேரிக்கப் பட்டதன் பிரகாரம் முழு அளவில் செயல்படுத்துதல்.

 இதன் அடிப்படையில் மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி நடத்த இலங்கை அரசை வலியுறுத்துதல்

இலங்கை சிறைகளில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தல்

இலங்கை அரசின் இனப்படுகொலை உள்ளிட்ட அட்டூழிய குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மனித உரிமைப் பேரவையிலும் அதைத் தாண்டியும் செயல்படுத்தல் 

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தமிழரின் பாரம்பரிய  நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழ் மக்களின் இனக் குடிப் பரம்பலை சிதைப்பது மூலம் தங்கள் சொந்த நிலத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான  இலங்கை அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல்.

என்பன உடனடியாக கையாளப்பட வேண்டிய விடயங்களாக சுட்டிக் காட்டப்பட்டன.  தமிழ் மக்களின்  மனித உரிமை மற்றும்  அடிப்படை உரிமைகள் அரசியல் சமத்துவம், கெளரவமான வாழ்வு என்பனவற்றை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானியா விரைந்து செயல்படுத்தும் என புதிய உதவி இயக்குனராக லிஸா பண்டாரி உறுதியளித்தார் .

ரெலோ ஊடக வாரியம்

ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கே சொந்தம்: எவரும் உரிமை கோர முடியாது! ரெலோ பிரதி முதல்வர் ஈசன்

யாழ்.ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கும், மக்களுக்கும் உரியது. எந்தக் காலத்திலும் ஆரியகுளத்தை யாரும் உரிமை கோர முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளரும், யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வருமாகிய து. ஈசன் தெரிவித்தார்.

யாழ். மாநகர முதல்வரின் “தூய கரங்கள் தூய நகரம்” எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்.ஆரிய குளம் துரித அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(23-07-2021) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

44 குளங்களை ஆழமாக்கி அழகுபடுத்தும் வேலைத் திட்டமாக உலகவங்கி தலையிட்டு அதற்கான திட்டத்தை தந்திருந்தது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் தற்போது இரண்டு குளங்களுக்கான புனரமைப்பு வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆரியகுளத்தை அழகுபடுத்துவதுடன் மாத்திரமின்றி நிலத்தடி நீரைப் பாதுகாக்கக் கூடிய வகையில் ஆழப்படுத்தி, சுத்தப்படுத்தி நவீனமயப்படுத்துவதால் யாழ்.நகரத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

யாழ்.மாநகர முதல்வரின் சிந்தனைக்கு ஈடாகத் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி உதவி வழங்க முன்வந்திருப்பதை நாங்கள் மேலும் மேலும் பாராட்டுகின்றோம்.

இதுபோன்ற பல மக்கள் நலப் பணிகளை ஆற்றும் மனிதர்களை வாழ்வில் காண்பது அரிது. அந்தவகையில் யாழ். மாநகரத்துக்கு இப்படியானதொரு கொடையாளி கிடைத்தது வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

சீன நாட்டு பிரஜை ஒருவரும், கோட்டாபய முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது,

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும். அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. இதனையடுத்தே, ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர் கைவிடப்பட்டது.

தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்ட ஈட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினார்.

குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து வெ ளியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார்.

Posted in Uncategorized

ஞாயிறு முதல் வரையறுக்கப்பட்டளவில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பம்

வரையறுக்கப்பட்ட அளவிலான அரச , தனியார் பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் உரிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

இதன் போது சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஹிஷாலினியின் சடலத்தை பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி, பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு நுவரெலியா நீதவான் லுஷாகா குமாரி தர்மகீர்த்தி இன்று உத்தரவிட்டார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, டயகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தை நாளை (30) காலை 8.30-க்கு தோண்டுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஹங்ச அபேரத்ன, B அறிக்கையை சமர்ப்பித்து முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, கொழும்பு தெற்கு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

டயகம சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனையை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்கான மூவரடங்கிய விசேட நிபுணர் குழு நேற்று பெயரிடப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தலைவரும், விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி உயிரிழந்த விதம், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா, அவ்வாறு ஏற்பட்டிருப்பின் எந்த காலப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது, ஏனைய சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளாரா உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மூவரடங்கிய விசேட நிபுணர் குழுவிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்படவுள்ளது.

நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமி ஹிஷாலினியை தொழிலுக்காக டயகம பகுதியிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுத்துள்ளமையால், நீதி கோரி ஆர்ப்பாட்டங்களும் வலுப்பெற்றவண்ணமுள்ளன.

வட்டுவாகல் காணி சுவீகரிப்பினை தடுக்க போராட்டம்-போக்குவரத்து தடை- அமைதியின்மை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று 29.07.21அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வட்டுவாகல் கடற்படைதளம் அமைக்கப்பட்டுள்ள காணியினை விடுவிக்க காணியின் உரிமையாளர்கள் மக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
காணி அளவீட்டுப்பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வட்டுவாகல் கடற்படைத்தளம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல் தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தி காணி அளவீட்டினை எதிர்த்துள்ளார்கள்.

போராட்டக்காரர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு முதன்மை சுமார் நான்கு மணிநேரம் பயணம் தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலீசார்,கடற்படையின் கலகம் அடக்கும் படையினர் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட காரர்களிடம் கருத்து தெரிவித்த நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் மக்கள் எதிர்பினை வெளிப்படுத்துவதால் நில அளவையினைகைவிட்டு காணி உரிமையாளர்களுடன் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து ஒரு முடிவிற்கு வரவேண்டும் என சொல்லியுள்ளார்கள்.

இவ்வாறு சொல்லிய நில அளவைத்திணைக்களத்தினர்போராட்ட காரர்களை திசைதிருப்பிவிட்டு கடற்படையினரின் வாகனத்தில் ஏறி கடற்படை முகாமிற்குள் சென்று காணி அளவீட்டினை முன்னெடுத்துள்ளார்கள்.மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் அரச திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன் காணிசுவீகரிப்பிற்கு மக்கள் கருத்தறியாமல் காணியினை அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்ட காரர்கள் வட்டுவாகல் முதன்மை வீதியில் குறுக்கே அமர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.இன்று நண்பகள் 1.00 மணிவரைக்கும் வீதியனை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டுவருவதால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் மாவட்ட செயலக அதிகாரியான மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்க வருகை தந்து போராட்ட கரர்களுடன் கலந்துரையாடியும் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்துவருகின்றது.

வட்டுவாகல் கடற்படை தளம் அமைந்துள்ள காணி தமிழ்மக்களுக்கு சொந்தமான காணியுடன் இரண்டு சிங்கள மக்களுக்கும் சொந்தமான காணியாகும் காணியின் உரிமையாளர்களான சிங்கள மக்களும் இன்று காலை குறித்த பகுதிக்கு வந்து தங்கள் காணியினை அளவீடுசெய்து அரசாங்கத்திற்கு கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழரசுக் கட்சி சாள்ஸ்நிர்மலநாதன்,ரெலோ வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கஜேந்திரன்,மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,சிவாஜிலிங்கம், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

Posted in Uncategorized

மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ள ஹிஷாலினியின் சடலம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30) நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்படும் என்று டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.

டயகம தோட்டத்தில் வசித்த ஹிஷாலினி ஜூட் குமார் (16), கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிறுமியின் உடல் டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுமி தொடர்பான விசாரணையில் பல சிக்கல்கள் உள்ளதால், சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்காக விசேட வைத்திய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினால் எதிர்வரும் 30 ஆம் திகதி சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படவுள்ளது.

இதனால், சிறுமி அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பொது மயானத்திற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக மேலும் தெரிவித்தார்.