நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மனோ கணேசன் கூட்டணி ஆதரவு

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களான மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், ப.திகாம்பரம், எம்.வேலுகுமார், எம்.உதயகுமார் ஆகியோர் நாளை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று விவாதம் ஆரம்பமானது. நாளை மாலை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையக சிறுமி மரணம் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவு அறிக்கையை பொரளை பொலிஸில் உடனடியாக ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், ரிஷாட் பதியுதினின் வீட்டில் உயிரிழந்த 16 வயது சிறுமியை அழைத்து வந்த இடைத்தரகரின் வங்கிக் கணக்கு தகவல்களையும் பொரளை பொலிஸிற்கு பெற்றுக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

Posted in Uncategorized

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாது அதற்குப் பின்னர் வரும் ஐந்து வருடங்களுக்கும் தனது அரசியல் கொள்கைகளை அமுல்படுத்ததவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அதரவாக வாக்களிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக் கொண்டு இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்தால் இன்னும் பலபம்பொருந்தியதாக அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில், தீ காயங்களுடன் வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இன்று (19) தெரிவித்தார்.

இதேவேளை, சிறுமியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விசாரணை பிரிவு என்பன இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறுமியை டயகம பகுதியிலிருந்து கொழும்புக்கு வீட்டு வேலைக்காக அழைத்து வந்த நபரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடம் நேற்று (18) மீண்டும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய டயகம பகுதியை சேரந்த சிறுமி, தீகாயங்களுடன் கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் அதிகரித்த சீன ஆதிக்கம் – இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது. இதற்காக இலங்கையில் உள்ள சில துறைமுகங்களை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது.

இந்தியாவை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் சீனா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம், தூத்துக்குடி ஜிர்கோனியம் தொழிற்சாலை, கனநீர் ஆலை, துறைமுகம், ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தகவல் மையம் போன்ற முக்கிய கேந்திரங்கள் தென் தமிழகப் பகுதியில் அமைந்துள்ளன. மேலும், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது.

எனவே, தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இதற்கான பணிகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் விமானப் படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான விமான தளங்கள் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

ராணுவ தளவாடங்களை எளிதாக கொண்டு செல்லும் வகையில் நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை புதிதாக நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. ராணுவ விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் வசதியுடன் இச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் மற்றும் நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை தாங்கிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ‘ஐஎன்எஸ் சிந்து ஷாஸ்ட்ரா’ வந்துஉள்ளது. துறைமுகத்தில் இந்திய கடற்படைக்கு ஒதுக்கப்பட்ட தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக இக்கப்பல் தூத்துக்குடி வந்திருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் 10 நாட்கள் வரை இக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இது பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இக்கப்பலில் 13 அதிகாரிகள் உட்பட 52 கடற்படை வீரர்கள் உள்ளனர்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல், இந்திய கடற்படையில் உள்ள சிந்துகோஷ் வகையைச் சேர்ந்த 10-வது கப்பலாகும். சுமார் 300 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்று தரை, வான் மற்றும் கடல் இலக்கை தாக்கும் அதிநவீன குரூஸ் ஏவுகணைகள் மற்றும் கையால் தூக்கிச் செல்லும் அளவிலான சிறிய ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் இந்த கப்பலில் உள்ளன.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் வேளையில் இலங்கையை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இக்கப்பல் வருகை தொடர்பாக கடற்படை தரப்பிலோ அல்லது துறைமுக தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Posted in Uncategorized

தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடு -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் சுரேந்திரன்

இன்றைய 18-07-2021 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில்  தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதை  இலக்காக கொண்டு ரெலோ முன்னெடுத்துள்ள  செயற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன்  வழங்கிய செவ்வி

கேள்வி: தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் தங்கள் கட்சி மும்முரமாக செயற்பட்டு வருகிறது. தற்போது இதன் நிலை எப்படி இருக்கிறது என்று கூற முடியுமா?

