உள்ளுராட்சிக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுங்கள்– ஜனா பா.உ

வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு  4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது.  எனவே நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் தேர்தலை  உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு  முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான  கோ.கருணாகரம் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது இன்றைய தினம் சனிக்கிழமை (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பெரும் எதிர்பார்ப்புக்களுடன் நிதி அமைச்சரும் அதிமேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இந்தச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அவையில்  வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதென்பது வினோதமானதொன்றல்ல. அது சம்பிரதாயபூர்வமான நிகழ்வே. இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதும் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் நாட்டின் புத்திஜீவிகளும் அவரவர் பார்வையில் இந்த வரவு செலவுத்திட்டத்தினை விமர்சித்தனர்.
இந்த வரவு செலவுத்திட்டத்தை நான் சார்ந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பார்வையிலும் எமது கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வையிலும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை விமர்சிப்பது நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானது என நினைக்கின்றேன்.
69லட்சம் வாக்குகளை அள்ளிக் கொண்ட ஜனாதிபதியும் 3ல் இரண்டு பெரும்பான்மை பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தம்மை ஆதரித்த மக்களால் அடித்துத் துரத்தும் அளவுக்கும் தமது பதவிகளைத் தாமே இராஜினாமா செய்யும் அளவுக்கும் நாட்டின் நிலைமை சென்றது ஏன். மேதகு ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்ற ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியிருந்தார். சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்லப்படும் இந்த நேரத்தில் இது குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா என்று வினவியதுடன் நாம் தவறிய இடம் எது எனவும் இந்த சபையில் வினா எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்வியினையே நான் கேட்கின்றேன். எங்கே தவறு நடந்து என்பது இன்னமும் உங்களுக்குத் தெரியாதா. எதனால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை இன்னமும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? நாம் தவறிய இடம் எது என்பதை இன்னம் நீங்கள் உணரவில்லையா? ஒரு காலத்தில் இலங்கை நாடு என்றால் உலகம் தலை நிமிர்ந்து நின்று பார்த்த நிலைமை மாறி, இன்று கடன் செலுத்த முடியாத ஒரு நாடு, தனது வங்குரோத்து நிலையை தானே ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நாடு என்ற நிலைமைக்கு செல்வதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் அறிந்தும் அறியாதவர்கள்போல் இருக்கின்றீர்களா?.
இந்த நாட்டின் பொருளாதார வளத்தை அபிவிருத்தி நோக்கித் தள்ளுவதற்குப் பதிலாக கடந்த மூன்று தசாப்த்துக்கும் மேலாக யுத்தம் நோக்கித் தள்ளினீர்கள். இந்த யுத்தம் தந்த விளைவே இன்றைய பொருளாதாரப் பிரச்சினை. இனப்பிரச்சினையே முதற் காரணம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதியை பாதுகாப்புச் செலவீனம் விழுங்கிக் கொண்டது. அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற பிராந்திய வல்லரசுகளின் யுத்தப் பாதீட்டை விட எமது நாட்டின் யுத்தத்துக்கான பாதீடு வானளாவ உயர்ந்து நின்றது. யுத்த காலத்தில் தான் இந்த நிலை என்றால், யுத்தம் மௌனித்து 13 வருடங்களாகியும் யுத்தப் பாதீடு எமது நாட்டின் வருமானத்தின் பெருந்தொகையினை விழுங்கிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புக்காக இன்னமும் இந்தளவு பெருந் தொகையினை ஒதுக்கித்தான் ஆகவேண்டுமா?
நமக்கு எந்த அயல் நாட்டினது அச்சுறுத்தலுள்ளது. எந்த அண்மைய நாடுகளின் அச்சுறுத்தலுள்ளது, உள்நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எங்கிருந்து வருகின்றது. இந்த நிலையில் பாதுகாப்புக்காக பெருந்தொகை நிதியை ஒதுக்கி யாரைத் திருப்திப்படுத்தப் பார்க்கின்றீர்கள்.
பாதுகாப்புச் செலவீனத்துக்கு இவ்வளவு தொகை ஒதுக்கியும் மாற்றுத்திறனாளிகளுக்கான 4000 ரூபா கொடுப்பனவை 2500ஆகக் குறைத்துள்ளீர்கள். ஆனால், மாற்றுத்திறனாளிகளான பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் எவ்விதமாற்றமுமில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை.
இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் மேதகு ஜனாதிபதியவர்கள் இலங்கையின் வரலாற்றைக் கற்;பதற்கு தனியான நிறுவனத்தைத் தாபிப்பது தொடர்பான முன்மொழிவொன்றினை செய்துள்ளார். இதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் பார்வையில் வரலாறு என்பது சிங்களும் பௌத்தமும்தான். வரலாற்று மூலாதாரம் என்பது மகாவம்சம் தான். இந்த மகா வம்சம் மகாநாம தேரரின் கற்பனை என்பதை நீங்கள் இன்னமும் புரியாதது ஏன். முதலில் புரிந்து கொள்ளுங்கள் பௌத்தம் மதம். சிங்களம் மொழி. பௌத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் எந்த விதமான இணைப்பும் தொடர்பும் இல்லை.
