இலங்கையின் கடன்மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத்தயார் – பிரான்ஸ்

கடன்களை மறுசீரமைப்பதற்கான இலங்கையின் முயற்சிக்குத் தாம் ஆதரவு வழங்கத்தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கொய்ஸ் பக்றெற் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகப்பேரவையின் இலங்கை – பிரான்ஸ் வர்த்தகக் கவுன்ஸிலுடனான சந்திப்பின்போதே பிரான்ஸ் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கும் என்று உறுதியளித்துள்ள அவர், நீர்வழங்கல், சக்திவலு, நகர அபிவிருத்தி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு போன்ற துறைகளில் பிரான்ஸின் பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதாரத்தில் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பிரான்ஸ் கம்பனிகள் எத்தகைய பங்களிப்பை வழங்கமுடியும் என்பது குறித்தும் அவர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் பிரான்ஸுக்கான இலங்கைத்தூதுவர் மனீஷா குணசேகர, பிரான்ஸ் வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரான்ஸ் கம்பனிகளின் இலங்கைப் பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பீர்களா ? – பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அந்நாட்டு அரசாங்கத்திடம் கேள்வி

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்தினால் தமிழ்மக்களுக்கு எதிராகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனப்படுகொலை குறித்தும் அவர் அந்த எழுத்துமூல ஆவணத்தில் உள்ளடக்கியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்ற போதிலும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான மிகக்குறைந்தளவிலான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகப் பின்லாந்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடைகள் விதிக்கப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்கியமைக்காக பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீக்கு நன்றி தெரிவித்திருக்கும் தமிழீழ சர்வதேச இராஜதந்திரப்பேரவை, போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக ஏனைய சர்வதேச நாடுகளும் தடைகளை விதிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரம்

புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கூடியிருந்தது.

பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், நீர், வங்கி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

இலங்கையில் மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும்: அர்ஜுன்

இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பன்னாட்டு உதவிகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது.

குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பிரதிபலன்னை கருதாமல் பல உதவிகளை செய்துவருகின்றது.

சீனாவும் பல விடயங்களை இங்கே செய்கின்றது, கொழும்பில் ஒரு கலாசார மண்டபத்தினை அமைத்தார்கள் ஆனால் அதன் நிர்வாகத்தை அவர்களே வைத்துள்ளனர். ஆனால் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசாரமண்டபத்தின் நிர்வாகத்தை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கின்றது. இருப்பினும் அதனை யாழ்பாண மாநாகரசபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

அத்துடன் வறுமை, பொருளாதார பிரச்சனைகளில் இருந்து இலங்கை மக்கள் விடுபடவேண்டும். அதற்குரிய மேம்பாடான திட்டங்களை வகுத்து நல்லவிதமாக செயற்படுவதற்கான பிரார்த்தனைகளை நாம் செய்கிறோம்.

இதேவேளை இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது. இங்கு வசிக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம், தமிழ்மக்களாக இருக்கலாம் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து மதமாற்றும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியிருந்தது. எனவே மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும். அமைதியான வளமான இலங்கை உருவாக வேண்டும்’ என கூறினார்.

கல்முனை பொது நூலக பெயர் மாற்றம்; இன முரண்பாடு உருவாக வாய்ப்பு

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தத்தமது கருத்துக்களில் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

கல்முனை மாநகர சபை இம்மாத அமர்வில் கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரான ஏ.ஆர்.எம் மன்சூர் என்பவரின் பெயரை சூட்டுவதாக தெரிவிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது.கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சராக செயற்பட்ட இவர் இன மத பேதங்களின்றி சேவைகள் செய்தவர்.இருந்த போதிலும் தற்போது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து சிலர் இவ்விடயத்தை அரசியலாக்கி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.

எனவே கல்முனை பொது நூலகமானது இரு சமூகத்தை சேர்ந்தவர்களின் பொதுச்சொத்து.இந்த நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்படுவதை சிலர் மறைமுகமாக முன்னெடுக்கின்றனர்.இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.சில அரசியல்வாதிகளே தங்களது அபிலாசைகளை நிறைவேற்ற இவ்வாறு செயற்படுகின்றனர்.தேர்தல் காலங்களில் தான் இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.கல்முனை மாநகர கட்டடத்தில இயங்குகின்ற நூலகமானது கல்முனை பொது நூலகம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் ஒரு தனி நபரின் பெயரை இந்த நூலகத்திற்கு ஏன் தற்போது சூட்ட முயற்சிக்கின்றீர்கள் என கேட்கின்றோம்.தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த செயற்பாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம்.ஏனெனில் இனங்கள் இரண்டும் ஒன்றுபட்டது தான் கல்முனை பிரதேசம்.கல்முனை மாநகர சபை இரு சமூகத்திற்கும் சொந்தமானது.எனவே இனியாவது இச்செயற்பாடுகளை தவிர்த்து இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தாதீர்கள் என கேட்டுக்கொள்கின்றோம்.என குறிப்பிட்டனர்.

