தமிழரின் தொன்மை அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்- மக்களை அணி திரண்டு போராடவும் அழைப்பு

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டு பெளத்த சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் மக்களை அணிதிரண்டு போராடுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிங்கள பேரினவாத சக்திகளால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் இனத்தின் தொல்லியல் சான்றுகளை அழிப்பதோடு, பௌத்த சின்னங்களை நிறுவி குடியேற்றங்களை உருவாக்கி வரும் நிகழ்ச்சி நிரல்களுக்கு கடும் எதிர்ப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அண்மையில் வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் முற்றாக விஷமிகளால் சேதமாக்கப் பட்டுள்ளது. இதேபோன்று கீரிமலையில் அமைந்துள்ள சிவனாலயம் சித்தர் மடங்கள் என்பன நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. நெடுந்தீவு, கச்சதீவு, மற்றும் நிலாவரையில் புத்தர் சிலை, குருந்தூர் மலையில் பௌத்த ஆலய கட்டிடம், கன்னியா வென்னீரூற்று தொல்லியல் திணைக்களத்தால் கைப்பற்றல் என தொடரும் நடவடிக்கைகளை நாம் முற்றாக கண்டிப்பதோடு அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறோம்.

அதேபோன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய நீக்குவதாக கூறிக்கொண்டு அதைவிட கடுமையான மற்றும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முகமாக, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம். அதற்கு எமது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கிறோம். ஏற்கனவே இருந்த சட்டமூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துக்களுக்கும் மேலதிகமாக அவசர கால சேவைகளாக கருதப்படும் உணவு உற்பத்தி, விநியோக சேவைகள் என இன்னோரன்ன சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களோ அதைச் சார்ந்த ஊழியர்களோ எந்தவிதமான கருத்து தெரிவிப்பதையோ போராட்டங்களில் ஈடுபடுவதையும் இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துகிறது.

அவசரகால சட்டத்தின் கீழ் பிரகடனப் படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் செயலற்றவர்களாக ஆக்கப்படுகின்ற அபாயகரமான நிலையை இந்த சட்ட மூலம் தோற்றுவிக்கிறது.

இது அடிப்படை மனித உரிமை மீறலை முற்றும் முழுதாக மீறுவதோடு தனிமனித பேச்சு சுதந்திரத்தையும் குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையாக நாம் நோக்குகிறோம். இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நாம் சுவாசிப்பதற்கும் உணவு உண்பதற்கும் தவிர வேறு எதற்கும் வாய் திறக்க முடியாதவர்களாக சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்படுவோம். எமது உரிமை சார்ந்த விடயங்களைப் பற்றி குரல் எழுப்பவோ அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளைப் பற்றி கருத்து தெரிவிக்கவோ முடியாதவர்களாக ஆக்கப்படுவோம்.

இவற்றை எதிர்த்து எமது கண்டனங்களை பதிவு செய்வதோடு மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரட்டி இவற்றிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க மக்களை அழைக்கிறோம். கட்சி பேதங்கள், அரசியல் கோட்பாடுகள், சின்னங்கள் என்பவற்றைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் மதத் தலைவர்கள் அனைவரையும் எம்மோடு கைகோர்த்து வலுவான போராட்டங்களை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் – மஹிந்த தேசப்பிரிய

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு நிதியளிப்பது தொடர்பாக நிதி அமைச்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக விரைவில் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உறுப்பினர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி கூடுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 23ஆம் திகதி அறிவித்திருந்தது.

கொழும்பில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று (30) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்த வாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த பேரணி இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ´வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மிகத்தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்குநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தை தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு´ போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணியாக சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்திற்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோசமிட்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை குறித்த வாயிலை முற்றுகையிட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றிருந்தனர்.

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவிடமும், அதிபருக்கான மகஜர் அதிபரின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது

இதனையடுத்து இது குறித்து அதிபருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிபரின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், செ.கயேந்திரன், தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது – ஜனாதிபதி

பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார உரையாடல் – ஐ.எம்.எப் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளில் இன்று(30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எம்.எப் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவி குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை பிரதிநிதிகள் இன்று ஆராய்வு

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.

