தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை கவனத்தில் எடுக்க முடியாது

“வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சியினர் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாகவுள்ளனர். அவர்களின் ஆட்டத்துக்கு ஆட முடியாது” என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாட தொழிலாக உள்ளது.

இதனூடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹர்த்தால் போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது. தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களைத் தமிழ்க் கட்சியினர் நடத்துகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு – கிழக்கில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, ஹர்த்தால் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று நீதிமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம்

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேசிய கலந்துரையாடல் முடிவடைந்து, தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை காத்திருக்குமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து மேலும் ஆராய வேண்டியமை அவசியமானது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த, உள்நாட்டுப் போரின் அழிவுகளின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு சமூகங்களுக்கு மாத்திரமல்ல என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

70 மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும் ஒரு தேசிய உரையாடலை நிறுவுவது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சட்டமூலத்திற்கான சூழலின் அவசியத்தை சிறப்பாக வரையறுக்கும் என்பதை உறுதியான கருத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலய சிலைகள் மீள் பிரதிஷ்டை

வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் உடைத்தெறியப்பட்டிருந்த நிலையில் குறித்த சிலைகள் இன்று மீளவும் அதே இடத்தில் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதகுருமார்கள், அரசியற் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது – சீன தூதுவர்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நாட்டில் ஸ்தாபிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

மல்வத்த மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது என சீன தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் எரிபொருள் விநியோகத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் 120 முதல் 140 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடு சீனாவினால் நாட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பல புதிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறக்கூடும் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாரி மலையில் வழிபாடுகள் மீள ஆரம்பம்

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத நபரினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆலயம் சார்பில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது வவுனியா நீதவான் நீதீமன்றத்தினால் அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வதையும், ஆலய வழிபாட்டுக்கும் அரச உத்தியோகத்தரினால் தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்றைய தினம் ஜேசுதகுருக்கல் தலைமையில் சுபவேளையில் பூசைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சபைக்கு அறிவித்தார்.

வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்க கறுப்பு பட்டியலில் இணைப்பு

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன்’ இருப்பதாகவும், ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்க தீர்மானம்

பணவீக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு தீர்மானம்

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.

உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு முதல் இலங்கை இந்த சுட்டெண்ணில் இணைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் அறிக்கைக்கு அமைய, குறியீட்டில் முதல் இடம் லெபனான் காணப்படுவதோடு, அதன் பணவீக்கம் 261 சதவீதம் ஆகும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே சிம்பாம்வே மற்றும் ஆர்ஜென்டினா பிடித்துள்ளன.

இந்திய ரூபாயை சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் பயன்படுத்த முடியும்

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாய் மாற்றப்பட்டுள்ளமையானது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தீர்வுக்கு உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையேயான டிஜிட்டல் கொடுப்பனவு முறைக்கும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆதரவை வெளிப்படுத்தினார்.

இதேநேரம் குறித்த நிகழ்வில் உரையாற்றிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வருங்கால பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் கருத்து வெளியிட்டார்.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

முழுமுடக்கப் போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றிவரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன.

இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்;

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசாரம் பண்பாடு, மற்றும் அவர்களது புராதன சின்னங்களை அழித்தொழித்து அவ்விடங்களில் புத்தகோயில்களைக் கட்டி, பௌத்த சமய திணிப்பை ஏற்படுத்துவதற்கு எதிராகவும் இலங்கை அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமது எதிர்ப்பை முழுமையாகப் பதிவு செய்யவும் தமது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்ளவும் வட-கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக்கோரியும் வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு நடத்திய பொதுமுடக்கமானது முழுமையாக வெற்றியடைந்துள்ளது.

தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து முழுமுடக்கத்திற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இதற்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் கைகோர்த்திருந்தனர். மேலும், இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக வட-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள், போக்குவரத்து நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து இந்த பொதுமுடக்கம் வெற்றிபெற தமது முழுமையான ஒத்துழைப்பை நல்கினார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் அமைப்புகளும் இலங்கையில் இருக்கின்ற மத நிறுவனங்களும் ஒன்றுபட்டு இந்தக் கண்டன நடவடிக்கைக்கு ஆதரவளித்திருந்தார்கள்.

இந்த முடக்கத்தைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல வழிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இவை அனைத்தையும் நிராகரித்து கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட தமிழ் முஸ்லிம் மக்கள் அதற்குத் தனது உணர்வுபூர்வமான முழுமையான ஒத்துழைப்பை நல்கினார்கள். வட-கிழக்கை முழுமையாக ஸ்தம்பிதம் அடையச்செய்து மக்கள் தமது உணர்வை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களினூடாக புராதன சின்னங்களை அழிப்பது, அந்த இடங்களில் புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக புதிய புத்தகோயில்களைக் கட்டுவது, சைவக் கோயில்களை இடித்தழிப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் இனியாவது நிறுத்த வேண்டும்.

அதேபோன்று இந்த நாட்டிற்கு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு, அதனைக் கைவிடுவதுடன், இப்பொழுது உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் இவ்வலுவான கோரிக்கைகளை ஜனாதிபதி மாத்திரமல்லாமல், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தின் நியாயத்தினை உணர்ந்து, இவற்றைத் தீர்ப்பதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும்.

இந்தப் போராட்டத்திற்காக மக்களைச் சந்தித்து அதற்கான தயாரிப்பு வேலைகளை மேற்கொண்டிருந்தபொழுது, முழு மக்களும் மனப்பூர்வமாக ஒத்துழைத்து, முழுமுடக்கப் போராட்டம் பூரண வெற்றியடைய தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தார்கள். வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களும்கூட தமது கடைகளையும் வர்த்தக நிறுவனங்களையும் மூடி தமது முழுமையான ஆதரவினை வழங்கியமைக்காக நாம் அவர்களுக்கு சிறப்பாக நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் அடக்குமுறையும்தான் வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டத்தின் முழுமையான வெற்றிக்கு வழிவகுத்தது.
வடக்கு-கிழக்கில் முழு முடக்கப் போராட்டம் அறிவித்தவுடன், வடக்கு-கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்றும் அது ஒரு தவறான கருத்து என்றும் ஜனாதிபதி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

நாம் ஜனாதிபதியிடம் கேட்பதெல்லாம், தமிழ் சைவ மக்கள் தமது ஈமைக்கடமைகளைச் செய்யும் கன்னியா வெந்நீரூற்றை பௌத்த பிக்குகள் தம்வசம் வைத்திருப்பது தவறான செய்தியா? நீதிமன்ற உத்தரவையும் மீறி குருந்தூர் மலையில் புத்த கோயில் கட்டப்படவில்லையா? வெடுக்குநாறி மலையில் இருந்த ஆதிசிவன் சிவலிங்கத்தை உடைக்கவில்லையா? வடக்கு-கிழக்கின் பல பிரதேசத்தில் தொல்பொருள் இடங்கள் என்ற பெயரில், எமது கோயில்கள், எமது பிரதேசங்களை நீங்கள் அபகரிக்கவில்லையா? ஆகவே, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகிய நீங்கள் இவை அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இதற்குரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்காமல் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பீர்களாக இருந்தால், தமிழ் பேசும் மக்களை நீங்கள் ஒரு தொடர் போராட்டத்திற்கு அழைக்கின்றீர்கள் என்பது அர்த்தமாகும்.

இந்த பொது முடக்கத்திற்கு ஒத்துழைத்த அனைத்து மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொள்கின்றோம்.