தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடு -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் சுரேந்திரன்

இன்றைய 18-07-2021 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில்  தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதை  இலக்காக கொண்டு ரெலோ முன்னெடுத்துள்ள  செயற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன்  வழங்கிய செவ்வி

கேள்வி: தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் தங்கள் கட்சி மும்முரமாக செயற்பட்டு வருகிறது. தற்போது இதன் நிலை எப்படி இருக்கிறது என்று கூற முடியுமா?

பதில் : ஒன்றிணைப்பது என்பதைவிட ஒரு ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற வேண்டிய விடயங்களை கலந்துரையாடி எவற்றில் நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டமுடியும் என்று ஆராயவே கோரிக்கை விடப்பட்டது. தற்போது தமிழ் தேசிய கட்சிகள் ஒரு தளத்தில் நின்று பேச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் சூழ்நிலை இதை நன்கு உணர்த்தி உள்ளது.
எமது மக்கள் எதிர்பார்த்து நிற்கும் நீதிப் பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு என்பவை ஒருபுறம் இருக்கிறது. மறுபக்கம் ஏற்கனவே 13ஆம் திருத்தத்தின அடிப்படையில் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை செயலற்று இருக்கிறது. காலவரையறையின்றி தேர்தல்கள் பின் போட படுவதே இதற்குக் காரணம். இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை நிறைவேற்று அதிகாரங்களை கொண்டு தொல்லியல், பாதுகாப்பு, வனவளம், சுற்றாடல், உல்லாசத்துறை, மகாவலி அபிவிருத்தி மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை காரணம் காட்டி நிலங்களை அபகரிக்கிறது. மாகாணசபை அதிகாரங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. பல விடயங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் இருப்பதையும் இழக்கின்ற சூழ்நிலை தோன்றியுள்ளது. எதிர்பார்க்கின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கும் ஏற்கெனவே இருப்பவற்றை தக்கவைத்துக் கொள்வதற்கும் நாம் பலம் பொருந்தியவர்களாக ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற வேண்டிய இருக்கிறது.

காலத்தின் தேவை கருதி இந்தக் கோரிக்கையை நாம் விடுத்துள்ளோம். ஆரம்பகட்ட கலந்துரையாடலில் நான்கு பிரதான கட்சிகள் கலந்துகொண்டு பேசியிருக்கிறோம். இதன் தலைவர்கள் தொடர்ந்தும் மற்ற கட்சி தலைவர்களோடு கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுக்க தீர்மானிதுள்ளார்கள். இதுதான் தற்போதைய நிலை.

கேள்வி : ஏற்கனவே 10 கட்சி கூட்டு உருவாக்கப்பட்டு தேக்க நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் உங்களுடைய முயற்சிக்கான காரணம் என்ன? இது வெற்றி பெறுமா?

பதில்: இந்த முயற்சி வெற்றி தோல்விக்கான பலப்பரிட்சை அல்ல. காலத்தின் தேவை கருதியே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் பெறுபேறுகள் நன்மையோ தீமையோ மக்களையே சென்று சேரும்.

எந்த கூட்டுகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மாறாக ஆதரவு வழங்கியவர்களே நாம். வரலாற்று ரீதியாக அவற்றில் தொடர்ந்தும் பங்கேற்றவர்களாக நாங்கள் இருந்து வருகிறோம். இதற்காக அளப்பரிய விலை கொடுத்ததோடு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, மற்றும் பொறுமை காத்தவர்களாக நாம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

மக்களுக்காக புறப்பட்டவர்கள் நாங்கள் என்ற தெளிவே அதற்கு காரணம். இந்தக் கூட்டுக்கள் ஏன் உடைந்தன, அதற்கான காரணங்கள் என்ன என்ற அனுபவங்களை பெற்றவர்கள் நாங்கள்.

நினைவேந்தல்களை தடுப்பதற்கான அரச திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்களை எதிர்த்து செயலாற்றுவதற்கு தமிழ்தேசிய தரப்பில் இருக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது நாங்களும் மனப்பூர்வமாக கலந்து கொண்டதோடு அதில் செயலாற்றி வந்திருக்கிறோம். எந்த நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் நாங்கள் விதிக்கவில்லை. திடீரென்று தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம் என்று அறிவிக்கப்பட்டவுடன் தேக்க நிலை தோன்றியது. ஏற்கனவே பல கூட்டுக் கட்சிகள் அதற்குள் செயல்பட்டன. தனித்து ஒருவர் அல்லது ஒரு சிலர் முடிவெடுக்கக் கூடிய கட்சிகளும் அதற்குள் செயல்பட்டன. பல முக்கிய தலைவர்களோ, கட்சிகளின் கட்டமைப்பு அடிப்படையில் அனுமதி, இலக்கு ,வேலைத் திட்டம் அல்லது கூட்டாக செயற்படுவதற்கான பொதுக் கொள்கை திட்டமோ இல்லாமல் வெளியான இந்த அறிவிப்பு தேக்க நிலைக்கு காரணமாகியது.

