ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சின் நுழைவாயில்கள் மறிப்பு; கைதான 21 பேருக்கு பிணை

ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் லோட்டஸ் வீதியிலுள்ள நுழைவாயில்களை மறித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 21 பேரும் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் தேரர் ஒருவரும் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி அமைச்சு மற்றும் திறைசேரிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு நுழைவாயில்களை
ஆர்ப்பாட்டகாரர்கள் மறித்துள்ளதுடன், அந்த நுழைவாயில்களுக்கு முன்பாக சிறிய கூடாரங்களை
அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால், அத்தியாவசிய சேவைகளுக்கு சென்ற அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கும்
இடையில் நடத்தப்படவிருந்த கலந்துரையாடலுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து கோட்டாகோகம போராட்டக்களம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று 73 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால், ஜனாதிபதி செயலகத்தின் ஏனைய இரண்டு
நுழைவாயில்களும் இன்று அதிகாலை மறிக்கப்பட்டன.

இதனால் ஜனாதிபதி செயலகத்திற்கான மூன்று நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளதுடன்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இதன் பின்னர் குறித்த இடத்தில் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடனுதவி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

துறைமுக அபிவிருத்தியின் பின்னர் இந்தியாவில் இருந்து நேரடியாக சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் : சாட்சியாளரான புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வாளருக்கு திட்டமிட்ட கும்பல் அழுத்தம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சியாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்றின் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுவது குறித்து தகவல்கள் உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வுக்கு அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த, தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவரும் பின்னர் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கடமையாற்றியவருமான புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான முரளி எனும் சுமதிபால திருக்குமார் எனும் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளருக்கும் அவ்வழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நியாயமான சந்தேகம் இருப்பதால் அது குறித்து விசாரணை ஒன்று அவசியம் என வழக்கை நெறிப்படுத்தும் சட்ட மா அதிபர் திணைக்கள குழுவுக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிபதிகளுக்கு அறிவித்தார்.

அதன்படி, எக்னெலிகொட விவகாரத்தில் சாட்சியாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்றூடாக, நிலைப்பாட்டை மாற்றி சாட்சியம் அளிக்க அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என்பது குறித்து மிக விரைவான விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அடுத்த தவணைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் குமாரவுக்கு உத்தரவிட்டது.

இந் நிலையில் குறித்த வழக்கில் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வாளர்களின் பிணையும் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கடும் எச்சரிக்கையுடன் மீண்டும் முன்பிருந்த நிபந்தனைகலின் கீழ் பிணையில் செல்ல கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வு அவர்களுக்கு அனுமதியளித்தது. மீண்டும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தெரியவந்தால் பிணை வழக்கு முடியும் வரை ரத்து செய்யப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

அதன்படி, எக்னெலிகொட விவகாரத்தின் பிரதிவாதிகளான கிரித்தலை இராணுவ புலனாய் முகாமின் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்டினன் கேர்ணல் சம்மி அர்ஜுன குமாரரத்ன, ஸ்டாப் சார்ஜன் வடுகெதர வினிபிரியந்த டிலஞ்சன் உபசேனா எனபப்டும் சுரேஷ், ஸ்டாப் சார்ஜன் ஆர்.எம்.பி.கே. ராஜபக்ஷ எனும் நாதன், ஸ்டாப் சார்ஜன் செனவிரத்ன முதியன்சலாகே ரவீந்ர ரூபசேன எனபப்டும் ரஞ்சி, சமிந்த குமார அபேரத்ன, எஸ்.எம். கனிஷ்க குமார அபேரத்ன, ஐய்யா சாமி பாலசுப்ரமணியம், கி.ஜி. தரங்க பிரசாத் கமகே, எரந்த பீரிஸ் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவ்வழக்கு நீதிபதி சஞ்ஜீவ மொராயஸ் தலைமையில் மகேன் வீரமன் மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்னால் விஷேட மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இதற்கான உத்தர்வு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் நேற்று முன்தினம் மன்றில் சாட்சியமளித்த, அரச தரப்பின் 4 ஆவது சாட்சியாளரான முரளி எனும் சுமதிபால திருக்குமார், முன்னதாக சி.ஐ.டி. க்கு அளித்த வாக்கு மூலம் மற்றும் ஹோமாகம நீதிவானுக்கு குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயம் பிரகாரம் அளித்த இரகசிய வாக்கு மூலத்துக்கு மாற்றமான நிலைப்பாட்டை சாட்சியாக வழங்கிய நிலையில், அவரை அரச தரப்புக்கு எதிரான சாட்சியாளராக சட்ட மா அதிபர் தரப்பு பெயரிட்டது.

அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கைஎடுக்க எதிர்ப்பார்ப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் இந்த விவகாரத்தை நெறிப்படுத்தும் குழுவில் உள்ளடங்கும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா நீதிமன்றுக்கு அறிவித்தார். ஏற்கனவே 3 ஆம் சாட்சியாளரான ரண்பண்டா என்பவர் தொடர்பிலும் அதே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந் நிலையிலேயே, 4 ஆம் சாட்சியாளரின் மேலதிக சாட்சி நெறிப்படுத்தல்கள் மற்றும் சாட்சிகள் கட்டளை சட்டத்தின் 154 ஆவது அத்தியாயத்துக்கு அமைவான குறுக்கு விசாரணைகள் நிறைவுறும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என மன்றில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

எனினும் குறித்த சாட்சியாளரான சுமதிபால திருக்குமார் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க, அவ்வாறு அவரை விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது என வாதிட்டார்.

எனினும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா ஆகியோர் முன் வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், சாட்சியாளரான சுமதிபால திருக்குமாரை அடுத்த தவணை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

வழக்கில் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனில் சில்வா, அனுஜ பிரேமரத்ன, அனுர மெத்தேகொட உள்ளிட்டோர் ஆஜராகினர். பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆஜரானார்.

2010 ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய காலப்பகுதிக்குள், கிரிதலே, கொஸ்வத்த மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில், தம்முடன் தொடர்பில்லாத நபர்களுடன் இணைந்து பிரகீத் எக்னெலிகொடவை இரகசியமாக சிறைவைக்கும் நோக்கத்தில் கடத்திச் சென்றமை, அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜி எல் பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழில் போராட்டம்

வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது.

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறி அதற்கு எதிராக நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஜ.நா.அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.

இதன் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் அமைச்சரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர்.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தனியார் துறையினருக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு அரசாங்கம் தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனியார் துறையினரும் பின்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென தொழில் அமைச்சின் செயலாளர்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை வழமைக்கு திரும்பும் வரை அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் உரிய வேலைத்திட்டங்களை பின்பற்றுமாறு அரசாங்கத்தினால் தனியார் பிரிவினரிடம் கேட்டுக்கொள்ளப்படுவதாக தொழில் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

100க்கும் மேற்பட்ட அவுஸ்ரேலியப் படை வீரர்கள் அடங்கிய விமானத்தில், கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு குறித்த 41 பேரும் நாடு கடத்தப்பட்டது.மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் நேற்று இரவு விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதனை அடுத்து நேற்றிரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மர்லன் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களில் 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பிரதேசங்களை சேரந்தவர்களாகும். . இவர்களில் 35 பேர் பெரியவர்களாகும், மற்ற ஆறு பேர் 16 வயதுக்குட்பட்டவர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வு

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், உணவு, மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை காணப்படுவதால் அந்நாட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ், எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் உணவு பொருள்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது.

இந்நிலையில் இலங்கை நிலைமை குறித்து வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை இணை மந்திரிகள் முரளீதரன், மீனாட்சி லேகி, ராஜ்குமார் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் பாஜகவை சேர்ந்த ராஜ்தீப் ராய் மற்றும் ஜிவி எல் நரசிம்மராவ் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திமுக எம்பி திருச்சி சிவா, பிஜு ஜனதா தளம் சார்பில் சுஜீத் குமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி, அந்நாட்டில் வெளியேறி இந்தியாவிற்கு வருவோர் உள்ளிட்டவை குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவின் பங்கு குறித்த சாதகமான சூழ்நிலை குறித்து விவாதம் நடைபெற்றதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

இந்த கடினமான நேரத்தில் நமது அண்டை நாடான இலங்கையுடன் நிற்பதன் அவசியத்திற்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் பாதிக்கப்படலாம் – UNICEF எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் மோசமாக பாதிக்கப்படலாம் என UNICEF எச்சரித்துள்ளது.

