தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதாக காலங்காலமாக ஏமாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்க – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நீண்ட காலமாக பாரிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு பாடுபட்டு வருகின்றார். எனினும் அவரால் முடியாதவொன்றை குறுகிய காலத்திற்குள் தான் செய்து காட்டியுள்ளதாக மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது இதனைத் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பொதுச் செயலாளராகவே நான் இந்த புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கின்றேன். நான் சுதந்திர கட்சியை விட்டுச் செல்லவில்லை.

இன, மத, கட்சி பேதமற்ற புதிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இந்த புதிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களால் இலங்கை வங்குரோத்தடைந்த நாடானது.

அதன் பிரதிபலிப்பாக 69 இலட்சம் மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியொருவர் விரட்டியடிக்கப்பட்டார். அவ்வாறான நிலைமை ஏற்பட்ட போதிலும், ஆட்சியாளர்கள் அதிலிருந்து கூட பாடம் கற்கவில்லை.

நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திர கட்சியும் இன்று மண்ணைக் கவ்வியுள்ளன.

இவ்வாண்டு 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனை செலுத்த வேண்டியுள்ளது.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை இரண்டு ஆண்டுகளுக்கு காலம் தாழ்த்தியுள்ளார்.

எனவே இனிவரும் எந்தவொரு அரசாங்கத்துக்கும் பாரிய கடன் சுமை காத்திருக்கிறது.

தேர்தல் நிறைவடையும் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தை எவ்வாறு ஏமாற்றுவது என்பதிலேயே ஆர்வம் செலுத்துவார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை காலம் காலமாக ஏமாற்றி வருவதைப் போன்று, இனி சர்வதேச நாணய நிதியத்தையும் ஏமாற்றுவர்.

எனவே இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்திலேயே எமது இந்த கூட்டணி உதயமாகியுள்ளது என்றார்.

காங்கேசன்துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவினால் 61.5 மில்லியன் டொலர் நிதி உதவி

இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கிடையில் அண்மையில் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்களை தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ், துறைமுகத்தின் உட்பகுதியை 30 மீற்றர் ஆழப்படுத்தவும், துறைமுகத்தில் பாரிய கப்பல்கள் மற்றும் படகுகள் தரித்து நிற்பதற்கு புதிய அலைத் தடுப்பு அணையை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதற்கும் இந்தியா பூரண ஆதரவை வழங்கும்.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த இடமாக இலங்கையை இந்தியா பெயரிட்டுள்ளது. எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் இந்திய அரசு இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவுக்கு இலங்கை அரசும், தனது அமைச்சும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே விமான சேவை தொடங்குவது மிகவும் சிறந்த விடயமென்றும் இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்..

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் 600 மில்லியன் ரூபா செலவில் நவீன முனையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கடந்த 09 மாதங்களில் அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது சிக்கலை ஏற்படுத்தியவர் சுமந்திரனே – நீதியமைச்சர் குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்த விவகாரத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடும் அழுத்தம் பிரயோகித்தார்.மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் உரையாற்றுகிறாரா அல்லது பிரதேச சபையில் உரையாற்றுகிறாரா ? என்பதை அறியவில்லை.உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.அவரது உரையில் விரக்தி மாத்திரமே எதிரொலித்தன.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் இவர் சபையில் உரையாற்றுகையில் ‘உயர்நீதிமன்றம் வீட்டுக்கு செல்ல வேண்டும் ‘ என்று இவர் குறிப்பிட்டார்.இவர்களுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கும் போது சபைக்கு வந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு செல்ல கூடாது என்று குறிப்பிடுகிறார்.ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.

இதன்போது எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ‘உயர்நீதிமன்றத்தின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு உண்டு.அன்று குறிப்பிட்ட விடயத்துக்கும்,இன்று குறிப்பிடும் விடயத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் உண்டு.நான் அன்று குறிப்பிட்ட கருத்தில் எவ்வித மாறுப்பாடும் கிடையாது என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நீதியமைச்சர், மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.சிறந்த சட்ட வரைபை நாங்கள் தயார் செய்து முன்வைத்தோம்.உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகித்தார்.இதனால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.இதற்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும்.ஆகவே நீங்கள் தான் ( சுமந்திரனை நோக்கி) நீங்கள் தான் அப்போதைய பிரதமருக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தீர்கள்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் .நான் எதிர்க்கட்சி உறுப்பினர் நீங்கள் தான் அமைச்சரவை உறுப்பினர் ஆகவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும் ‘ என்றார்.

