ரூபாய் மூலம் சர்வதேச பரிவர்த்தனை : இலங்கைக்கான ஐந்து வோஸ்ட்ரோ கணக்குகளை அங்கீகரித்து இந்தியா

சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு டொலரை பயன்படுத்தாமல் ரூபாயை பயன்படுத்துவதற்கான வழிமுறையை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அதன்படி தஜிகிஸ்தான், கியூபா, லக்சம்பேர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்த பொறி முறையைப் பயன்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் மொஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடைமுறை முன்னதாக ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் டொலர் பற்றாக்குறை உள்ள நாடுகளை இந்த பொறிமுறைக்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் பொறிமுறையை அமைத்தது.

அதன்படி இந்திய மத்திய வங்கி, ரஷ்யாவுடன் ரூபாய் வர்த்தகத்திற்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளை திறக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் மேற்கூறிய நாடுகளை தவிர மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் இலங்கையுடனான வர்த்தகத்திற்கான ஐந்தும் மொரிஷியஸ் உடனான வர்த்தகத்திற்காக ஒன்று உட்பட ஆறு கணக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை எண்ணை வளம்கொண்ட சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உள்ளிட்ட பெரிய வர்த்தக பங்காளிகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை மதிப்பாய்வு செய்வது குறித்து இந்தியா தொடர்ந்து விவாதித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

துமிந்த சில்வாவின் விடுதலைக்கெதிரான மனுக்கள் பெப்ரவரியில் பரிசீலனை

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் துமிந்த சில்வாவை விடுவித்து கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில்நேற்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அனைத்து தரப்பினரதும் பரிசீலனைகளை கருதிக்கொண்டு நீதிமன்றம் பெப்ரவரி 7ஆம் திகதி மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டது.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு கடந்த 2021 ஜூன் 24 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரோடு பலர் குற்றவாளிகள் என அறிவித்து கொழும்பு உயர் நீதிமன்றம் 2016 செப்டெம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Posted in Uncategorized

வியட்நாமில் உயிர்மாய்த்த இலங்கையரின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது

வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வைத்தியசாலையில் உறவினர்கள் கூடியுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி கப்பல் சேதமடைந்து, தத்தளித்துக்கொண்டிருந்துள்ளது.

அதனையடுத்து அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். அங்கு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர்.

அதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்டநாட்களிக் பின்னர் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ன என்பதை தமிழ் தலைமைகள் தெளிவுபடுத்த வேண்டும் – நஸீர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து 13ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகள், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளயிட்டுள்ள அவர் அதில், இனப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் கரிசனை கொண்டுள்ள போதிலும், அதுவே முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்னையாகிவிடக்கூடாது. வடக்கும் கிழக்கும் இணையவேண்டுமென்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் இருப்பாரேயானால், வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்திருக்கவேண்டுமென ஹக்கீம் கூறுவாரேயானால், அந்தந்த மாகாணங்களில் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதுடன், காணிகளின் எல்லை பிரச்னைகளும் நிவர்த்திக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் ஓ.எம்.பி அலுவலகம் விசாரணையை முன்னெடுக்க முடிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள காணாமல் போனாருக்கான அலுவலகம், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 244 பேருக்கு விசாரணைக்கான அழைப்பையும் விடுத்துள்ளது. எதிர்வரும் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் விசாரணைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு சீனா பச்சைக்கொடி -கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கடந்த வாரம் சீனாவுடன் அவர் பேச்சு நடத்தியிருந்தார்.

ஆகவே குறித்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினைகளை கையாளமுடியும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் ஜி20 கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்குவதில், சீனாவின் வகிபாகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரில் சரணடைந்த எழிலனை மன்றில் முன்னிலைப்படுத்துக: இராணுவத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எழிலனை (சசிதரன்) அடுத்த வழக்கு விசாரணையின்போது மன்றில் முன்னிலைப் படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இறுதிப் போர் நடவடிக்கை யின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் உள்ளிட்ட 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றன. விசாரணைகளின் நிறைவில், அந்த நீதிமன்றம் வவுனியா மேல் நீதிமன்றுக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த
அறிக்கை மீதான மேல் நீதிமன்றின் தீர்ப்பு நேற்று வழங்குதவாக இருந்தது. இந்நிலையில், அந்தத் தீர்ப்பு தயாரித்து முடிக்கப்படாத நிலையில் தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற வழக்குகளில் 5 வழக்குகளின் விசாரணைகளில் முதலாவதில், குறிப்பிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான மனுதாரரின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பில் இராணுவத்தினர் திருப்திகரமான பதிலை முன்வைக்கவில்லை என்று தெரிவித்தது. மனுதாரர் முன்வைத்த விடயங்களின் அடிப்படையில், காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதனை மறுப்பதற்கான விடயங்களை இராணுவத்தினர் மன்றில் இன்று (நேற்று) முன்வைக்கவில்லை என மனுதாரர் சார்பில் வாதாடிய சட்டத்தரணி கே. எஸ். ரட்ணவேல் தெரிவித்தார். எனவே, மனுதாரரின் வேண்டுகோளின் பிரகாரம், ஆட்கொணர்வு மனுவின் எழுத்தாணையை அனுமதித்த நீதிமன்றம், அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, மற்றைய வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை மன்றில் சமர்ப்பிக்காதமையால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏனைய மூன்று வழக்குகள் மீதான தீர்ப்புகளையும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே. எஸ். ரட்ணவேல் மேலும் தெரிவித்தார்.

சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் கூடிய சிரேஷ்ட அதிகாரிகளின் குழு

தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான, சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க ஆகியோரும் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் பிரகாரம், தேசிய கொள்கைகளை திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய சபையொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதன் கீழ் 02 உபகுழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று செயற்படும்.

அதன் கீழ், நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அவசியமான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்காக தேசிய சபை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த உபகுழு கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதற்தடவையாக கூடியபோதே, “தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு” நியமிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு முதல் அடுத்த 25 வருடங்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்குதல் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நோக்கை நிறைவேற்றம் பொறுப்பு இக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் இதன்போது நாட்டில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய கொள்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார்.

புதிய தேசியக் கொள்கையின் வரைவு 27.12.2022 ஆம் திகதிக்குள் தயாரிக்கப்பட்டு, குழு உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டு இறுதி அறிக்கை 15.01.2023 ஆம் திகதிக்குள் சட்ட மூலமாக தயாரிப்பதற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்தா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் வலுசக்தித் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்

வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ‘இலங்கையின் எரிசக்தி துறையின் தேவைகளான எரிபொருள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நிலக்கரி வழங்கல் மற்றும் அணுசக்தியில் ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிபொருளை வாங்குவதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் கால்நடைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானம்

வடக்கு மாகாணத்தில் உள்ள கால்நடைப்  பண்ணைகளை ஒழுங்குபடுத்துவற்கு சில சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் வசீகரன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் சுமார் 80 வீத கால் நடைகள் திறந்த வெளிகளிலேயே வளர்க்கப்படுகிறது. இவை உற்பத்தி திறன் குறைந்தவையாக காணப்படுகின்றன. வடக்கில் 4 இலட்சம் மாடுகள், 10 ஆயிரம் எருமை மாடுகள், 3 இலட்சம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் 3 இலட்சம் மாடுகள் பால் உற்பத்திக்காக  திறந்த வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. இவை நாட்டு இன மாடுகாளாக காணப்படுகின்றன.

அத்துடன் நாட்டின் மொத்த இறைச்சித் தேவையில் 30 வீதத்தை வடக்கு மாகாணம் பூர்த்தி செய்கிறது. இதனால் வருமானமும் அதிகரிக்கிறது. எனினும் விவசாயத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகமாக காணப்படுகின்றன. இதனால் வயல் நிலங்களை நாசம் செய்துவிடும் என்ற காரணத்தால், கால்நடைகள் பொருத்தம் இல்லாத இடங்களுக்கு மேய்ச்சலுக்காக விடப்படுகின்றன. இதனால் கால்நடைகள் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சுமார் 30 ஆண்களுக்குப் பின்னர் வடக்கில் ஒரு துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கோடை காலத்தில் நீர் இல்லாமலும், மழை காலத்தில் வெள்ளத்தாலும் மாடுகள் இறப்பது வழமை. ஆனால் இப்போது முதல் தடவையாக குளிரால் மாடுகள் அதிகளவில் சில தினங்களுக்கு முன்னர் இறந்துள்ளன.

இதற்கு காரணம் மாடுகளில்  கொழுப்புப் படை இன்மையே ஆகும். 90 வீத மாடுகளுக்கு கொழுப்புப் படை இல்லை.இந்த பெரும் போக காலத்தில் அவைகளுக்கு  தீவனம் இல்லை. இம்முறை தான் இந்தப் குளிர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் கவனமாக அணுக வேண்டும்.

திறந்த வெளிகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் அலட்சியமாக உள்ளனர்.பண்ணைகளைப்  பதிவு செய்வதில்லை. மாடுகளின் இலக்கங்களை பெறுவதில்லை. உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெறுவதில்லை. இவ்வாறு அவர்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்குவதில்லை. கால் நடைகளுக்கான பராமரிப்பு போதியளவு இல்லை.

ஆகவே கால் நடைகளின் இறப்புகளை தவிர்ப்பதற்கு சில நடவடிக்கைளை, சில சட்டங்களை பிறப்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நடைமுறைப் படுத்த எண்ணியுள்ளோம். முறையான பதிவு மூலம் பண்ணைகளை நடாத்தி, அந்த கால்நடைகள் உயிரிழந்திருந்தால் ,அரசாங்கம் நட்ட ஈடு வழங்கும் பட்சத்தில்  நாம் பண்ணையாளர்களுக்கு வழங்குவோம் என்றார்.

குளிர்காரணமாக கிளிநொச்சியில் 529 மாடுகளும் முல்லைத்தீவில் 524 மாடுகளும் வவுனியாவில் 28 மாடுகளும் உயிரிழந்துள்ளன. இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் மாடொன்று உயிரிழந்துள்ளது.

அத்துடன், குளிர் காரணமாக  கிளிநொச்சியில் 266 ஆடுகளும்  முல்லைத்தீவில் 199 ஆடுகளும் வவுனியாவில் 52 ஆடுகளும் உயிரிழந்துள்ளன என்றார்.