நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்

அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தின் பின் இயங்காத குறித்த நெசவுசாலை கட்டடத்தில் ஒரு மதஸ்தலம் அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

குறித்த மதஸ்தலத்தினால் அதிகளவு சத்தம் போட்டு பிரார்த்தனை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மல்லாகம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போதகர் உட்பட மூவர் அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அச்செய்தியை வெளியிட்டமைக்காக உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள்ளும் அடாவடியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், போதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது குறித்த மதஸ்தலம் அமைந்துள்ள நெசவுசாலையினை மீளவும் கைத்தொழில் அமைச்சு பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் என கோரி இன்று போராட்டம் இடம்பெற்றது.

பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை அற்ற அதிகாரம் வழங்குவது மிகவும் பயங்கரமானது – சாலிய பீரிஸ்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை அற்ற அதிகாரம் வழங்குவது மிகவும் பயங்கரமானது என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வரையறை இல்லாத அதிகாரம் வழங்கி இருக்கிறது.

இது மிகவும் பயங்கரமானது.அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் பயங்கரவாதத்தை தடுப்பதென்ற அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்து 90 நாட்கள் பிரதி பொலிஸ்மா அதிபரின் அனுமதியுடன் தடுத்துவைக்க முடியும்.

அத்துடன் சட்டத்தின் பிரகாரம் குறித்த சந்தேக நபரை 48 மணி நேரத்துக்கு முன்னர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினாலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவை நீக்குவதற்கு நீதிவானுக்கு முடியாது.

நீதிபதியையும் தாண்டிய அதிகாரமே பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இந்த சட்டமூலத்தின் ஊடாக வழங்கப்படுகிறது.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரதான பிரச்சினையாக இருப்பது பயங்கரவாதம் என்றால் என்ன என வரையறுக்கப்படுவதில் இருக்கும் தெளிவின்மையாகும்.

அதேநேரம் பல்வேறு அமைப்புகளை தடைசெய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் உறுப்புரைகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு பல விடயங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இதில் சில சரத்துக்கள் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் வகையில் அமைகின்றன.

அதனால் இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டால் மிகவும் பாதகமான நிலைமை நாட்டில் ஏற்படலாம்.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து இதில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அல்லது இதனை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

மனித உரிமைகள் குறித்து புரிந்துணர்வுள்ளவர்களை மனித ஆணைக்குழுவிற்கு நியமிக்க வேண்டும்

மனிதஉரிமைகள் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டவர்களை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு நியமிக்கவேண்டும் எனஆணைக்குழுவின் தலைவர் ரோகிணி மாரசிங்க கருத்துவெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் குறித்து சிறிதளவும் அறிவில்லாதவர்களை இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமித்தமை நாட்டின் மனித உரிமை நிலவரத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களிற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

மனித உரிமைகள் குறித்து எந்த புரிந்துணர்வும் இல்லாதவர்களை நியமித்தமையே இந்த பிரச்சினைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் குறித்து சிறந்த புரிந்துணர்வு கொண்டவர்களை ஆணைக்குழுவிற்கு நியமிக்கவேண்டும் என நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ள ரோகிணி மாரசிங்க அவ்வாறான நியமனங்களை மேற்கொள்ளாத பட்சத்திலேயே இவ்வாறான குழப்பநிலை ஏற்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஆணையாளர்களிற்கும் மனித உரிமைகள் குறித்து எதுவும் தெரியாது அவர்கள் கூட்டங்களிற்கு கூட சமூகமளிப்பதில்லை,அவர்கள் எதுவும் செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் பணியாளர்களிடம் அவர்கள் குறித்து கேட்கவேண்டும் அவர்கள் அனைத்து விடயங்களையும் தெரிவிப்பார்கள் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாவை ஜனாதிபதியாக்கியமை தவறென பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது

2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் “தவறு” செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 25ல் தேர்தல் இல்லை – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது.

அத்தோடு எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் திறைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பாதிக்கும்

இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைகளை வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முடிவு எடுப்பதற்கு முன்னதாகவே இந்த புதிய மாற்றுச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனில் சைபி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கத் தவறினால், இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகச் சலுகை கிடைக்காமல் போகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளை அடையாளப்படுத்தும் போது நீதித்துறை மற்றும் மக்களது கோரிக்கையை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கையில், இந்த செயல்முறை மிகவும் குறைவான வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதம் நிறைவு

இலங்கையின் உள்ளக மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அதற்கு முன்னர் மறுசீரமைப்புப் பணிகளை முடிக்க முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இணையத்தள கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வவுனியா – செட்டிக்குளத்தில் முளைத்தது புத்தர் சிலை!

