மக்களை பாதிக்கும் வகையில் இராணுவ சோதனை சாவடிகள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்த முடியாது என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனை என்பது யுத்தத்துக்கு பின்னரே அறிமுகமானது. இன்றுவரையும் யாழ்ப்பாணம் முப்படையினுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இங்கு யார் என்ன செய்தாலும் படையினருக்கு உடனடியாகவே தகவல்கள் தெரியும்.

மஞ்சள் கடத்தப்படும் போது உடனடியாக பிடிக்கப்படுகின்றது. வேறு பொருட்கள் வரும்போது உடனடியாக கடத்தல் குழு பிடிக்கப்படுகிறது. ஆனால் போதை வஸ்து வரும் போது அவ்வாறான நிலை காணப்படுவதில்லை. கடற்படையினர் இந்திய மீனவர்கள் வரக்கூடாது என்பதற்காக பல ரோந்து நடவடிக்கையை ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்திய மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.இலங்கை கடற்படை திறமையாக செயல்படும்போது கேரள கஞ்சாவை இங்கு தடை செய்ய முடிவது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல.

பல்வேறு போதைப்பொருட்கள் தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு தாராளமாக வருகின்றது. ஆனையிறவு சோதனைச்சாவடி, வவுனியா சோதனைச் சாவடிகளை தாண்டி மிகப் பெருமளவிலான போதைவஸ்துக்கள் வருவதுடன் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணத்து வீதிகளில் சோதனைச் சாவடிகளை போடுவதால் போதைவஸ்துகளை நிறுத்திவிட முடியாது. கொழும்பிலிருந்து வரும் போதைவஸ்துகளை தடுப்பதும் இந்தியாவில் இருந்து வரும் போதைவஸ்துகளை தடுப்பதற்கும் இராணுவத்தை வீதியில் போடுவதால் நிறுத்தி விட முடியாது. பிரதான வீதிகளில் சாவடிகளை போட்டால் உள்வீதிகள் எவ்வாறு செல்ல முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

போதை வஸ்தை இல்லாமல் செய்வது நோக்கமா? சோதனைச்சாவடியை போடுவது நோக்கமா என்ற கேள்வி எழுகிறது. மீண்டும் இங்கு சோதனை சாவடிகள் அமைப்பது சாதாரண மக்களை பாதிக்கும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் இலங்கை விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர், லோர்ட் டேவிஸ் மூன்று நாள் விஜயமாக கொழும்பு வந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய முன்னாள் வங்கியாளரும் , முன்னாள் தொழிற்கட்சி அமைச்சருமான இவர், 2020 அக்டோபரில் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சனினால் இலங்கைக்கான இங்கிலாந்து பிரதமரின் வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டார்.

வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கிலும், இங்கிலாந்து-இலங்கை பொருளாதார கூட்டாண்மையின் பரஸ்பர வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் அவர் பல்வேறு வணிக மற்றும் அரசாங்க பங்குதாரர்களை சந்திப்பார் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதிகளவு இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சவூதி அரசாங்கம் ஒப்புதல்

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கும், கட்டுமானம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிகமான இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாக, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பொறியியலாளர் அஹ்மத் பின் சுலைமான் அல்ரஜி ஆகியோருக்கு இடையிலான செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

சில காலமாக கட்டுமானத் துறையில் பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்த பல வேலை வாய்ப்புகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் திறமையான தொழிலாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலின் போது, ​​சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர், சவூதி அரேபியாவில் நிர்மாண மற்றும் சுகாதாரத் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு இருதரப்பு குழுக்களை நியமிக்க ஒப்புக்கொண்டார்.

இலங்கை வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் நிலவும் முறைகேடுகளை களைவது தொடர்பாக 30 நாட்களுக்குள் பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழுவொன்றை நியமிப்பதற்கும் அவர் இணக்கம் தெரிவித்திருந்தார்.