பதில் : ஒன்றிணைப்பது என்பதைவிட ஒரு ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற வேண்டிய விடயங்களை கலந்துரையாடி எவற்றில் நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டமுடியும் என்று ஆராயவே கோரிக்கை விடப்பட்டது. தற்போது தமிழ் தேசிய கட்சிகள் ஒரு தளத்தில் நின்று பேச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் சூழ்நிலை இதை நன்கு உணர்த்தி உள்ளது.
எமது மக்கள் எதிர்பார்த்து நிற்கும் நீதிப் பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு என்பவை ஒருபுறம் இருக்கிறது. மறுபக்கம் ஏற்கனவே 13ஆம் திருத்தத்தின அடிப்படையில் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை செயலற்று இருக்கிறது. காலவரையறையின்றி தேர்தல்கள் பின் போட படுவதே இதற்குக் காரணம். இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை நிறைவேற்று அதிகாரங்களை கொண்டு தொல்லியல், பாதுகாப்பு, வனவளம், சுற்றாடல், உல்லாசத்துறை, மகாவலி அபிவிருத்தி மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை காரணம் காட்டி நிலங்களை அபகரிக்கிறது. மாகாணசபை அதிகாரங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. பல விடயங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் இருப்பதையும் இழக்கின்ற சூழ்நிலை தோன்றியுள்ளது. எதிர்பார்க்கின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கும் ஏற்கெனவே இருப்பவற்றை தக்கவைத்துக் கொள்வதற்கும் நாம் பலம் பொருந்தியவர்களாக ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற வேண்டிய இருக்கிறது.

காலத்தின் தேவை கருதி இந்தக் கோரிக்கையை நாம் விடுத்துள்ளோம். ஆரம்பகட்ட கலந்துரையாடலில் நான்கு பிரதான கட்சிகள் கலந்துகொண்டு பேசியிருக்கிறோம். இதன் தலைவர்கள் தொடர்ந்தும் மற்ற கட்சி தலைவர்களோடு கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுக்க தீர்மானிதுள்ளார்கள். இதுதான் தற்போதைய நிலை.

கேள்வி : ஏற்கனவே 10 கட்சி கூட்டு உருவாக்கப்பட்டு தேக்க நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் உங்களுடைய முயற்சிக்கான காரணம் என்ன? இது வெற்றி பெறுமா?

பதில்: இந்த முயற்சி வெற்றி தோல்விக்கான பலப்பரிட்சை அல்ல. காலத்தின் தேவை கருதியே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் பெறுபேறுகள் நன்மையோ தீமையோ மக்களையே சென்று சேரும்.

எந்த கூட்டுகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மாறாக ஆதரவு வழங்கியவர்களே நாம். வரலாற்று ரீதியாக அவற்றில் தொடர்ந்தும் பங்கேற்றவர்களாக நாங்கள் இருந்து வருகிறோம். இதற்காக அளப்பரிய விலை கொடுத்ததோடு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, மற்றும் பொறுமை காத்தவர்களாக நாம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

மக்களுக்காக புறப்பட்டவர்கள் நாங்கள் என்ற தெளிவே அதற்கு காரணம். இந்தக் கூட்டுக்கள் ஏன் உடைந்தன, அதற்கான காரணங்கள் என்ன என்ற அனுபவங்களை பெற்றவர்கள் நாங்கள்.

நினைவேந்தல்களை தடுப்பதற்கான அரச திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்களை எதிர்த்து செயலாற்றுவதற்கு தமிழ்தேசிய தரப்பில் இருக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது நாங்களும் மனப்பூர்வமாக கலந்து கொண்டதோடு அதில் செயலாற்றி வந்திருக்கிறோம். எந்த நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் நாங்கள் விதிக்கவில்லை. திடீரென்று தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம் என்று அறிவிக்கப்பட்டவுடன் தேக்க நிலை தோன்றியது. ஏற்கனவே பல கூட்டுக் கட்சிகள் அதற்குள் செயல்பட்டன. தனித்து ஒருவர் அல்லது ஒரு சிலர் முடிவெடுக்கக் கூடிய கட்சிகளும் அதற்குள் செயல்பட்டன. பல முக்கிய தலைவர்களோ, கட்சிகளின் கட்டமைப்பு அடிப்படையில் அனுமதி, இலக்கு ,வேலைத் திட்டம் அல்லது கூட்டாக செயற்படுவதற்கான பொதுக் கொள்கை திட்டமோ இல்லாமல் வெளியான இந்த அறிவிப்பு தேக்க நிலைக்கு காரணமாகியது.

நமது அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது பல கூட்டுக்கள் தேர்தல் காலங்களில் உருவாகின. அதேபோல பல கூட்டுகள் தேர்தல் காலங்களில் சிதைந்து போயின. இறுதியில் அவை தமிழ் தேசிய இனத்தினுடைய பிரதிநிதித்துவத்தையும் பலத்தையுமே சிதைத்துள்ளன.

