பிரித்தானிய வெளியுறவு செயலகத்திடம் ரெலோ அவசர விடயங்கள் கோரிக்கை 

பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின்  இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் உதவி இயக்குநராக லிசா பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரின் பதவியேற்பின் பின் 28-07-2021ரெலோ   பிரித்தானிய  கிளை  தலைவரும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவராகவும் செயலாற்றிவரும் சாம் சம்பந்தன் அவர்களுடன் சந்திப்பு ஒன்று நடைபெற்றது . 

இலங்கை விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப் பட்ட வேளையில் தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை பிரித்தானிய அரசு உடனடி கவனத்தில் கொள்வதோடு உரிய செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என திரு. சம்பந்தன் அவர்களால் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன. 

 குறிப்பாக தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரிவரும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நமது பாரம்பரிய தாயகமாக அங்கீகரிக்கும் அரசியல் தீர்வை அடைய தமிழ் சமூகத்திற்கு சர்வதேச மத்தியஸ்தத்தின் முலம் உதவுதல்.

 அரசியல் தீர்வை எட்டும் வரை  நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரப் பகிர்வுடன் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை UNHRC தீர்மானம் 46/1 இல் பிரேரிக்கப் பட்டதன் பிரகாரம் முழு அளவில் செயல்படுத்துதல்.

 இதன் அடிப்படையில் மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி நடத்த இலங்கை அரசை வலியுறுத்துதல்

இலங்கை சிறைகளில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தல்

இலங்கை அரசின் இனப்படுகொலை உள்ளிட்ட அட்டூழிய குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மனித உரிமைப் பேரவையிலும் அதைத் தாண்டியும் செயல்படுத்தல் 

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தமிழரின் பாரம்பரிய  நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழ் மக்களின் இனக் குடிப் பரம்பலை சிதைப்பது மூலம் தங்கள் சொந்த நிலத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான  இலங்கை அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல்.

என்பன உடனடியாக கையாளப்பட வேண்டிய விடயங்களாக சுட்டிக் காட்டப்பட்டன.  தமிழ் மக்களின்  மனித உரிமை மற்றும்  அடிப்படை உரிமைகள் அரசியல் சமத்துவம், கெளரவமான வாழ்வு என்பனவற்றை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானியா விரைந்து செயல்படுத்தும் என புதிய உதவி இயக்குனராக லிஸா பண்டாரி உறுதியளித்தார் .

ரெலோ ஊடக வாரியம்