இலங்கை தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தை மேலும் அதிகரிக்க சவூதி  அமைச்சர் இணக்கம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான பரிந்துரைகளும் முப்பது நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சவூதி அரேபியாவில் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது இலங்கையில் உபரி ஊழியர்களைக் கொண்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

வீட்டுப் பணியாளர்களின் ஆட்சேர்ப்புக் கட்டணம் மற்றும் அது தொடர்பான செலவுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், தவறான செயல்களில் ஈடுபட்ட சுமார் 400 வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்டலினா ஜோர்ஜியேவா ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தில் இடம்பெற்று வரும் கோப் – 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு பல்வேறு தரப்பினருடனும் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமையவே நேற்று செவ்வாய்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அன்டலினா ஜோர்ஜியேவாவையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது கடன் முகாமைத்துவம் தொடர்பில் வெற்றிகரமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் கானா நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவின் சபாநாயகர் ஆகியோர் மொஹமட் நஷீட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும்  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின்  வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் கூட்டுப் பொறுப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் உண்டு.

மேலும் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 10,000 வீடுகள் குறித்தும், பெருந்தோட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்  இந்திய ஆசிரியர்களை நியமித்து,புதிய பாடநெறிகள் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்ரஸால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இதன் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் அரசியல் பிரிவுக்கான முதன்மைச் செயலாளர் திருமதி பானு ஆகியோர் தெரிவித்தனர்.

போதை பொருள் பயன்பாடு, கலாச்சார சீரழிவுகளுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும் – கலாநிதி ஆறுதிருமுருகன்

போதை பொருள் பயன்பாடு,  கலாச்சார சீரழிவுகளுக்கு எதிராக  பெண்கள்  போராடினால் இந்த  பிரச்சினைகளை தீர்க்க முடியும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் முழுநிலா கலைவிழா நிகழ்வு திங்கட்கிழமை (07) மாலை பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

 இன்றைய சமுதாயத்தில் செயல்பாடுகள் வேதனைக்குரிய விடயமாக மாறி உள்ளது. இன்றைய நாகரீகமாக வீதிகளில் சும்மா நிற்பதே  வேலையாக உள்ளது. இத்தகைய ஒரு சமுதாயத்திற்காக கடந்த காலங்களில் போராட்டங்கள் இடம்பெற்றது. எத்தனை இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்கால சமுதாயத்திற்காக இறந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று வேதனை தரும் விடயமாக மாறி உள்ளது.இன்றைய சமுதாயத்திற்கு  துன்பங்களை சொல்லி வழக்காத நிலை உருவாகியுள்ளது.

தண்ணிர் போத்தலை காசுக்கு வாங்கி குடிப்பதை கெளரவம் என்று நினைக்கத் தொடங்கியுள்ளோம். கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்து தையிரியத்துடன் வாழ்ந்த சமுதாயம் இன்று எல்லாத்திற்கும் காசு கொடுக்கிறோம். இவற்றில்  மாற்றம் வேண்டும்.

எத்தனையோ தேசங்களில் பலர் கடின உழைப்பு ஊழைக்கிறார்கள். மேலைநாடுகளில் பல்கலை மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள். இங்கும் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வந்துள்ள தென்னிலங்கை மாணவர்கள் பகுதிநேரமாக விடுதிகளில்  வேலை செய்கிறார்கள்.

வீட்டில் கஸ்டம் என்பதால் நாங்கள் வேலை செய்து உழைக்கிறோம் என்கிறார்கள். எமது பகுதியில் பல்கலைக்கழகம் கிடைத்தவுடன் பல லட்சம் பெறுமதியில் மோட்டார்சைக்கிள்  கொடுத்துள்ளார்கள்.அவர் சும்மா சுற்றி திரிகிறார்கள்.இவ்வாறு செய்து கொடுத்துவிட்டு போதை ,கலாச்சார சிரழிவு என  மற்றவர்களை குறை கூறுபவர்களாக மாறிவிட்டோம்.

இதற்கு முழு குற்றவாளிகளும் நாங்கள் தான் எங்களுடைய பிள்ளைகள் தான் அறுவடை செய்கின்றோம். வெளியிலிருந்து வந்து எங்களுக்கு தீமை செய்யலாம் ஆனால்  நாங்கள் திடமாக இருந்தால் எங்களை யாரும் மாற்றிவிட முடியாது.போதைவஸ்தை வெளியில் இருந்து விதைக்கிறார்கள் என்பதற்கு அப்பால் ஏன் இதற்குள் செல்கிறிர்கள் என்பதே கேள்வி?

