யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வியாழக்கிழமை (18) மதியம் 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இடம்பெற்றது.

இதன் பொழுது பொதுசுடர் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது.

தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

தமிழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பு

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டு போரின் போது ஈழத் தமிழர்களை கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களால் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்புகைப்படத்தை தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து கடலில் விடப்பட்ட பின்னர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்கள் எழுப்பியதோடு, ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும். மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக அறிவித்து அனுசரிப்பு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும் என அஞ்சலி கூட்டத்தில் பேசினர்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு

14ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு, சரியாக காலை 10.30மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, அதனையடுத்து பொதுச்சுடரேற்றப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தனது குடும்பத்தில் 13பேரை இழந்த மன்னாரைச் சேர்ந்ந தாயார் ஒருவர் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

அதேவேளை சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. தென்கைலாய ஆதீன குருமுதல்வர் அகத்தியர் அடிகளார் அவர்களால் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

அத்தோடு இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்ற உறவுகள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றியத்தினர், முள்ளிவாய்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களுடைய உறவினர்கள் என பெருந்திரளானவர்களின் பங்குபற்றலுடன் உணர்வழுச்சியுடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை: நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நாளை 14 ஆவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன.

18 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள்,  தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள்,  அனைதினதும் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் கடந்த 2009 மே 18 ஆம் திகதி மௌனிக்கச் செய்யப்பட்டது.

இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150000 வரையான தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்திற்கான வரைபு 1987 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோது, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்ட விடயங்களைத் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாகக் கூட கருத முடியாது என்பதனைச் சுட்டிக்காட்டி  அதனைச் சட்டமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாம் என்றுகோரி தமிழ்த் தலைவர்களால் அன்றைய இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டது.

எனினும் அக்கோரிக்கையை முற்றாகப் புறந்தள்ளி  தீர்வு என்ற பெயரில் தமிழ் மக்களது விருப்புக்கு மாறாகத் தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்ட 13ஆம் திருத்தத்தையும் ஒற்றையாட்சியையும் நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்துப் போராடியமையினாலேயே தமிழ் மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டிருந்தார்கள்.

தமிழ்த் தரப்பின் கோரிக்கைகளை முற்றாகப் புறக்கணித்து 1987 நவம்பர் 14 இல் பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தமானது சட்டமூலமாக நிறைவேற்றப்பட்டு முழுமையாக நடைமுறையில் உள்ளபோதே மேற்படி இனவழிப்பு அரங்கேற்றப்பட்டது.

உரிமைக்காகப் போராடியமைக்காக இவ்வாறு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரவேண்டிய வரலாற்றுக்கடமை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டும்.

அத்துடன் அவர்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து போராடினார்கள் என்பதும், அக்கோரிக்கைகளை இறுதிவரை கைவிட மறுத்து உறுதியாக நின்றமையினாலுமே இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற  வரலாற்று உண்மைகள் எமது அடுத்த சந்ததிக்குக் கடத்திச் செல்லப்படல் வேண்டும்.

அதனூடாக இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியில் விசாரணையை வலியுறுத்துவதுடன், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வுகளை நிராகரித்துத் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வை நோக்கி மக்களை அணிதிரட்டிச் செல்வதும் அவசியக் கடமையாகும்.

அவ்வாறு இனவழிப்பு அரங்கேற்றப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தையும், ஒற்றையாட்சியையும் நிராகரித்து, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிகப்பட்ட அடிப்படையிலான சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியே சனநாயக வழிமுறையிலான தேர்தல்கள் மூலம் ஆணை வழங்கி வந்துள்ளனர்.

நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து கடந்த 36 ஆண்டுகள் முழுமையாக நடைமுறையில் உள்ள 13ம் திருத்தச் சட்டத்தினை, நடைமுறையில் இல்லாதது போன்று பாசாங்கு செய்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோருவதானது, அதனைத் தீர்வாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாகும்.

