ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கே சொந்தம்: எவரும் உரிமை கோர முடியாது! ரெலோ பிரதி முதல்வர் ஈசன்

யாழ்.ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கும், மக்களுக்கும் உரியது. எந்தக் காலத்திலும் ஆரியகுளத்தை யாரும் உரிமை கோர முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளரும், யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வருமாகிய து. ஈசன் தெரிவித்தார்.

யாழ். மாநகர முதல்வரின் “தூய கரங்கள் தூய நகரம்” எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்.ஆரிய குளம் துரித அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(23-07-2021) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

44 குளங்களை ஆழமாக்கி அழகுபடுத்தும் வேலைத் திட்டமாக உலகவங்கி தலையிட்டு அதற்கான திட்டத்தை தந்திருந்தது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் தற்போது இரண்டு குளங்களுக்கான புனரமைப்பு வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆரியகுளத்தை அழகுபடுத்துவதுடன் மாத்திரமின்றி நிலத்தடி நீரைப் பாதுகாக்கக் கூடிய வகையில் ஆழப்படுத்தி, சுத்தப்படுத்தி நவீனமயப்படுத்துவதால் யாழ்.நகரத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

யாழ்.மாநகர முதல்வரின் சிந்தனைக்கு ஈடாகத் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி உதவி வழங்க முன்வந்திருப்பதை நாங்கள் மேலும் மேலும் பாராட்டுகின்றோம்.

இதுபோன்ற பல மக்கள் நலப் பணிகளை ஆற்றும் மனிதர்களை வாழ்வில் காண்பது அரிது. அந்தவகையில் யாழ். மாநகரத்துக்கு இப்படியானதொரு கொடையாளி கிடைத்தது வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.