போதைவஸ்தை ஏழைகள் செய்வதாக நினைக்கவேண்டாம் பணக்காரர்தான் அதனை வியாபாரமாக்கிறார்கள். இன்று போதைவஸ்தை பற்றி கதைக்கிறோம் 2009 ஆண்டிற்கு பின்னர் வடக்கில் எத்தனை மதுசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனை கண்டித்து ஏன்  பெண்கள் ஏன் இதனை தடுக்க முன்வரவில்லை? போராட்டம் செய்ய முன்வரவில்லை?  பெண்கள் எல்லாம் படித்தவர்கள்  பல இடங்களிலும் தலைமை பொறுப்பில் உள்ளார்கள் கார்கள் வாகனங்கள் ஒடுகிறார்கள்.

பெண்கள் போதை ,சீரழிவு போன்ற பிரச்சினைகளை கையில் எடுத்தால் இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தீரும் சமுதாயம் பழுதாவதற்கு இளம் பிள்ளைகளை பிழை கூறமுடியாது. பெற்றோரிடம் இருக்க வேண்டிய ஒழுக்கம் ,பண்பாடு ஆசிரியர்களிடம் இருக்கவேண்டிய ஒழுக்கம் பண்பாடு இவை சரியாக அமைகின்ற போதுதான் சமுதாயத்தை வழிநடத்த முடியும் என்றார்

பொலிஸார் சிறுவர்களையும் சித்திரவதைக்கு உட்படுத்தும் மனநிலையில் உள்ளனர் அம்பிகா சற்குணநாதன்

பொலிஸார் எங்களை தாக்கினார்கள்.  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர். அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் .எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்  மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

ஆசிரியர்கள் மாணவர்களிற்கு உடல்ரீதியான தண்டனையை வழங்கிய பொலிஸார் மாணவர்களை தண்டித்த  மில்லனியாசம்பவம் இலங்கையில் அரச அதிகாரிகள் சிறுவர்களிற்கு வன்முறைகளை தயக்கமின்றி பயன்படுத்துவதை  வெளிப்படுத்தியுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது புதிய விடயமல்ல,இது அமைப்பு ரீதியானது. தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் இவ்வாறான கலாச்சாரம்  தொடர்வதற்கு காரணமாக உள்ளது.

வன்முறைகளை இவ்வாறு மிகவும் சாதாரணமாக பயன்படுத்துவது சமூகத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக காணப்படுகின்றது.

எந்த வித தயக்கமும் இன்றி  உடனடியாக சித்திரவதைகளில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ள பொலிஸாருக்கு ஏனைய சூழ்நிலைகளில் வன்முறைகளை பயன்படுத்துவது கஸ்டமான விடயமாகயிருக்காது.

உதாரணத்திற்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வன்முறைகளை  அல்லது வீதியில் தவறான திசையில் வாகனத்தை செலுத்துபவர்களை தண்டிப்பது போன்றவை. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் எங்களை தாக்கினார்கள்  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர் அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்  மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட தொடங்கியது.

சித்திரவதை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் அடையாளங்கள் தெரியாமலிருப்பதற்காக கால்பாதத்தில் கொட்டனால் அடித்துள்ளனர்- ஸ்கான் பண்ணுவதன் மூலம் மாத்திரமே ஏற்பட்ட காயங்களை கண்டுபிடிக்க முடியும்.

இவற்றை பொலிஸ் நிலையத்தில் வைத்து செய்யவில்லை பொலிஸ் ஜீப்பில் கொண்டு செல்கையில் இதனை தெரிவித்துள்ளனர் – வழமையான தந்திரோபாயம்.

பொலிஸார் ஆபாசமான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்,இங்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து சித்திரவதைகளும் பெரியவர்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுபவை.

10 வயது மாணவர்கள் மீது  இந்த சித்திரவதைகளை பொலிஸார் பயன்படுத்தியமை மிருகத்தனம்  சமூகத்தில் ஆழமாக்கப்படுவதையும்,உளவியல் சமூக தலையீடுகள் அவசியம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க‌. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் திங்கட்கிழமை (07) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடி பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மீட்கப்பட்டவர்களில் 76 பேர் யாழை சேர்ந்தவர்கள்

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து படகில் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாமில் உள்ள வுங் தாவோ துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

மேற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் கட்டுமான பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 700 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BOT முறையின் ஊடாக இந்தியாவின் அதானி நிறுவனம், அதன் உள்நாட்டு பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை BOT முறையின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன