டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு – பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்திற்கு முன்பாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் எஸ்.இராஜேந்திரன்,

வறுமை நிலையிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை இவ்வாறு வீடுகளில் பணிக்கு அமர்த்துகின்றனர். இவ்வருடத்தில் மாத்திரம் இது போன்று 10 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வறுமையிலுள்ள குடும்ப பிள்ளைகளுக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உயிரிழந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப் போவதில்லை. பாராளுமன்றத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த சிறுமி குறித்து கருத்து வெளியிடவில்லை.

தேர்தல் காலங்களில் சென்று வாக்கு கேட்கும் இவர்கள் , பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதன் காரணமாகவா இது தொடர்பில் கருத்து வெளியிடவில்லை என்று கேள்வியெழுப்புகின்றோம். எனவே அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் இதற்கான நீதியை வழங்க வேண்டும் என்றார்.