நான் அமைச்சரவையில் இருந்தேன். சிறந்த சட்ட மூலத்தையே பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தோம்.சட்டமூலம் குழுநிலை வேளையில் திருத்தம் செய்யப்பட்ட போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானங்கள் கவனத்திற் கொள்ளவில்லை.இவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.சிக்கலை நீங்களே (சுமந்திரனை நோக்கி) ஏற்படுத்தினீர்கள் என்றார்.

பெளத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்காத வரை வெடுக்குநாறிமலை போன்ற சம்பங்கள் தொடர்ந்து அரங்கேறும்

சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு ‘கொழும்பு அரசாங்கம்’ வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் வெடுக்குநாறிமலை விவகாரத்தை ஒத்த மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக எண்மர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை வரவேற்கத்தக்க செய்தி எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், இருப்பினும் சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு ‘கொழும்பு அரசாங்கம்’ வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் (சிறியளவிலான) பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் இவ்வாறான மோதல்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும் என எச்சரித்துள்ளார்.

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு பரிந்துரை

தெளிவான, நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் கடமை புரிவோரின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சீன ஆராய்ச்சிக் கப்பலிற்கு தடை விதித்து விட்டு ஜேர்மன் ஆராய்ச்சிக் கப்பலிற்கு அனுமதி வழங்கியமைக்கு சீன தூதரகம் கடும் எதிர்ப்பு

வெளிநாட்டு ஆராய்ச்சிக்கப்பல்களிற்கு இலங்கை ஒரு வருட தடையை விதித்துள்ள நிலையில் ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைதுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பைவெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் கப்பலின் ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிவழங்கியமை குறித்து இலங்கைக்கான சீனதூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ள ஆசிய இராஜதந்திரியொருவர் அனைத்து நாடுகளினதும் ஆராய்ச்சிகப்பல்களுக்கும் அனுமதி மறுப்பது என இலங்கை தீர்மானித்திருந்தால் சீனா இந்த விடயத்தை பெரிதுபடுத்தியிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனை சேர்ந்த ஆராய்ச்சிகப்பலிற்கு இலங்கை அனுமதி வழங்கியதை அரசாங்க வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.கொழும்பு தற்போது ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்கியுள்ளதால் சீனா தனது கப்பல்களிற்கும் அனுமதியை கோரும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன தூதரகத்தின் எதிர்ப்பு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடமிருந்தோ சீன தூதரகத்திடமிருந்தோ கருத்துக்களை பெற முடியவில்லை என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் – பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 08 பேரை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் வந்து ‘ வெடுக்குநாறி,மாதவனை,குருந்தூர் எங்கள் சொத்து’ என்று உரத்த குரலில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து ‘நாட்டின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் விசாரணைகளை முன்னெடுங்கள் ‘ என்று வலியுறுத்தினார். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் சபையில் அமளி துமளி ஏற்பட்டது.

நீதிமன்ற விசாரணைக்கு இடம்பெற்றுள்ள விடயத்துக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முடியாது. 08 பேர் கைது செய்யப்பட்ட விதம் முறையற்றதாயின் அது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபைக்கு உறுதியளித்தார்.

பாராளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம்,செல்வம் அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,தர்மலிங்கம் சித்தார்த்தன், வினோநோதராதலிங்கம்,எஸ். சிறிரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான வேலுகுமார்,உதயகுமார்,இராதாகிருஸ்ணன், நளின் பண்டார ஆகியோர் ‘பொலிஸ் அராஜகம் ஒழிக, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பதவி விலக வேண்டும்.வெடுக்குநாறி எங்கள் சொத்து,மாதவனை எங்கள் சொத்து,பொய் வழக்கை வாபஸ் பெறு,அப்பாவிகளை விடுதலை செய்,குருந்தூர் மலை எங்கள் சொத்து என கோசங்களை எழுப்பியவாறு சபை நடுவில் வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளுடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.அத்துடன் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.ஆளும் கட்சியின் ஒருசில உறுப்பினர்களும்,பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச இது இனவாத செயற்பாடு ஆகவே இதற்கு இடமளிக்க வேண்டாம் என இந்த போராட்டத்துக்கு எதிராக உரையாற்றினார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ‘உங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி விட்டு ஆசனங்களுக்கு செல்லுங்கள்’ என்று குறிப்பிட்டு விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ‘ வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிகள் பாரதூரமான பிரச்சினைகளை முன்வைத்து சபையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.ஆகவே அவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் ‘ என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ‘ சபை நடுவில் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்த தமிழ் பிரதிநிதிகளை நோக்கி உங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டு தயவு செய்து ஆசனங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் முன்வைக்கும் காரணிகள் பொறுப்பான தரப்பினருக்கு அறிவிக்கப்படும் ‘என்று அறிவித்து விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல ‘கோயிலில் வணங்கிக் கொண்டிருக்கும் போது சிவில் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இது முற்றிலும் தவறு ‘என்றார்.

