காஞ்சனவின் கருத்து தவறானது: சம்பிக்க விளக்கம்

இலங்கை மின்சார சபை அடைந்துள்ள இலாபம் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ள கருத்தை நிராகரிப்பதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

நீர்மின்னுற்பத்தி பாவனை அதிகரிக்கப்பட்டதால் கமந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபை ஒப்பீட்டளவில் இலாபமடைந்துள்ளதாக மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர செவ்வாய்கிழமை (ஜன. 3) டுவிட்டர் வலைத்தளத்தளம் ஊடாக செய்தி வெளியிட்டிருந்தார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் இலங்கை மின்சார சபை கடந்த இரு மாதங்களில் இலாபம் பெறவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிடும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை அதிகரிக்காமல் இருந்திருந்தால் இலங்கை மின்சார சபை மாதாந்தம் 11 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மின்னுற்பத்திக்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நீர்மின்னுற்பத்தியின் பயன்பாடு முறையே 635.5 மற்றும் 655 ஜிகாவாட் மணிநேரமாக காணப்பட்டது.ஆகவே இக்காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையின் செலவுகள் குறைவடைந்துள்ளன.

பொய்யான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை குறிப்பிடுவதற்கு முன்னர் நிலைமையை அறிந்துக் கொண்டு கருத்துக்களை குறிப்பிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் ஜனவரி 23 வரை ஏற்கப்படும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தங்களின் நிறுவன தலைவர்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மின் கட்டணத்தை அதிகரிக்க IMF நிபந்தனையே காரணம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திடம் இலங்கை பொருளாதாரத்திற்கு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை கோரியுள்ளது.

இந்த சர்வதேச நிதியங்கள் விதித்துள்ள இந்த நிபந்தனைகளின் காரணமாகவே இன்று மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரியில்லா வர்த்தக வளாகத்தை நேற்று (03) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியம் நமது பொருளாதாரத்தை மறுசீரமைக்க ஒரு திட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறது. மானியங்கள் சாத்தியமில்லை என்ற நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய வேண்டும். அதற்கு நாங்கள் அடிபணியாவிட்டால் அல்லது அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தேவையான கடன் தொகை கிடைக்காது. சர்வதேச ஆதரவும் கிடைக்காது.

இன்று மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். அது தான் காரணம். இதை விரும்பி செய்யவில்லை.

ரணில் – ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் இடையை சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரியும் ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பில் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் இன்று(04) வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த அறிவித்தலில் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதி, இடம், கட்டுப்பணத் தொகை, வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரல் அறிவித்தலே இவ்வாறு வௌியிடப்பட்டுள்ளது

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் காத்தான்குடியில் கைது

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

2022 ஓக்டோபர் மாதத்தில் இந்தியா கோயம் புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே டிசெம்பர் 29 ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்..

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையில் 2019 ஏப்ரல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடையவர் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், பெற்றோலியக் கூட்டுத்தாபன போனஸ் கொடுப்பனவுகள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி

நட்டத்தில் இயங்கும் அரச கூட்டுத்தாபனம் மற்றும் அரச நிறுவன சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நிதியமைச்சு அறிவித்துள்ள நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் ஆகிய அரச நிறுவனங்களுக்கு உபகார கொடுப்பனவு (போனஸ்) வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் வினவியுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேவையாளர்களுக்கு இருமாத சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் சேவையாளர்களுக்கு ஒரு இலட்சம் அடிப்படையில் உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலாபமடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சு சுற்றறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளது.இதற்காக 120 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாத்திரம் 4200 சேவையாளர்கள் உள்ளார்கள்.இவர்களுக்கு இரு மாத சம்பளம் உபகார கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது.மாதம் 5 இலட்சம் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகளுக்கு 10 இலட்சம் ரூபா அடிப்படையில் உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில் 5800 சேவையாளர்கள் உள்ளார்கள் இவர்களுக்கு ஒரு இலட்சம் அடிப்படையில் உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக 58 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது என ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்களுக்கான உபகார கொடுப்பனவு தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு முரணாக நட்டமடையும் நிறுவனங்களுக்கு உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டமைக்கான காரணத்தை உரிய நிறுவனங்களிடம்; ஜனாதிபதி கோரியுள்ளதாக அறிய முடிகிறது.

அரச சேவையாளர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் உபகார கொடுப்பனவு தொடர்பில் நிதியமைச்சு கடந்த மாதம் விசேட சுற்றறிக்கையை சகல அமைச்சின் செயலாளர்களுக்கும் நிதியமைச்சு கடந்த மாதம் அனுப்பி வைத்தது.