கடந்த 75 வருடங்களாகத் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுவந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பினை 13ஐ நடைமுறைப்படுத்தல் என்னும் பெயரில் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடுவதற்கும், அதனை வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்து அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்குமான திரைமறைவுச் சதிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இத்தகைய செயற்பாடுகள் முள்ளிவாய்க்கால் வரை நடந்தேறிய தியாகங்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும். 1987 இல் தமிழ் மக்களின் சம்மதமின்றி ஒருதலைப்பட்டசமாகக் திணிக்கப்பட்ட 13 ம் திருத்தச் சட்டத்தை நிராகரித்து, 2009 வரை மேற்கொள்ளப்பட்டிருந்த தியாகம் நிறைந்த உன்னதமான விடுதலைப் போராட்டத்தைத் தவறானதாக சித்தரிக்க முயலும் செயற்பாடுமாகும்.

இச் சதியை மக்களுக்கு அம்பலப்படுத்தி, ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வை வலியுறுத்தி மக்களை அணிதிரட்ட வேண்டிய வரலாற்றுக் கடமை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை முன்னடுக்கும் ஒவ்வொரு தரப்பினருக்கும் உண்டு.

கீழ்வரும் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வழமைபோன்று இவ்வாண்டும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அணிதிரளவேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.

• தமிழ் மக்கள்மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை நடாத்தப்படல் வேண்டும். பொறுப்புக் கூறல் தொடர்பிலான எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் முற்றாக நிகராரிக்கின்றோம்.

• 1987 இலேயே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கூடக் கருத முடியாது என்று, அன்றே தமிழ்த் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டிருந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை, ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாகத் திணிக்க முடியாது என்பதையும், ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

• ஸ்ரீலங்காவின் 75 வருடத் தோல்விக்குக் காரணமான ஒற்றையாட்சி அரசியல் யாப்புக் கைவிடப்பட்டு, புதிய அரசியல் யாப்பானது தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் சமஸ்டி யாப்பாக அமைய வேண்டும்.

• பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படல் வேண்டும் என்பதுடன் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

• புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படுவது நிறுத்தப்படல் வேண்டும்.

• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிய சர்வதேச விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் மே 18 ஆம் திகதி வடக்குக் கிழக்கில் மக்கள் தமது வழமையான நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி முள்ளிவாய்க்கால் மே 18 இனப்படுகொலையை நினைவுகூருமாறு அழைக்கின்றோம்.

அந்தவகையில் வடக்குக் கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள்,  தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள்  அனைத்தினதும் அன்றாடச் செயற்பாடுகளை நிறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்குமாறும், வியாழக்கிழமை மே-18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. எங்களுடைய வாழ்வியலாக மாறியிருக்கின்றது – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. எங்களுடைய வாழ்வியலாக மாறியிருக்கின்றது என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பதினான்கு ஆண்டுகளாகி போன 2009 ஆம் ஆண்டின் இன அழிப்பின் நினைவு தினத்தை நாளைய தினத்திலே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திலே நினைவு கூரப்பட இருக்கின்றது.

கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக நிகழ்ந்தது போல இந்த ஆண்டும் சரியாக காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. எங்களுடைய வாழ்வியலாக மாறியிருக்கின்றது. எங்களுடைய தமிழ் இனத்தின் விடுதலைக்கான ஒரு புள்ளியாகவும் இந்த இடம் இருக்கிறது.

இந்த மண்ணிலே படுகொலை செய்யப்பட்ட அத்தனை மக்களையும் நாங்கள் நினைவு கூர கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.

ஆகவே இந்த நினைவேந்தலை பங்கெடுக்க தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொதுக்கட்டமைப்பின் சார்பாக அழைத்து நிற்கின்றோம்.

இந்த நிகழ்விலே பங்கெடுக்க முடியாதவர்கள் உங்களுடைய இல்லங்களில் மாலையிலே நீங்கள் விளக்கேற்றி இறந்தவர்களுடைய ஆன்மாவிற்காக மன்றாடும்படி கேட்டு நிற்கின்றோம்.

