பேராயர் மல்கம் ரஞ்சித் , எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனு

கெரவலப்பிட்டிய யுகதனவி அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்காவின் நியூ ஃபோட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்குவதை ஆட்சேபித்தும் குறித்த நிறுவனத்திடம் திரவ வாயு விநியோக ஒப்பந்தம் வழங்கப்படுவதை தடுக்கும் வகையிலும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை, அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 54 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் வரிசையில் அமெரிக்காவின் நியூ ஃபோட்ரஸ் நிறுவனமும் அடங்குகின்றது.

வழக்கறிஞர் மஞ்சுள பாலசூரிய மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், நியூ போட்ரஸ் நிறுவனம், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவது தங்களது மற்றும் நாட்டு மக்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதார்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த ஒப்பந்தம் தொடர்பாக செப்டம்பர் 6 ஆம் திகதி அமைச்சரவையில் எட்டப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை யுகதனவி மின்நிலையத்தில் உள்ள பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமாறும் கோரியுள்ளனர்.

சட்ட திருத்தத்தின் பின் விரைவில் மாகாண சபை தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு

சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால், அதற்காக நீண்ட காலத்தை செலவழிக்க நேரிடுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயத்தின் பின்னர், பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று புதிய முறைமையை திட்டமிட வேண்டியேற்படுவதால் இந்த நிலைமை உருவாகுமென அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டின் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு முழுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் திட்டமிடப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விகிதாசார முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக கிட்டத்தட்ட 4,000 மில்லியன் ரூபா நிதி செலவாகுமென அவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதுகாப்பு முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்காக செலவிடப்படும் நிதி அதிகரிக்கலாம் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் முறைமை தொடர்பில் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற செயற்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவெல் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவெல்  இன்று (18) காலமானார்.

84 வயதான கொலின் பவெல், கொவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், கொலின் பவெலுக்கு சிகிச்சையளித்த மருத்துவத்துறை ஊழியர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அமெரிக்காவின் முன்னிலை அரசியல்வாதிகள் பலருக்கு நம்பிக்கைக்குரிய இராணுவ ஆலோசகராக கொலின் பவெல் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி – மறவன்புலவு சச்சிதானந்தன்

வடகடல் என்கின்ற பாக்குநீரிணை. தென்கடல் என்கின்ற மன்னார் வளைகுடா. 

இரண்டையும் சரிசமமாகக் கிழித்துக்கொண்டு நடுவே ஓடுவதே கற்பனையான இலங்கை இந்திய அனைத்துலக எல்லைக்கோடு. 1976உக்கு முன்னர் இத்தைகைய எல்லைக் கோடு இருந்ததே இல்லை.

தமிழக மீனவர்கள் வடகடலில் எல்லைக் கோட்டைத் தாண்டி வருகிறார்கள். உலகில் இல்லாத வியப்பு நிகழ்வா? 

உலகெங்கும் பல்வேறு இடங்களில் இத்தகைய உள்ளகக் கடல்கள் உள்ளன. அவற்றை ஊடறுத்துச் செல்லும் அனைத்துலக எல்லைக் கோடுகளும் உள்ளன.

இத்தகைய உள்ளகக் கடல் எல்லைகள் அனைத்துலக உடன்பாடுகளுள் அடங்கா. சிறப்பாகச் சில ஆண்டுகளுக்கு முந்தைய கராக்காசு (Caracas Law of the Sea Conference) அனைத்துலக கடல்வள உடன்பாட்டுள் வடகடல் அடங்காது. தென் கடலின் தெற்குப்பகுதி வரக்கூடும்.

இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது வழமை.

இந்திய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ள குமரிப் பரப்பில் (Wadge bank) இலங்கை மீனவர்கள் வளங்களை அள்ளுவதைப் பார்த்துக் கொண்டு தமிழகக் குமரி மாவட்ட மீனவர்கள் கண்டும் காணாது விடுகிறார்கள்.

திருகோணமலையில் நங்கூரமிட்டு பல நாள்,மீன் பிடி வள்ள (multi day fishing vessels) மீனவர் கிழக்கே அந்தமான் தீவுகள் தொடக்கம் மேற்கே விசாகப்பட்டினம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். என்றாலும் இந்தியக் கடலோர காவல்படை கண்டு கொள்வதே இல்லை.