தேர்தல் நோக்கங்கள் , போட்டித்தன்மை, கட்சி நலன், பதவி நிலைகளுக்கான போட்டி, விட்டுக்கொடுப்பு அரவணைப்பு இன்மை என பல காரணங்களை சொல்லலாம்.

உதாரணமாக தமது கொள்கைகளை ஏற்றால் தான் ஒன்றுபட முடியும் என்று ஒரு தரப்பு கூறுகிறது. சில தரப்புகள் கூட்டமைப்பு எப்படி சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்று வழி காட்டுவதில் உன்னிப்பாக இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கத்திலோ விமர்சனங்களை முன்வைத்து அரசியலில் வெற்றி பெற்று மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என செயல்படுகின்றன. ஆகவே ஒட்டுமொத்தத்தில் அவரவர் நலன்களை விட்டு மக்களுக்காக செயலாற்றுவோர் யார் என்ற கேள்வி எழுகிறது.

எனவேதான் அவரவர் தங்களுடைய கட்சி கொள்கை வரம்புகளுக்குள் நின்றுகொண்டு அதேநேரம் தமிழ்த் தேசிய நலன்சார்ந்த விடயங்களில் ஒருமித்து செயலாற்ற வேண்டிய தளம் ஒன்று இன்றைய தமிழ் அரசியலில் தேவைப்படுகிறது. அந்தத் தளத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அந்த தளத்தில் நின்று செயலாற்ற எந்தெந்த விடயங்களில் நாங்கள் ஒருமித்து செயல்பட முடியும் அல்லது முடியாது என்ற கலந்துரையாடலை மேற்கொள்வது முதல் கட்ட நடவடிக்கை. இதைப் புரிந்து கொள்ளாத பலர் ஒரு கூட்டுக்கான முயற்சியாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

கேள்வி: உங்கள் கருத்தின்படி வெற்றி தோல்வி என்று கூறாமல் இந்த முயற்சி சரியான பாதையில் செல்லுமாக இருந்தால் பிரதிபலன் எப்படியாக அமையும்?

பதில்: கட்சிகள் தங்களுடைய கொள்கைத் திட்டங்களை கைவிட்டு வர வேண்டிய தேவை இல்லாததனால் ஒருவரையொருவர் விமர்சிக்க வேண்டிய தேவை ஏற்படாது.

பல கட்சிகள் ஒரே விடையங்களை பேசி வருகிறார்கள். அவற்றை ஒருமித்த குரலில் பேச முடியும்.

எந்தெந்த விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட முடியும் என்று தீர்மானித்து அவற்றில் ஒருமித்து பயணிக்க முடியும்.

ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட முடியாத விடயங்களில் விலகி நிற்கவும் அதேநேரம் ஆதரவு தெரிவிக்கவும் முடியும்.

தேர்தல் காலங்களில் அவரவர் விருப்பப்படி செயற்படுவதற்கான சுதந்திரம் அமைந்திருப்பதால் போட்டித்தன்மை தவிர்த்து செயல்பட வழிவகுக்கும்.
உள்ளக அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் நம்மோடு ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படக்கூடிய சக்திகளை ஒன்றிணைக்க முடியும் சர்வதேசத்தில் எமக்காக குரல் கொடுத்துவரும் நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் அவர்கள் முயற்சிகளுக்கு உந்துசக்தியாக அமையும் துரித முடிவுகளை எடுத்து விரைவாக நடைமுறைப்படுத்தி வரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பலமான ஒருமித்த எதிர் நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வழிவகுக்கும்.

அதே நேரம் மிக முக்கியமாக தமிழ் மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்போடு தமது நலன்களை தாண்டி செயல்படுபவர்கள் யார் என்பதை எமது மக்கள் அடையாளம் கண்டுகொள்ள இந்த முயற்சி பேருதவியாக அமையும் .

இன்னும் பல நல்ல பலன்கள் இந்த முயற்சி மூலம் தமிழ் மக்களுக்கு உருவாகும்.

Posted in Uncategorized

நாடாளவிய ரீதியில் 100 கூட்டங்களை ஆரம்பித்தார் சம்பிக்க : சஜித்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த கடும் முயற்சி

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அவர் எந்தவிதமான பதவிகளுக்கும் நியமிக்கப்படாத நிலைமைகள் தொடர்ந்ததன் காரணத்தினால் 43ஆவது படையணி என்ற அமைப்பினை அவர் ஸ்தாபித்திருந்தார்.

