அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலைக்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும் – சபா குகதாஸ் தெரிவிப்பு

நாட்டின் மொத்த சனத்தொகையில் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்கள் அவர்களது சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள் வலுப் பெறுகின்ற சம நேரத்தில் நாட்டில் சகல அடிப்படைப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்கின்றன இவ்வாறான விலை அதிகரிப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ்தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பள உயர்வுக் கோரிக்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஊதியம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கான குறைநிரப்பு செயற்பாட்டை அடிப்படை பொருட்களின் விலை உயர்வு மூலமே அரசாங்கம் பெற முயற்சிக்கின்றது அத்துடன் அதிகரித்த சம்பளத்தை உடனடியாக பொருட்களின் விலை உயர்வு மூலம் பறித்தெடுக்கின்றது அரசாங்கம்.

அரசாங்கம் வருமான மார்க்கங்கள்  யாவற்றையும் இழந்து அன்னியச் செலாவணியை பெறமுடியாத சூழ்நிலையில்  இருக்கின்ற போது சம்பள உயர்வு கோருவதால் அரசாங்கமே தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்  கொள்வதற்காக விலை உயர்வை கையில் எடுக்கின்றது.

சம்பள உயர்வு கோரல் மூலம் மேற் கொள்ளப்படும் விலை உயர்வு   அரச ஊழியர்களை மாத்திரமல்ல நாட்டின் ஏனைய இரண்டு கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும் மிகக் கொடூரமாக பாதிக்கும் இதனால் சம்பள உயர்வுக்கான போராட்டங்களை விட பொருட்களுக்கான நிர்ணய விலை கோரிய போராட்டங்கள் வலுப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார் .

மேலும் அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலையே பெரும் எண்ணிக்கையில் வாழும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திற்கு  ஆதாரமாக இருக்கும் எனவே அரசாங்கம் அடிப்படைப் பொருட்களின் விலைகளை நிர்ணய முறையில் பேண வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டங்கள் தென்னிலங்கையில் வலுவடைந்து வட இலங்கையிலும் பரவலடைய வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

சமாதான நீதவான்கள் 22 பேர் ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பியால் நியமனம்

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா அவர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 பேருக்கு முதற்கட்டமாக சமாதான நீதவான் பதவி நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற இச் சமாதான நீதவான் பதவியானது கோ.கருணாகரம் ஜனா அவர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட சிலரில் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டவர்களுக்கான நியமனத்தினை இன்றைய தினம் அவர் வழங்கி வைத்தார்.

இதன்போது பா.உ ஜனா கருத்துத் தெரிவிக்கையில்,

பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தற்போது உங்களுக்கு இந்த நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை மக்களைக் கருத்திற்கொண்டு சேவையாற்ற வேண்டும். இதனை வருமானம் ஈட்டும் செயற்பாடாகக் கருதாமல் மக்களின் குறைகளை நிவர்த்திக்கக் கூடியவாறு செயற்பட வேண்டும். இதன் கௌரவத்தினைப் பாதிக்காத வண்ணம் உங்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் – பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி

மலையக மக்களுக்கு 10000 வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறும் என இந்திய பாரதீய ஜனதாக்கட்சியின் உறுப்பினர் K.அண்ணாமலை  உறுதியளித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள சுகததாச உள்ளரங்கில்  நடைபெற்ற  “நாம் -200” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்தியாவிலிருந்து இந்திய பிரதமரின் சார்பாக இங்கே வந்த நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் அவர்கள் முக்கியமான விடயங்களை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து அறிவித்திருக்கிறார். குறிப்பாக மலையக தமிழர்களினுடைய நெடுநாள் கோரிக்கை நான்காயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருந்தாலும்  கூட இன்னும் நிறைய வீடுகள் வேண்டும் என்பது உங்களுடைய கோரிக்கை.

இந்திய அரசு 2020 இல் இந்த் அறிவிப்பை வெளியிட்டும் அது மூன்றாண்டு காலமாக கொரோனா காரணமாக அது நடைபெறாமல் அந்த திறப்பு விழா இன்று நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக 10000 வீடுகள், அதற்கான அந்த வீடுகளுக்கான foundation ஸ்டோனை  நடைபெறக்கூடிய விழாவில் நாங்கள் பார்த்தோம்.