UNICEF அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார்.

உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மோசமாக பாதிக்கப்படலாம் என நாங்கள் அச்சமடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையும் காலிமுகத்திடலும்

-நிலாந்தன் –

நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் திருவிழாக்களில் கூடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டங்களில் கூடுகிறார்கள்.வல்லிபுர ஆழ்வார் கோவில், பாசையூர் அந்தோணியார் கோவில், வற்றாப்பளை அம்மன் கோயில் போன்றவற்றில் திருவிழாக்கள் அமோகமாக நடந்தன. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கண்டியில் கிரிக்கெட் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சனங்கள் அணியும் ஆடைகள்,எடுப்புச் சாய்ப்பு எதிலுமே பொருளாதார நெருக்கடியைக் காணமுடியவில்லை.

ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் கூறினார் 12 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 11 பேருக்கு உணவுத் தட்டுப்பாடு இருப்பதாக.அவர்கள் ஒரு வேளை அல்லது இரு வேளை உணவையே உட்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இம்மாணவர்கள் பெருமளவுக்கு கிழக்கு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.எனவே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும் விதத்தில் “கொம்யூனிட்டி கிச்சின்களை” உருவாக்கியிருப்பதாகவும்அவர் தெரிவித்தார்.

அவ்வாறான சமூகப்பொதுச் சமையலறைகளை குறித்து ஏற்கனவே மனோகணேசன் பேசிவருகிறார்.நகர்ப்புறத் தொடர்மாடிக் குடியிருப்பாளர்களுக்கு அவ்வாறு பொதுச் சமையல் அறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.கடந்தகிழமை அக்கரைப்பற்றில் அவ்வாறான முயற்சிகளை சில முஸ்லீம் நண்பர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.“வீட்டிலிருந்து ஒரு பார்சல்” என்ற பெயரில் அது மருதமுனை,சாய்ந்தமருது,மாளிகைக்காடு,கல்முனைக்குடி,பாலமுனை போன்ற கிராமங்களுக்கு வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது.

அதாவது சமூகப் பொதுச்சமையலறை மூலம் உணவூட்டப்பட வேண்டிய ஒரு தொகுதியினர் உருவாகி வருகிறார்கள் என்று பொருள்.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க முன்பிருந்ததைவிடவும் நிலைமை பாரதூரமானதாக மாறிவருகிறது என்று பொருள்.அவர் பதவியேற்க முன்பிருந்ததை விடவும் இப்பொழுது எரிபொருளுக்கான வரிசைகள் அதிகரித்த அளவிலும் மிக நீண்ட வகைகளாகக் காணப்படுகின்றன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை எரிபொருளுக்காக யாழ்ப்பாணத்தில் பல கிலோ மீட்டர் நீளமான வரிசைகள் காணப்பட்டன. யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் இவ்வாறான மிக நீண்ட வரிசைகள் காணப்பட்ட ஒரு நாள் அது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிலர் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து அதில் வேலைக்கு வருகிறார்கள்.ஒரு நாளைக்கு சைக்கிள் வாடகை 150 ரூபாய்.

ஆனால் நாட்டின் பிரதமரும் அமைச்சர்களும் குறிசொல்வோராக மாறி விடடார்கள் என்று கடந்த வியாழக்கிழமை ஐலன்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் விமர்சித்திருந்தது.பிரதமர்,அமைச்சர்கள்,எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எனைய அரசியல்வாதிகளை, அந்த ஆசிரியர் தலையங்கம் ஞானா அக்காவின் மச்சான்கள் என்று வர்ணித்திருந்தது.