இந்த நிலையில் அவரை ஐக்கிய மக்கள் சக்திக்குள் கொண்டுவருவதற்கு பங்காளி கட்சியின் தலைவரான மனோகணேசன் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.

அதுமட்டுமன்றி சஜித் பிரேமதசவும் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவொன்றை சம்பிக்க ரணவக்கவுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நியமித்திருந்தார்.

எவ்வாறாயினும் தற்போது வரையில் சஜித், சம்பிக்க இடையில் முழுமையான புரிதல் ஏற்பட்டிருக்கவில்லை. எனினும் சம்பிக்க ரணவக்க தான் சஜித் பிரேமதாசவின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வேறு எதனையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறிவருகின்றார்.

ஆனாலும், தனது 43ஆவது படையணியை அவர் பலப்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துகொண்டே இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் 43ஆவது படையணியை மையப்படுத்தி நாடாளவிய ரீதியில் நூறுக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தவுள்ளார்.

இதன் முதலாவது கூட்டம் கடந்த 15ஆம் திகதி மொனராகலையில் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த கூட்டங்கள் இடம்பெறவுள்ளதோடு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் பல்வேறு தரப்பக்களையும் அந்தந்த பகுதிகளில் தனது மேடையில் பிரசன்னமாக்குவதற்கும் சம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தேசிய கட்சிகளுடனான இரண்டாவது கட்டமான கலந்துரையாடல் -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

நேற்று 17 07 2021 இரண்டாவது கட்டமான கலந்துரையாடல் தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் நடைபெற்றது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய ரெலோ மட்டும் புளட் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றுவது பற்றியதான ஆரம்பகட்ட கலந்துரையாடல் காலை பதினொரு மணியிலிருந்து பகல் ஒன்றரை மணி வரைக்கும் நீதியரசர் சி விக்னேஸ்வரன் அவர்களுடைய நல்லூர் கோவில் வீதி இல்லத்தில் நடைபெற்றது.

ரெலோ சார்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் அரசியல் குழு உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் புளட் சார்பில் தலைவர் சித்தார்த்தன் தமிழ்தேசிய மக்கள் கூட்டணி சார்பில் தலைவர் நீதியரசர் சி. விக்னேஸ்வரன் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், பேராசிரியர் திரு சிவநாதன், திரு. சிற்பரன் , தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் திரு சிவாஜிலிங்கம், தமிழர் சுயாட்சி கட்சியின் சார்பில் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் இவற்றிற்கு எதிராக கடந்த காலங்களில் ஒருமித்து செயலாற்றிய வரலாறுகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தற்பொழுது இருக்கக்கூடிய அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் நிறைவேற்று அதிகாரம் துரிதமான முடிவுகளை தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகிக்க முற்படும் போக்கு, இழுத்தடிக்கப்படும் மாகாணசபைத் தேர்தல்கள், தேர்தல் முறை மாற்றம், காணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, மனித உரிமைப் பேரவை உட்பட பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதிநிதித்துவம் உள்ள தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலத்தை ஒருமித்து பயன்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்பட்டன.

தற்போதைய சூழ்நிலையில் ஏற்கனவே இருக்கும் கட்சிகள் மற்றும் கூட்டுகள் தங்களுடைய கட்டமைப்பை பேணும் வகையிலும் கொள்கை முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ளும் வகையிலும் செயல்பட இணக்கம் காணப்பட்ட பட்டது.

ஒருமித்த நிலைபாட்டில் கடந்த காலங்களிலும் பயணித்த அனுபவம் அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆகவே எதிர்காலங்களிலும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவது எல்லோராலும் வரவேற்கப்பட்டது.

ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படக்கூடிய விடையங்களை தீர்மானிப்பதற்கு முதல்கட்டமாக எமது மக்களின் பிரச்சனைகள் அடங்கிய விபரத்தை தயாரிக்கவும்

துரிதமாகவும் தீவிரமாகவும் செயற்படுவதற்கு இயன்றளவு தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி இணைய வழியின் ஊடாகவும் சந்திப்புகளை மேற்கொள்வதும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டோடு கலந்துரையாடல் நிறைவு பெற்றது

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் ஹட்டனில் இன்று போராட்டம்

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Posted in Uncategorized