எதிரணி உறுப்பினர்களை விலைக்குவாங்கும் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹக்கீம்

யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூறுவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்ட போதும் இம்முறை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலே நினைவேந்தல் நடைபெற்றது .இது ஒரு புதிய சமிக்ஜையை காட்டுகிறது . இதனை அங்கீகரிக்க வேண்டும்.

அத்துடன் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) மூன்றாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். அதேபோன்று அரசியல் தாமிகத்தையும் ஆளும் எதிர்க்கட்சியினர் பின்பற்றவேண்டும். குறிப்பாக அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

புதிய பிரதமரின் அரசாங்கத்தில் ஆரம்பத்தில் 15 அமைச்சர்கள் என்றார்கள் அதன் பின்னர் 18 என்றார்கள் ஆனால் தற்போது 22 அமைச்சர்கள் என கேள்விப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக்கொண்டே இதனை செய்யப்பாேவதாகும் தெரியவருகின்றது.

பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி சபை ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். ஆளும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை நிறுத்தவேண்டும். இதந்த அறிவிப்பை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு சபை முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கடன் செலுத்த முடியாமல் போயிருப்பதால் நேற்றில் இருந்து நாடு வங்குராேத்து என சட்டரீதியிலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் யுத்தம் வெற்றிகொண்டு 13ஆவது வருடத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். ஆனால் அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

காலிமுகத்திடலில் போராடும் மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். புலிகள் அமைப்பில் இறந்தவர்கள் அதேபோன்று உயிர் நீத்த ராணுவ வீரர்களையும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்தனர்.

கடந்த வருடம் முள்ளவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றபோது ராணுவத்தினர் அதனை தடுத்து, அவர்களை சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் இந்த வருடம் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே உயிரிழந்தவர்களை நினைகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதுதான் யுகமாற்றம், புதிய சமிக்ஜை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வழியில் நாங்கள் செல்வோம்.

அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரின் உரைக்கு பின்னர் உரையாற்றியவர்களே ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் செயற்பட்டனர்.

வன்முறையை தடுக்க தவறியது தொடர்பில் பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி கொண்டிருக்கிறார்கள் .

அத்துடன் நீதிபதி தடை உத்தரவு பிரப்பிக்கவில்லை என தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதம நீதியரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்து செயலாளருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பிரதம நீதியரசர் சட்டமா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கின்றது. இவை தவறான முன்மாதிரியாகும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கை உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம் – பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட்

போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும், இதுகுறித்து தமது அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், அவ்வாரத்தின் இறுதிநாளான 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் நேற்றைய முன்தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு காணொளியொன்றின் ஊடாகக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்கள் உள்ளடங்கலாக நாட்டுமக்கள் அனைவருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்திய சிவில் யுத்தம் முடிவிற்குவந்து இன்றுடன் (நேற்று முன்தினத்துடன்) 13 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட மக்களுக்குரிய நீதியையும் பொறப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு வலியுறுத்துவதில் நானும் பிரிட்டன் அரசாங்கமும் கொண்டிருக்கின்ற ஸ்திரமான நிலைப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றேன்.

பாதிக்கப்பட்ட தரப்பினர்மீது, குறிப்பாக அவர்களின் அன்பிற்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினர்மீது நாம் கரிசனைகொண்டிருக்கின்றோம். இவ்விடயத்தில் எமது 46ஃ1 தீர்மானம் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவது குறித்த பிரிட்டனின் நிலைப்பாட்டையும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றேன். இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் அதேவேளை, போரின்போது இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னேற்றகரமானதும் செயற்திறனானதுமான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்துவோம்.

தற்போது இலங்கை பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. நாம் இலங்கையின் தற்போதைய நிலைவரங்களைத் தொடர்ச்சியாக அவதானித்துவரும் அதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதையும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்கும், இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் பிரிட்டன் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ஜனநாயக ரீதியிலான செயற்திறன்வாய்ந்த தீர்வுகள் குறித்து ஒன்றிணைந்து ஆராயுமாறு அனைத்துக் கட்சிகளிடமும் வலியுறுத்துகின்றோம். அதேவேளை உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதில் விசேட அவதானம் செலுத்தியிருப்பதுடன், இலங்கை மக்கள் அனைவரினதும் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும், அதனை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியில் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

‘கோட்டா – ரணில் சதி அரசாங்கத்தை விரட்டுவோம், முறைமையை மாற்றுவோம்’ எனும் தொனிப்பொருளிலான பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி அழகியற்கலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று அதனை நிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுத்தனர்.