தென் கடலில் தூத்துக்குடி வரை கற்பிட்டி மீனவர்கள் சென்றுவருவது வழமை. எப்போதோ ஒருமுறை இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தளையிட்டு மதுரையில் நீதிமன்றம் முன்பு நிறுத்தம். 

தனுக்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே 22 கிலோ மீட்டர் தொலைவு. எந்திர வள்ளம் ஒன்றை முடுக்கிய அரை மணி நேரத்தில் தலைமன்னார் மீனவர் தனுஷ்கோடிக் கடலுள் சென்று விடுவார். தனுக்கோடி மீனவர் தலைமன்னார்க் கடலுள் சென்று விடுவார்.  மாதகல் – கோடிக்கரைக் கடல் தொலைவும் அத்தகையதே.

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீனவர் எல்லை தாண்டி வந்ததாலேயே, உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்கள் வந்ததாலேயே, போராட்டமே தொடர்ந்தது. போராட்ட காலத்தில் வடக்கின் மீது திணித்த பொருளாதாரத் தடைகளை முறியடிக்க உதவியவர் தமிழக மீனவரே. 

நல்லாட்சிக் காலத்தில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கடுமையாக தண்டிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமந்திரன்  21 ஏப்பிரல் 2015இல் முன்மொழிந்திருந்தார். Indian trawlers have continued to enter Sri Lankan waters and exploit our resources. …………..Foreign fishermen fishing in our water has caused great distress to our fishermen especially those living in the north”, M.A. Sumanthiran stated regarding the issue…………….. The offender will be sentenced to a two-year prison term and will have to pay a fine of Rs. 50,000.” இரண்டாவது வாசிப்பு வரை அச்சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்தது.

அந்த சட்ட மூல வரிகளைப் படித்ததும் நான் அதிர்ந்தேன. தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் தொப்புள்கொடி உறவுகளைக்கு அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டமூலத்தைக் கொண்டு வருகிறாரே என நான் வருந்தினேன்.

என் அருமைத் தம்பி சித்தார்த்தனிடம் சொன்னேன். சுமந்திரனைக் கட்டுப்படுத்த முடியாதே எனச் சித்தார்த்தன் என்னிடம் சொன்னார்.

என் அருமைத் தம்பி மாவை சேனாதிராசாவிடம் சொன்னேன்  அவ்வாறான ஒரு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்ததா என மாவை சேனாதிராசா என்னிடம் கேட்டார். நான் சட்ட மூலத்தின் வரிகளைக் காட்டினேன். தமிழரின் அரசியல் எதிர்காலத்துக்குத் தீங்காக அமையுமே என்றேன். 

மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுத்தார் போலும்! நாடாளுமன்றத்தில் பின்னர் அச்சட்டமூலத்தைச் சுமந்திரன் முன்னெடுக்கவில்லை

அதே சட்டமூலத்தைப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்கினார். 

எல்லை தாண்டும் இந்திய மீனவரைச் சுட்டுக் கொல்வோம் என்றார், தமிழரசின் ஆதரவுடன் நல்லாட்சியாளர் பிரதமர் இரணில். 

அச்சட்டத்தையே அமைச்சர் இடக்ளசு தேவானந்தா கைவிட்டுள்ளார் எனச் சுமந்திரன் முறையிடுகிறார்.

எந்த மீனவர் எம்மைக் காத்தார்களோ, எந்த நாடு எம்மவர் மூன்று இலட்சம் பேருக்குப் புகலிடம் கொடுத்துள்ளதோ, அந்த மீனவருக்கு அந்த நாட்டுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் தமிழரசுக் கட்சி! 

எந்த முகத்தோடு பாரதம் இலங்கைத் தமிழருக்கு உதவவேண்டும் எனத் தமிழரசுக் கட்சியினர் இந்தியாவைக் கேட்பார்கள்? இந்தியாவைச் சீண்டியவாறே, இந்தியாவிடம் அரசியல் ஆதரவு கேட்கிறதே தமிழரசுக் கட்சி.