அரச சேவையாளர்களுக்கு வழங்கப்படும் உபகார கொடுப்பனவை 25 ஆயிரம் ரூபாவாக மட்டுப்படுத்துமாறும்,நட்டமடையும் அரச நிறுவனங்க சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவை வழங்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

யாழ் – கொழும்பு இடையே மேலதிக பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

யாழ்ப்பாணம் கொழும்பு பஸ் சேவையில் மேலதிகமாக 33 பஸ்கள் சேவையில் ஈடுபட உள்ளதாக வட மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை இடைநிறுத்தப் படவுள்ளத்தப்பட்டுள்ளது வவுனியா அனுராதபுரம் பாதை திருத்த வேலை காரணமாக குறைந்தது ஆறு மாதங்களுக்கு இந்த திருத்த வேலைகள் நடைபெறஇருப்பதினால் புகையிரத சேவையானது இடைநிறுத்தப்படுகின்றது .

அந்த வகையில் வடக்கு ஆளுநர் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைதேசிய போக்குவரத்து ஆணைக்குழு புகையிரத திணைக்களத்தினருடன் இணைந்து சில மாற்று நடவடிக்கை களை எடுத்திருக்கின்றோம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இலங்கை போக்குவரத்து சபை அதிகார சபை புகையிரத திணைக்களம் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து என்ன மாற்றங்களை செய்யலாம் என்பதை தீர்மானித்து மூன்று வகையான தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து செல்கின்ற யாழ் ராணி தற்பொழுது முறிகண்டி வரை பயணிக்கின்றது வவுனியா வரை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சென்று புகையிரதத்தில் கொழும்பு செல்ல விரும்புவோருக்காகவவுனியா அனுராதபுரத்திற்கு 20 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபட உள்ளன.

தனியார் போக்குவரத்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து நேரடியாக அனுராதபுரத்திற்கு சென்று அங்கே பயணிகளை செல்லக்கூடியவாறு ஒழுங்கு செய்திருக்கின்றோம்.

நேரடியாக பஸ்களிலே கொழும்புக்கு செல்லக்கூடிய வாறான ஏற்பாடுகளும் செயற்படுகின்றது குறிப்பாக நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பல குளிரூட்டப்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன.

தற்பொழுது 38 பஸ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக கொழும்பிற்கு சேவையில் ஈடுபடுகின்றன அவைகள் தங்களுக்கு ஏற்ற புக்கிங் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அதை விட மேலதிகமாக 33 குளிரூட்டப்பட்ட பஸ்கள் இருக்கின்றன அந்த பஸ்களும் தற்போது கடந்த கால கொரோனா மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவைகள் ஈடுபட வில்லை அந்த 33 பஸ்களையும் மீண்டும் சேவையில் ஈடுபடுமாறு நாங்கள் அதனோடு தொடர்புடையவர்களை நாங்கள் கோரியுள்ளோம்..

எனவே உயர்ந்த சேவை நிறுத்தப்பட்டாலும் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு முயற்சிக்கின்றோம் என்றார்.

Posted in Uncategorized

இந்த வார இறுதியில் நாடு திரும்பவுள்ள கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் கடந்த  ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி  சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர்  நாடு திரும்பினார்.

பின்னர் அவர் சமீபத்தில் டுபாய் நாட்டுக்குச்  சென்றுள்ள  நிலையில், குடியுரிமை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா  இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,

‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக்   கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்க்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் டுபாய் சென்றுள்ளார். இந்நிலையில்    இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர்  நாடு திரும்புவார்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

IMF தாமதத்திற்கு காரணம் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தமே – விஜயதாச ராஜபக்ச

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் பல நாடுகள் இலங்கையிலிருந்து விலகியிருப்பதே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட காரணம் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அந்த உடன்படிக்கை காரணமாக இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, பர்மா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் இலங்கையில் இருந்து பிரிந்து சென்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து கூட நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பானுடன் செய்து கொண்ட இலகு ரயில் ஒப்பந்தம் எவ்வித ஆய்வும் இன்றி இரத்துச் செய்யப்பட்டு இலங்கை இவ்வாறு பல நாடுகளை புண்படுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றாலும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பது போல், உலகின் பிற நாடுகளும் நம் நாட்டின் மீது நம்பிக்கை வைக்கும் என்றார். இந்த நாடு மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியும், நமது நாட்டிற்கான கடன் தொகையைப் பெறுவதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.