பௌத்தம் இலங்கையில் மட்டுமல்ல. தென்னாசியா, தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியுள்ள ஒரு மதம். அந்தந்த நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொழியில் அவர்களுக்கு ஏற்ற வகையில் அதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வழிபடும் மதம். இலங்கையில் கூட தமிழ் பௌத்தம் இருந்துள்ளது. தென்னிந்தியாவில் தமிழ் பௌத்தம் தமிழ்ப் பௌத்தப்பள்ளிகள் இருந்துள்ளன. இதன் விளைவாகவே சீத்தலைசாத்தனார் சீவக சிந்தமணி எனும் தமிழ்ப் பௌத்த காவியத்தைப் படைத்தார். இதே போலவே நாதகுத்தனார் குண்டலகேசி என்னும் பௌத்த தமிழ்க் காவியத்தைப் படைத்தார்.  அமுதசுரபி அட்சய பாத்திரம் தந்த பௌத்த துறவி மணிமேகலை சுத்தத் தமிழிச்சி. பௌத்தத்துக்கும் சிங்களத்துக்கும் தொடர்பு ஏற்பட முன்னர் பௌத்தத்துக்கும் தமிழுக்கும் ஏற்பட்ட தொடர்பும் பிணைப்பும் முந்தியது. பௌத்தம் சிங்களத்துக்குமான தொடர்பு பிந்தியது.
வரிக் கொள்கை தொடர்பான உங்களது உண்மையான நேர்மையான கொள்கை என்ன? நீங்கள் உங்கள் வரவு செலவுத்திட்டத்தில் எடுத்துரைத்தது போல நாட்டு நலனுக்கான வரிக் கொள்கையினை செயற்படுத்துவீர்களா? எமது நாட்டின் கடந்த கால வரிக் கொள்கையினை நோக்கும் போது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கமிசன் கொடுப்பவர்களுக்குமான வரிக்கொள்கையே எமது நாட்டில் இருந்தது.
நாட்டின் வருமானத்தின் முக்கிய மூலாதாரம் வரி வருமானங்கள். நாட்டின் பொருளாதார நிலைமைக்கேற்ப நாட்டின் மக்கள் வாழ்நிலைக்கேற்ப நாட்டு மக்கள் மீது அதிகரித்த சுமையினை ஏற்படுத்தாது வருமானத்தை பெறுவதற்கேற்ப வரி வருமானங்களைப் பெறுவதே அரசாங்கத்தின் வரிக் கொள்கையாக இருக்க வேண்டும். இது நம் நாட்டில் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக நடந்ததா? ஒரேயொரு உதாரணம் சீனி வரி. உங்கள் வரிக் கொள்கை தொடர்பாக சிந்தியுங்கள்
இலங்கை அரசியல் என்றால் அரசியல்வாதிகளென்றால் அதன் ஒருவரி வரைவிலக்கணம் ஊழல், கமிசன், இலஞ்சம் என்பதேயாகும். இது ஒருவரை மட்டுமல்ல ஒரு அரசாங்கத்தை மட்டும் சுட்டி விரல் நீட்ட அல்ல. மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அனைத்து அரசுகளுக்கும் இது பொருந்தும். ஒரே உதாரணம் மத்திய வங்கி ஊழல், சீனிக் கமிசன். இதைவிட மேலும் விபரிக்கத் தேவையில்லை.
உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் அரச சேவை மறுசீரமைப்பு தொடர்பாக கூறியுள்ளீர்கள். அரச சேவையின் சுதந்திரத்தை அரச உத்தியோகத்தர்களின் சுதந்திரத்தை அவர்களது ஆளுமையை முடங்கச் செய்தது யார்? வெள்ளைக்காரன் தந்த சோல்பரி அரசியல் யாப்பில் சுயாதீனமாக இயங்கிய பகிரங்க சேவை ஆணைக்குழு (Pரடிடiஉ ளுநசஎiஉந ஊழஅஅளைளழைn) நீதிச் சேவை ஆணைக்குழு (துரனiஉயைட ஊழஅஅளைளழைn) ஆகியவற்றின் சுதந்திரத்தை முடக்கியது யார். டொமினியன் அந்தஸ்திலிருந்து விடுபடுகிறோம் என்று மார்தட்டி 1972ல் கொண்டு வந்த குடியரசு அரசியல் யாப்பு முதல் இன்று வரை அரசாங்க உத்தியோகத்தர்களின் சுதந்திரமும் கௌரவமும் ஆளுமையும் அரசியல்வாதிகளின் காலடியில் விழுந்துள்ளது.
இந்த நிலைமையை உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மாற்றுமா? அது மாத்திரமல்ல அரச சேவையில் இன விகிதாசாரப் பதவிமுறை நிட்சயம் பேணப்பட வேண்டும். இன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் எத்தனைபேர் தமிழர்கள். வெளிவிவகார சேவையில் எத்தனை பேர் தமிழர்கள். அகில இலங்கை சேவையில் உள்ள உயர் பதவிகளில் எத்தனை பேர் தமிழர்கள். நியதிச் சபைகளின் உயர் பதவிகளில் எத்தனைபேர் தமிழர்கள். கூட்டுத்தாபனங்களின் தலைவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்.
நான் இனவாதம் பேசவில்லை. மொழி வாதம் பேசவில்லை. நீங்கள் அரச சேவை மறுசீரமைப்பு தொடர்பாக முன்மொழிவினைச் செய்துள்ளதனால் இதனைக் கூறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டுள்ளேன். இதற்குக் காரணம் என்ன. எம் தமிழ் நிருவாக உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகளின் காலடியில் கிடக்கத் தயாரில்லை. பதவியிலிருந்தாலும் அரசியல்வாதிகளின் உத்தரவுக்கும் அவர்களின் ஊழல்களுக்கும் ஏற்ப கடமைபுரியத் தயாரில்லை. இதனால் அரச சேவை தனிச்சிங்கள மயமாகியுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு மேதகு ஜனாதிபதியவர்களே உங்களுக்குண்டு.
இதில் பரிகசிக்க வேண்டிய விடயம் மத்திய வங்கி ஆளுனராக நிவாட் கப்றாலை நியமிக்கும் போது ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துடைய மத்திய வங்கி ஆளுனராக நியமித்து அவரை நிதி அமைச்சர் கூட கட்டுப்படுத்த முடியாத தற்துணிவை வழங்கும் அளவுக்கு எமது அரச சேவை இருந்ததை நான் நினைவுறுத்த விருப்புகிறேன்.
கௌரவ நிதி அமைச்சர் வனப்பரம்பல் அதிகரிப்புப் பற்றிக் கூறியுள்ளார். பாராட்டுகிறேன். ஒரு நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு குறிப்பிட்ட விகிதாசார அளவு வனப்பரம்பல் தேவை. ஆனால் நடப்பது என்ன? இந்த நாட்டின் வனவளத்தை, இந்த நாட்டின் நீர் வளத்தை, இந்த நாட்டின் நில வளத்தை அழித்தது இந் நாட்டு மக்களல்ல. அந்தந்த காலத்தில் ஆட்சி செய்த அமைச்சர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரதேச சபை உறுப்பினர்கள் இவற்றை அழித்தார்கள்.
