சிங்கள, பெளத்த மேலாதிக்கத்தின் ஆகப்பிந்தைய வன்முறைவடிவமே பொலிஸாரின் வெடுக்குநாறி மலை அட்டூழியங்கள் – யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்றிருக்கும் சம்பவம் வெறும் வன்முறையும், அத்துமீறலும் மாத்திரம் அல்ல; இது இலங்கையில் தொடரும் சிங்கள பௌத்த மேலாண்மைவாதக் கருத்தியலின் ஆகப் பிந்திய வன்முறை வடிவங்களிலே ஒன்று என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் தலத்தில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று இரவு வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் தலத்திலே வழிபாட்டிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயக் குருக்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களினையும், அவர்கள் அங்கு இருந்தோரிலே பலரினைக் கைது செய்தமையினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மகா சிவராத்திரி சைவ, இந்து மக்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களிலே ஒன்று. அந்தத் தினத்திலே உலகெங்கும் வாழும் சைவ, இந்து மக்கள் ஆலயங்களிலே இரவு முழுவதும் விழித்திருந்து சமய அனுட்டானங்களிலே ஈடுபடுவர்.

அவ்வாறான ஒரு வேளையிலே பொலிஸார் ஆதி லிங்கேஸ்வரர் தலத்தினுள் நுழைந்து அது தொல்பொருள் ஆய்வுக்குரிய பாதுகாக்கப்பட்ட‌ இடம் என்ற போர்வையிலே அங்கு அனுட்டானங்களிலே ஈடுபட்டிருந்த மக்களிற்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

அவர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதனைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். பின்னர் பூசைகளினைக் குழப்பி உள்ளனர். வழிபாட்டில் ஈடுபட்டோரினை பலவந்தமாக வெளியேற்றியும் கைது செய்துமுள்ளனர். இவை யாவும் அந்த மக்களின் சமய ரீதியிலான உரிமைகளை மோசமாக மீறும் செயல்களாகும் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

வெடுக்குநாறி மலையில் இடம்பெற்றிருக்கும் இந்தச் சம்பவம் வெறும் வன்முறையும், அத்துமீறலும் மாத்திரம் அல்ல; இது இலங்கையில் தொடரும் சிங்கள பௌத்த மேலாண்மைவாதக் கருத்தியலின் ஆகப் பிந்திய வன்முறை வடிவங்களிலே ஒன்று.

சிறுபான்மையாக இருக்கும் மக்களின் மத உரிமைகளை பாதிக்கும் செயன்முறைகளினை இலங்கையினை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் காலங்காலமாக மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த செயன்முறைகளினால் இந்து சமயத்தவர் மாத்திரமல்லாது, கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பினைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், சிறுபான்மை மக்களின் மத உரிமைகளை மீறும் போக்குக்கள் யாப்பின் கருத்தியலுக்குள்ளேயே பொதிந்து போய் இருக்கிறது என்பதனை நாம் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்.

வெடுக்குநாறி மலைச் சம்பவம் இலங்கை அரசின் மதவாதக் குணாம்சத்தினால் ஏற்பட்ட ஒரு கட்டமைப்பு சார் விடயமாகவே பார்க்கப்படல் வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்குக் கிழக்கினைப் பௌத்த மயமாக்கம் செய்வதன் மூலமும், சிங்கள மயமாக்குவதன் மூலமும் இந்தப் பிராந்தியத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் வலுவிழக்கச் செய்யும் செயன்முறைகளிலே இலங்கை அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வந்திருக்கின்றன. இந்தச் செயன்முறைகளின் ஒரு வடிவமாகத் தொல்பொருளியல் ஆய்வு என்ற போர்வையில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் தலத்தினையும் ஏனைய பல சைவ, இந்து மக்கள் வழிபடும் தலங்களையும் சிங்கள பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் அண்மைய சில வருடங்களாகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பில் இருந்து, மையப்படுத்தப்பட்ட முறையிலே, இராணுவக் கட்டமைப்புக்களின் துணையுடன், சிங்கள பௌத்தக் கருத்தியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தத் தொல்பொருளியல் செயன்முறைகளின் போது வடக்குக் கிழக்கிலே பல சந்ததிகளாக இந்தத் தலங்களிலே தமது சமய அனுட்டானங்களில் ஈடுபடும் மக்களின் உரிமைகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த விதமான இடமும் வழங்கப்படுவதில்லை.