இறுதி யுத்த காலங்களிலே மக்களுக்கான வாழ்வுக்கு அல்லது உயிரைப் பிடித்துக் கொள்ள காரணமாக இருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை நீங்கள் உங்களுடைய இல்லங்களிலே சமைத்து அதனை அருகில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம்.

இவ்வாறான செயற்பாடுகளை, நினைவேந்தல்களை, கஞ்சி வழங்குதல்களை உங்களுடைய இல்லங்களில் மட்டுமல்லாது, ஆலயங்களிலும், சமூக அமைப்புகளிலும், வீதிகளிலும் இவற்றை முன்னெடுக்குமாறு அத்தனை மக்களையும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

இதனை ஏன் நாங்கள் செய்கிறோம் என்பதை எங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும்படியாகவும் அன்புரிமையோடு கேட்டுநிற்கின்றோம்.

இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு காரணமான அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற அந்த ஒருமித்த குரலில் மக்களினுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய மக்களுக்கான நிர்வாக அல்லது எந்த தாகத்தோடு நாங்கள் போராடினோமோ அந்த தாகங்கள் நிறைவேறும்படியாக நாங்கள் எம்மை அர்ப்பணிப்பதும் அவசியமாக இருக்கிறது.

இன்றும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான இன அழிப்பு விடயங்கள், பௌத்தமயமாக்கல்கள், இவற்றுக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பது அவசியம் என்பதை இந்த வேளையிலே உணர்த்தி இதிலே அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்போடு கேட்டுநிற்கின்றோம்.

தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு வேண்டும் – ஜனா எம்.பி

உண்மையில் இந்த வாரம் என்பது மே மாதம் 18ம் தேதியை ஒட்டிய வாரம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு துக்கமான கரி நாட்களைக் கொண்ட வாரமாக தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளார் நாயகமும் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தற்போது நாட்டிலேற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வூடகச் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஸ்டித்து வரும் இந்த நிலையில் இலங்கை அரசு தன்னுடைய போர் வெற்றியினை கொண்டாடிக் கொண்டு வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் இந்த போர் வெற்றியினை பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்.

நாங்கள் 2009 மே 18 ஐ ஒட்டிய காலப்பகுதியில் கிட்டத்தட்ட 140,000 பொதுமக்களை இழந்திருந்ததாக மன்னாரில் ஆயராக இருந்த ராயப்பு யோசப் ஆண்டகை வழங்கியிருந்தார்.

இந்தப் போர் தொடங்கிய காலம் இருந்து கிட்டத்தட்ட 3 லட்சம் மக்களும், போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதிலே பல தலைவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள். இருந்தாலும் இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தினை நாங்கள் வருடா வருடம் நினைவு கூர்ந்து வருகின்றோம். இந்த முறையும் அந்த வகையிலே நினைவுகூறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிங்களப் பேரினவாதிகள், இனவாதிகள் குறிப்பாக சரத் வீரசேகர போன்றவர்கள் இதற்கு எதிரான கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். நேற்றைக்கு முன் தினம் கூட நினைவு தினத்தினை ஒட்டி நடைபெற்ற ஊர்திப் பவனி, விளக்கேற்றல்கள், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகள் போன்றவை எவை எதற்காக என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.

உண்மையிலேயே எங்களது மக்கள் எங்களுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூர ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. அந்த வகையில் நாங்களும் ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இந்தத் தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த இரண்டு வருடங்களாக பெரும் தொற்றுக் காரணமாக அதனை அலுவலகங்களிலும் செய்திருந்தாலும், வழமையாக கல்லடிக் கடற்கரையிலே நாங்கள் இந்த நினைவு கூறலைச் செய்வது வழமை. இந்த முறை இன்றைய தினம் கல்லடிக் கடற்கரையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியம் இந்த நினைவு கூரலை இன்று பிற்பகல் 5.00 மணிக்கு செய்வதற்காக நாங்கள் சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றோம்.