இலங்கைக்கு எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணயநிதியம் இணங்கியது என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது சர்வதேச மன்னிப்புச்சபையின் இலக்குகளை தெளிவுபடுத்தும் அதேவேளை இலங்கை அரசாங்கத்துடனான சர்வதேச நாணயநிதியத்தின் இணக்கப்பாடு குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் சிறந்த விதத்தில் அறிந்துகொள்ள விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்;ளார்.

நெருக்கடியான தருணங்களில் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து உதவிகளை பெற்ற நாடுகள் மனித உரிமைகளை பாதுகாக்கும் விதம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை எப்போதும் கரிசனை வெளியிட்டு வந்துள்ளது என தெரிவித்துள்ள யாமினி மிஸ்ரா இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார சமூக அரசியல் உரிமைகள் உட்பட மனித உரிமைகளிற்கு முன்னுரிமை வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும் அவை சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் உத்தரவாதம் செய்யப்பட்ட பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதாக காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்பாட்டில் இலங்கை மக்களிற்கான தனது நலன்புரிசேவைகளை குறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ள யாமினி மிஸ்ரா கடன் வழங்கிய அனைவரும் மனித உரிமை கடப்பாட்டினை பின்பற்றவேண்டும்,அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படை தன்மை மிக்கவையாகவும் பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படுபவையாகவும் காணப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குகிறது

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பெயரில் நபர்களை முறையற்ற விதத்தில் நடத்தும் கலாசாரத்தை மாற்றுவதற்கான வலுவான அரசியல் நிலைப்பாடின்றி, வெறுமனே சட்டமறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்நிலையம் மேலும் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலநிலை பிரகடனம் ஆகியவற்றின் மூலமான அதிகாரங்களைக் கடந்தகால அரசாங்கங்கள் பயன்படுத்திய விதத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது.

சிறுபான்மையினத்தவர், விமர்சகர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைப்பதற்கும் சித்திரவதைகள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கங்களால் பாதுகாப்புச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில், இச்சட்டமூலம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பெயரில் நபர்களை முறையற்ற விதத்தில் நடத்தும் கலாசாரத்தை மாற்றுவதற்கான வலுவான அரசியல் நிலைப்பாடின்றி, வெறுமனே சட்டமறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்பதை மீளவலியுறுத்துகின்றோம்.

மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள சட்டமூலமானது பெருமளவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது.

இருப்பினும் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்காத பல்வேறு குற்றங்கள் இப்புதிய சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பதுடன், அவற்றில் சில விடயங்கள் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் தொடர்பில் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருக்கின்றன.

இருப்பினும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியொருவரின் முன்னிலையில் வழங்கும் வாக்குமூலம் ஆதாரமாகக் கருதப்படமாட்டாது என்பது மாத்திரமே ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் இப்புதிய சட்டமூலத்திலுள்ள ஒரேயோரு முன்னேற்றகரமான மாற்றமாகும்.

ஆனால் தடுப்புக்காவல் உத்தரவு தொடர்பான தீவிர கரிசனை இன்னமும் தொடர்கின்றது. குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அமைச்சரிடம் காணப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு வழங்கும் அதிகாரம், இப்புதிய சட்டமூலத்தில் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இதனூடாக வரையறுக்கப்பட்டுள்ள தடுப்புக்காவலில் வைப்பதற்கான காலப்பகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகளும் கரிசனைக்குரியவையாகவே காணப்படுகின்றன.

அத்தோடு இச்சட்டமூலத்தின் ஊடாக அமைப்புக்களுக்கு எதிராகத் தடையுத்தரவு விதிப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வதிகாரங்கள், நாட்டில் நிலவும் சட்டபூர்வமான கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றது.

மேலும் இப்புதிய சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக்குற்றங்களுக்கு’ வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டதாகக் காணப்படுவதுடன், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இலங்கையின் நீண்டகால ஒடுக்குமுறை வரலாற்றை நினைவூட்டுகின்றது.