சுமந்திரனை அறிவோம். இந்தியாவுக்கு எதிரானவர் என்பதை அறிவோம். தில்லியில் என்னிடமும் மட்டக்களப்பு யோகேசுவரனிடமும் கூறியவர் தமிழரல்லாத பாரதீய சனதாக் கட்சி மேலிடத்தார்.

சுமந்திரனை ஏன் இன்னமும் வைத்திருக்கிரீற்கள்? தமிழரசுக் கட்சி சார்பில் சென்னையில் தமிழக பாரதீய சனதாக் கட்சியைச் சந்தித்த சத்தியலிங்கத்திடமும் குகதாசனிடமும் கேட்டோர், தமிழக பாரதீய சனதாக் கட்சித் தலைவர்கள்.

மாவை சேனாதிராசாவையும் சிறீதரனையும் சாணக்கியனையும் அந்தப் பட்டியலில் இந்திய அரசியல்வாதிகளும் ஆட்சியாளரும் இன்று முதலாகச் சேர்த்துக் கொள்வர். முதுகில் குத்துவதும் அதே நேரத்தில் ஆதரவு கேட்பதும் ஈழத் தமிழரின் இயல்பு என இந்திய அரசியலாரும் ஆட்சியாளரும் என்னிடம் பலமுறை கூறுவர். 

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள்: மைத்ரி

மாகாண சபை தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாது உடனடியாக நடாத்த வேண்டும் என அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அவர், மக்கள் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்து வருவதாகவும் இதற்கான உடனடி தீர்வு இருப்பதாக தாம் நம்பவில்லையெனவும் தெரிவிக்கிறார்.

ஆட்சியின் பங்காளிகளாக இருக்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அக்கட்சியினர் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றமையும் தாம் தனித்தே போட்டியிடப் போவதாக தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பண்டோரா பேப்பர்ஸ் ; இலங்கை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஓர் வாய்ப்பு

ஊழலின் பாதகமான விளைவுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது இம்மாத தொடக்கத்தில் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்க்கிறது.

கடல் கடந்த நிறுவனங்கள் எவ்வாறு ஊழலை ஊக்குவிக்கிறது என்பதையும், இறுதி நன்மை பெறும் உரிமையாளர்களின் பதிவேடுகளை வெளிப்படையாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் நிரூபிக்கின்ற வகையில் தெளிவான ஆதாரங்களை பண்டோரா பேப்பர்ஸ் வழங்குகிறது. குறிப்பாக இலங்கையின் முன்னாள் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பிரதி அமைச்சரான நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் கடல் கடந்த பெறுமதிமிக்க பரவலான சொத்துக்களை இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பகிரங்கப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் TISL நிறுவனம் தனது ஆரம்ப அறிக்கையில் குறிப்பிடுகையில், பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உரிய அதிகாரசபைகளிடம் கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பண்டோரா பேப்பர்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலான விசாரணையினை ஆரம்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

பண்டோரா பேப்பர்ஸ் பகிரங்கப்படுத்திய விடயங்கள் தொடர்பில் TISL நிறுவனமானது தனது ஆரம்ப அறிக்கையினை தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) அடையாளம் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் மற்றும் அவரது கணவரின் விபரிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பில் ஓர் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு 2021 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியன்று TISL நிறுவனமானது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது. இந்த பகிரங்கப்படுத்தலின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகள் இலஞ்ச ஒழிப்புச் சட்டம் 23A, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டப் பிரிவு 4(1) (CIABOC Act) மற்றும் சொத்துக்கள், பொறுப்புகள் பிரகடன சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாக இருக்கலாம் என்பதை குறிப்பிட்ட TISL நிறுவனம், நிருபமா ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் அவரது சொத்துக்கள், பொறுப்புக்கள் பிரகடனங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கையினை முன் வைத்தது. மேலும், நாட்டின் பொது நிதியானது பாதுகாப்பான வெளிநாட்டு புகலிடங்களில் மோசடி மற்றும் தூய்தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் TISL கோரியது.

ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியன்று, TISL நிறுவனத்தினால் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு (FIU) எழுதப்பட்ட கடிதத்தில், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது கணவர் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பண தூய்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணையினை நடாத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான சட்ட அமுலாக்க அதிகார நிறுவனங்களை ஒருங்கிணைக்குமாறு கோரிக்கை விடுத்தது. 2006 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நிதி பரிமாற்றல் அறிக்கையிடல் சட்ட ஏற்பாடுகளின் (FTRA) அடிப்படையில் நிறுவப்பட்ட மத்திய சுயாதீன அமைப்பான நிதி புலனாய்வுப் பிரிவு (FIU) ஆனது பண தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், விசாரித்தல் மற்றும் வழக்கு தொடர்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்ககளுடன் தொடர்புகளை மேற்கொண்டு இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற குறித்த இரண்டு நபர்களுடனும் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய அதிகாரசபைகளுக்கு தேவையான ஆதாரங்களை வழங்க மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு FIU விற்கு குறித்த கடிதத்தினூடாக TISL கேட்டுக்கொண்டது.

நிருபமா ராஜபக்சவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை கோரி தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முறையே தேர்தல் வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சர் என்ற ரீதியில் TISL நிறுவனமானது மூன்று தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பங்களையும் தாக்கல் செய்தது.

1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் உள்ளடங்கலான சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும். குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பண்டோரா பேப்பரில் பகிரங்கப்படுத்திய கடல் கடந்த சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்தை மீறிய குற்றத்திற்காக குற்றவாளியாகக் கருதப்படுவார். எனவே, பண்டோரா பேப்பர்ஸ் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட சொத்துக்களானது குறித்த பிரதி அமைச்சர், அவரது வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளின் கடல் கடந்த சொத்துக்கள் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்பட்டதா என்பதை அடையாளம் காண அவரது சொத்துக்கள் தொடர்பான பிரகடனமானது ஓர் முக்கிய விடயமாகும்.

இந்த விவகாரம் குறித்து TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா கூறுகையில், “பண்டோரா பேப்பர்ஸ் பகிரங்கப்படுத்தியவைகள் குறித்து சுயாதீன விசாரணையினை மேற்கொள்ள நாட்டின் உரிய அதிகாரசபைகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். எந்தவொரு குறுக்கீடு, தடைகள் அல்லது தாமதங்கள் இன்றி உரிய செயல்முறை பின்பற்றப்படுவது முக்கியமாகும். அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) வரும்போது, அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்களுடன் தொடர்புடைய சொத்துக்களை வெளிப்படுத்தினால், குற்றச்சாட்டுகளிலிருந்து தமது பெயர்களை நீக்கிக் கொள்ள எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது. ஒரு கடுமையான மற்றும் நடுநிலையான விசாரணையை நடத்துவது நாட்டின் சட்ட அமுலாக்க நிறுவனங்களின் மீது பொதுமக்களின் நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்தும் என்பதோடு வெள்ளை காலர் (white collar) குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு வலுவான எச்சரிக்கையாகவும் அமையும்.

” TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா மேலும் கூறுகையில், “சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயம் நாட்டிலிருந்து இரகசிய அதிகார எல்லைக்குள் செல்வதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதுடன் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களும் இவற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையில் இலங்கை போன்ற நாடுகள் இந்த பிரச்சினையை இராஜதந்திர மட்டத்திற்கு கொண்டு வருவது அவசியமாவதுடன், குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற இடங்களிலிருந்து சொத்துக்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.” எனக் குறிப்பிட்டார்.”

Posted in Uncategorized

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? எதிரணி எம்.பி வெளியிட்ட தகவல்

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  தொடர்ந்தும் உர பிரச்சினையை தீர்க்க தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, பிரதான எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கத் தவறியமை பாரிய அநீதியான ஒன்றெனவும் அவர் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

”இலங்கை இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, உரப் பிரச்சனை. இதனால் நெற் செய்கை மாத்திரமல்லாமல் அனைத்து விவசாயம் சார்ந்த செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவில்லை, தமது செய்கைக்கு போதுமான உரம் வழங்க வேண்டும் எனறே கோருகின்றனர்.

விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய அதிகமான காலஅவகாசம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால், விவசாயிகளின் இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும்.