சபைக்கு நடுவில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த தமிழ் பிரதிநிதிகள்’தொல்பொருள் அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்.வெடுக்குநாறி எங்கள் சொத்து,மாதவனை எங்கள் சொத்து,குருந்தூர் எங்கள் சொத்து’ என உரத்த குரலில் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்’ மத சுதந்திரம் இந்த நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும்.கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அதிகாரம் இல்லை.ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள்,மத சுதந்திரம் வடக்குக்கும் ,தெற்குக்கும் ஒன்றாக காணப்பட வேண்டும் என்றார்.

இதன்போது உரையாற்றிக் கொண்டிருந்த அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா’தயவு செய்து சபையை கட்டுப்படுத்துங்கள்’ என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர்’ அவர்கள் ஆசனங்களுக்கு செல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்வது ‘என்றார்.தமிழ் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளின் மத்தியில் நின்று ‘பிரதி சபாநாயகர் அவர்களே தயவு செய்து இவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்.மத உரிமை மறுக்கப்பட்டுள்ளதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.நீங்கள் பதிலளியுங்கள் என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதிசபாநாயகர் ‘ சபை நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.இவர்கள் முன்வைத்த விடயத்தை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாக நான் குறிப்பிட்டேன்.அதனை கருத்திற் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது’ என்றார்.

பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் நீங்கள் குறிப்பிடுவதை போன்று பொலிஸ்மா அதிபரை அழைக்க முடியாது.நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க ‘ வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகளுக்கு பிரச்சினைகளுக்கு காணப்படுமாக இருந்தால் அவர்கள் ஆசனங்கள் இருந்தவாறு அவற்றை குறிப்பிடலாம்.எதிர்க்கட்சித் தலைவர் இவர்களுடன் ஒன்றிணைந்து ‘சோ’ காட்டுகிறார் .இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ‘ பெரும்பாலானோர் ‘சோ’தான் காட்டுகிறார்கள் என்றார்.தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் இருந்தவாறு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ’ குணவர்தன ‘சாணக்கியன் அவர்களே தயவு செய்து ஆசனத்துக்கு செல்லுங்கள்.இவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நாங்கள் எதர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆகவே ஆசனங்களுக்கு சென்று பிரச்சினைகளை குறிப்பிடுங்கள்.சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார்.

இதனை தொடர்ந்து சபை நடுவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆசனத்துக்கு சென்று ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து’ கடந்த 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விழைவித்ததாக பொய் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஆகவே 08 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ’08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.முறையற்ற வகையில் கைதுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க முடியும்.அதனை தொடர்ந்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும்.கைது செய்யப்பட்டுள்ளவர்களை பாராளுமன்றத்தால் விடுவிக்க முடியாது.ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ‘ என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் ‘ நீதியமைச்சரே நான் குறிப்பிடுவதை கேளுங்கள் தொல்பொருள் திணைக்களம் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச’ நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நாட்டில் மத சுதந்திரம் உள்ளது.இது அடிப்படை உரிமை.மத தலங்களுக்கு சென்று வழிபட அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.225 உறுப்பினர்களும் மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ‘தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனத்தால் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.முறையான விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் குருந்தூர் மலை விவகாரத்தில் ஒருசில பௌத்த பிக்குகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.தமிழர்களுக்கு ஒரு நீதி,சிங்களவர்களுக்கு பிறிதொரு நீதி இதுவே இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ‘தொல்பொருள் கட்டளைச்சட்டம் தொடர்பில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.மத தலங்கள் உள்ள பெரும்பாலான இடங்கள் தொல்பொருள் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அதில் பௌத்த விகாரைகள் பெருமளவில் காணப்படுகின்றன.தொல்பொருள் திணைக்களத்தினால் பௌத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தொல்பொருள் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றங்களுக்கு கிடையாது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொல்பொருள் சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்களை முன்வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆகவே தொல்பொருள் சட்டத்தின் குறைப்பாடுகளை ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம் என்றார்.

இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ‘ இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்தின் ஊடாகவும் உரிய கவனம் செலுத்தப்படும் ‘ என்று சபைக்கு அறிவித்தார்.

ரெலோ சுவிஸ் கிளையால் வுவுனியா தாஸ் நகர் முன்பள்ளிக்கு நிதியுதவி

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
ரெலோ சுவீஸ்கிளையால்,வவுனியா பூந்தோட்ட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தாஸ் நகர் முன்பள்ளிக்கு
(10.03.2024) ஆசிரியைக்கானா மாதாந்த கொடுப்பனவுமாவட்ட பொறுப்பாளர் புருஸ் (விஜயகுமார்) ஊடாக வழங்கப்பட்டது.

வவுனியா பூந்தோட்டத்தில் எமது கட்சியினரால் 1990 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட தாஸ் நகரத்தில் உருவாக்கப்பட்ட விபுலானந்தர் முன்பள்ளியின் நிர்வாகச் செலவு மற்றும் இரண்டாவது ஆசிரியைக்கான மாதாந்த கொடுப்பனவு போன்றவை 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சுவிஸ்கிளையினரால் வழங்கப்பட்டு வருகிறது.

விபுலானந்தர் முன்பள்ளி, தாஸ் நகரில் அமைந்துள்ளது . இப்பாடசாலையில் 20க்கும் மேற்பட்ட சிறார்கள் கல்வி கற்றுவருகின்றார்கள்.
இந்த கிராமமானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முயற்சியால் 1990 பின்னர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாகும்.

அந்தவகையில் சிறீ நகர், தங்கா நகர் ,குட்டி நகர், குகன் நகர், பாஸ்கரன் நகர் என ஆறுக்கு மேற்பட்ட குடியேற்ற கிராமங்கள் ரெலோ வவுனியா மாவட்ட நிர்வாகத்தினரால் அக்காலத்தில் உருவாக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்றது

எமது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அம்பாறை மாவட்டப் பொதுச் சபை உறுப்பினர் குழுக் கூட்டம் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் திரு. ஹென்றி மஹேந்திரன் அவர்களின் பிரசன்னத்துடன், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு. நேசன் கந்தசாமி அவர்களின் தலைமையில், அக்கரைப்பற்று பிரதேச பொறுப்பாளர் செல்வன்: முருகப்பன் சிவானந்தன் அவர்களின் அனுசரணையுடன் கடந்த 2024.03.15 ஆம் திகதி அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

இதன் போது, கட்சியின் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. மேலும், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அமையவுள்ள நிருவாகக் கட்டமைப்பு தொடர்பில் உப தலைவர் ஹென்றி அண்ணன் விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக அக்கரைப்பற்று பிரதேச பொறுப்பாளர் திரு : சிவானந்தன் மற்றும், பொதுக்குழு உறுப்பினர்களது ஒருங்கமைப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அக்கரைப்பற்று 7/4 வட்டாரக் கிளையின் செயலாளர் திரு. வன்னியசிங்கம் லோகநாயகம் ( குட்டி ) அவர்கள் எமது காட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

இக் கூட்டத்தில் கட்சியின் அம்பாறை மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. சபா.நேசராஜா அவர்களும் பிரதேச பொறுப்பாளர்கள் மற்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று முற்பகல் கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

ஏறக்குறைய ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பினதும் மோசடி,

ஊழல்களை தடுத்தலுடன் தொடர்புடைய செயற்பாங்குகளினதும் முன்னேற்றம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு,

மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிராத தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவம் செய்து பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சேர்வத் ஜஹான், கெட்சியரினா ஸ்விட்சென்கா (Katsiaryna Svieydzenka) மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோரும் உரையாடலில் பங்கேற்றனர்.