வடகிழக்கின் நீர் வளமோ, நிலவளமோ, வன வளமோ இவர்களால்தான் அழிக்கப்படுகிறது. இதனை நாம் எத்தனை தடவை எடுத்துரைத்தோம். காது கொடுத்துக் கேட்டீர்களா. காலம் கடந்த ஞானம் இது. கனியுமோ எனக்குத் தெரியாது.
பாற்பண்ணை உற்பத்தி தொடர்பாகக் கூறினீர்கள் கிழக்கில் பாற் பண்iணாயளர்களின் பண்ணை வளர்ப்புப் பிரதேசங்களான மயிலத்தமடு, மாதவணை, கந்தர்மல்லிச்சேனை போன்ற பிரதேசத்தை கிழக்கின் ஆளுனர் சிங்களக் குடியேற்றமாக மாற்ற முயற்சித்தார். எங்கள் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை. இப்படியெனில் எப்படி பாலுற்பத்தி அதிகரிக்கும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முக்கியமானது அந்த நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் என்பது மக்கள் ஆணை ஊடாகவேயாகும். இதற்காக மக்கள் தமது விருப்பத்தினை வழங்குவதற்காக உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். வெற்றி பெறுவோமோ தோல்வியடைவோமோ என்ற அச்சத்தில் ஜனநாயகப் பண்பினை மிதித்து சீரழித்து விடக்கூடாது. எமது கௌரவ ஜனாதிபதியவர்களை நான்  ஒரு ஜனநாயக கனவானாகவே இன்றும் மதிக்கின்றேன். அவரது அரசாங்கம் தோல்வியடைந்த போது தனது உத்தியோக பூர்வ மாளிகையிலிருந்து அடுத்த நிமிடம் தனது கையில் தனது ப்பிரீவ் கேசை சுமந்தபடி வெளியேறிய காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், எமது நாட்டில் இதுவரை கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் நடத்தப்படவில்லை.  எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கான முற்றான தீர்வல்லாவிடினும் முதற் புள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட மாகாண சபை ஜனநாயக அடிப்படையில் இயங்க முடியாது ஆளுக்காள் சட்டக்காரணங்களைக்கூறி அவர் மீது இவர் குறை சுமத்தி மாகாண சபைத் தேர்தல் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. எமது ஜனாதிபதி உண்மையிலேயே ஒரு ஜனநாயகக் கனவானாக இருந்தால் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களைவிட மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடத்தி மாகாண சபையினை மக்கள் நிர்வாகமாக மாற்றி அமைத்து ஆளுனரின் அதிமேலான அதிகாரத்திலிருந்து குறைந்தபட்சமேனும் விடுவிக்க வேண்டும்.
பழப்ப தோசமோ கூடிய கூட்ட தோசமோ எமது ஜனாதிபதியவர்கள் தனது ஜனநாயகக் கனவான் என்ற பெயரைக் காப்பாற்றுவாரா?
மேதகு ஜனாதிபதியவர்கள் தமது வரவு செலவுத்திட்ட முன்மொழிவை ஆரம்பிக்கும் போது தனது வரவு செலவுத்திட்டமானது சமூகப் பாதுகாப்பு, திறந்த பொருளாதார முறையான வரவு செலவுத்திட்டம் என எடுத்துரைத்தார். இதற்கு நீங்கள் அளித்த விளக்கம் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் கூறும் சமூகப் பாதுகாப்பு என்ன? இன்றும் கூட நாட்டின் அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு முரணாக பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளது. ஆறு மாதங்களுக்கு மாத்திரமெனக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் 43 வருடங்களாகத் தொடர்கிறது. வட கிழக்கு தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அண்மையில் முஸ்லிம்களைத் தொட்டது. இன்று சிங்கள இளைஞர்களின் மீது பாய்கின்றது.  இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் தேவையா என்பதை உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவான சமூகப் பாதுகாப்பு என்பதன் ஊடாக நான் கேட்கின்றேன்.
எப்போதும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்திப்பவர்கள் தமிழர்கள் அல்ல. சந்தர்ப்பவாதிகளாகச் சிந்திப்பவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. தமிழர்கள் சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை எடுக்க முன்னர் சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை எடுத்துரைத்தவர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் கோரவில்லை.  13 பிளஸ் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் முன்னிலையில் எடுத்துரைத்தவர் மகிந்த ராஜபக்ச அவர்கள்.  இவர்தான் ஈழம் தவிர எல்லாம் தருவேன் என்று தன் சிங்களத் தமிழில் எடுத்துரைத்தவர். ஆனால், இன்றுவரை எதுவுமே நடந்ததில்லை.
அன்று ஒரு அரசாங்கம் தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்க்கட்சி அதனை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும். அன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பிராந்தியங்களின் கூட்டமைப்பு என்ற அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை இன்றைய ஜனாதிபதியவர்கள் பாராளுமன்றத்தில் வைத்து தீக்கரையாக்கினார். ஆனால் இன்று காலம் கனிந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அன்று இனவாதிகளாக பிரகாசித்த சிலர் தவிர அனைவரும் அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஒரு நேர்கோட்டில் வந்துள்ளனர். இது காலம் கடந்த ஞானமோ அவர்களின் மனச்சாட்சி உறுத்தலோ தெரியாது. இந்தச் சந்தர்ப்பத்தினை நாம் தவற விடாது நடந்து கொள்வோமானால் எமது அடுத்த வரவு செலவுத்திட்டம் இந்த நாட்டின் சுபீட்சத்தை நோக்கியதாக அமையக் கூடிய வகையில் அடுத்த நிதி அமைச்சர் இருப்பார் என்பதை இந்த உயரிய சபையில் எடுத்துரைக்கின்றேன்.