மாறாக தொல்பொருளியல் ஆய்வு என்பது இந்த மக்களின் மீதும், அவர்களின் சமய நம்பிக்கைகள் மற்றும் செயன்முறைகளின் மீதும் ஒரு வன்முறையாகவே ஏவப்படுகிறது. இந்த வன்முறையின் ஒரு விளைவே கடந்த சிவராத்திரி தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களும் கைதுகளும்.

கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக வழக்குகள் எதுவுமின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், வடக்குக் கிழக்கிலே தொல்பொருளியல் ஆய்வு என்ற பெயரிலும், வனப் பாதுகாப்பு என்ற பெயரிலும், மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் என்ற பெயரிலும் ஏனைய வடிவங்களிலும் இடம்பெறும் சிங்கள பௌத்த மயமாக்கற் செயன்முறைகள் யாவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோருகிறது.

இனவாதத்தினையும், மதவாத்தினையும் முன்னெடுக்கும் அரசியலமைப்பும், அரசுக் கட்டமைப்பும் மாற்றப்பட்டால் மாத்திரமே இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இன, சமய ரீதியிலே சமத்துவம் மிக்கவர்களாக வாழ முடியும்.

வெடுக்குநாறி மலைப் பிரச்சினைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரும் இவ்வாறான அரசியல் மாற்றங்களினை வலியுறுத்துவதன் மூலமாக‌ இனவாதத்தினையும், மதவாதத்தினையும் முறியடிக்க முன்வர வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோருகின்றது – என்றுள்ளது.

Posted in Uncategorized

சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டிக்கின்றோம் – யாழ்.பல்கலை இந்து மாமன்றம்

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர் கோவில் மகா சிவராத்திரி தின பொலிஸ் அராஜகங்களை தாம் கண்டித்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்த மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் தலையாய விரதமே மகா சிவராத்திரி, வருடத்தில் ஒருமுறை வரும் இவ்விரதமானது ராத்திரி வேளை நான்கு சாம பூசைகளை மேற்கொண்டு இரவு முழுவதும் சிவனடியார்கள் கண்விழித்து சிவபெருமானை பூஜித்து சிவசிந்தையில் வழிபாடு மேற்கொள்வது மரபாகும். இம் மகாசிவராத்திரி தினத்திதை முன்னிட்டு தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டுவரும் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேசுவரர் கோவில் மகா சிவராத்திரி தின விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் வழங்கிய கட்டகளையின் படி பூசை வழிபாடுகள் ஒழுங்கமைக்கப்ட்டுள்ள நிலையில், ஆலய பூசகர் கைது செய்யப்பட்டமையும், வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொதுமக்களை பலவந்தமாக அகற்றியமையமையும், மாலை ஆறு மணியளவில் அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறு பணித்துள்ளனர்.

சைவர்களின் வழிபாட்டு உரிமையினையும், சைவ விழுமியங்களையும், புனித சடங்குகளையும் அவமதிக்கும் சம்பவங்கள் தமிழர்களின் தொன்மையான புனித பூமியில் இடம்பெற்றிருக்கிறது. அதன் உச்சகட்டமாக வெகுதூரத்தில் இருந்து வந்து விரதமிருந்து பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்களது வழிபாடுகளை தடுத்தும், வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களை கழுத்தை பிடித்து இழுத்து விசியதுடன், தவறேதும் செய்யாத சிவனடியார்கள் விரதமிருந்து பூசையில் ஈடுபட்ட தருணம் மோசமாக கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சப்பாத்துக்கால்களுடன் வழிபாட்டிடதுக்குள் நுழைந்து பூசை மற்றும் படையல் பொருட்ககளையும் கொண்டு செல்லப்பட்டிருந்த பொருட்கள் என்பவற்றை பொலிசார் காலால் அப்புறப்படுத்தியதுடன், கோவிலில் நிகழ்ந்து கொண்டிருந்த யாகத்தையும் தடுத்து நிறுத்தியது போன்ற பொலிசாரது மிலச்சத்தனமான செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆலய வளாகத்திற்கு குடிநீர் தாங்கியை உள்ளே அனுமதிக்காது வழிபாட்டிற்கு சென்ற சிறுவர்கள் பெண்கள் பக்தர்கள் என பலர் அவதிப்பட்ட நிலையில் ஆலய வழிபாட்டிற்காக பக்தர்களின் தாகசாந்திக்கு கொண்டுவரப்பட்ட நீர் தாங்கியினை பொலிசாரால் ஆலயத்தில் இருந்து மூன்று கிலோமீற்றருக்கு முன்னரே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும், குடி தண்ணீருடன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட உழவு இயந்திரத்தினை உள்ளே அனுமதிக்காது அதனை உள்ளே அனுமதிக்குமாறு பக்தர்கள் அரைமணிநேர போராட்டத்தினை மேற்கொண்டமையும், குடிநீரை தடுத்து அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீரை வழங்க மறுத்த ஈனச் செயலானது, இலங்கை பொலிசாரது மனித நேயமின்மையினை குறித்து ஒட்டுமொத்தமாக மிகுந்த வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.

இலங்கையில் சமய நல்லிணக்கம் வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பது மத நல்லிணக்கம் தொடர்பான ஐயப்படுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. சமயங்கள் மனிதனை அகரீதியாக மேம்படுத்தக்கூடியன. வழிபாடுகளும் இறை சார்ந்த நம்பிக்கைகளும் மனிதனை மனிதனாக பக்குவப்படுத்துகின்றனவே தவிர, ஒரு மதத்தினை மத வழிபாட்டினை நிந்திப்பதோ நிந்தனை செய்வதோ அல்லது தடுத்து நிறுத்துவதோ பொருத்துமற்ற ஒன்றாகவே கருதப்படும், சமயங்கள் சார்ந்த அரசியல் என்பது மக்களை முரண்பட்டுக் கொள்ளவும், இனரீயாக பிளவுபடுத்திக்கொள்ளவும் வழிசமைக்கும். ஆகவே சமயங்கள் மனிதர்களை பக்குவப்படுத்திக் கொள்வது எனும் வகையில், ஒவ்வொரு இனம்சார்ந்தவர்களும் பல்வேறுபட்ட நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களுடைய நம்பிக்கைகள், வழிபாடுகள், வழிபாட்டுத்தலங்கள் சிதைக்கப்படுவதோ அல்லது அவர்களுக்கான வழிபாடுகள் மறுக்கப்படுவதோ, ஒரு சுதந்திரத்தன்மை என்பது வழிபாட்டு முறையில் தடுக்கப்படுகிறது என்பதுதான் அர்த்தமாக கருதப்படும்.

இந்த அடிப்டையிலே சைவர்களுடைய மிக முக்கியமான ஒரு வழிபாடு சிவாரத்திரி தினம். இந்த வழிபாட்டில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெற்றது என்பது உண்மையில் சைவர்களாகிய ஒவ்வொருவரையும் மிகவும் மனரீதியாக வேதனைப்பட வைக்கிறது, அவர்களுடைய வழிபாடுகளை சிதைப்பதனூடாக ஒரு இனத்தினுடைய பண்பாட்டு அடையாளங்களை கேள்விக்குட்படுத்துதல் என்பது உண்மையிலே ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. இவ்வடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயலானது உலகிற்கு எமது நிலையினை இவ் அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வகையில் வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர் கோவிலில் நடைபெற்ற மோசமான வழிபாட்டுரிமை மீறல் மற்றும் மனிதநேயமின்மை சம்பவங்களை மிக கண்டித்தும் கைது செய்ப்பட்ட பக்தர்களை விடுவிக்ககோரியும் வலியுறுத்தி நிற்கின்றோம். இலங்கை பொலிசாரது அட்டூழியங்களையும். இலங்கை அரசின் இவ்வாறான செயலை இந்து மன்றமாக கண்டித்து நிற்கின்றோம். என யாழ்.பல்கலைக்கழக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இராணுவம் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியும் ஆகிய சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு காணி உரியவர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கிவைத்தார்.

