யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவை மீள ஆரம்பம்

இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை சனிக்கிழமை (01) ஆரம்பமாகியுள்ளது என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும், இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்களுக்கு காலை வேளைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறினார்.

12 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய செஸ்னா 208 என்ற விமானமே இந்தப் பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.

ஒரு வழிக்கட்டணமாக ரூ.22 ஆயிரம் ரூபாவும் இருவழிக்கட்டணமாக ரூ.41,500 அறவிடப்படும். இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்மூலம், யாழ்ப்பாணம் சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும் எனவும் இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.

ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கம் விரைவில் தோற்றுவிக்கப்படும் – நாமல் உறுதி

பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்கள் தொடர்பில் நல்லதொரு நிலைப்பாடு காணப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த அரசாங்கத்தையே மஹிந்த ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவது குறித்து அவதானம் செலுத்தாம் ராஜபக்ஷர்களை பழிவாங்குவது குறித்து அவதானம் செலுத்தியது.ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.ஆனால் சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.

ராஜபக்ஷர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.வெளிநாடுகளில் சொத்துக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

அரசியல் பிரசாரத்துக்காகவே ராஜபக்ஷர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.2019ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.ஒரு தரப்பினரது தவறான ஆலோனைகளினால் அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பலவீனமடைந்தது.

பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியை தோற்றுவித்தது.பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.அரசியல் ரீதியில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் கட்சி என்ற ரீதியில் சிறந்த முறையில் போட்டியிடுவோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என்றார்

வடக்கு, கிழக்கில் விகாரைகளின் மேலேயே பழைய சைவக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன – எல்லாவல மேதானந்த தேரர்

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இலங்கை தமிழர்களின் பண்டைய தாயகமல்ல. அப்படி யாராவது சொன்னால் அவர்களுக்கு பதிலளிக்க நான் தயார். வடக்கு கிழக்கில் கட்டப்பட்டுள்ள பழைய கோயில்கள், புராதன விகாரைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளது என பெரும் “புரட்டு“ விட்டுள்ளார் எல்லாவல மேதானந்த தேரர்.

தென்னிலங்கை தரப்பினர் அவரை தொல்லியல் சக்ரவர்த்தி என விளிப்பதுண்டு. எனினும், தொல்லியல்துறையில் அவர் ஒரு கல்வியியலாளர் அல்ல. அவர் தமிழர்களின் வரலாறு தொடர்பில் இனவாத அடிப்படையில்- தவறான கருத்துக்களையே முன்வைப்பதுண்டு. அவ்வாறே தற்போதும் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணம் கந்தரோடையில் மட்டும் 50 ஸ்தூபிகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. விகாரை தளத்தில் காணப்படும் கல்வெட்டுகளில், அதனை நாக விகாரை என குறிப்பிடுகிறது.

வடக்கில் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் மூலம், கடந்த காலங்களில் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பொலன்னறு ராஜதானியை ஆண்ட முதலாம் மகா பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறை துறைமுகத்தின் ஊாக இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் சரக்கு வர்த்தகம் நடந்தது கல்வெட்டுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தென்னிந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கை காரணமாக துறைமுக விதிகள் குறித்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டது. அந்த கல்வெட்டு தற்போது நாகபூசணி அம்மன் கோயிலில் உள்ளன. தொல்லியல் திணைக்களத்திற்கு இது பற்றி பல தடவைகள் தெரிவித்தும் பலனில்லை.

கல்வெட்டின் இறுதியில் சமஸ்கிருதத்தில் ‘மஹா பராக்கிரமபாகு சகல சிங்களச் சக்கரவர்த்தி’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் நாங்கள் வியந்து போனோம்.

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இலங்கையில் தமிழர் தாயகம் இல்லை. அப்படி நிருபிக்க யாரேனும் இருந்தால் நான் பதில் சொல்ல தயார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான பழைய கோயில்கள் பண்டைய பௌத்த தலங்களில் கட்டப்பட்டுள்ளன. வவுனியா, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கோயில் கட்டப்பட்டிருந்தால் அது பழமையான பௌத்த விகாரையாகும். இது என் கண்ணால் பார்த்த ஒன்று.

சில பண்டைய பௌத்த புனித ஸ்தலங்களிலிருந்து கலைப்பொருட்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு தாந்தாமலை பௌத்த தளத்தில் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புளுகுணாவ புத்த விகாரையில் இருந்து ஒரு கல் இருக்கை அந்த கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

முல்லைத்தீவு குருந்தூர்மலை பௌத்த விகாரைக்கு ஆறு முறை சென்றிருக்கிறேன். 1964 இல் முதன்முதலில் இந்த இடத்திற்குச் சென்றேன். அந்தப் பகுதியில் ஒரே ஒரு தமிழன் வாழ்ந்தான். குருந்தூர் மலை இடிபாடுகளை நமக்குக் காட்டியவர் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்தவர்.