ஏனெனில் இன்றைய பொருளாதாரச் சீரழிவுக்கு இனப்பிரச்சினையே அடிப்படை. நீங்கள் ஆணிவேரை அழித்துவிட்டு பக்க வேரில் மரத்தினை வளர்ப்பதற்கு முயலாதீர்கள். முறையான அத்திவாரமின்றி முழுமையான கட்டடத்தை ஆக்க முயலாதீர்கள். இந்த வரவு செலவுத்திட்டத்தினை இவ்வளவு தூரம் சிரமப்பட்டு இவ்வளவு தூரம் மக்களுக்குச் சுமையேற்றித் தயாரித்ததற்குக் காரணம் இனப்பிரச்சினைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எமது நாடு தீர்க்கமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதை நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை. இதற்கு யார் காரணம் என்பதையும் சொல்லத் தேவையில்லை. நாட்டு மக்கள் இதனை அறிவார்கள். அதனால் தான் ஜனநாயகத்துக்குப் புறம்பாக மக்கள் புரட்சி ஒன்று இலங்கை அரசியலில் நடந்துள்ளது. ஆனால்,  நடந்த மக்கள் புரட்சி மூலம் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? மலர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்றால் விடை பூச்சியம். வீதியில் நின்றவர்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளார்கள். வீதியில் இறந்தவர்கள் வீட்டுக்குள் இறக்கின்றார்கள். இதை உங்கள் வெற்றி என்கின்றீர்களா?
எமது மக்கள் எமது நாட்டுக்காக எந்தவிதமான துயரங்களையும் எதிர் நோக்கத் தயார். ஆனால், பொருளாதாரத்தின் நன்மைகள். நாட்டின் வளப்பங்கீடுகள் அனைவருக்கும் சமமாக, நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். இன, மத, மொழி, பால் வேறுபாடின்றி சகலருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாக வேண்டும். இதனை நீங்கள் என்று செய்வீர்கள். இதனை நீங்கள் என்றோ செய்திருந்தால் இன்று எமது நாடு தென்னாசியாவில் மட்டுமல்ல. தென்கிழக்காசியாவில் மட்டுமல்ல. உண்மையிலேயே ஆசியாவின் ஆச்சரியமாக மிளிர்ந்திருக்கும். நீங்கள் நாடு என்று கருதுவது வடக்கை கிழக்கை அல்ல. இன்றும் கூட வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கே நீங்கள் முயற்சிக்கிறீர்கள். வடக்கு மட்டும் தமிழர்களின் தாயகப் பூமியல்ல. வடக்கு கிழக்கு மாகாணமே தமிழர்களின் தாயக பூமி. 1881ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்களை சற்றுக் கவனமாக நோக்குங்கள். வட கிழக்கு தமிழர் தாயகம் சுதந்திரத்தின் பின்னர் எவ்வாறு உங்கள் குடியேற்றங்களாலும் உங்கள் அபிவிருத்தித் திட்டங்களினாலும்  சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள்.
எமது கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு அது ~பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை’ யென்று. அது போல்தான் இந்த வரவு செலவுத்திட்டமும்.
இறுதியாக கடும் நெருக்கடிக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக நாட்டின் பொருளாதார நெருக்கடி கொடுத்த சூழ்நிலையில் பிரதமராகி ஜனாதிபதியாகி நிதியiமைச்சராக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு காலம் கொடுத்த அதிஸ்டம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை உங்கள் காலத்தில் தீர்க்கப்பட்டது என்ற வரலாறு, எமது நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் ஏழுதப்பட வேண்டுமா இல்லை நீங்களும் உங்கள் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை போன்றவர்தானென்று வரலாறு உங்களைத் தூற்றவேண்டுமா, இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத் தரப்பினரையும் எதிர்க்கட்சியினரையும் இணைத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உங்கள் கையில் உள்ளது. இதனை முறையாகப் பயன்படுத்தி இலங்கை வரலாற்றில் நீங்கள் வரலாற்று நாயகனாக உயர்வடைய வேண்டும். இதற்கு உங்களுக்கு அந்தத் தைரியமும் பலமும் கிடைக்க நாங்கள் எமது ஆதரவினை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
இன்று எதிர்க்கட்சியினர் அனைத்துமே இணைந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டால் நீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஒன்றுகூடி பொது அறிக்கை ஒன்றைக் கூட வெளியிட்டிருக்கிறார்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் தெற்குக்கும் மக்களிடையே தங்களுடைய பலத்தைப் பரீட்சித்துப்பார்ப்பதற்கான ஒரு பலப்பரீட்சையாகவே இருக்கும். அடுத்து பாராளுமன்றத் தேர்தலோ, ஜனாதிபதித் தேர்தலோ வந்தால் தங்களுடைய பலத்தை நீரூபிப்பதற்காகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோருகின்றீர்கள். ஆனால், நாங்கள் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழர்களோ நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு  ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு  4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது. எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு  முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும்.