இந்த நினைவு கூறல் நிகழ்வில் இன,மத, சமய வேறுபாடுகள் இன்றி நாங்கள் ஒரு உணர்வுபூர்வமான மனிதனாக தமிழ் பேசுபவனாக தமிழ் இனத்திற்காக, தமிழ் இனத்தின் உரிமைக்காகப் போராடிய இனமாக நாங்கள் இதனை நினைவு கூறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாளை பிற்பகல் ஐந்து மணிக்கு கல்லடி கடற்கரைக்கு ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக உருவாகிய 13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபை முறைமை என்பது 87 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அந்த வகையில் மாகாண சபைகளுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அந்த ஆளுநர்கள் மாறி மாறி மாகாணங்களை ஆண்டு கொண்டு இருந்தார்கள். உண்மையிலேயே வடக்கு கிழக்குக்காகத்தான் அதை முக்கியப்படுத்தி இந்த மாகாண சபை முறைமையே வந்தது.

ஆனால் நீண்ட காலமாக கிட்டத்தட்ட 18 வருடங்களாக கிழக்கு மாகாண சபை அரசியல் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது. வடக்கு மாகாண சபை 23 வருடங்களாக அரசியல் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தார்கள். கிழக்கு மாகாண சபையிலே இரண்டு தடவைகள் தேர்தல் நடைபெற்றிருந்தது. வடமாகாண சபையிலே ஒரு தடவை மாத்திரமே தேர்தல் நடந்திருக்கின்றது.

ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதிகளான ஆளுநர்களாலேயே இந்த மாகாணங்கள் ஆளப்பட்டு கொண்டிருந்தது. கிழக்கு மாகாணம் பல ஆளுநர்களை கண்டிருந்தாலும், தற்போது ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உண்மையிலேயே ஆளுநர்கள் என்பது ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதிகள் என்பது தெளிவாகின்றது.

ஜனாதிபதி மாறும் போது அந்தந்த மாகாண ஆளுநர்கள் ராஜினாமா செய்வதுதான் அரசியல் ரீதியாக வழமையாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதுடன் இவர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டும். இருந்தும் ராஜினாமா செய்யுமாறு கூறியும் அடம்பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்றைக்கு முன் தினம் வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, இன்று புதியதொரு ஆளுநர் கிழக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட இருக்கின்றார்.

நான் கூற வருவது என்னவென்றால் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்திலே ஆளுநராக இருந்த காலத்திலேயே கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு ஒரு இருண்ட யுகமாகவே இருந்தது. அவரது முழு நோக்கமும் சிங்கள ஏகாதிபத்தியத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. இரண்டு சிங்கள பிள்ளைகளுக்காக ஒரு பாடசாலையை திறப்பதும், கிழக்கு மாகாணத்தில் சிங்கள பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்காக சிங்கள மக்கள் குடியேற்றத்தை அதிகரிப்பதுமே அவருடைய முழு நோக்கமாக இருந்தது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே 6 லட்சம் மாடுகள் இருக்கும் நிலையில் பண்ணையாளர்களை மிகவும் மனம் நோகும் அளவிற்கு அந்த மாடுகளை மேய்க்க முடியாத நிலைக்கு அயல் மாவட்ட சிங்கள மக்களை இந்த மாவட்டத்திற்கு உள்ளே கொண்டு வந்து சேனைப்பயிர்ச்செய்கையை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மயிலுத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களிலும் பட்டிப்பளை பிரதேசத்திலே கந்தமல்லிசேனை என்கின்ற பிரதேசங்களிலும் அவர்களை கொன்று குடியேற்றி எங்களுடைய தமிழ் பேசும் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கான நடவடிக்கையை அவர் எடுத்திருந்தார். ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களின் ஒரு பிரதிநிதியாகவே அவர் இங்கு செயல்பட்டிருந்தார்.

