`ரெலோ` குகனின் நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான கிறிஸ்டி குகராஜாவின் (குகன்) 23வது நினைவு தினம், வைரவப்புளிங்குளம் `யங் ஸ்ரார்` விளையாட்டு மைதானத்துக்கு முன்பாகவுள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் நேற்று (15) நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அன்னாரது தூபிக்கு மலர்மாலை அணிவித்து, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Posted in Uncategorized

ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலன் ஜயதிலக்க மற்றும் சமன் லால் பெர்னாண்டோ உட்பட 22 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீ து கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தே மேற்குறிப்பிட்டோரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரச ஆதரவாளர்களை கைதுசெய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அரசாங்கத்தின் ஆதரவாளர்களை கைது செய்யுமாறு கோரி சோசலிச இளைஞர்கள் சங்கம் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான விடயங்களை கருத்திற்கொண்டு, தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு பதவிகளை பெற்றுக்கொள்ளாமல் பாராளுமன்ற செயன்முறையின் ஊடாக பூரண ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இன்று(16) இடம்பெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் சாதகமாக்கிக்கொள்ள மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்படை கொள்கைகளுக்கு புறம்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் செயற்பாடுகள் எடுக்கப்பட்டால் குறித்த ஆதரவை நிபந்தனையின்றி இடைநிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரணியில் சிங்கள மாணவர்களும் இணைந்து அஞ்சலி

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பித்த முள்ளிவாய்கால் நோக்கிய பேரணி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவு தூபியை இன்றைய தினம் திங்கட்கிழமை(16) வந்தடைந்தது.

இதன்போது பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு தீபமேற்றி மலரஞ்சலி செய்யப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களால் பேரணியாக வந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இந்த பேரணி வடக்கு மாகாணத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமானது.

இவ் அஞ்சலி நிகழ்வில் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்

இன்றைய தினம்(16) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றிரவு(16) 11 மணி முதல் நாளை(17) அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்றிரவு(16), 08 மணி முதல் நாளை(17) அதிகாலை 05 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரவு இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

குமுதினிப் படகு படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) யாழ். நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.

குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக இன்று காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள குமுதினி படகுப் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தவர்களிற்கு சுடரேற்றி மலரஞ்சலி செய்யப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட மக்கள் ஞாபகார்த்தமாக சூழகம் அமைப்பினால் வழங்கப்பட்ட மரங்கள் நெடுந்தீவில் நாட்டப்பட்டதுடன் பொதுமக்களுக்கு மரங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம”

வெசாக் பண்டிகையை முன்னிட்டு “கோட்டா கோ கம “புதுவடிவம் பெற்றுள்ளது.

அலங்கார வெசாக் கூடுகள், பௌத்த கொடிகள், மின்விளக்குகளால் “கோட்டா கோ கம ” அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 37 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

போராட்டத்தை மழுங்கடிக்க இந்துப்பத்திரிகை உடந்தை : செல்வம் எம்பி

அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதுடன் மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஸ்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியாவில் இன்று (15) இடம்பெற்ற ரெலோ அமைப்பின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராஜாவின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வவுனியாவில் சிங்களதேசத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்திய மகானை இன்றையதினம் நாம் நினைவு கூருகின்றோம்.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல்பட்டனர். மகிந்த கோட்டாபய அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்து காட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.

இதே காலப்பகுதியில் சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்படும் நிலை கோட்டா அரசுக்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்த நாட்டை கொண்டு நடாத்தும் திறமை அவர்களிடம் இருக்கவில்லை என்பது இன்று புலனாகின்றது.

சிங்கள மக்களின் அந்த செயற்பாட்டில் நாங்களும் இணைந்து கொள்கின்றோம்.

அத்துடன் இழந்துபோன தமது உறவுகளுக்காக அஞ்சலி செய்யும் வாய்ப்பினை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் புதிய பிரதமர் ஏற்படுத்தி தரவேண்டும். இந்த நிகழ்வில் சிங்கள மக்களும் கலந்து கொள்ள வேண்டும். போராட்ட காரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

உயிரிழந்த எமது மக்களுக்கு அவர்களும் அஞ்சலியை செலுத்தவேண்டும்.

இதேவேளை புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தினை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன்.

தற்போது இந்துப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் துக்கத்தினை அனுபவித்து வரும் இந்த சூழலில் இப்படியான செய்திகள் வருவதை ஏற்கமுடியாது. இது எமது மக்களின் அஞ்சலியை தடைசெய்வதற்கான உக்தியாகவே பார்க்கின்றேன்.

அத்துடன் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நிதானமாக தனது கருத்தை சொல்லியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. முதலமைச்சராக இருந்தவர் மக்களின் அதிக வாக்குகளை பெற்றவர் உடனடியாக அப்படியான கருத்தை ஏன் சொன்னார் என்று தெரியவில்லை அவர் நிதானமாக கருத்தை சொல்லியிருக்கலாம்.

இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து முடிவினை எடுக்கும் சந்தர்ப்பம் தொடர்பாக நாம் பரிசீலிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

”நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் – கெலம் மக்ரே

பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைவரையும் பார்க்கச்செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அப்படத்தின் இயக்குநர் கெலம் மக்ரே, உண்மையே நீதிக்கான முதற்படி என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற ஆவணப்படம் 9 வருடங்களுக்கு முன்னர் ‘சனல் 4’ என்ற தொலைக்காட்சி சேவையில் வெளியாகி பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.

தற்போது அந்த ஆவணப்படத்தை சிங்கள மக்களும் பார்வையிடவேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியருப்பதாவது:

‘இலங்கையில் ராஜபக்ஷாக்களுக்கு எதிராக அனைத்துச் சமூகங்களும் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ‘நோ ஃபையர் ஸோன்’ (யுத்த சூனியவலயம்) என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைத்து மக்களையும் பார்க்கச்செய்வதற்கு ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கதாகும். அதனை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். உண்மை எதிர்காலத்திற்கு உதவும்’ என்று கெலம் மக்ரே அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றுமொரு பதிவைச் செய்திருக்கின்றார். ‘நோ ஃபையர் ஸோன்’ ஆவணப்படத்தின் சிங்களமொழிபெயர்ப்பை முதன்முதலாகப் பார்வையிடுகின்ற பலர் டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டுவருவதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ‘உண்மையே நீதிக்கான முதற்படி’ என்ற வசனத்துடன் அந்த ஆவணப்படத்தில் லிங்கைப் பதிவேற்றம் செய்திருக்கின்றார். அதனை அனைவருக்கும் பகிருமாறும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.