எனினும், கொழும்பு நகர மண்டபம் , மருதானை, தொழில்நுட்ப சந்தியை தாண்டி ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டையை சென்றடைந்தது.

இதற்கிடையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொழும்பு கோட்டை பகுதியிலுள்ள எந்தவொரு அரச நிறுவனங்களுக்குள்ளும் 5 வீதிகளுக்குள்ளும் பிரவேசிக்க முடியாதவாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய உத்தியோகபூர்வ இல்லங்களுக்குள் பிரவேசிப்பது , பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகக் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பொலிஸார் இதனைக் கூற
முற்பட்டபோது அங்கு இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதால், பொலிஸார் அங்கிருந்து ஓடிச்சென்றனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் உலக வர்த்தக மைய வளாகத்தை அடைந்தனர்.

இதன்போது, பொலிஸாரால் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

அப்பகுதியில் தமது வேலைகளில் ஈடுபட்டிருந்த சாதாரண மக்களும் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை, நீர்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டனர்.

மஹிந்த 2 ஆவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் ஓய்வுபெற்றிருக்க வேண்டும் – சமல்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இலங்கையின் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவரது சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

“கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அவரது சிறப்பான அரசியல் சாதனைகள் மற்றும் பயணம் தற்போது தொலைந்து போயுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

அரசியலில் பிரவேசிப்பது மற்றும் ஈடுபடுவதுடன், மக்கள் சரியான நேரத்தில் விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நாம் அதிகாரம் மற்றும் அரசியல் பதவிகளுக்கு பேராசை கொண்டால், இன்று நாம் காணும் இத்தகைய விளைவுகளை சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

வலி கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி

யாழ். வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் (மே 18) காலை 7 மணிக்கு ஒன்று கூடிய பிரதேச சபை உறுப்பினர்கள் பணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி அனுஷ்டிப்பைத் தொடர்ந்து தவிசாளர், மற்றும் சபையின் உறுப்பினர்கள் செல்வதிசைநாயகம் தவநாயகம் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். இவ் அஞ்சலியுரைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமைகளுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் சிறப்புரையாற்றினார்.

அதில் அவர் தெரிவித்ததாவது,

“எமது மக்கள் மீது தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டே வந்துள்ளது. சிங்கள மக்கள் போன்று நாட்டில் உரிமைகளுடன் நாமும் ஓர் தேசிய இனம் என்ற வகையில் வாழ வேண்டும் என்றே எமது இனம் அபிலாசை கொண்டுள்ளது.

அரசியல் உரிமைகளை கேட்டு அகிம்சை வழியில் போராடிய போது எமக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட அரச பயங்கரவாதமே ஆயுதப்போருக்கு வழிவகுத்தது.

அரச படைகள் ஊடாக எமது சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளோம்.

உலகம் மனித உரிமைகளுக்காக பாடுபடுகின்ற ஓர் சூழ்நிலையில் அத்தனை உரிமைகளும் அரசினாலேயே இலாவகமாக மீறப்பட்டுள்ளன.

அரச படைகளால் எமது மக்கள் கடலிலும், தரையிலும் வெட்டியும், சுட்டும், வான் வெளி கொத்துக் குண்டு வீச்சிலும் எத்தனையே ஆயிரம் சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்களின் உரிமைகள் பற்றி உலகம் பேசுகின்றது.

ஆனால் எத்தனை பெண்கள் யுத்தகாலத்தில் அரச அணுசரனையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுனர். அதுபோன்று தமிழ் மக்களை கொன்றழித்த கொலைக்குற்றவாளிகள் தண்டனைகள் வழங்கப்படாது அவர்களுக்கு அரச அந்தஸ்தளிக்கப்பட்டுள்ளது.

அரச படைகளிடம் சரணடைந்த மற்றும் அரச படைகளால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களைத் தேடி தாய்மார் இன்றும் போராடுகின்றனர்.

எதற்குமே நீதி கிட்டவில்லை. போரில் குழந்தைகளைக் கூட கொன்று குவித்த அரசிற்கு எதிராக போதுமான மனித உரிமை ரீதியிலான ஒழுங்குகள் பிரயோகிக்கப்படவில்லை என்பதை ஓர் இனமாக நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இந்நிலையில் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு வழங்க இணக்கம் காணப்படுகின்ற உதவிகள் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றிய பொறுப்புச் சொல்வதை உறுதிப்படுத்துவதுடன் தமிழ் மக்கள் மீது மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் உறுதிப்படுத்துவதாகவும் எமக்கான தீர்வை முன்வைப்பதாகவும் அமையவேண்டும்”. என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழக முதல்வரால் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் சென்னை துறைமுகத்திலிருந்து இன்று (18) நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு வழங்கும் உதவியின் ஒரு கட்டமாக, நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு கடந்த மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்திருந்தார்.