பொலிஸ் திணைக்களத்தில் மக்கள் நம்பிக்கை இழப்பு : மனித உரிமை ஆணைக்குழு

அண்மையகாலங்களில் பொலிஸாரின் சில முறையற்ற நடத்தைகள் மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கு இருக்கின்ற நன்மதிப்பையும் இல்லாமல்செய்திருக்கின்றது என்று பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு மத்தியில் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண் பொலிஸார் இருவரை கழுத்தில் பிடித்துத் தள்ளுகின்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டதுடன், அப்பொலிஸ் அதிகாரியின் நடத்தை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இச்சம்பவம் குறித்தும் அமைதிப்போராட்டத்தை சட்டவிரோதமான முறையில் நிறுத்துவதற்கும், அதில் கலந்துகொண்டோரைக் கைதுசெய்வதற்கும் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி அவ்விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு அவசியமான சில விபரங்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறுகோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

களுத்துறையிலிருந்து ஆரம்பமான அமைதிப்போராட்டம் பாணந்துறையில்வைத்து பாணந்துறை பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்டது. அதனை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இப்போராட்டத்தை இடைநிறுத்தியமைக்கான காரணம், யாருடைய உத்தரவின்பேரில் இடைநிறுத்தப்பட்டது, அந்த உத்தரவை செயற்படுத்தியது யார் என்ற விபரங்களை நீங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டும்.