அதாவது கோட்டா கோகம,மைனா கோகம,ஹிரு கோ கம போன்ற போராட்ட கிராமங்கள் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிகளை இப்பொழுது மேலும் தீவிரமாகியிருக்கின்றன.இப்படிப் பார்த்தால் இப்பொழுதுதான் போராட்டமும் அதிகரிக்கவேண்டும். ஒன்றல்ல பல கிராமங்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். ஆனால் இருக்கின்ற கோட்டா கோகம கிராமமும் தற்பொழுது சோர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அக்கிராமத்தை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்தார்கள்.இப்பொழுது அவ்வாறான திரட்சி காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின் நிகழ்ந்த மாற்றங்களில் அதுவும் ஒன்று. போராட்டக் கிராமங்கள் சோரத் தொடங்கி விட்டன என்பது.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் குமார் குணரட்னம் அதை ஏற்றுக் கொண்டார். கோட்டா கோகம கிராமத்தில் வினைத்திறனோடு செயற்படும் பல்வேறு அமைப்புக்கள் மத்தியில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்பும் காணப்படுகிறது. போராட்டத்தில் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் சோரத் தொடங்கியதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். அவற்றுள் முக்கியமானவை வருமாறு.

முதலாவது காரணம் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை.அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதோடு நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஒப்பீட்டளவில் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.தென்னிலங்கையில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் எனப்படுவது பெருமளவுக்கு யு.என்.பிக்கு ஆதரவானது.அதில் ஒரு சிறு பகுதி ஜேவிபியினால் ஈர்க்கப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக் கிராமங்களுக்கு மேற்படி நகர்ப்புற படித்த,நடுத்தர வர்க்கத்தின் ஆசீர்வாதம் அதிகளவு உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார். ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட பின் மேற்படி நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் போராட்டத்துக்கான உத்வேகம் குறைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம்.அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கவல்ல பலமான கட்டமைப்புக்கள் எவையும் அங்கே கிடையாது. ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட அமைப்போ கட்சியோ அங்கு இல்லை. போராட்டக்களத்தில் காணப்படும் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்கள் தங்களுக்கிடையே இறுக்கம் குறைந்த இணைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் என்ற ஒரு ஒற்றைப் புள்ளியில் அவர்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் அந்தப்பிணைப்பு மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு மையத்திலிருந்து நிர்வகிக்கப்படுகின்ற, ஒரு தலைமைத்துவத்துக்கு கீழ்ப்பட்ட பிணைப்பு அல்ல.மாறாக பக்கவாட்டில் ஒருவர் மற்றவரோடு கொள்ளும் சுயாதீனமான பிணைப்புக்கள். இவ்வாறு பலமான தலைமைத்துவமோ அல்லது பலமான நிறுவனக் கட்டமைப்போ இல்லாத ஒரு பின்னணியில் இதுபோன்ற போராட்டங்கள் காலப்போக்கில் சோர்ந்து போகும் ஆபத்து உண்டு. இது இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம்.சனங்கள் நெருக்கடிகளுக்கு இசைவாக்கம் அடைந்து வருவது. நெருக்கடியின் தொடக்க காலத்தில் அவர்களுக்கு அது பாரதூரமாகத் தெரிந்தது.ஆனால் இப்பொழுது அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.இயல்பின்மையே இயல்பானதாக மாறிவிட்டது. இதுதான் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கும் நடந்தது. ஏன் ஆயுத மோதல்களுக்கு பின்னரான காலங்களிலும் அதுதானே நிலைமை?அந்தக் கூட்டு அனுபவம்தான் பின் வந்த வைரஸ் பிரச்சினை,இப்பொழுதுள்ள பொருளாதாரப் பிரச்சனை போன்றவற்றை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொழுதும் அவர்களுக்கு உதவுகின்றது. இப்பொழுது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களும் நெருக்கடிகளுக்கு பழக்கப்பட்டு வருகிறார்களா?அதனால்தான் போராட்டத்தின் தீவிரம் குறைந்து வருகிறதா?

நாலாவது காரணம், மக்கள் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக நீண்ட நேரம் மிக நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கிறார்கள். தமது வயிற்றுப்பாட்டுக்காக இவ்வாறு நீண்டநேரம் காத்திருப்பதால் அவர்களுக்கு போராடுவதற்கு நேரம் குறைவாகவே கிடைக்கிறது.