அந்த வகையில் இன்றிலிருந்து கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு அந்த இருண்ட யுகம் மாற வேண்டும். ஒரு வெளிச்சமான சந்தோஷமான எதிர்காலம் இருக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களிலே இன்று பதவியேற்று, கிழக்கு மாகாண சபைக்கு வரும் ஆளுநர் கூட இந்த மாகாணத்தில் மூவின மக்களும் வாழுகின்றார்கள். சரியோ, தவறோ எப்படிப்பட்ட குடியேற்றங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்று இருந்தாலும் இந்த மாகாணத்திலே மூவின மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாகாணத்தை எந்தவித மக்களினதும் மனம் நோகாமல் எதிர்காலத்திலே பாதிக்கப்படாமல் சமமாக இந்த மாகாணத்தையும் மாகாணத்தில் வாழும் மக்களையும் புதிதாக வரும் ஆளுநர் ஒருதலைப் பட்சமாக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வழிநடத்தாமல் மிகவும் நிதானமாக வழி நடத்துவார் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் அறிந்த வகையில் ஒரு அரசியல்வாதியாக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட குடும்பத்திலிருந்து வருபவராக அந்த ஆளுநர் இருக்க போகின்றார் என்பதனை நாங்கள் அறிந்து கொள்கின்றோம். செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்துக்கு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.

அந்த அரசியல் பாரம்பரிய பின்னணியை கொண்ட குடும்பத்தில் இருந்து மாத்திரமில்லாமல், ஒரு மாகாண அமைச்சராக நீண்ட காலமாக இரண்டு தடவைகளுக்கு மேல் பணியாற்றியவர். மாகாணத்தின் நிர்வாகம் மாகாண மக்களது மனோ நிலையைப் புரிந்தவராக எந்த ஒரு இன மக்களையும் பாதிக்காத வகையில் அவர் நடந்து கொள்வார், நடந்து கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவரிடமும் எந்தவித மக்களும் பாதிக்கப்படாமல் ஒரு ஆட்சி நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஒரு நாள் தற்போதைய சூழ்நிலையிலே மாகாணங்களிலே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதாகவும், இன்னும் ஒரு நாள் அதிகார பகிர்வு தொடர்பாக ஆராய்வதாகவும், மூன்றாவது நாள் அந்தந்த மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக ஆராய்வதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டிலே நாங்கள் ஒரு முடிவு எடுத்திருந்தோம். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே அபிவிருத்தி தொடர்பாகவோ அல்லது தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகவோ மாகாண மட்டத்திலேயே உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேசுவதை பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

இருப்பினும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக ஜனாதிபதி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச வேண்டுமாக இருந்தால் கடந்த காலங்களிலே வடக்குக் கிழக்கை இணைத்துத்தான் நாங்கள் அரசியல் ரீதியாக எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக நாங்கள் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகப் பேசுவதாக இருந்தால் வடக்குக் கிழக்கு இரண்டு மாகாணங்களையும் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டி பேச வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் வரமாட்டோம் என கூறி இருந்தோம்.

அந்த வகையில் அவருடைய நிகழ்ச்சி நிரலினை மாற்றி இருந்தார். அபிவிருத்தி தொடர்பாக ஒதுக்கப்பட்ட திகதி பிற்போடப்பட்டது. தற்போதைய பிரச்சனைகள் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை பேசி இருந்தோம். கடந்த வெள்ளிக்கிழமை இருந்த அதிகார பரவல் பிரச்சனைகள் நேற்றைக்கு முதல் நாள் திங்கட்கிழமை பேசியிருந்தோம். ஆனால் அந்த இரண்டு நாட்களுடைய பேச்சு வார்த்தைகளிலும் இருந்து தமிழ் மக்களுக்கான எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கூடுதலாக பேசப்பட்டது. நிலம் தொடர்பான பிரச்சனைகள், காணி கையகப்படுத்தல், தொல்பொருள் திணைக்களம், வன இலாகா, வன ஜீவராசிகள், மகாவலி அபிவிருத்தி சபைகள் போன்றவையினால் கையகப்படுத்தப்பட்ட, கையகப்படுத்தப்பட இருக்கின்ற காணிகள் தொடர்பாகப் பேசி இருந்தோம். ஆனால் பெரிதாக ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