அதேபோன்று பாணந்துறை பொலிஸ்நிலைய எஸ்.எஸ்.பி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது உரியவாறான உத்தரவுகளைப் பிறப்பித்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பாதுகாப்பதற்கு அவர் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டது.

எனவே பாணந்துறை பொலிஸ்நிலைய எஸ்.எஸ்.பி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தவறியமைக்கான காரணத்தையும் நீங்கள் எமக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

மேலும் பொலிஸ் அதிகாரிகளின் தரப்பிலிருந்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெளிவுபடுத்துங்கள். இவற்றை உறுதிப்பத்திரத்தின் வாயிலாக எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் எம்மிடம் கையளியுங்கள்.

அண்மையகாலங்களில் பொலிஸாரின் சில முறையற்ற நடவடிக்கைகள் ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கு இருக்கின்ற நன்மதிப்பையும் இல்லாமல்செய்திருக்கின்றது.

எனவே பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு உங்களிடம் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம்

இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிக்கும் அவர்  ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை

இவ்வாறான ஓர் பின்னணியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாநகர சபை பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, “எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இருப்பினும், யாழ். மாநகர சபையின் அடுத்த அமர்வு மாவீரர் நாள் முடிந்த பின்பே வரவுள்ளதால் இன்றைய அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பொருத்தமாகயிருக்கும்” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாநகர சபை பிரதி மேயர் ஈசன் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரின் தலைமையில் வியாழக்கிழமை (நவ.17) நிதியமைச்சில் நடைபெற்றது.

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட குழுவினருடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அரச நிதிக் கண்காணிப்பு மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்தல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்தல், இறையாண்மை நிதித்துறையின் தொடர்பு மற்றும் கட்டமைப்பு ரீதியில் இடர் குறைப்பு, வலுசக்தித் துறையின் செயல்திறனை மேம்படுத்தல் மற்றும் காபன் வெளியேற்றத்தைக் குறைத்தல், கொள்கை நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் பொருளாதார போட்டித்தன்மையை அதிகரித்தல், அரச தொழில் முயற்சிகளை மறுசீரமைத்தல், தனியார் மூலதனத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரோட்பேண்ட் சந்தையில் போட்டித் தன்மையை அதிகரித்தல், சமூக பாதுகாப்பு நிறுவனங்களைப் பலப்படுத்தல் மற்றும் விநியோகக் கட்டமைப்பை இலக்காகக் கொள்ளுதல் ஆகிய 8 துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அது குறித்த ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதிக்கு இவ்விடயங்கள் குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

தொலைநோக்குடன் தேசிய இன விடுதலையை அணுகிய நாபாவுக்கு இன்று 71ஆவது பிறந்த தினம்!

தொலைநோக்குடன் தேசிய இன விடுதலையை அணுகிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம் இன்று.

இதனையொட்டி அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபர்களில் ஒருவரும் இறுதித்தருணம்வரை அதன் செயலாளர் நாயகமுமாகத் திகழ்ந்த எமது தோழர் க.பத்மநாபா அவர்கள் தொலைநோக்குடன் தேசிய இன விடுதலையை அணுகியவர். தேசிய இனவிடுதலையுடன் வர்க்கப் புரட்சியையும் இணைக்க வேண்டும் என்று கனவு கண்டார். இலங்கையில் வர்க்கப் புரட்சி வெற்றியடைந்தால் தேசிய இனப்பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும் என்றும் அவர் நம்பினார். அதற்காகவே தென்னிலங்கை ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும், இடதுசாரிக் கட்சிகளுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்தார்.

காடையர்களின் துணையுடன் அரச அனுசரணையுடன் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தொடர்ச்சியான அடக்குமுறைகளும் வன்முறைகளும் தென்னிலங்கையின் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இடதுசாரிக் கட்சிகளையும் தமிழ் மக்கள்மீது அனுதாபம் கொள்ளச் செய்திருந்தன. அடக்குமுறையின் உச்சகட்டமாக நடந்தேறிய 1983 கறுப்பு ஜூலை தேசிய இனவிடுதலையை துரிதப்படுத்தியது. எனவே தேசிய இனவிடுதலையை முன்னெடுத்துக்கொண்டே வர்க்கப்போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தோழர் பத்மநாபாவும் ஏனைய தோழர்களும் எடுத்த முடிவை தமிழ்த் தேசிய இனத்தின்மீது கரிசனை கொண்டிருந்த அன்றைய தென்னிலங்கை அரசியல் சமூகமும் ஏற்றுக்கொண்டன. அதனால் அவர் இலங்கையில் கம்யூனிச ஆட்சியைக் கொண்டுவர முயற்சிக்கிறார் என்று அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசினால் குற்றம் சுமத்தப்பட்டு தேசத்துரோக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