கடந்த ஆண்டு மே மாதம் இங்கிருந்து நுவரேலியாவுக்கு வந்த பொழுது வந்து உங்களுடைய இல்லங்களை பார்க்கும் பொழுது நிச்சயமாக எனக்கும் தோன்றியது ஒரு தமிழனாக இந்த மக்களுக்கு அற்புதமான வீடுகள் தேவை என்று. இன்றைக்கு அது நடந்திருக்கிறது மிக வேகமாக அந்த 10000 வீடுகளும் கட்டி முடித்து உங்களினுடைய கைகளுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அதைத்தாண்டி மிக முக்கியமான முடிவுகளையும் இலங்கையினுடைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

உங்களுடைய நீண்டநாள் கோரிக்கையாக இருக்க கூடிய  நிலத்தினுடைய உரிமை அந்த முடிவையும் கூட அறிவித்திருக்கின்றார். நிச்சயமாக மலையக தொழிலாளர் அனைவரினுடைய கையிலே அவர்களுக்கு சொந்தமாக ஒரு பட்டா  நிலம் இருக்கும் என்பதும் கூட ஊர்யிதமாக இருக்கிறது. அதுவும் ஆண்டவன் அருளால் நிச்சயமாக முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணை இந்திய – சீன பலப்பரீட்சை களமாக மாறின் முதலில் அழியப்போவது தமிழர்களே- எச்சரிக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சி

பாக்கு நீரிணையில் இந்திய – சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின், முதலில் அழிவது ஈழத் தமிழர்கள்தான் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் இடம்பெறுவதாவது:

இந்து சமுத்திர அதிகார போட்டியில் மையப்புள்ளியாகும் பாக்கு நீரிணையும் தமிழர்களின் வாழ்வாதாரமும் 99 வருட ஒப்பந்த அடிப்படையில் அம்பாந்தோட்டையை கையகப்படுத்திய சீனா. தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.

சீனா போன்ற ஒரு பெரிய தேசம் வடக்கில் மீன்பிடிக்க வரவில்லை. தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தமிழர்களை இடம்பெயரச் செய்து, பாக்கு நீரிணையை தம்வசப்படுத்தி தமிழர் தேசத்தை தமது பிராந்தியமாக்கி, அதனூடாக முழு இலங்கையையும் பாக்கு நீரிணையின் மறுபக்கமான தமிழகத்தையும் கேரளாவையும் தமது கட்டுப்பாட்டு பிராந்தியமாக்குவதே அவர்களது பிரதான இலக்காகும்.

அதன் ஆரம்ப கட்டம்தான், வடகடல் எங்கினும் மக்கள் தமது ஜீவனோபாயமாக சிறுகடல் தொழில் மேற்கொண்ட பிரதேசங்களை அவர்களிடம் இருந்து பறித்து, அட்டை வளர்ப்பு பண்ணைகளாக மாற்றியிருக்கிறார்கள்.

இன்று அட்டை வளர்க்கும் கடல் பிரதேசங்கள் தமது இயற்கை சமநிலைத் தன்மையினை இழந்து வருகின்றன. அந்த பண்ணைகளில் பாவிக்கப்படும் உயர் தன்மையுடைய வெளிச்சங்களால் மீன்களின் கருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் நில ஆக்கிரமிப்புக்கான நகர்வுகளை எமது மக்களின் இருப்பு, அவர்களின் பொருளாதாரம், எதிர்காலம் கருதி அவர்களது வருகையை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.

திருகோணமலையையும் பாக்கு நீரிணையையும் யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களால்தான் ஆசியாவையும் இந்துமா சமுத்திரத்தையும் கையாள முடியும். இதன் நிமித்தமே போர்த்துக்கீசர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் வந்தார்கள், வென்றார்கள், ஆண்டார்கள், சென்றார்கள்.

ஆனால், சீனாவின் நகர்வு வெற்றி பெறுமானால், ஒருபோதும் பாக்கு நீரிணையை விட்டுச் செல்லமாட்டார்கள். இந்துமாகடல் சீனமயமாகும்.

இந்தியா ஒரு மெத்தனப் போக்கோடு இலங்கையை எப்போதும் கையாளலாம் என என எண்ணுகிறது. அதன் வெளிப்பாடுதான் அண்மைய இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்திய நிதி அமைச்சர்களின் வருகையின்போதும் தமிழ் தலைமைகள் புறக்கணிக்கப்பட்டமை ஆகும்.

பிரதமரை சந்திக்க கடிதம் அனுப்பப்பட்டும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளமை, இந்துமா சமுத்திரத்தின் பலமான பாக்கு நீரிணையின் இரு கரைகளிலும் ஈழத்தமிழர்களும் தமிழக தமிழர்களும் கேரளமும் தங்கியுள்ளமையே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்.