ஐந்தாவது காரணம், எரிபொருள் விலை உயர்வினால் போக்குவரத்து ஒரு பிரச்சினையாக மாறியிருப்பது.நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்து காலிமுகத்திடலை நோக்கிப் பயணம் செய்வதற்குப் பெருந்தொகை பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு காரணம்.

மேற்கண்ட காரணங்களின் தொகுக்கப்பட்ட விளைவாக போராட்ட கிராமங்களில் ஒருவித தொய்வு ஏற்பட்டிருக்கிறது.போராட்டங்களின் விளைவாக மஹிந்த வெளியேறிவிட்டார்.பஸில் வெளியேறிவிட்டார்.இது போராடும் தரப்புக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வேண்டும். மஹிந்தவையும் பசிலையும் அகற்றியது போல கோட்டாபயவையும் அகற்றலாம் என்ற நம்பிக்கை இப்பொழுதுதான் அதிகரிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படியாகத் தெரியவில்லை.

எனினும் போக்குவரத்துச் செலவு காரணமாக காலிமுகத்திடலில் கூடுவோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும்,சிறிய பரவலான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.மக்கள் தாங்கள் வாழும் இடங்களில் ஆங்காங்கே சிறியளவில் எதிர்ப்புகளை அவ்வப்போது காட்டிவருவதாக கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அதாவது ஒரு மையமான இடத்தில் பெருந்தொகையானவர்கள் கூடுவதற்கு பதிலாக சிதறலாக பரவலாக சிறிய அளவில் எதிர்ப்புக்கள் காட்டப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குமார் குணரட்னம் தமிழ் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடலுக்கு வந்தால் போராட்டத்தின் பரிமாணம் வேறு விதமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது. குமார் குணரட்ணம் வடக்கிற்கு வந்த அதே காலப்பகுதியில்தான் குருந்தூர் மலையில் புதிய தாதுகோப கலசத்தை பிரதிஷ்டை செய்யும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது.

ஆனால் அந்த மரபுரிமை ஆக்கிரமிப்பை குறித்து கண்டியிலும் காலிமுகத்திடலிலும் கோட்டா கோகம கிராமங்களில் எதிர்ப்புகள் காட்டப்படவில்லை. மாறாக இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்துடன் கோட்டாபாய அரசாங்கம் செய்து கொண்ட டீலுக்கு எதிராக காலிமுகத்திடலில் எதிர்ப்புக் காட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் விசாரித்தபொழுது அது தொடர்பான செய்திகள் தமக்கு உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று கொழும்பு கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் தென்னிலங்கையில் போராடும் தரப்புக்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு கிடைத்த மிகப்பிந்திய தருணங்களில் அதுவும் ஒன்று.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டா கோகம கிராமத்திலிருந்து செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார்கள்.கோட்டா கோகம கிராமத்திலிருந்து யாழ்.நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களை கையளிப்பது அவர்களுடைய வருகையின் நோக்கம்.அது ஒரு நன்நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்மக்களின் கூட்டுக்காயங்களை சுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அதில் உண்டு. அதேசமயம் தமிழ் மக்களின் கூட்டுக்காயங்கள் இதுபோன்ற நற்செயல்களால் மட்டும் சுகப்படுத்த முடியாத அளவுக்கு ஆழமானவை,தொடர்ந்து புதுப்பிக்கப்படுபவை என்பதைத் தமிழ் செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். குருந்தூர்மலை ஆக்ரமிப்பு அதை நிரூபிக்கக் கிடைத்த ஆகப்பிந்திய உதாரணங்களில் ஒன்று.

கிழக்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படாது என்கின்றது அரசாங்கம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது.

இவ்வாறு துறைமுக தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் செலவில் அதற்கு சொந்தமான முனையமாக மாற்றுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுகத்தின் முனையத்தில் உள்ள கிரேன்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்திற்கு 270 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளில் கிரேன்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் மேலும் 39 மில்லியன் டொலர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பொறுப்பு என நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டினார்.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்கும் சரவதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் தெரிவித்ததாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

Posted in Uncategorized