வவுனியா – செட்டிக்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரெனப் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. செட்டிக்குளம் முருகன் ஆலயம் அருகேயே இந்தப் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியா என்று தமிழ் மக்கள் கேள்வியும் அச்சமும் தெரிவித்துள்ளனர்.

செட்டிக்குளம் – மன்னார் வீதியில், பழைய புகையிரத நிலையம் முன்பாக – முருகன் கோவில் அண்மையாக, வீதியோரத்தில் சிமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் அந்தப் பகுதிக்கு வந்த சிலரே கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றனர் என்று அறிய வருகின்றது. தமிழ் மக்கள் மட்டுமே செறிந்து வாழும் இந்தப் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை அவர்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் தமிழ்மொழியைப் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ ; இந்திய மத்திய அரசு திட்டம்

தமிழ் மொழியை நாடு முழுவதிலும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்கப்பட உள்ளது. இந்தி பிரச்சார சபாவை போல் அனைத்து மாநிலங்களிலும் இதனை அமைக்க மத்திய அரசு அதிரடி திட்டம் வகுத்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் இந்தி மொழியை பரப்புவதற்காக சென்னை, தி.நகரில் 1918-ம் ஆண்டில் தென்னிந்திய இந்தி பிரச்சார சபை மகாத்மா காந்தியால் நிறுவப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்கில், இந்த நிறுவனத்தை அன்னி பெசன்ட் அம்மையார் 1918-ம் ஆண்டு, ஜூன் 17-ல் தொடங்கி வைத்தார். இந்தியை ஊக்குவிக்க மகாத்மா, தனது மகன் தேவதாஸ் காந்தியை சென்னைக்கு அனுப்பி, இங்கு தங்கவைத்து பிரச்சாரமும் செய்திருந்தார். மகாத்மாவும் தி.நகரில் 10 நாட்கள் தங்கி அதன் நிர்வாகத்தை நேரடியாக கவனித்துள்ளார்.

இதன் கிளைகள் திருச்சி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் 6,000 வரை வளர்ந்துள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக இது உள்ளது. இங்கு பல்வேறு நிலைகளில் இந்திமொழிக் கல்வி நேரிலும், தபாலிலும் கற்பிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்தவகையில், தமிழ்மொழியை நாடு முழுவதும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்கப்பட உள்ளது. இதன் கிளைகள் வட மாநிலங்கள் அனைத்திலும் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் சான்றிதழ், பட்டயப்படிப்பு என பல வகையில் தமிழ்க் கல்வி போதிக்கப்பட உள்ளது.

இதை இதுவரை எவரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக மத்திய அரசு அமைக்கிறது. இந்தி பிரச்சார சபாவை போலவே இதை அமைத்து மத்திய அரசின் நிதியை அதற்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தி பிரச்சார சபா போன்று தமிழ் பிரச்சார சபாவையும் தன்னாட்சி அதிகாரத்துடன் தமிழ் அறிஞர்கள் குழு நிர்வகிக்க உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “தமிழ் பிரச்சார சபா என்பது பிரதமரின் யோசனை. அவருக்கு தமிழ் மொழி மீதுள்ள ஈடுபாட்டினால் இந்த சபா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பாடத்திட்டங்கள் தற்போது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதி (தேசிய மொழிகளுக்கான அமைப்பு) நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.

தமிழ் பிரச்சார சபாவுக்கும் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பிரச்சார சபா மூலம் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு நாடு முழுவதிலும் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளது. கடந்த 2014-ல் பிரதமராக பதவியேற்றது முதல் தமிழின் பெருமைகளை நரேந்திர மோடி பேசி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில், “தமிழ் உலகின் பழமையான மொழி” என்று கூறி பிரச்சினைக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இத்துடன் நின்றுவிடாமல், எவரும் செய்யாத வகையில், தமிழை வளர்க்க அவர் தமிழ் பிரச்சார சபா தொடங்குவது பெரிய அளவில் வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

உண்டியல் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 8.2 மில்லியன் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும், கொழும்பு 12, கெசல்வத்தை, டாம் வீதியில் வைத்து இரண்டு நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய பிரதான சந்தேகநபர் மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.