அதன்படி, 40,000 தொன் அரிசி, 500 தொன் பால் மா, இந்திய ரூபாவில் 28 கோடி ரூபா பெறுமதியான 137 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பல் மூலம் நாட்டிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப்பொருட்களை தமிழகத்தின் சிறுபான்மையின மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் நேற்று சென்று பார்வையிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பலை இன்று மாலை முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

மே-18 ஐ இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்தது கனேடிய பாராளுமன்றம்

கனடா பாராளுமன்றத்தில் மே 18 ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி மே 18ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஏற்றுக்கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டாலும் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரை தொடர்ந்து இந்த குழப்பம் இருக்கும் -ரெலோ தலைவர் செல்வம் எம்பி

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டாலும் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரை தொடர்ந்து இந்த குழப்பம் இருக்கும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

புதிதாக பிரதமர் பதவியேற்றது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடயத்தில் மக்கள் எதிர்ப்பு இருக்கிறதற்கு காரணம் கோட்டா கோ கோம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதற்குள்ளே இருந்து கொண்டு தன்னுடைய பரிவாரங்களை தெரிவு செய்திருக்கின்ற ஒரு சூழலை மக்கள் எதிர்க்கிறார்கள்.

அந்தவகையிலே புதிய பிரதமராக தெரிவு செய்து அடுத்த அமைச்சரவை அவர்களுடைய சகாக்களாக இருக்கின்ற சூழல் ஏற்படும். அதனால் மக்கள் எதிர்க்கின்ற வாய்ப்பு இருக்கிறது.

ஜனாதிபதி அவர் கூறியது போல 19 ஆவது திருத்த சட்டத்தை பாராளுமன்றிற்கு அதிகாரங்களை கொடுக்கின்ற வகையிலே அதனை செய்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்கின்ற போது தான் மக்கள் ஜனநாயக முறையான பாராளுமன்றத்திற்கு ஆதரவை தருகின்ற வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரைக்கும் தொடர்ந்து இந்த குழப்பம் இருக்க தான் செய்யும். அவர் 19 ஆவது திருத்த சட்டத்தை அல்லது 21 என்ற அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை தந்து அந்த பதவியிலிருந்து விலகி செல்லுகின்ற சூழல் உருவாகும் மட்டும் இந்த பிரச்சினை தொடர்ச்சியாக இருக்கும் என்று தான் கூற முடியும்.

ஏனென்றால் மக்கள் கோருவது மகிந்த ராஜபக்ஷ பரிவாரங்கள் இருக்க கூடாதென. அந்த சூழலில் தான் மக்கள் பார்க்கின்றார்கள். அந்தவகையில் ஜனாதிபதி இருக்கும் வரைக்கும் இந்த எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விளம்பர பலகையினை வலி கிழக்கு தவிசாளர் அகற்றிய வழக்கு விசாரணைக்கு

உள்ளுராட்சி மன்றமான பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியில் மத்திய அரசாங்கத்தின் நிறுவனமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பலகையினை அகற்றியமை தொடர்பில் ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை புதன்கிழமை (18) மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மத்திய அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அச்செழு அம்மன் வீதியைப் புனரமைப்பதற்கான நடவடிக்கையினை வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டிருந்தது. இந் நிலையில் மாவட்ட அவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தரப்பினரால் சம்பிரதாய பூர்வமாக குறித்த வீதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வீதியில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களுடனான பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டது.

அவ் விளம்பரப் பலகை குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான உள்ளுராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தின் தாபனமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உடன் அகற்றுமாறு தவிசாளர் பணித்திருந்தார். உடனடியாக அகற்றப்படாத நிலையில் குறித்த வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பரப்பலகையினை தவிசாளர் அகற்றியிருந்தார்.

இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான விளம்பரப் பலகையினைக் காணவில்லை எனத் தெரிவித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டினைத் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் உயர் அரசியல் அழுத்தம் காரணமாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை அச்சுவேலி பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கையினை எடுத்தனர். அவர் அரசியல் ரீதியிலான பழிவாங்கலாக தன்னைக் கைது செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்து சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக நீதிமன்ற முன் பிணைக்கு விண்ணப்பம் செய்து கைதில் இருந்து தவிசாளர் தன்னைப் பாதுகாத்துக்கொண்டார்.

கடந்த வழக்குத் தவணையின் போது போது தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதேச சபையின் உரிய அனுமதிகளைப் பெற்றுச் செயற்படுவதாகவும் தவிசாளர் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் எடுத்துரைத்தனர். இந் நிலையில் வழக்கினை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிலைப்பாட்டை மன்றுக்கு தெரியப்படுத்துமாறு மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் நாளை புதன்கிழமை (18) திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவ் வழக்கில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தணிகள் குழாம் முன்னிலையாகின்றமை குறிப்பிடத்தக்கது

ஒரு குடும்பம் அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாக்க நான் வரவில்லை பிரதமரின் முழுமையான உரை

புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் பிரதமர் பெறுப்பை ஏற்று நாட்டின் பொருளாதாரத்தை மீட்டிபெற வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு துரித நடடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் விசேட உரையை தற்போது ஆற்றுகின்றார்

எரிவாயு கப்பலுக்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் டொலர்களைக் கூட நிதியமைச்சினால் திரட்டிக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது எனக் குறிப்பிடுகின்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் முதலாம் திகதிகளில் இரண்டு டீசல் கப்பல்களும், அத்துடன் மே 18 மற்றும் மே 29 ஆம் திகதிகளில் இரண்டு பெற்றோல் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளன.

எரிவாயு சிலிண்டர் கொள்வனவிற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவாக திரட்டிக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எரிவாயு பற்றாக்குறைக்கு நாளை முதல் ஒப்பீட்டளவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்கிறார் பிரதமர்.

இதேவேளை, 14 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது கவலைக்குரியது என பிரதமர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு அபிவிருத்தி வரவு – செலவு திட்டத்திற்கு பதிலாக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளேன் .

பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்த யோசனை முன்வைத்துள்ளேன்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு விபரம்

கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கௌரவ ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.2022 ற் ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாய்களாகவே உள்ளன..

2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு 3.3 ட்ரில்லியன் ரூபாய்கள். எவ்வாறாயினும் கடந்த அரசில் வட்டி விகிதம் அதிகரித்தமை மற்றும் மேலதிக செலவுகள் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவு 4 ட்ரில்லியன் ரூபாய்களாகும். வருடத்திற்கான வரவுசெலவு பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாய்களாக உள்ள அதேவேளை அது சராசரி தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13 வீதமாகும் .

அதேப் போன்று அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3200 பில்லியன் ரூபாயாகும் . நாம் மே மாதத்தின் இரண்டாம் வாரம் ஆகும்போது 1950 மில்லியன் ரூபாய்களை செலவு செய்திருந்தோம். அதன்படி அண்ணளவான மிகுதி 1250 மில்லியன் ரூபாய்கள். நாம் நேற்று அமைச்சரவையில் திறைசேரி முறிகளை வழங்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையை 3000 பில்லியனில் இருந்து 4000 பில்லியன் வரை அதிகரிக்கும் யோசனை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க ஒரு தீர்மானத்தை எடுத்தோம்.

2019 நவம்பர் மாதத்தில் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்தன. ஆனால் இன்று திறைசேரியால் ஒரு மில்லியன் டொலர்களைக்கூட தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை கப்பலில் ஏற்றும் பொருட்டு செலுத்தத் தேவையான 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்கூட இந்த நேரத்தில் நிதியமைச்சினால் தேடிக்கொடுக்க முடியாதுள்ளது.

இவ்வனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன. எதிர்வரும் சிலநாட்களில் வரிசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேடவேண்டிய உள்ளது. இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது. நேற்று வந்த டீசல் கப்பலால் இன்றில் இருந்து உங்களின் டீசல் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 இரண்டு பெற்றோல் கப்பல்கள் வரவுள்ளன. இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த கப்பல்கள் 3 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு செலுத்தும் பொருட்டு திறந்த சந்தையில் டொலர்களை பெற்றுக் கொள்ள நடவடிகை எடுக்கப்படும்.

மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு. ஆனால் நாம் இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம் . அதேப் போன்று முடிந்தளவு நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடிய விரைவில் தேடவேண்டும். மண்ணெண்ணெய் மற்றும் சம்பந்தமான நிலைமை இதனை விடப் பயங்கரமானது. இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன. நம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர்களின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இவ்வனைத்து சிரமங்களுக்கு மத்தியில் நேற்று ஒரு டீசல் ஏற்றிய கப்பலை நேற்று கொண்டு வந்தோம். அதனால் இன்று முதல் அந்த டீசலை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அதன்பொருட்டு இந்தியாவின் ஒத்துழைப்பு நமக்கு கிடைத்தது. அதேப் போன்று வந்துள்ள எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் செலுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் உங்களின் எரிவாயு பிரச்சனைகளுக்கு ஏதோவொரு தீர்வு கிடைக்கும்.

இதற்கு இடையில் , மற்றுமொரு உதாரணம் மருத்துவ மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவ மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை 34 பில்லியன் ரூபாய்களாகும். அதேப் போன்று அரச ஔடதக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த மருத்துவ மருந்துகளுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அதனால் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 14 அத்தியாவசிய மருத்துவ மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளமையும், அதில் இரண்டையாவது வழங்க இந்த நேரத்தில் எமது மருத்துவ வழங்கள் பிரிவிற்கு இயலாது உள்ளமை மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது. இருதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மற்றும் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்து ஆகியவையே அந்த இரண்டு மருந்துகளாகும். ஆனால் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்திற்க்கு மாற்று மருந்து எதுவும் இல்லை.

இதற்கிடையில் 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன்.

அதேபோல், இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துமாறு நான் முன்மொழிகின்றேன் . 2020 – 2021 ல் மட்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை 45 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்துள்ளது .2021 மார்ச் 31 ஆகும் போது இதன் மொத்த நட்டம் 372 பில்லியன்களாக இருந்தது. நாம் இதனை தனியார் மயப்படுத்தினாலும் இந்த நட்டத்தை நாமே ஏற்க நேரிடும். இந்த நட்டத்தை வாழ்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்காத இந்த நாட்டின் ஏழை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க ப் போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது.

அரசாங்கம் தற்போது 92 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 84.38 , 95 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 71.19 , டீசல் லீட்டர் ஒன்றில்ரூ. 131.55 சுப்பன் டீசல் லீட்டர் ஒன்றில் ரூ. 136.31 மற்றும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றில் ரூ. 294.50 என நட்டமடைகின்றது . பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இந்த நட்டத்தை மேலும் தாங்கிக் கொள்ள முடியாது. அதேப்போல இலங்கை மின்சாரசபை மின் அலகு ஒன்றிற்காக உங்களிடம் ரூ. 17 ஐ அறவிட்டாலும் அதன் பொருட்டு 48 ரூபாய்கள் வரை செலவு செய்கிறது . அதன்படி ஒரு அலகிற்கு 30 ரூபாய்கள் நட்டம் ஏற்படுகிறது. அதுவும் மோசமான சிக்கலாகும்.

நான் இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும் , உங்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டே அதனை செய்யவுள்ளது. எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபைக்குத் தேவையான நிதியைக்கூட தேடமுடியாதுள்ளது. எவ்வாறாயினும் எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும்.

நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை.குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே. எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் இதில் இருந்து நாம் மீள முடியும். அதன்பொருட்டு நாம் புதிய வழிக்கு செல்ல நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தில் தற்போதைய நிலைமை சம்பந்தமாக எதிர்கட்சி தலைவர் உட்பட கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளித்தமை குறித்து அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

தற்போது நிலவும் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய சபை அல்லது அரசியல் சபை ஒன்றை அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.

அதன் மூலம் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து எட்டப்படும் தீர்மானத்திற்கு அமைய நிச்சயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பொதுவான குறுகிய கால- மத்தியக் கால – மற்றும் நீண்ட கால செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை மீண்டும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல எம்மால் முடியும். மண்ணெண்ணெய், எரிவாயு, எரிபொருள் வரிசை இல்லாத நாடு, மின்சாரம் துண்டிக்கப்படாத நாடு , விவசாயத்தை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள நாடு , இளைஞர் யுவதிகளின் நாளையதினம் பாதுகாக்கப்பட்ட நாடு, மனித வளம் போராட்டக் களத்தில் மற்றும் வரிசையில் வீணடிக்கத் தேவை இல்லாத நாடு, எல்லோரும் சுதந்திரமாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நாடு , மற்றும் மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.

நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை. என்னுடைய கால்களில் கலற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.

நான் எனது கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்.