இவ் விசேட செய்தியாளர் சந்திப்பில் கல்முனை மாநகர உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் வடிவுக்கரசு சந்திரன் கதிரமலை செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

இரண்டு இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர்கள் அமைச்சரவை, சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் என்பன இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிராகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

47 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்படாத தனியார் விநியோகஸ்தர்களின் மூலம் மருத்துவப் பொருட்களை வாங்குவதில் அமைச்சர்களின் அமைச்சரவையின் பங்கு

பதிவு செய்யப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து மருத்துவப் பொருட்களை வாங்குவதற்குப் பதிவு விலக்கு வழங்குவதில் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குமுறை ஆணையகத்தின் பங்கு

அவசரகால கொள்முதல் செயல்முறை உட்படக் கொள்முதல் வழிகாட்டுதல்களுடன் இணங்காமை

சுகாதார அமைச்சர் மற்றும் மருந்தாக்கல் ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரியின் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பவற்றைச் சவாலுக்கு உட்படுத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துக் கொள்வனவு, மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் புறக்கணிப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதியை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது.

அத்துடன், குடிமக்களின் அடிப்படை உரிமையான சமத்துவம் மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவை இதன் மூலம் மீறப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய வலுக்கட்டமைப்புக்களை இந்தியாவுடன் இணைப்தால் பாதிப்பில்லை

இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இலங்கையின் தேசிய சக்தி வலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் ஆபத்து எதுவும்எதுவுமில்லை உலகின் ஏனைய நாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன என குறிப்பிட்டுள்ள அமைச்சர் இலங்கை தனது சக்தி வலு கட்டமைப்பை இந்தியாவுடன் இணைப்பதால் என்ன ஆபத்து ஏற்படப்போகின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான மனோநிலையே எங்கள் பொருளாதாரத்தை பல தசாப்தங்களாக வீழ்ச்சியை நோக்கி இட்டுச்சென்றது என குறிப்பிட்டுள்ள அவர் எண்ணெய் குதங்களை நாங்களே வைத்திருக்க விரும்பியதால் பல தசாப்தங்களாக அவற்றை அபிவிருத்தி செய்யாமல் வைத்திருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் யதார்த்தத்தில் நாங்கள் பொதுமக்கள் தனியார் கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தால் கடந்த 12 மாதங்ளில் எங்களின் எரிசக்தி பாதுகாப்பு எங்கோ சென்றிருக்கும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டில் சக்தி வலு பாதுகாப்பு காணப்படுவதைஉறுதி செய்வதே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் முன்னெடுக்கவேண்டிய முதல் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் சக்தி வலு பாதுகாப்பு என்பது உணவு பாதுகாப்பு மருந்து பாதுகாப்பு உட்பட அனைத்துடனும் தொடர்புபட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நாங்கள் தீர்மானங்களை எடுப்போம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணவேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக தெளிவாக உள்ளார் கடந்த 12 மாதங்களில் இந்தியா எங்களிற்கு பெரும் ஆதரவாக காணப்பட்டுள்ளது எனவும் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் முறையிடப்பட்டது.

இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு விசாரணைக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணை வரும் என தெரிவித்தனர்.

அண்மையில் இராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது தபால் மூல வாக்கெடுப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த நிலையில் அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்குச் சீட்டுக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அரசாங்க அச்சகம் வாக்குச் சீட்டுக்களை உரிய திகதிகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமை காரணமாக இவ்வாறு தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் – அமெரிக்க பிரதிநிதிகள் குழு இடையே பேச்சுவார்த்தை

இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நாட்டை வந்தடைந்த அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை சந்தித்தனர்.

செவ்வாய்க்கிழமை (14) இரவு இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் நாட்டை வந்தடைந்த தூதுக்குழுவிற்கு இந்திய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணை பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி. ரோயல் தலைமை தாங்கினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.

அமெரிக்க – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மை மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.