எதிர்காலத்திலே காணிகள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்கின்ற உறுதிமொழி தான் கொடுக்கப்பட்டது. தவிர கையகப்படுத்தப்பட்டு தற்போது அவர்களது அபிவிருத்திகள் அதாவது சில இடங்களிலே இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்ற வெடுக்குநாரிமலை குருதூர் மலை போன்ற பிரதேசங்களில் 100% தமிழர்கள் வாழும் காங்கேசன் துறையிலே தையிட்டியிலே விகாரை கட்டப்பட்டு திறக்கப்படுகின்றது. அது போன்று எங்களது இந்துக்களின் பாரம்பரியமான கன்னியா வெந்நீர் ஊற்று பறிபோய் இருக்கின்றது. பிள்ளையார் கோயில் உடைக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டிருக்கின்றது. ஏன் பாடல் பெற்ற திருத்தலமான கோனேஸ்வரத்தைக் கூட, கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவைகளுக்கான தீர்வு எதுவுமே வைக்கப்படவில்லை.

இதற்கு மாறாக மிகவும் முக்கியமான அதிகார பரவலாக்கம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மாலை பேசப்பட்டது. ஜனாதிபதி வடகிழக்கிலுள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் அதாவது குறிப்பாக பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசையிலே இன்று 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதில் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன் கையெழுத்திட்டு இருக்கின்றார். ஒரு ஆவணத்தைக் கொண்டு வந்திருந்தார். வடகிழக்கிலே எட்டு கட்சிகள் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

அதாவது மாகாண சபை தேர்தல் நடைபெறும் வரைக்கும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது மாகாண சபைக்கு ஒரு ஆலோசனை சபையை அமைத்து, இந்த அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகப் பேச வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி அதனை நிராகரித்து இருந்தோம். காரணம் என்னவென்றால் ஒரு ஆலோசனை சபையை மாகாணங்களுக்கு அமைத்தால் அதை ஒரு சாட்டாக வைத்து மாகாண சபைத் தேர்தலை பின் போடுவதற்கு நாங்கள் ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருக்கும்.

அதிகார பகிர்வு என்பது வேறு ஆனால் தற்போதைய சூழ்நிலையிலே தமிழ் பேசும் மக்கள் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒருமித்து வைத்து ஜனாதிபதி பேசும்போது ஒரு உடன்பாடு வரக்கூடிய சூழ்நிலை தற்போதைய நிலையில் இல்லை.

எனவே முதல் அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு இலங்கை அரசியல் அமைப்பிலேயே தற்போது இருந்து கொண்டிருக்கும் இந்த 13 வது திருத்தச் சட்டம் அதனுடாக பகிர்ந்தளிக்கப்பப்பட்ட அதிகாரங்கள் உண்மையிலேயே ஏற்கனவே பகிர்ந்து அளிக்கப்பட்டு மாகாண சபை முறைமையின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த பல அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப் பெறப்பட்டிருக்கின்றது.

அதை தவிர காணி அதிகாரம் பொலீஸ் அதிகாரம் போன்றவை அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது ஒட்டுமொத்தமாக மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கங்கள் இந்த நாட்டின் அரசியல் அமைப்பையே மீறி கொண்டிருக்கின்றார்கள்.

நான் நினைக்கின்றேன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் நிச்சயமாக அரசாங்கம் பேசத்தான் வேண்டும்.

எங்களைப் பொருத்தமாட்டிலே எங்களுக்குள் தமிழ் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்குள் மக்களுக்குள் ஒரு புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் அந்த அடிப்படையிலேயே வரும் ஒரு தீர்வு தான் நிரந்தரமான ஒரு தீர்வாக இருக்கும் அதற்காக நாங்கள் முன்னோக்கி நகர வேண்டும் என்றார்.

வடக்கு, கிழக்கு, வட மேல் மாகாண ஆளுநர்கள் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் கைது

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இம்மானுவேல் ஆர்னோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவரென தெரிய வருகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இனிவருங்காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

அதனையடுத்து அக்கூட்டம் தொடர்பில் இருதரப்பினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டத்தின்போது நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் பிரச்சினைகள், துறைசார் ஒத்துழைப்பு, சர்வதேசப் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பு உறவுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மிகமுக்கியமானதொரு தருணத்திலேயே கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு இடம்பெற்றது.

