தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இலங்கை வந்தது!

இந்திய – தமிழக அரசின் உதவிப்பொதிகள் தாங்கிய இரண்டாவது கப்பல் கொழும்பை வந்தடைந்தது.
3 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதி மிக்க மனிதாபிமானஉதவி பொருட்களுடனான கப்பல் தூத்துக்குடியிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
இதில் 15000 மெட்ரிக்தொன் அளவான அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கியுள்ளன.
இப்பொருட்கள் பங்கீட்டு அடிப்படையில் நாடு முழுவதும் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
Posted in Uncategorized

தேர்தல் எப்போது? : பிரதமர் ரணில் பதில்!

அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டவுடன், பொருத்தமான 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும், அவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் பொது மக்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் எதிர் கொண்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க நாட்டு பிரஜை ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியுள்ளதுடன், அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடம் இருந்து அர்ப்பணிப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு காணப்பட்டால் மட்டுமே உலக நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரும் என பிரதமர் மேலும் கூறினார்.

அத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை அரசியல்வாதிகளும், ஒட்டுமொத்த மக்களும் உலகுக்கு நிரூபிக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனவே நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு , அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு பிரதமர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிபந்தனையுடன் இலங்கைக்கு உதவ ஐஎம்எப் இணக்கம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) இடம்பெற்றது.

இன்று பிற்பகல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான கொள்கை அடிப்படையிலான விடயங்கள் குறித்து நீண்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, பிரதமர், நிதியமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட பொருளாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

Posted in Uncategorized

உதவிகளை திசை திரும்பி விடும் வரலாறு இலங்கைக்கு உள்ளது! IMFஜ எச்சரிக்கும் முக்கிய ராஜதந்திரி

உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு இருப்பதாக திறந்த சமூக நிதியத்தின் (Open Society Foundations) தலைவர் Mark Malloch-Brown தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தனது விஜயத்தின் போது இந்த பிரச்சினையை நிகழ்ச்சி நிரலில் வைப்பதன் மூலம் நாட்டை இந்த பிரச்சினை இருப்பதற்கான காரணத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அப்படி செய்யவில்லை என்றால், உதவிகள் அத்தியவசியமாக தேவைப்படும் மக்களுக்கு பதிலாக ஊழல் அரசியல்வாதிகள் பிணை எடுப்பதற்கான ஆபத்து இருப்பதாகவும் Brown எச்சரித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் ஊழலான ஆட்சி என பொருளாதார நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் Brown இதனை கூறியுள்ளார்.

அமைப்பு ரீதியான ஊழல், நாட்டின் கடன் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர் நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கைக்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு தொடர்பான நிகழ்ச்சி நிரலில் இந்த பிரச்சினை உள்ளடக்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் தற்போது இலங்கை வந்துள்ளனர். நெருக்கடியை தீர்க்க இலங்கை கடன் மறுசீரமைப்பை எதிர்பார்த்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ராஜதந்திரியான Mark Malloch-Brown, கொபி அன்னான்( Kofi Annan) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக பணியாற்றிய காலத்தில், பிரதி செயலாளர் நாயகமாக பணியாற்றினர்.

பிரித்தானிய தொழிற்கட்சியின் முன்னாள் உறுப்பினரான Mark Malloch-Brown 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஆபிரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

தம்மிக பெரேரா அமைச்சராக பதவியேற்றார்!

வர்த்தகர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் அவர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து அவரின் பாராளுமன்ற ஆசனத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார

தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரஸ்யாவிடம் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் இதுவரை கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் எரிபொருளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினடம் ஒப்படைக்காமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை அஞ்சுவதாகவும் தெரிவித்த அவர், அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் மக்களின் சகிப்புத்தன்மை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மன்னாரில் பாடல் தளமாக விளங்கும் அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேப் பெருவிழா

மன்னாரில் பாடல் தளமாக விளங்கும் அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேப் பெருவிழா வியாழக்கிழமை (30.06.2022) கர்மாரம்பம். இதைத் தொடர்ந்து எண்ணெய்க் காப்பு மஹா கும்பாபிஷேகம் 06.07.2022 இடம்பெறும்.

மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வரம் ஆலய புனரமைப்பைத் தொடர்ந்து இவ் ஆலயத்தில் கும்பாபிஷேகம் இடமபெறுவதற்கான சகல எற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதாவது இவ் ஆலய திருத்தல் வேலைகளுக்காக அங்கு இருந்த விக்கிரங்கள் யாவும் ஆலயப் பகுதியிலிருந்து வெளியில் கொண்டு வரப்படடிருந்தன

தற்பொழுது இவ் ஆலய புனரமைப்பு வேலைகள் பூர்த்தி அடைந்த நிலையிலேயே இவ் விக்கிரங்கள் யாவும் அதன் இடங்களில் மீண்டும் வைக்கும் நிகழ்வாகவே இவ் நிகழ்வு இடம்பெறுகின்றது.

இதை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலயத்தில் 30.06.2022 அன்று வியாழக்கிழமை பகல் 10.45 மணிக்கு இதற்கான கர்மாரம்பம் கிரிகைகள் வழிபாடுகள் ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் 03.07.2022 அன்று இவ் ஆலயத்திலிருந்து வெளி கொண்டுவரப்பட்ட விக்கிரங்கள் அந்தந்த இடங்களில் வீற்றிருக்கும் ஏற்பாடுகள் இடம்பெறும்.

இதைத் தொடர்ந்து எண்ணெய் காப்பு சடங்குகள் 3,4.5 ந் திகதிகளில் (03,04,05.07.2022) இடம்பெறும்.

இதைத் தொடர்ந்தே 06.07.2022 அன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையான உத்தர நட்சத்திரம் சிம்மலக்கின நன்முகூர்த்தத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெறும்

இவ் கும்பாபிஷேக நிகழ்வுக்கு இலங்கையிலுள்ள பிரசித்திப் பெற்ற குருக்கள் சிவச்சாரிகள் அத்துடன் இந்தியாவிலிருந்தும் முப்பதுக்கு மேற்பட்ட குருக்களும் மற்றும் நல்ல ஆதினத்தினரும் பலர் கலந்து கொள்ள இருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவாரங்கள் திருப்பாடல்கள் பாடுவோரும் இந்தியாவிலிருந்து வருகை தர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆலயத்தில் சிவன் மற்றும் அம்பள் அவர்களை சுற்றி 24 சந்நிதிகள் காணப்படுகின்றன. இவர்களுக்கே இவ் கும்பாபிஷேகம் நடைபெறும்.

பின் 07.07.2022 மண்டல அபிஷேகம் இடம்பெறும். நாளாந்தம் இரண்டு பெரிய பூiஐகள் 48 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

இவ் ஆலயம் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகிய நிலையிலேயே தற்பொழுது பூர்த்தி அடைந்த நிலைக்கு வந்துள்ளது

இவ் புனரமைப்பு வேலைகளுக்கு என இந்திய அரசாங்கம் 325 மில்லியன் ரூபாவும் இத்துடன் சுமார் 480 மில்லியன் ரூபா ஆலய நிதி பக்தர்கள் மற்றும் வெளிநாடு உள்நாடு நலன் விரும்பிகளின் நிதியிலும் இவ் வேலைகள் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

Posted in Uncategorized

யாழில் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

பத்திரிக்கை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால் விநியோக பணிகள் பாதிக்கப்படவுள்ளன. அதனால் பத்திரிகைகள் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன தலைவர்கள் , ஆசிரியர் பீடத்தினர் வடமாகாண ஆளூநர் , மாவட்ட செயலர் ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழில் மூன்று தொலைகாட்சி நிறுவனங்கள், வானொலி சேவைகள் என்பன உள்ளடங்கலாக 10 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளன.

அவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் ஊடக பணியாளர்கள் என பலரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேபோன்று யாழில் இருந்து கொழும்பில் உள்ள ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சிங்கள மக்களின் அமைதியை தெருவில் இறங்கினால் தெரிந்துகொள்ளலாம் – சரத் வீரசேகரவிற்கு சுரேந்திரன் பதில்

சரத் வீரசேகர அவர்கள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டது சிங்கள மக்கள் அமைதியாக இருந்ததால் தானோ? சிங்கள மக்களின் அமைதியை குலைத்தது தமிழர்கள் அல்ல, அம்மக்களை ஏமாற்றிய சிங்கள பௌத்த வேடதாரிகள் என அந்த மக்களே தெளிவாக கூறியுள்ளனர்.

தாங்கள் தெருவில் இறங்கி சிங்கள மக்களுடன் சகஜமாக உரையாட முடியுமா? அவர்களின் அமைதியைக் குலைத்தது நீங்கள்தான். அவர்கள் பொறுமையை தமிழ்மக்கள் சோதிக்கவில்லை.

மதவாதத்தி்ன் பின்னால் ஒழித்து பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு இனி மக்கள் மசிய மாட்டார்கள். குருந்தூர் மலை புராதன தமிழர் பிரதேசம். அப்பிரதேச மக்களின் காணிகளை அபகரித்து, நீதிமன்ற உத்தரவையும் மீறி, நாடு பாரிய பொருளாதார சிக்கலை எதிர் கொண்டிருக்கும் வேளையில் புத்தர் சிலை அமைப்பதற்கான அவசியம் என்ன?

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து நமது இன குடிப்பரம்பலில் சிதைத்து நமது தாயகக் கோட்பாட்டை மழுங்கடிக்கும் இன அழிப்பு நடவடிக்கையே இதுவாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். அப்பிரதேச மக்களே அந்தப் போராட்டத்தில் அவரோடு கலந்து கொண்டவர்கள். ஆனால் அங்கு பெளத்த விகாரை அமைக்க வந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அந்தப் பிரதேசத்தை சாராதவர்களே அங்கு வந்திருந்தார்கள்.

தொல்லியல் ஆணைக்குழு அதிகாரிகள் வேறு மதத்தினரின் புராதன சின்னங்களை மீளக் கட்டி அமைப்பதற்கு என்றாவது முயன்றிருக்கிறார்களா?
பௌத்த மதச் சின்னங்களை மீள கட்டுவதற்கு மாத்திரமே துணை போகிறார்கள்.
இப்படியான நடவடிக்கைகள் தான் மக்கள் அமைதியை குலைக்கும் செயல் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதை நியாயப்படுத்தும் நீங்கள் அமைச்சுப் பதவிக்கு அல்ல பாராளுமன்ற பதவிக்கே தகுதியற்றவர் என்பதை சிங்கள மக்களே தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் நீங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டீர்கள். உங்கள் நிலையை புரிந்துகொண்டு வீர வசனங்களை பேச வேண்டும்.

சிங்கள மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நீங்கள், உங்கள் இருப்பை தக்க வைப்பதற்காக அவர்களுடைய அமைதியை தமிழர்கள் குலைக்க முற்படுவதாக பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றும் உங்களுடைய கபடத்தனம் இனிமேலும் பலிக்காது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் இன குடிப்பரம்பலில் சிதைக்கும் எந்த நடவடிக்கைக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். போராடுவோம். தடுத்து நிறுத்துவோம். அது தமிழ் மக்களின் உரிமை. இது சிங்கள மக்களின் அமைதியை சோதிக்கும் விடயமே அல்ல என்பதை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ள வேண்டும்

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது கால அவகாசம்! பகிரங்க அறிவிப்பு

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்கள் இன்றி வெறுமனே நாடாளுமன்றத்தின் காலத்தை இழுத்துக் கொண்டு செல்வதனை அனுமதிக்க முடியாது என்றும், இதனால் நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்கும் தாம், திட்டங்களை முன்வைப்பதற்காக அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்குவதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மருந்து தட்டுப்பாட்டால் பிள்ளைகள் வைத்தியசாலைகளில் இறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சாதாரண மக்கள் எரிபொருள், எரிபொருள் வரிசைகளில் இறக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் விவசாயிகள் தமது விவசாய காணிகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கட்டட நிர்மாணத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தலை தூக்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.