ஈழத் தமிழினத்தின் வாழ்வும் வளமும் மிக்க பாக்கு நீரிணையில் இந்திய சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின், முதலில் அழிவது ஈழத்தமிழர்கள்தான். அதனை ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்கப் போவதில்லை என்பதை வலுவாக பதிவு செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது

யாழ். விமான நிலையத்தினூடாக நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (03) யாழ் விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்குப் பயணமானார்.

 

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை இந்திய நிதியமைச்சர் பார்வையிட்டார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு நிதியமைச்சரை சந்தித்தார்.

 

அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் பின்னர் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்,

‘அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்ததையும், நாட்டின் தேவைக்காக அவர்கள் ஒருவரையொருவர் பல்வேறு வழிகளில் ஆதரித்ததையும் மரியாதையுடன் நினைவுகூர வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் ‘வடக்கிலும் இந்த நாட்டிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்புக்காகவும் குறிப்பாக இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் நன்றி தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

 

அத்துடன், எமது நாட்டுக்கு சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், இந்திய நிதியமைச்சரின் வருகை இந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் வளர்க்க உதவும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

நல்லூர்க் கந்தனை தரிசித்தார் நிர்மலா சீதாராமன்

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றிருந்தனர்.

இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வருகைதந்த அவர், அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில்  கலந்து கொண்டிருந்ததோடு,அங்கு கூடியிருந்த சிறுவர் சிறுமியர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள சீன தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 06 ஆம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள  குறித்த குழுவினர் வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களையும் குறித்த குழுவினர் பார்வையிடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ரூபா 6,500 படி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ். பல்கலைக் கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்களவை உறுப்பினர் சசி தரூர் – சந்திரிக்கா இடையே சந்திப்பு

இந்தியாவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான ஆச்சார்யா சசி தரூர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், கடந்த சில நாட்களாக பல உரைகளை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் அவர் சந்தித்துள்ளார்.

Posted in Uncategorized

இந்திய மக்களவை உறுப்பினர் சசி தரூர் – சஜித் இடையில் சந்திப்பு

இந்தியாவின் புகழ்மிக்க புத்திஜீவியும்,திருவனந்தபுரத்துக்கான மக்களவை உறுப்பினருமான கலாநிதி சசி தரூருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (01) இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த தேசிய அறிஞர்கள் பேரவையின் ஏற்பாட்டில் “அரச ஆளுகையின் தீர்க்கமான அம்சங்கள்”குறித்து கலந்துரையாடும் பயிலரங்குத் தொடரின் மற்றுமொரு கட்டமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

2015 ஆம் ஆண்டு ஒக்ஸ்பேர்ட் (oxford ) பல்கலைக்கழகத்தில் கலாநிதி சசி தரூர் ஆற்றிய உரை இந்திய அரசியலிலும் இந்திய சமூகத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, இன்றும் பல இந்தியர்கள் குறித்த பேச்சை நூற்றாண்டின் பேச்சாகவும்  கருதுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் உயர் பதவிகளை வகித்த அவர், சிறந்த இராஜதந்திரியாகவும் மதிக்கப்படுகிறார். இச்சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சூழலியல் சுற்றுலா முறைமை தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் யோசனைகள் பரிமாறப்பட்டன.

இந்திரா காந்தி ஆரம்பித்த இந்தியாவில் புலிகளைப் பாதுகாக்கும் திட்டம் (Project Tiger) மற்றும் இதன் மூலம் ஏற்பட்ட “சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையின்” வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதேபோன்றதொரு திட்டமாக சஜித் பிரேமதாச அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட Project Leopard  எனும் இலங்கை சிறுத்தையை பாதுகாக்கும் திட்டம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இது மட்டுமல்லாது,நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இதற்கு பிராந்திய ரீதியாக எடுக்கக்கூடிய முனைப்பு குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதோடு,

ஒவ்வோர் துறைகளையும் ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வை குறித்தும் சஜித் பிரேமதாச அவர்கள் இந்தியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

’எட்கா’ ஒப்பந்தம் குறித்து இந்தியாவுடன் மீளவும் பேச்சுவார்த்தை

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 12வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2016 மற்றும் 2018 க்கு இடையில் நடைபெற்ற 11 சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான பேச்சுக்கள் நிறுத்தப்பட்ட நிலையில் 12 சுற்று பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Posted in Uncategorized