இதில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரம ரட்ன, ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல் இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு படையினர்கள், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள், பலரும் கலந்துகொண்டனர்.

வெடுக்குநாறிமலையில் கடும் பாதுகாப்பு! 5 கிலோ மீற்றர் நடந்து சென்று சிவனை வழிபட்ட பொதுமக்கள்

வவுனியா வெடுக்குநாறிமலையினை சுற்றி பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் 5 கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர்.

மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை (07) இரவு நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அரச காட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் வவுனியா நீதவானிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்றையதினம் ஆலயத்தினை சுற்றி விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதைக்கு பொலிஸ் வீதித்தடை போடப்பட்டு.

அந்த பகுதிக்குள் வசிப்பவர்கள் மாத்திரம் பொலிஸாரின் விசாரணைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை மகா சிவராத்திரி வழிபாட்டிற்காக தூர இடங்களில் இருந்து வருகை தந்த பொதுமக்கள், உள்ளே செல்லமுடியாதவாறு பிரதான வீதியில் தரித்தி நின்றனர்.

சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செல்வராசா கயேந்திரன், வேலன் சுவாமிகள், ரவிகரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர் சென்றனர்.

அவர்களது வழிகாட்டலுடன் காலை 10 மணியளவில் பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் ஒலுமடு பிரதான வீதியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரம் காட்டுப்பாதையூடாக நடந்துசென்று பொதுமக்கள் ஆலயத்தினை அடைந்தனர்.

இதேவேளை குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள விகாரைகளில் இருந்து பௌத்த மதகுருக்களும் சிங்கள மக்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவின் அனைத்து பகுதிகளில் இருந்து பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

Posted in Uncategorized

நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கான கலந்துரையாடல் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிறிதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் கலந்துகொள்ள விரும்பும் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தின் நிதிக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அண்மையில் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளதோடு, அதற்கு அனைத்துக் கட்சிகளினதும் கூட்டுப் பொறுப்புக்கூறல் அவசியமானது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.

100 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தில் சூரிய மின் உற்பத்தி திட்டம் – அமைச்சர் காஞ்சன

இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சூரிய களத்தின் ஊடான மின்உற்பத்தி திட்டம் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்திற்கமைய வீட்டுப்பாவனை உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான கட்டணம் 23.4 சதவீதத்தினாலும், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும், பொது சேவைகளுக்கான கட்டணம் 22.3 சதவீதத்தினாலும், மத வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 32.6 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவற்றுக்கான கட்டண அதிகரிப்பு 12 – 18 சதவீதமாகவே காணப்பட்டது. எனவே அதிகரிக்கப்பட்டதை விட அதிகமாகவே கட்டணக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது ஓமல்பே சோபித தேரர் போன்றோர் கட்டணத்தை செலுத்தாமல் இருக்குமாறு கூறியதோடு, தாம் கட்டணத்தை செலுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் பொது மக்கள் அவ்வாறு கட்டணம் செலுத்துவதை புறக்கணிக்கவில்லை. அதற்கு நன்றி கூறுகின்றோம்.

எரிபொருள், நிலக்கரி, நீர் மின் உற்பத்திகளுக்கு அப்பால் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மின் உற்பத்தியிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், பொலிஸ், இராணுவ முகாம்கள் என்பவற்றில் சூரிய களத்தின் ஊடாக 9000 மெகாவோல்ட் மின் உற்பத்தி திட்டத்தை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போன்று சூரிய மற்றும் காற்றாலை ஊடான 10 மின் உற்பத்தி திட்டங்களுக்கான விலைமனுக்கள் எதிர்வரும் மாதங்களில் கோரப்படவுள்ளன. மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான விலைமனு கோரல் அறிவிப்புக்கள் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளதைப் போன்று மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது – பீட்டர் ப்ரூவர்

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்தார்.

