தேர்தல் நடாத்துவதற்குப் பொருத்தமான சூழல் இப்போது இல்லை – ஜனாதிபதி

இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒன்றை நடத்துவதால் பெரிய மாற்றம் ஒன்று வந்துவிடப்போவதில்லை. நாங்கள் ரூபாவை மேலும் வலுவடையச் செய்ய வேண்டியதே தற்போது முக்கிய விடயமாகும்.

இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்குக் குறைந்தது 4 வருடங்களாகும் எனப் பலர் கூறினார்கள். ஆனால், 8 மாதங்களில் நெருக்கடியைத் தீர்க்க முடிந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்; நிவாரணம் வழங்கப்படும்.

ஏனைய கட்சியினர் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதற்குத் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

பந்து எங்கள் கைகளுக்குக் கிடைத்துள்ளது. அடித்து ஆடத் தயாராக இருங்கள்.“ என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான சட்டம் ஒருவருடத்திற்குள் நிறைவேற்றப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ள நிலையில், பெரும்பாலும் ஒருவருடகாலத்திற்குள் அச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்தில் இன்றும், நாளையும் இலங்கை தொடர்பான மீளாய்வு இடம்பெறவுள்ளது.

அதனை முன்னிட்டு இலங்கை மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பன தொடர்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிகழ்நிலை முறைமையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் அமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வாய்மொழி மூலம் விளக்கமளித்தார்.

அதுமாத்திரமன்றி இதுகுறித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எழுத்துமூல அறிக்கையும் மீளாய்வுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு நேர்மறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், ‘இருதரப்பினரும் மீறல்களில் ஈடுபட்ட அதேவேளை, இது முன்நோக்கிப் பயணிப்பதற்கான தருணம்’ என்ற கோணத்தில் நிலைமாறுகாலநீதியை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு உள்ளகப்பொறிமுறைகளை அரசாங்கம் ஸ்தாபித்தது.

இந்தப் பொறிமுறைகள் ஆயுதப்போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதுடன், அவை மீளநிகழாதிருப்பதை உறுதிப்படுத்தின.

அதன் ஓரங்கமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், மரணங்களைப் பதிவுசெய்தல், காணாமல்போனமைக்கான சான்றிதழ் வழங்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சட்டம், குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்பன அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டன.

மேலும் தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும். அதுமாத்திரமன்றி பெரும்பாலும் ஒருவருடத்திற்குள் உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

அடுத்ததாக நினைவுகூர்தல் என்பது நல்லிணக்க செயன்முறையின் இன்றியமையாததோர் அங்கமாகும். அதற்கான வாய்ப்பை மறுப்பதென்பது இனங்களுக்கு இடையிலான பிளவை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நல்லிணக்க செயன்முறையில் தடங்கல்களை ஏற்படுத்துவதற்குமே வழிவகுக்கும்.

அதன்படி இராணுவத்தினரின் குடும்பங்களைப்போன்று பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்களும் சமத்துவமான முறையில் நடத்தப்படவேண்டும் என்றும், தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நாம் பரிந்துரைத்துள்ளோம். அதற்கமைய இப்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் தமது உறவுகளை நினைவுகூருவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பது குறித்தும் அவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் ஆணைக்குழுவின் வகிபாகம், மரணதண்டனைக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பெண்கள்மீதான வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதில் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவ்வறிக்கையில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மறுசீரமைப்புக்களுக்கு அவசியமான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கத்தயார் – அமெரிக்கா

முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்கள் அனைவரும் இலங்கைக்கு அவசியமான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கியிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், நாட்டில் வெளிப்படைத்தன்மை, சிறந்த ஆட்சிநிர்வாகம் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

சீனாவினால் கடந்த 6 ஆம் திகதி இலங்கைக்கு அவசியமான நிதியியல் உத்தரவாதம் வழங்கப்பட்டதையடுத்து, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி தமது பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான உத்தரவாதத்தை வழங்குவதற்கு இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்கள் முன்வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகுமென இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையானது சுமார் 75 வருடகாலமாக அமெரிக்காவுடன் இராஜதந்திரத்தொடர்புகளைப் பேணிவரும் நிலையில், நாட்டில் வெளிப்படைத்தன்மை, சிறந்த ஆட்சிநிர்வாகம் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான மறுசீரமைப்புக்கள் ஆகிவற்றை உறுதிசெய்வதை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அமெரிக்கத்தூதுவர் உறுதியளித்துள்ளார்.

உண்மையைக் கண்டறிவதற்கான புதிய பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளக நீதிப்பொறிமுறைகள் தற்போது அவசியமற்றவையாக மாறியிருப்பதுடன் அவை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன.

எனவே பொறுப்புக்கூறல் சார்ந்த பொறிமுறைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துவதுடன் உண்மையைக் கண்டறிவதற்கான புதிய பொறிமுறையானது நாடளாவிய ரீதியிலான விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பில் மீளாய்வு செய்யும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானது.

அதன்படி இலங்கை தொடர்பான மீளாய்வு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்த்துள்ளன.

