இலங்கையில் மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும்: அர்ஜுன்

இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பன்னாட்டு உதவிகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது.

குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பிரதிபலன்னை கருதாமல் பல உதவிகளை செய்துவருகின்றது.

சீனாவும் பல விடயங்களை இங்கே செய்கின்றது, கொழும்பில் ஒரு கலாசார மண்டபத்தினை அமைத்தார்கள் ஆனால் அதன் நிர்வாகத்தை அவர்களே வைத்துள்ளனர். ஆனால் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசாரமண்டபத்தின் நிர்வாகத்தை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கின்றது. இருப்பினும் அதனை யாழ்பாண மாநாகரசபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

அத்துடன் வறுமை, பொருளாதார பிரச்சனைகளில் இருந்து இலங்கை மக்கள் விடுபடவேண்டும். அதற்குரிய மேம்பாடான திட்டங்களை வகுத்து நல்லவிதமாக செயற்படுவதற்கான பிரார்த்தனைகளை நாம் செய்கிறோம்.

இதேவேளை இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது. இங்கு வசிக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம், தமிழ்மக்களாக இருக்கலாம் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து மதமாற்றும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியிருந்தது. எனவே மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும். அமைதியான வளமான இலங்கை உருவாக வேண்டும்’ என கூறினார்.

கல்முனை பொது நூலக பெயர் மாற்றம்; இன முரண்பாடு உருவாக வாய்ப்பு

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தத்தமது கருத்துக்களில் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

கல்முனை மாநகர சபை இம்மாத அமர்வில் கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரான ஏ.ஆர்.எம் மன்சூர் என்பவரின் பெயரை சூட்டுவதாக தெரிவிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது.கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சராக செயற்பட்ட இவர் இன மத பேதங்களின்றி சேவைகள் செய்தவர்.இருந்த போதிலும் தற்போது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து சிலர் இவ்விடயத்தை அரசியலாக்கி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.

எனவே கல்முனை பொது நூலகமானது இரு சமூகத்தை சேர்ந்தவர்களின் பொதுச்சொத்து.இந்த நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்படுவதை சிலர் மறைமுகமாக முன்னெடுக்கின்றனர்.இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.சில அரசியல்வாதிகளே தங்களது அபிலாசைகளை நிறைவேற்ற இவ்வாறு செயற்படுகின்றனர்.தேர்தல் காலங்களில் தான் இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.கல்முனை மாநகர கட்டடத்தில இயங்குகின்ற நூலகமானது கல்முனை பொது நூலகம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் ஒரு தனி நபரின் பெயரை இந்த நூலகத்திற்கு ஏன் தற்போது சூட்ட முயற்சிக்கின்றீர்கள் என கேட்கின்றோம்.தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த செயற்பாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம்.ஏனெனில் இனங்கள் இரண்டும் ஒன்றுபட்டது தான் கல்முனை பிரதேசம்.கல்முனை மாநகர சபை இரு சமூகத்திற்கும் சொந்தமானது.எனவே இனியாவது இச்செயற்பாடுகளை தவிர்த்து இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தாதீர்கள் என கேட்டுக்கொள்கின்றோம்.என குறிப்பிட்டனர்.

இவ் விசேட செய்தியாளர் சந்திப்பில் கல்முனை மாநகர உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் வடிவுக்கரசு சந்திரன் கதிரமலை செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

இரண்டு இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர்கள் அமைச்சரவை, சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் என்பன இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிராகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

47 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்படாத தனியார் விநியோகஸ்தர்களின் மூலம் மருத்துவப் பொருட்களை வாங்குவதில் அமைச்சர்களின் அமைச்சரவையின் பங்கு

பதிவு செய்யப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து மருத்துவப் பொருட்களை வாங்குவதற்குப் பதிவு விலக்கு வழங்குவதில் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குமுறை ஆணையகத்தின் பங்கு

அவசரகால கொள்முதல் செயல்முறை உட்படக் கொள்முதல் வழிகாட்டுதல்களுடன் இணங்காமை

சுகாதார அமைச்சர் மற்றும் மருந்தாக்கல் ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரியின் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பவற்றைச் சவாலுக்கு உட்படுத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துக் கொள்வனவு, மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் புறக்கணிப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதியை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது.

அத்துடன், குடிமக்களின் அடிப்படை உரிமையான சமத்துவம் மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவை இதன் மூலம் மீறப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய வலுக்கட்டமைப்புக்களை இந்தியாவுடன் இணைப்தால் பாதிப்பில்லை

இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இலங்கையின் தேசிய சக்தி வலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் ஆபத்து எதுவும்எதுவுமில்லை உலகின் ஏனைய நாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன என குறிப்பிட்டுள்ள அமைச்சர் இலங்கை தனது சக்தி வலு கட்டமைப்பை இந்தியாவுடன் இணைப்பதால் என்ன ஆபத்து ஏற்படப்போகின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான மனோநிலையே எங்கள் பொருளாதாரத்தை பல தசாப்தங்களாக வீழ்ச்சியை நோக்கி இட்டுச்சென்றது என குறிப்பிட்டுள்ள அவர் எண்ணெய் குதங்களை நாங்களே வைத்திருக்க விரும்பியதால் பல தசாப்தங்களாக அவற்றை அபிவிருத்தி செய்யாமல் வைத்திருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் யதார்த்தத்தில் நாங்கள் பொதுமக்கள் தனியார் கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தால் கடந்த 12 மாதங்ளில் எங்களின் எரிசக்தி பாதுகாப்பு எங்கோ சென்றிருக்கும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டில் சக்தி வலு பாதுகாப்பு காணப்படுவதைஉறுதி செய்வதே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் முன்னெடுக்கவேண்டிய முதல் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் சக்தி வலு பாதுகாப்பு என்பது உணவு பாதுகாப்பு மருந்து பாதுகாப்பு உட்பட அனைத்துடனும் தொடர்புபட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நாங்கள் தீர்மானங்களை எடுப்போம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணவேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக தெளிவாக உள்ளார் கடந்த 12 மாதங்களில் இந்தியா எங்களிற்கு பெரும் ஆதரவாக காணப்பட்டுள்ளது எனவும் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் முறையிடப்பட்டது.

இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு விசாரணைக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணை வரும் என தெரிவித்தனர்.

அண்மையில் இராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது தபால் மூல வாக்கெடுப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த நிலையில் அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்குச் சீட்டுக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அரசாங்க அச்சகம் வாக்குச் சீட்டுக்களை உரிய திகதிகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமை காரணமாக இவ்வாறு தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் – அமெரிக்க பிரதிநிதிகள் குழு இடையே பேச்சுவார்த்தை

இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நாட்டை வந்தடைந்த அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை சந்தித்தனர்.

செவ்வாய்க்கிழமை (14) இரவு இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் நாட்டை வந்தடைந்த தூதுக்குழுவிற்கு இந்திய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணை பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி. ரோயல் தலைமை தாங்கினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.

அமெரிக்க – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மை மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழுவினருடனான பேச்சை புறக்கணித்தது திறைசேரி

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு திறைச்சேரியின் செயலாளர், நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிந்த நிலையில், திறைச்சேரியின் செயலாளர் உட்பட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று (16) பிரசன்னமாகவில்லை என அறிய முடிகிறது.

தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் மார்ச் 09 திகதி வாக்கெடுப்பு தொடர்பில் இவ்வார காலத்திற்குள் உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தபால்மூல வாக்கெடுப்பிற்கு தேவையான வாக்குச் சீட்டு அச்சிடல் பணிகள் நிதி நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திறைச்சேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (16) காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெறவிருந்த நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள திறைச்சேரியின் செயலாளர் உட்டப ஏனைய அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என அறிய முடிகிறது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திறைச்சேரியிடம் 800 மில்லியன் ரூபாவை கோரியிருந்த நிலையில் அந்த தொகை முழுமையாக கிடைக்கப் பெறவில்லை என அறிய முடிகிறது.

வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு 400 மில்லியன் ரூபா செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பட்டுள்ள நிலையில் வாக்குச்சீட்டு அச்சிடலுக்காக 40 மில்லியன் ரூபாவை திறைச்சேரி அரச அச்சகத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.

முழுமையான தொகை வழங்க வேண்டும் அல்லது 200 மில்லியன் ரூபா முற்பணத்தை வழங்க வேண்டும் இல்லாவிடின் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை தொடர முடியாது என குறிப்பிட்டு அரச அச்சகத் திணைக்களம் கடந்த திங்கட்கிழமை இடைநிறுத்தியது.

வாக்குச்சீட்டு அச்சிடல் இடைநிறுத்தப்பட்டதால் கடந்த 15 ஆம் திகதி விநியோகிக்கப்படவிருந்த தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகம் மறுஅறிவித்தல் விடுக்கும் வரை பிற்போடப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் 50 சதவீதமளவில் நிறைவுப் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த நிதி நெருக்கடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இவ்வாறான பின்னணியில்  வியாழன் (16) திறைச்சேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்தது.

இவ்வாறான பின்னணியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இவ்வார காலத்திற்குள் ஒரு உத்தியோகப்பூர்வமான தீர்மானத்தை அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு – பஷில்

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது மொட்டுக் கட்சியினர் அல்லர் எனவும், போராட்டக்காரர்களே அவரைப் பிரதமராக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள்தான் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவே பிரதமராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவைத் தவிர வேறு எவரையும் பிரதமராக நியமிப்பதற்கு விருப்பம் இல்லை என உறுதியாகக் கூறியதாகவும், எனினும், கோட்டாபய அவரது விருப்பத்தின்படி ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு மக்கள் ஆணை இல்லை எனவும், அவரைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குங்கள் என கோட்டாவுக்குக் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் அவர் ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கும் பின்னர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் தங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் நாடாளுமன்றின் ஊடாக ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை வந்தபோது அப்போதைய வேட்பாளர்களை ஆராய்ந்து பார்த்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு தாங்கள் முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கம் அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்கம் செய்யாது – ஜனாதிபதி

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (15) காலை நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையத்தை உத்தியோகபூர்வமாக அங்குராப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது இது தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி இவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பாரிய பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கே அதிகளவில் உள்ளன.

இரண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்திலே இவ் மையம் அங்குராப்பணம் செய்து வைக்கப்படுகின்றது என தெரிவித்தார்.

அதில் ஒன்று உப வேந்தரை நீக்கக் கோரி ருஹூணு பல்கலைகழகத்திலும் மற்றையது எமது கூட்டுத்தாபனம் ஒன்றின் முகாமையாளரை நீக்கக் கோரியுமே இவ் ஆர்பாட்டம் நடைபெறுகின்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து நாம் பார்க்க வேண்டும். இங்கு என்ன நடக்கின்றது என்பதை அறியும் உரிமை நாட்டுக்கு உண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

-எமது மக்களுக்கு கல்வி புகட்டுவதற்காக நாம் பணத்தை செலுத்துகின்றோம். எனவே பல்கலைக்கழகம் முறையாக  செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.