நிதி அமைச்சில் வியாழக்கிழமை (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை இலங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதால், அதன் பிரதிபலன்களை காண முடிந்துள்ளதாகவும் பீட்டர் ப்ரூவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வலுவடைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதென தெரிவித்த அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இதன்போது நாட்டை பொருளாதார சரிவிலிருந்து மீட்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை அங்கீகரிப்பதானது இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக ஏற்றுகொள்ளப்பட்ட கூட்டு முயற்சியை வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மை, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள், எதிர்கால நோக்கு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் பொருளாதார செயற்பாடுகளின் பலதரப்பட்ட விடயப்பரப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காகவும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் இரு தரப்புக்கும் இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் கைது; பொலிஸார் அராஜகம்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.

நாளை வெள்ளிக்கிழமை (8) மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயநிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களது முயற்சிக்கு பொலிசாரால் தடங்கல் ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்தின் நிர்வாகத்தினால் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

அதனை செவ்வாய்க்கிழமை (5) விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் வெடுக்குநாறிமலை ஆலயவிடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலயநிர்வாகத்திற்கு உத்தரவு வழங்கியது.

இதனையடுத்து சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வியாழக்கிழமை (7) மாலை உழவியந்திரத்தில்   சென்றுகொண்டிருந்த பூசாரி உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் செவ்வாய்க்கிழமை (5) வழிமறிக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை  வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்தவருடம் உத்தரவு வழங்கியிருந்தது. அந்த உத்தரவை செவ்வாய்க்கிழமை (5) நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்திருந்தது. இந் நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை மீறி பொலிசார் குறித்த இருவரை கைதுசெய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

ரெலோ இயக்கத்தால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் தன்வந்த்!

பாக்கு நீரினையை கடந்த இளம் உலக சாதனையாளர் ஹரிகரன் தன்வந்த் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினரால் நிறைகுடம் வைத்து அமோக வரவேற்பளிக்கப்பட்டு பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் 13 வயதில் அவரது துணிச்சலான சாதனையை பாராட்டி ஊக்குவிக்குமுகமாக துவிச்சக்கர வண்டி ஒன்றும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கபட்டார்.

இந்நிகழ்வுகள் இன்றைய தினம் மாலை ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் இயக்கத்தின் பொதுக்குழு, மூத்த உறுப்பினரும் முன்னால் நகரசபை உறுப்பினருமான சிங்கன், மற்றும் பல மூத்த உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது இந்நிகழ்வுகளை மூத்த உறுப்பினர் சிங்கன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.

வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மேலும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வெளிநாட்டு அரசமுறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும்.

2023ஆம் ஆண்டு தொடக்கம் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும். அத்துடன் நாட்டின் பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும். புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் வற் வரி நீக்கப்படும். எனினும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணங்களை வழங்கமுடியாது. ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைக்கிறார்கள்.மக்கள் மீது தேவையில்லாமல் வரிச் சுமைகளை அரசாங்கம் சுமத்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

எமது நாட்டில் பல அரசாங்கங்கள் கையாண்ட தவறான பொருளாதார கொள்கை காரணமாகவே நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை. நான் தைரியமாக அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்.
அப்போதைய சந்தர்ப்பத்தில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பின் ஊடாக இந்த நிலைமையை மாற்றியமைத்தோம்.
அதன் பயனை முழுநாடும் இன்று அனுபவிக்கின்றது.குறைந்த வருமானம் பெறும் 24 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் பெறுமதி சேர் வரியை மேலும் குறைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
பாடசாலை உபகரணங்கள் சுகாதார உபகரணங்கள் மருந்து பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.