நமது அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது பல கூட்டுக்கள் தேர்தல் காலங்களில் உருவாகின. அதேபோல பல கூட்டுகள் தேர்தல் காலங்களில் சிதைந்து போயின. இறுதியில் அவை தமிழ் தேசிய இனத்தினுடைய பிரதிநிதித்துவத்தையும் பலத்தையுமே சிதைத்துள்ளன.

தேர்தல் நோக்கங்கள் , போட்டித்தன்மை, கட்சி நலன், பதவி நிலைகளுக்கான போட்டி, விட்டுக்கொடுப்பு அரவணைப்பு இன்மை என பல காரணங்களை சொல்லலாம்.

உதாரணமாக தமது கொள்கைகளை ஏற்றால் தான் ஒன்றுபட முடியும் என்று ஒரு தரப்பு கூறுகிறது. சில தரப்புகள் கூட்டமைப்பு எப்படி சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்று வழி காட்டுவதில் உன்னிப்பாக இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கத்திலோ விமர்சனங்களை முன்வைத்து அரசியலில் வெற்றி பெற்று மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என செயல்படுகின்றன. ஆகவே ஒட்டுமொத்தத்தில் அவரவர் நலன்களை விட்டு மக்களுக்காக செயலாற்றுவோர் யார் என்ற கேள்வி எழுகிறது.

எனவேதான் அவரவர் தங்களுடைய கட்சி கொள்கை வரம்புகளுக்குள் நின்றுகொண்டு அதேநேரம் தமிழ்த் தேசிய நலன்சார்ந்த விடயங்களில் ஒருமித்து செயலாற்ற வேண்டிய தளம் ஒன்று இன்றைய தமிழ் அரசியலில் தேவைப்படுகிறது. அந்தத் தளத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அந்த தளத்தில் நின்று செயலாற்ற எந்தெந்த விடயங்களில் நாங்கள் ஒருமித்து செயல்பட முடியும் அல்லது முடியாது என்ற கலந்துரையாடலை மேற்கொள்வது முதல் கட்ட நடவடிக்கை. இதைப் புரிந்து கொள்ளாத பலர் ஒரு கூட்டுக்கான முயற்சியாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

கேள்வி: உங்கள் கருத்தின்படி வெற்றி தோல்வி என்று கூறாமல் இந்த முயற்சி சரியான பாதையில் செல்லுமாக இருந்தால் பிரதிபலன் எப்படியாக அமையும்?

பதில்: கட்சிகள் தங்களுடைய கொள்கைத் திட்டங்களை கைவிட்டு வர வேண்டிய தேவை இல்லாததனால் ஒருவரையொருவர் விமர்சிக்க வேண்டிய தேவை ஏற்படாது.

பல கட்சிகள் ஒரே விடையங்களை பேசி வருகிறார்கள். அவற்றை ஒருமித்த குரலில் பேச முடியும்.

எந்தெந்த விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட முடியும் என்று தீர்மானித்து அவற்றில் ஒருமித்து பயணிக்க முடியும்.

ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட முடியாத விடயங்களில் விலகி நிற்கவும் அதேநேரம் ஆதரவு தெரிவிக்கவும் முடியும்.

தேர்தல் காலங்களில் அவரவர் விருப்பப்படி செயற்படுவதற்கான சுதந்திரம் அமைந்திருப்பதால் போட்டித்தன்மை தவிர்த்து செயல்பட வழிவகுக்கும்.
உள்ளக அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் நம்மோடு ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படக்கூடிய சக்திகளை ஒன்றிணைக்க முடியும் சர்வதேசத்தில் எமக்காக குரல் கொடுத்துவரும் நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் அவர்கள் முயற்சிகளுக்கு உந்துசக்தியாக அமையும் துரித முடிவுகளை எடுத்து விரைவாக நடைமுறைப்படுத்தி வரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பலமான ஒருமித்த எதிர் நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வழிவகுக்கும்.

அதே நேரம் மிக முக்கியமாக தமிழ் மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்போடு தமது நலன்களை தாண்டி செயல்படுபவர்கள் யார் என்பதை எமது மக்கள் அடையாளம் கண்டுகொள்ள இந்த முயற்சி பேருதவியாக அமையும் .

இன்னும் பல நல்ல பலன்கள் இந்த முயற்சி மூலம் தமிழ் மக்களுக்கு உருவாகும்.