குருற்தூர்மலை தொல்லியல் தளத்திற்கு முதல்முறை சென்றபோது, ​​ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கல்வெட்டு அழிக்கப்பட்டது. குருந்தூர் மலை விகாரையின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க மூன்றாம் மிஹிந்து மன்னர் வந்ததாக அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கல்வெட்டில் அந்தப் பகுதி குறுங்காமம் என்று அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த கிராமத்தில் ஒரு சிறிய ஏரி உருவாக்கப்பட்டது. கல்வெட்டின் படி ஏரியின் பெயர் குருந்த வாபி. அந்த ஏரி தற்போது தண்ணிமுறுப்பு ஏரி என அழைக்கப்படுகிறது. பின்னர் தமிழ் கிராமங்கள் தோன்றியதன் மூலம் மக்கள் தண்ணிமுறுப்பு ஏரியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பௌத்த புனித தளத்திற்கு உரிமை கோர வரவில்லை. இடிபாடுகள் சேதமடையவில்லை. சமீபகாலமாகத்தான் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். சாதாரண தமிழ் மக்கள் உரிமை கோரவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அடியாட்கள். வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தப்படும் அரசியல் நாடகங்கள் அவை என்றார்.

சர்வதேச சுயாதீன குற்றவியல் நீதி பொறிமுறையை அமைக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை அண்ணாமலையிடம் கோரிக்கை

உள்ளூராட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய இடைக்கால ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா தமிழர் பேரவை இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் கூட்டாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு நீண்ட கால அரசியல் தீர்வு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலையிடத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்திலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணத்தில், இலங்கை அரசாங்கம் சர்வதேச நியமங்களை அலட்சியப்படுத்துவதையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இணங்காத தன்மையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதால் இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சிய அரசாங்கங்கள் அமெரிக்காவுடன் இணைந்து நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகள், பேச்சுவார்த்தை மூலம் நீண்ட கால அரசியல் தீர்வு உட்பட பல சட்ட ரீதியான தீர்வுகளை மேற்கொள்ள முன்முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இலங்கை தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியின் மையமாக இருக்க வேண்டும்.

14 ஆண்டுகளுக்குப் பிறகும் தாய்மார்கள்,  மனைவிகள் மற்றும் குழந்தைகள் தங்கள் காணாமல் போன உறவினரின் கதி என்னவென்று தெரியாமல் தங்கள் மகன், மகள், கணவன், தந்தை அல்லது தாயை தேடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய நீதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும், நீதி வழங்குவதற்கும், மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு சர்வதேச சுயாதீன குற்றவியல் நீதி பொறிமுறையை அமைக்க வேண்டும்.

இடைக்கால நடவடிக்கையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் 1948ஆம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் அபிவிருத்தி செய்யப்படவில்லை. தற்போது உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், உள்கட்டமைப்பை புனரமைக்கவும் போதுமான சட்ட, நீதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய இடைக்கால ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த விடயத்தில், 1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இலங்கையில் இனப்பிரச்சினைக்கான பரிகாரமாக இந்திய ஒன்றியத்தில் காணப்படுவதை போன்றதொரு பிராந்திய சுயாட்சி அல்லது அரை கூட்டாட்சி மாதிரியை முன்வைத்தது. அந்த மாதிரியின் உள்நோக்கமும் நோக்கமும் இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த மாகாண சபை சட்டமூலங்களில் மிகவும் நீர்த்துப்போனது.

சட்டமூலத்தில் உள்ள அற்ப அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு முழுமையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. நிறைவேற்று அதிகாரங்கள் தெரிவு செய்யப்பட்ட சபைக்கு வழங்கப்படாமல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்கப்படுகின்றன. கவுன்சிலுக்கு நிதி அதிகாரங்கள் எதுவும் இல்லை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தற்போதைய காலகட்டத்தில் மேற்படி மாதிரியானது தேவைக்கு பொருந்தாது என்பதால் இது சரியான முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நீண்ட கால அரசியல் தீர்வாக இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் கூட்டாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு நீண்ட கால அரசியல் தீர்வு, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் நடுவர் மன்றத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட  காலக்கெடுவுக்குள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், பொருளாதார ஒருங்கிணைப்புக்காக தமிழ்நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பு, வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையகத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பு துரித கதியில் நடைபெற வேண்டும். யாழ்ப்பாண விமான நிலையத்தை உண்மையான சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் தற்போதைய இணைப்புத் திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமான சேவைகளுடன் இணைக்கப்பட வேண்டும்.

மேலும், சென்னை, காரைக்கால் மற்றும் காங்கேசன்துறை இடையே கப்பல் சேவையை மேம்படுத்துவதில் முன்னுரிமை அளிக்க  வேண்டும்.