அத்துடன் விவசாய அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான எதிர்கால நடவடிக்கையை தீர்மானிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி ஆராயும்.

நம்பிக்கையில்லா பிரேரணையை தாக்கல் செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்ப கட்சி முயற்சிக்கும் என திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

Posted in Uncategorized

அரசாங்கத்தை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் அமைச்சர் -வெளிவந்த தகவல்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவால் அரசாங்கம் மீண்டும் சிரமத்திற்குள்ளாவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க  இம்முறை இந்த நெருக்கடிக்கு முகம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, கொவிட் நெருக்கடி அதிகரித்தபோது, ​​பிலியந்தல நகரம் முடக்கப்பட்டது. எனினும் அமைச்சர் லொக்குகே தலையிட்டு 24 மணி நேரத்திற்குள் முடக்கலை நீக்கினார். அந்த நேரத்தில், சுகாதார அதிகாரிகளுக்கும் அமைச்சர் லொக்குகேவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

அதன் பின்னர், கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்குமார, அமைச்சர் காமினி லொக்குகே பாதுக்கா காவல் நிலையத்தின் ஓஐசியை நியமிப்பதில் தேவையற்ற அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். இருதரப்புக்கும் இடையிலான மோதல்கள் பல வாரங்கள் நீடித்தது மற்றும் இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தலைவர்களும் தலையிட வேண்டியிருந்தது.

இந்த முறை வனஜீவராசிகள் துறைக்கு சொந்தமான பிலியந்தலை பகுதியில் 72 ஏக்கர் நிலம் தொடர்பாக அமைச்சர் லொக்குகே மற்றும் இராஜாங்கஅமைச்சர் விமலவீர திசாநாயக்க இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பொது அறங்காவலர் துறையின் கீழ் இருந்த இந்த நிலம் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வனஜீவராசிகள் துறைக்கு மாற்றப்பட்டது. அந்த நிலத்தில் கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை தீவனத் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமைச்சர் காமினி லொக்குகே இப்பகுதியில் ஒரு வெளிப்புற மிருகக்காட்சிசாலையைத் திறக்க திட்டமிட்டுள்ளார். அங்கு ஒரு வெளிப்புற மிருகக்காட்சிசாலை கட்டப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளார், லொக்குகேயின் நடவடிக்கைகளால் அரசாங்கம் மீண்டும் ஒரு பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் ஆனால் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மிருகக்காட்சிசாலையின் தொழிலாளர்கள் ஏற்கனவே தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் மற்றும் தெஹிவளை உயிரியல் பூங்காவிற்கு அருகில் மற்றொரு மிருகக்காட்சிசாலையை கட்டுவது பயனற்றது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் நடவடிக்கைகளுக்காக தற்போது தயாரிக்கப்பட்ட திட்டங்களின்படி தொடர்புடைய நிலத்தைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்றும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிருபமா ராஜபக்ஷவின் சொத்துவிபரங்களை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் கோரிக்கை!

பண்டேரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு 3 தகவல் அறியும் உரிமை விண்ணப்பப்படிவங்களைத் தாக்கல் செய்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கே இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் உள்ளடங்கலான சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்விடயத்தில் பணத்தூயதாக்கல் இடம்பெற்றிருக்கக்கூடுமா என்பது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நிதிக்குற்றவிசாரணைப்பிரிவிற்கும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எனது அரசியல் வாழ்வின் சோக நிகழ்வு – மைத்திரிபால சிறிசேன

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறுதினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் சோகமான நிகழ்வாக உள்ளது என்று  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று (17) காலை இடம்பெற்ற நிகழ்சியின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் என்பது சிக்கலான விடயம், அது பற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர்,  மாவட்ட நீதிமன்றங்கள் உட்பட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சுமார் 20 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, கத்தோலிக்க சமூகத்தின் மீது, தான், மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருப்பதாகவும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உர விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் இரசாயன உர இறக்குமதியை நிறுத்த தீர்மானித்த போது, ​​அதன் எதிர்கால விளைவுகள் குறித்து ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துக்கு பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள் இப்போது ஆதரவற்றவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Posted in Uncategorized