கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

நேற்றைய தினம் (21) நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, 25 ஆண்களும் மற்றும் 17 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,959 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 290,705 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 264,755 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

’பாலம் புனரமைக்கப்பட்டால் வெளிச்சம் ஏற்படுத்தப்படும்’ ரெலோ விஜிந்தன்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படாமல், மின்சாரம் மூலமோ அல்லது சூரிய மின்கலம் மூலமோ வெளிச்சம் ஏற்படுத்துவது சாத்தியமானது அல்ல என, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வட்டுவாகல் பாலத்தில் வெளிச்சம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ள போதிலும், கடந்த பத்து ஆண்டுகளாக பாலம் புனரமைப்பதற்கான திட்டமிடல்கள், முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் ஆனால் புனரமைப்பு முயற்சிகள் இதுவரை தொடங்கப்படவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், பிரதேச சபை வட்டுவாகல் பாலத்துக்கு வெளிச்சம் பொருத்த வேண்டும் என்ற செயற்பாடு முன்னெடுக்க முடியாது உள்ளதாகத் தெரிவித்த அவர், காரணம், வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்பட்டாலே வெளிச்சம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியுமென்றும் கூறினார்.

ஹக்கீம் – ரிசாத் தவிர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘ஆளுங்கட்சி’

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று (20) தோற்கடிக்கப்பட்டது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்ததுடன், சிலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரேரணைக்கு ஆதரவாக தமது வாக்கினை பதிவு செய்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு எடுத்திருந்த உத்தியோகபூர்வ தீர்மானத்திற்கு அமையவே தலைவர் ஆதரவாக வாக்களித்ததாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

எனினும், ஏனைய 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று பாராளுமன்றத்தில் பிரசன்னமாகாமல் இருந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவில்லை.

எனினும், அவரது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

கட்சியின் தலைவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக உத்தியோகபூர்வமாக இந்த பிரேரணை குறித்து ஆராயப்படவில்லை என்ற போதிலும், குறித்து உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியிலேயே பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவர் சட்டத்தரணி என்.எம். சஹீட் தெரிவித்தார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை சரத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முஷாரப் முதுநபீனும் நேற்றைய வாக்களிப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அரசுடனேயே பேசித்தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தாம் இந்த தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் கூறினார்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் எந்தவித விடயமும் பேசப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் தெரிவித்தார்.

மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் -ரெலோ தலைவர் செல்வம் எம்பி வலியுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) வீட்டில் வேலை செய்து வந்த 16 வயது ஹிசாலினி எனும் மலையகத்தை சேர்ந்த சிறுமி அண்மையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மரணம் அடைந்திருந்தார்.

அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள். அதே வேளை இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் செல்வதாக பொது மக்கள் குற்றம் சுற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,

“மலையகத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி ஹிசாலினியின் மரணத்தில் பலவாறான நெஞ்சை உலுக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் அமைப்புகள் பொது அமைப்புகள் என்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் இந்த நேரத்தில், அரசாங்கம் இனியும் மௌனம் காக்கக் கூடாது.

குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டு வேலையில் இருந்த சிறுமியின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அதே நேரம் இந்த மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்தவர்கள் எந்த உயர்ந்த நிலைகளில் இருந்தாலும் அவர்கள் உரிய முறையில் விசாரிக்கப் பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் இந்த நாட்டில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற குற்றச் செயல்களை தடுக்க முடியும்” என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 27ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிரேஸ்ட தலைவர்கள் சிலர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்ளவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பயணக்கட்டுப்பாடு விவகாரம் ; இராணுவ தளபதியின் அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் ஜூன் 10 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார்.

பின்னர், ஜூலை 14 முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி அத்தியாவசிய கடமைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ் மற்றும் ரயில்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், இந்த முடிவு எடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் ஓகஸ்ட் முதலாம் திகதிவரை வரை நிறுத்தப்பட்டன.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகள் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் இயங்கும் என்றாலும், மறு அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிருணிகா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த மாதம் பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருந்தார்.

இந் நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியான ஹிருணிகா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

துமிந்தா சில்வாவுக்னா பொது மன்னிப்பு முடிவு நியாயமற்றது மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 செப்டெம்பர் மாதம் மரண தண்டனை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சிறுமிக்கு நீதி கிடைக்க ரிஷாத் எம்.பி. முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ; ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் மரணித்துள்ள சிறுமிக்கு நீதி கிடைக்க ரிஷாத் பதியுதீன் எம்.பி. முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,

ரிஷாத் பதியுதீன் எம்.பி.யின் வீட்டில் மலையக சிறுமி ஒருவர் மரணித்திருக்கின்றார்.

பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர், ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு சமூகத்தை வழிநடத்துபவர் என்ற ரீதியில் ரிஷாத் பதியுதீன் எம்.பி. அந்த சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் மன்னாரில் இருந்து இமானுவேல் எமாஞ்சலின் என்ற யுவதி விமானியாக முதல்கட்ட பயிற்சியை முடித்துள்ளார். அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 151 வாக்குகளும் , எதிராக 62 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

இதற்கமைய, நம்பிக்கையில்லா பிரேரணை 91 ​மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (19) ஆரம்பமானதுடன், இன்றும் இடம்பெற்றது.

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு – பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்திற்கு முன்பாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் எஸ்.இராஜேந்திரன்,

வறுமை நிலையிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை இவ்வாறு வீடுகளில் பணிக்கு அமர்த்துகின்றனர். இவ்வருடத்தில் மாத்திரம் இது போன்று 10 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வறுமையிலுள்ள குடும்ப பிள்ளைகளுக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உயிரிழந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப் போவதில்லை. பாராளுமன்றத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த சிறுமி குறித்து கருத்து வெளியிடவில்லை.

தேர்தல் காலங்களில் சென்று வாக்கு கேட்கும் இவர்கள் , பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதன் காரணமாகவா இது தொடர்பில் கருத்து வெளியிடவில்லை என்று கேள்வியெழுப்புகின்றோம். எனவே அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் இதற்கான நீதியை வழங்க வேண்டும் என்றார்.