இதனப்போது கடந்த சில வருடங்களாக சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டியிருப்பதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கைத்தரப்பு விளக்கமளித்தது.

அதேவேளை இலங்கையின் ஜனநாயகக்கட்டமைப்புக்களின் மீண்டெழும் தன்மை குறித்தும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தமது பாராட்டை வெளியிட்டனர்.

மேலும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் குறித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் கேள்விக்குப் பதிலளித்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் முன்னிலையிலுள்ள வழக்குகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

அடுத்ததாகப் பொருளாதார மீட்சியைப் பொறுத்தமட்டில், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எடுத்துரைத்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்புநாடுகளால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தினர்.

அத்தோடு இலங்கை அரசாங்கம் நாணய, நிதி மற்றும் ஆட்சிநிர்வாக மறுசீரமைப்புக்களை ஏற்கனவே மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது குறித்தும், இம்மறுசீரமைப்புக்களின் விளைவாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

அதற்குத் துலங்கலை வெளிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களின் அவசியம் மற்றும் சுயாதீன கட்டமைப்புக்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதுடன் தற்போது திட்டமிடப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளமையைப் பாராட்டினர்.

அதேபோன்று ஜனநாயக நிர்வாகத்தை மேலும் விரிவுபடுத்தக்கூடிய அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஐரோப்பிய அதிகாரிகள் தமது வரவேற்பை வெளிப்படுத்தினர்.

அதுமாத்திரமன்றி ஆட்சிநிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டுக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நினைவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், அக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

மேலும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின்போது, அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அதில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீதியமைச்சானது பொதுமக்களிடமிருந்தும், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்தும் திருத்த யோசனைகளைக் கோரியிருப்பதாக இலங்கைப்பிரதிநிதிகள் மற்றைய தரப்புக்கு எடுத்துரைத்தனர்.

அதுமாத்திரமன்றி வெகுவிரைவில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யவிருக்கின்ற இச்சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைந்திருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனையடுத்துக் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கான இலங்கையின் கடப்பாடு குறித்து நினைவுபடுத்தியதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் எனவும் வலியுறுத்தினர்.

இதன்போது இலங்கையின் நீதித்துறைசார் மறுசீரமைப்புக்கள் மற்றும் நல்லிணக்க செயன்முறையில் தமது தொடர்ச்சியான ஆதரவை மீளுறுதிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், புதிதாக நிறுவப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ஏற்கனவே இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய அனைத்துக்கட்டமைப்புக்களும் சுயாதீனமாக செயற்படவேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் சுட்டிக்காட்டினர்.

அடுத்ததாக இருதரப்பினருக்கும் இடையிலான வர்த்தகத்தொடர்புகளின் முக்கியத்துவம் குறித்து இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் அவதானம் செலுத்தினர்.

இதில் குறிப்பாக ஐரோப்பிய உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

அதேபோன்று இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை வெகுவிரைவில் இலங்கையில் நடாத்துவதற்கும் இருதரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

மேலும் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அடுத்த 10 வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான புதிய வழிகாட்டல்களை முன்வைத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், 2020 – 2022 ஆம் ஆண்டு வரையான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு அறிக்கை எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

சீன யூனான் மாகாண ஆளுனர் இலங்கைக்கு விஜயம்

சீனா – யூனான் மாகாண வெளிவிவகாரங்கள் அலுவலகத்துக்கும் , வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தும் இடையில் பொருளாதாரம் , கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

16 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் 20 ஆம் திகதி வரை சீனாவின் யூனான் மாகாண ஆளுநர் வன்(ங்) யூகோவின் இலங்கைக்கான விஜயத்தின் போது, இலங்கை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பரஸ்பர சுற்றுலா, பொருளாதாரம், சந்தை மற்றும் வர்த்தகம், கல்வி, சுற்றுலாத்துறை, விவசாயம், மனிதக் கலாச்சாரப் பரிமாற்றங்கள், மக்களுடைய வாழ்க்கைத்தரம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.