இலங்கையானது மீட்சியையும், அபிவிருத்தியையும் நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடுதல் போன்றவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஏற்றவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான ஐ.எம்.எவ் உதவி தமிழ் மக்களுக்கு எதிரான கலாசார இனவழிப்பை மேற்கொள்வதற்கான உந்துசக்தியை வழங்கியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை மீண்டும் இலங்கைக்கு வழங்கியிருப்பதுபோல் தெரிவதாக ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

அண்மையகாலங்களில் நீராவியடி பிள்ளையார் கோயில், குருந்தூர்மலை சிவன்கோயில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் என்பன உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் சைவசமய வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டுவரும் சம்பவங்களை அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டமையானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை இலங்கைக்கு மீண்டும் வழங்கியிருப்பதுபோல் தெரிகின்றது என்றும் அக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டுமொருமுறை சர்வதேச சமூகத்தை வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ள ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு, இந்த அட்டூழியங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் பாராமுகமாக இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறும் அக்குழு அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தயார் – தென்னாபிரிக்க ஜனாதிபதி

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த 21 – 25 ஆம் திகதிவரை தென்னாபிரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உபகுழுவினால் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை அனுமதியளித்தது.

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை, நிலையான சமாதானத்தை நோக்கிப் பயணிக்கவேண்டுமெனில் உண்மையைக் கண்டறிவதற்கான சுயாதீன உள்ளகப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது அர்த்தமுள்ளதோர் வழிமுறையாக அமையுமென அம்முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதியமைச்சருக்கு அமைச்சரவை அதிகாரமளித்துள்ளது.

எனவே அச்செயன்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரமே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விஜயத்தின்போது தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவை சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர், அந்நாட்டின் சர்வதேச விவகாரங்கள், ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோர் மற்றும் நீதி, அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ரொனால்ட் லமோலா ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களையும் நடாத்தியிருந்தனர். அதுமாத்திரமன்றி தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர், தென்னாபிரிக்க அரச வழக்குரைஞர்கள் அலுவலக அதிகாரிகள், தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் சங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரப்பினருடனும் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

அந்தவகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நட்பை நினைவுகூர்ந்த அவர், இலங்கையுடனான இருதரப்புத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தான் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்தார்.

அதேபோன்று அமைச்சர் அலி சப்ரிக்கும் தென்னாபிரிக்க சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோருக்கும் இடையிலான சந்திப்பின்போது இருதரப்பு விவகாரங்கள் குறித்தும், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத்தினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியினால் தென்னாபிரிக்க அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு இலங்கை விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் செயன்முறை பின்பற்றப்படவேண்டும் என்றும், அதன்படி இலங்கை மக்களுக்குப் பொருந்தக்கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலகு ரயில் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை – ஜப்பான் தூதுவர்

கொழும்பு – மாலபே இடையிலான இலகு ரயில் சேவைத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.

இலங்கை மோட்டார் வர்த்தக சங்கத்தினால் நேற்று புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலகு ரயில் புகையிரத திட்டம் தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது மற்றும் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் நம்பிக்கையை இலங்கையால் மீண்டும் பெற முடியுமா என்பதை பொறுத்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தினால் 2.2 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் கொழும்பு, கோட்டையிலிருந்து மாலம்பே வரையான இலகு ரயில் சேவைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை 2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தது.

ஜைக்கா நிறுவனத்தினால் 12 ஆண்டுகள் சலுகை காலம் உள்ளடங்கலாக, 40 ஆண்டுகளுக்கு 0.1 சதவீத வட்டியுடன் கடனை மீள செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய எவ்வித காரணமும் இன்றி, இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 2020 செப்டெம்பர் 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கமையவே இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணங்கியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், ஜப்பான் தூதுவர் அதற்கு மாறுபட்ட கருத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவை ஜனாதிபதியாக்கிய முடிவு தவறானது – ரோஹித அபேகுணவர்த்தன

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுத்த முடிவு மிகத் தவறானது என்று ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.