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையில் தலைமன்னாருக்கும் தனுஸ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கடிதம் அனுப்ப நடவடிக்கை

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதமொன்றை இவ்வார இறுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

இக்கடிதத்தினை ஏனைய தரப்புக்களான இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தரப்புக்களுடனும் கூட்டிணைந்து அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பௌத்த மதத்தின் பெயராலும் தொல்பொருளின் பெயராலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் ஏனைய வரலாற்றுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமையும் இதன்போது சுட்டிக்காட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த கடிதத்துக்கான வரைவு, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்துக்குள் அது இறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஜனநாயக போராளிகள், தமிழ் தேசிய கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையொப்பங்களை இடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வவுனியாவில் தமிழரின் பூர்வீக கிராமத்தில் விகாரை திறந்து வைப்பு

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமளங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றது.

1980 ஆம் ஆண்டுவரை வாழ்ந்து போரின் காரணமாக தமிழர்கள் இடம்பெயர்ந்த நிலையில் இக் கிராமத்தில் தொல்லியல் அடையாளம் எனக் கூறப்பட்டு தமிழர்கள் தடுக்கப்பட்டு வந்தனர்.

அவ்வாறான பகுதியிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டு நிறைவுபெற்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் 60 மேலதிக வாக்குகளால் நாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

இதேநேரம் ஏ.எல்.எம். அதாவுல்லா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கு.திலீபன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

Posted in Uncategorized

கூட்டமைப்பு புலிகளின் நோக்கத்திற்கேற்பவே இன்றும் செயற்படுகின்றது – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மீண்டும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர் என்பதனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு என்றும் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதிக்கோ, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் இது குறித்து மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஒத்துழைப்பில் கொத்மலையில் காலநிலை மாற்றம் தொடர்பில் சர்வதேச பல்கலைக் கழகம்

காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை கொத்மலை பிரதேசத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட வரைபை தயாரித்துள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இந்த சர்வதேச பல்கலைக்கழத்தை அமைப்பதற்காக 400 ஏக்கர் நிலப்பரப்பு கொத்மலை பிரதேசத்தில்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு விஜயம் செய்த காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையிலான குழுவினர் பல்கலைக்கழத்தை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு அமெரிக்க தூதரகம் முன்வந்துள்ளது

மேலும், அமெரிக்க பல்கலைக்கழங்களின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவிடம் உறுதியளித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏற்கனவே  அடையாளப்படுத்தப்பட்டுள்ள 400 ஏக்கர் நிலப்பரப்புக்கு மேலதிகமாக மேலும் 200 ஏக்கர் காணியை பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கபட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் ஸ்தாபிக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழத்தின் வதிவிட வசிதகள் உட்பட அனைத்து வளங்களையும் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

தமிழர் பகுதியிலுள்ள புதைகுழிகளுக்கு மூன்றாம் தரப்பு மேற்பார்வையே நீதியை வழங்கும் – சபா குகதாஸ்

தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றெழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் உடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட ஊடகங்களுக்கு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் பல்வேறு தேவைகளுக்கு அகழ்வுகள் மேற் கொள்ளப்பட்ட போது அதற்கான தடையங்கள் பெருமளவில் கிடைத்துள்ளன.

ஆனால் அவையாவும் உரிய நீதி இன்றி மறைக்கப்பட்டு காலம் கடத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

கடந்தகாலத்தில் மன்னாரில் இரண்டு பாரிய புதைகுழிகளில் தோண்டத் தோண்ட எலுப்புக் கூடுகள் வந்தன ஒன்று திருக்கேதீஸ்வர வீதியில்  நீர்க்குழாய் அமைப்பதற்கான அகழ்வில்  அப்பகுதிக்கு அருகில்  யுத்தகாலத்தில் இராணுவம் இருந்து  முகாமிக்கு அருகில்  உரிய ஆய்வுகள் இல்லாமல் மறைக்கப்பட்டது இண்டாவது சதொச கட்டட அமைப்பதற்கான அகழ்வில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன  அவற்றை ஆங்கிலேயர் காலத்தவை என கதை முடித்தனர்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ஆனால் இதற்கான நீதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கள அரசாங்கததால் வழங்கப்படமாட்டாது.

எனவே தமிழர் தாயகத்தில் குறிப்பாக சிறிலங்காவில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பௌத்த சிங்கள அரசாங்கத்தால் நீதி கிடைக்க ஒரு போதும் வாய்ப்பு இல்லை அவ்வாறு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் மூன்றாம் தரப்பு மந்தியஸ்தம் அல்லது மேற்பார்வை மூலமே சாத்தியப்படும் இதனால் தாயக புலம்பெயர் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக மூன்றாம் தரப்பு மேற்பார்வையை உள்ளீர்க்க வலுவான இராஐதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து கையாள வேண்டும். அதுவே புதைகுழி விவகாரம் மட்டுமல்ல அரசியல் தீர்வுக்கும் வழியைத் திறக்கும் – என குறிப்பிட்டுள்ளார்.