அந்தவகையில் ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னிப்புச்சபையின் அறிக்கையில் அமைதிப்போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாடு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அவைகுறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த 2022 பெப்ரவரி மாதம் முதல் இலங்கை மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போராட்டங்களை இராணுவமயப்படுத்தப்பட்ட முறைமையின் ஊடாக அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பதையும், சில போராட்டங்களுக்கு எதிராக எவ்வாறு அநாவசியமானதும் மிகையானதுமான பாதுகாப்புப்படையினர் பயன்படுத்தப்பட்டனர் என்பதையும் நாம் ஆவணப்படுத்தியுள்ளோம்.

இருப்பினும் இச்சம்பவங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தற்போதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இவ்வனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அமைதிப்போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்கும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு இடமளிப்பதற்கும் அதிகாரிகள் தவறியிருக்கின்றார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்தபட்சம் 3 சந்தர்ப்பங்களில் நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டதுடன் உரியவாறான செயன்முறைகள் மற்றும் நீதிமன்ற மேற்பார்வையின்றி நபர்களைக் கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்குமான மட்டுமீறிய அதிகாரங்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அதன்படி அதிகாரிகளால் கடத்தல் பாணியிலான கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் 2022 ஓகஸ்ட் மாதம் போராட்டங்களுக்குத் தலைமைதாங்கிய இரு மாணவத்தலைவர்களைப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைப்பதற்கான உத்தரவு ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படைகளும் அற்றவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் போராட்டங்கள்மீதான அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும், அமைதியான முறையில் ஒன்றகூடுவதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் உத்தரவாதமளித்திருப்பினும், அச்சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், ‘பயங்கரவாதம்’ என்பதற்கான உரிய வரைவிலக்கணம் இன்மை, நீண்டகால தடுப்புக்காவலில் வைக்கப்படல் உள்ளடங்கலாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகள் அத்திருத்தங்களின் ஊடாக நிவர்த்திசெய்யப்படவில்லை.

இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டமானது தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்யப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கும் அதேவேளை, புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

மூன்றாவதாக பிரகீத் எக்னெலிகொட வழக்கு, கடற்படையினரால் 11 பேர் கடத்தப்பட்ட வழக்கு, திருகோணமலை 5 மாணவர்கள் வழக்கு, ஜோசப் பரராஜசிங்கம் வழக்கு, லசந்த விக்ரமதுங்க வழக்கு உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் வழக்கு விசாரணைகள் முடக்கப்படுவது அல்லது தாமதிக்கப்படுவதானது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மேலோங்குவதற்கு வழிவகுக்கும்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளக நீதிப்பொறிமு;றைகள் தற்போது அவசியமற்றவையாக மாறியிருப்பதுடன் அவை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன. எனவே பொறுப்புக்கூறல் சார்ந்த பொறிமுறைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை உண்மையைக் கண்டறியும் புதிய பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துமேயானால், அது நாடளாவிய ரீதியிலான கலந்துரையாடல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் கடன்உதவியை மேலும் நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை

இந்தியாவின் ஒரு பில்லியன்டொலர் கடனை மேலும் சில மாதங்களிற்கு நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் கடனுதவி மார்ச் 17 ம் திகதி முடிவடைகின்ற நிலையில் இலங்கை அதில் மூன்றில் இரண்டை மாத்திரம் பயன்படுத்தியுள்ளது. மருந்துகளிற்கும் உணவுகளிற்கும் மாத்திரம் இலங்கை அதனை பயன்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான நிதி உதவியை வழங்க சர்வதேச நாணயநிதியம் தயாராகிவரும் நிலையில் இலங்கை இந்த வருடத்திற்கான நிதிகளை பெறுவதற்கானமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவை தொடர்பில் பேச்சுவார்த்தைகள்இடம்பெறுகின்றன என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடனில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளநிலையில் இலங்கைஇந்த கடனுதவியை ஆறு முதல் 10 மாதங்களிற்கு நீடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாயினால் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை இன்று (புதன்கிழமை) முதல் குறைக்கப்படும் என செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்படும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டிசம்பருக்குள் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் – அமைச்சர் காஞ்சன

புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடும் ஆட்சேபனைக்கு அமைவாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக காஞ்சன விஜேசேகர கூறினார்.

மின்சார சபையின் இழப்பை ஈடுகட்ட கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் மின்சார உற்பத்தி திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மின்சார சபை ஊழலை குறைக்க ஆலோசனைகளை வழங்குகி உள்ளதாகவும் ஆனால் அதற்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர் என்றும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கட்டணம் வசூலிப்பதால், தொடர்ந்தும் மின்சாரம் வழங்க முடிந்தது என்றும் மின் உற்பத்தி திட்டத்தை செயற்படுத்தினால், ​​டிசம்பருக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் எனகாஞ்சன விஜேசேகர கூறினார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – உலக வங்கி

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவிலேயே உலக வங்கியின் பிரதி தலைவர் மார்ட்டின் ரைசர் இதனைப் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய சீர்திருத்தங்களை செயற்படுத்த தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்கிழமை நள்ளிரவில் எரிபொருள் QR முறை புதுப்பிக்கப்படும்

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR முறை புதுப்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது.

இதற்கிடையில், QR முறை மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் செயல்பட ஏற்பட்டதன் காரணமாக விநியோகச் செலவைக் குறைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடை 10 நாட்களுக்கு நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடையை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (08) நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 10 நாட்களுக்கு பயணத்தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.