தன்னை பயங்கரவாதியாக சித்தரித்த அரசிற்கு எதிராக துணிச்சலுடன் செங்கோடன், சேரன், ரஞ்சன் என்ற பலபெயர்களுடன் தென்னிலங்கையிலும், மலையகத்திலும் இந்தியாவிலும் புரட்சிக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் அனைத்து சர்வதேச அமைப்புகளுடனும் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்டங்களுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆதரவை வழங்கியதுடன் அவர்களது போராட்டங்களில் இலங்கையிலும் இந்தியாவிலும் பங்கெடுத்துக்கொண்டார்.
நிக்கராகுவா, பாலஸ்தீன விடுதலை இயக்கம், உள்ளிட்ட பல புரட்சிகர அமைப்புகளுடனும் ரஷ்யா, கியூபா போன்ற இடதுசாரி நாடுகளுடனும் கட்சிரீதியான உறவைப் பேணிவந்தார்.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இந்தியாவைப் பகைத்துக்கொண்டு எத்தகைய முன்னேற்றத்தையும் அடைய முடியாது என்பதிலும் இந்துமகா சமுத்திரப் பிராந்தியத்திலும் புவிசார் அரசியலிலும் இந்தியாவின் வகிபாகம் மறுதலிக்க முடியாதது என்பதையும் எமது செயலாளர் நாயகம் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே அன்றைய பனிப்போர் காலகட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பும் தமிழர்களின் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்பதில் உறுதியாக இருந்ததுடன், இந்தியாவின் சிறந்த நண்பராகவும் திகழ்ந்தார். இந்த அடிப்படையில் அவரது தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அன்று ஏற்றுக்கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவான 13ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தின் கீழ் உருவான மாகாணசபை முறைமையையே இன்று முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசிய பரப்பில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் அனைத்து கட்சிகளும் கோருகின்றன.

நாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபையை பொறுப்பேற்றிருந்த வேளையில், இலங்கை அரசாங்கத்துடனும் இந்திய அரசாங்கத்துடனும் மாகாணசபை சட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டே பல்வேறு இன்னல்களின் மத்தியில் அதனை முன்னெடுத்துச் சென்றோம். குறுகிய காலப்பகுதிக்குள் எமக்குக் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு பல அரிய விடயங்களைச் செய்திருந்தோம் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அன்றைய பூகோள அரசியல் நிலைமையைப் போன்றே இன்றும் ஒரு அரசியல் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அன்று நாம் அரசியல் ரீதியிலும் ஆயுத ரீதியிலும் பலம்பெற்றிருந்தோம். இந்தியாவுடன் நட்பு பாராட்டும் சக்திகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்று விரிவடைந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பும் தமிழ் மக்களின் பாதுகாப்பும் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, எமது இன்றைய அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எமது பலம், பலவீனம் என்பவற்றைக் கவனத்தில் கொண்டு, எமது மக்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாக சமஷ்டி தீர்வை அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்த குரலில் கட்சி பேதமின்றி இதயசுத்தியுடன் வலியுறுத்துவதுடன் அதனை அடைவதற்கு அனைவரும் ஓரணியில் திரண்டு ஐக்கியமாகச் செயற்பட்டு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்று எமது செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் எழுபத்தியோராவது பிறந்த தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய வயதில் தேசிய அடையாள அட்டையை பெறாதவர்களுக்கு 2500 ரூபா அபராதம்

ஆட்பதிவு சட்டத்தின் கீழ் சில விடயங்களுக்கான அபராதத் தொகை திருத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 15 வயதை எட்டிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டையை பெறாத விண்ணப்பதாரர்களுக்கு அறவிடப்படும் அபராதத் தொகை 2500 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்கள ரீதியான தாமதம் காரணமாக, முதல் விண்ணப்பத்திற்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தினால் இரண்டாவது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் 250 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

திணைக்கள ரீதியான தாமதம் இல்லாத சந்தர்ப்பங்களில் முதற்தடவையாக தேசிய அடையாள அட்டை பெறாத விண்ணப்பதாரர்களிடம் 2500 ரூபா அறவிடப்படுமென ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் நிறைவடைவதற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களிடம் இருந்து 2500 ரூபா அபராதம் விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மற்றும் பிழையான தகவல்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய குற்றங்களுக்கும் 2500 ரூபா அபராதம் விதிக்கப்படுமென ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கிராமிய அபிவிருத்திக்கு கொரியாவின் உதவி

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கொரியாவின் சைமோல் மன்றம் வழங்கி வரும் உதவிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன  நன்றி தெரிவித்தார்.

சைமோல் மன்றத்தின் தலைவர் லீ சூங் (Lee Seung) மற்றும் மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சைமோல் மன்றம் இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று  (17) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்தனர்.

தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி சியோல் நகரில் இலங்கையர் ஒருவர் உட்பட மேலும் பலரின் உயிரிழப்புக்கும் மற்றும் பலர் காயமடைவதற்கும் காரணமான அனர்த்தம் தொடர்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் நிலைமைகளின் போது கொரிய அரசாங்கம் மற்றும் மக்கள் வழங்கிய உதவிக்காக பிரதமர் அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஊடாக இலங்கையர்களுக்கு வழங்கப்படும் உயர் கல்வி வாய்ப்புகள்/பயிற்சித்நிகழ்ச்சித்திட்டங்களையும் பெரிதும் பாராட்டினார். இலங்கையர்களின் திறன் விருத்தி மற்றும் பயிற்சி வாய்ப்புகளுக்காக வழங்கப்படும் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும், தொடர்ந்தும் வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் பரிசீலிக்குமாறும் அவர் தூதுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

சைமோல் கருத்திட்டம் ஒரு சமூக அபிவிருத்தித் திட்டம் என்றும், விவசாய உற்பத்தி, வீட்டு வருமானம், கிராமிய வாழ்க்கை, மக்களை வலுவூட்டுதல் மற்றும் பெண்களின் பங்கேற்பு மூலம் கிராமிய சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு பங்களிப்பதாகவும் திரு. லீ சூங் தெரிவித்தார். சைமோல் மன்றம் சப்ரகமுவ மாகாண சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன், எஹெலியகொட பஹலகம கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ரம்புக்கன பிடியேகம கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. திருகோணமலை மற்றும் நுவரெலியாவிலும் விரைவில் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சைமோல் மன்றத்தின் தலைவர், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளுக்கான திறன் விருத்தித் திட்டங்களுக்கு உதவுமாறு பிரதமர் விடுத்த கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, கொரியா நாட்டின் தூதுவர் வூன்ஜின் ஜியோங், தூதுக் குழுவின் பிரதித் தலைவர் லிம் மியோங், சைமோல் மன்றத்தின் இலங்கை அலுவலக பணிப்பாளர் சோய் சுங் வூ, அதன் பணிப்பாளர் குவோன் லூங்மின், உதவிப் பணிப்பாளர்களான வென்போ கியோங் மற்றும் கிம் போமின் ஆகியோர் பங்குபற்றினர்.

Posted in Uncategorized

வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் உள்ளன – அலி சப்ரி

2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு சேவைக்கு நாற்பது பேர் கொண்ட குழுவை யூலை முதல் ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் (10) அதன் தலைவர் அமைச்சர்  அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது. இதன்போது வெளிநாட்டு சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளவர்களின் தரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையை வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதரகங்களின் நுழைவாயில்களுக்கு அருகில் உள்ள நடைபாதைகளில் பல இலங்கையர்கள் காலை முதல் நண்பல் வரை நீண்ட வரிசையில் நிற்பது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இது சிறந்ததொரு நிலைமை அல்ல என்றும், இதனைத் தவிர்ப்பதற்கு
முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சின் நாளாந்த செயற்பாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியிருப்பதுடன், இதுபோன்ற சர்வதேசத்தின் அக்கறைகளை உள்நாட்டில் முகங்கொடுப்பதற்கான வழிகளை ஆராய்வதில் வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் இங்கு விளக்கமளித்தார்.
கடன் மீள்கட்டமைப்புச் செயற்பாடு தொடர்பில் பல்வேறு சர்வதேச நாடுகளுடன்
ஒருங்கிணைந்த அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பெண்கள், பாலின சமத்துவம் குறித்த தனி நிறுவனம் அவசியம்

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலப்படுத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்படும் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பன இணைந்து பாலின சமத்துவும் மற்றும் பெண்களின் உரிமைக்காகத் தயாரித்துவரும் இந்தச் சட்டமூலத்தின் ஆரம்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பில் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கு பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த தனியான நிறுவனமொன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட திட்டங்களை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழியளித்தார். அத்துடன் சட்ட மற்றும் கொள்கைகளைத் தயாரிக்கும்போது சகல நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குத் தேவைப்படும் ஊழியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி அவசியமாகவிருந்தால், தூதரகங்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள், பாலின சமத்துவம் குறித்த தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்துக்கு வருகை தந்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார். அத்துடன், சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவும் தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார்.

பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்துக்கான தனியான
ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் உட்பட ஏனைய தேர்தல்களிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், மாகாணசபைத் தேர்தலில் தற்போதுள்ள பெண்களுக்கான 25% இட ஒதுக்கீட்டை குறைக்க வேண்டாம் என உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன், அவ்வாறான எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றும் ஜனாதிபதி பதிலளித்தார்.

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குக் காணப்படும் வெற்றிடங்களைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், பொலிஸ் நிலையங்களில் பெண்களின் முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் போது அவர்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்குச் செல்வதைத் தடுப்பது, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்த விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அதுகோரல, ரஜிகா விக்ரமசிங்ஹ, மஞ்சுளா திசாநாயக, முதிதா பிரசாந்தி, கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்திருந்தனர்