வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் உள்ளன – அலி சப்ரி

2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு சேவைக்கு நாற்பது பேர் கொண்ட குழுவை யூலை முதல் ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் (10) அதன் தலைவர் அமைச்சர்  அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது. இதன்போது வெளிநாட்டு சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளவர்களின் தரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையை வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதரகங்களின் நுழைவாயில்களுக்கு அருகில் உள்ள நடைபாதைகளில் பல இலங்கையர்கள் காலை முதல் நண்பல் வரை நீண்ட வரிசையில் நிற்பது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இது சிறந்ததொரு நிலைமை அல்ல என்றும், இதனைத் தவிர்ப்பதற்கு
முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சின் நாளாந்த செயற்பாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியிருப்பதுடன், இதுபோன்ற சர்வதேசத்தின் அக்கறைகளை உள்நாட்டில் முகங்கொடுப்பதற்கான வழிகளை ஆராய்வதில் வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் இங்கு விளக்கமளித்தார்.
கடன் மீள்கட்டமைப்புச் செயற்பாடு தொடர்பில் பல்வேறு சர்வதேச நாடுகளுடன்
ஒருங்கிணைந்த அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பெண்கள், பாலின சமத்துவம் குறித்த தனி நிறுவனம் அவசியம்

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலப்படுத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்படும் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பன இணைந்து பாலின சமத்துவும் மற்றும் பெண்களின் உரிமைக்காகத் தயாரித்துவரும் இந்தச் சட்டமூலத்தின் ஆரம்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பில் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கு பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த தனியான நிறுவனமொன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட திட்டங்களை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழியளித்தார். அத்துடன் சட்ட மற்றும் கொள்கைகளைத் தயாரிக்கும்போது சகல நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குத் தேவைப்படும் ஊழியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி அவசியமாகவிருந்தால், தூதரகங்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள், பாலின சமத்துவம் குறித்த தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்துக்கு வருகை தந்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார். அத்துடன், சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவும் தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார்.

பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்துக்கான தனியான
ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் உட்பட ஏனைய தேர்தல்களிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், மாகாணசபைத் தேர்தலில் தற்போதுள்ள பெண்களுக்கான 25% இட ஒதுக்கீட்டை குறைக்க வேண்டாம் என உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன், அவ்வாறான எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றும் ஜனாதிபதி பதிலளித்தார்.

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குக் காணப்படும் வெற்றிடங்களைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், பொலிஸ் நிலையங்களில் பெண்களின் முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் போது அவர்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்குச் செல்வதைத் தடுப்பது, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்த விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அதுகோரல, ரஜிகா விக்ரமசிங்ஹ, மஞ்சுளா திசாநாயக, முதிதா பிரசாந்தி, கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்திருந்தனர்

2027 க்குள் கண்ணிவெடி இல்லாத இலங்கையை உருவாக்க திட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து  கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் கைச்சாத்திட்டுள்ளது. அந்த சாசனத்தின்படி, ஜூன் 2027க்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.

கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் அவசர வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு தொடக்கம் கண்ணிவெடி அகற்றும் திட்டம் இலங்கை பூராக இயங்கி வருகிறது, 2010 இல்  ‘தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்’ நிறுவப்பட்டது. இது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. மற்றும் கண்காணிக்கிறது. இதற்கு இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்களிக்கிறது.

இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு மேலதிகமாக, இரண்டு சர்வதேச அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும், இரண்டு உள்ளூர் அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் இந்நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
மற்ற நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் 17.5  மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுகின்றன.

இதுவரை 870,412  சாதாரண கண்ணிவெடிகளும், 2,169 இராணுவத் தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெடிக்காத 365,403 இராணுவ வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 1,184,823 தோட்டாக்கள் மற்றும் ஏனைய சிறிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்படும் நிலக் கண்ணிவெடிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய இராணுவ வெடி பொருட்கள் பொதுமக்களின் கைகளில் சிக்குவதைத் தடுப்பதற்காக இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் தினந்தோறும் வெடிக்கச் செய்து அழிக்கப்படுகின்றன.

நிலக் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 12,000 க்கும் மேற்பட்டவர்கள் நிலத்தை அகற்றும் செயல்முறையின் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்ட முடிந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐ.நா. அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூ குழுவினர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணியின் தூதுக்குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தனர்.

கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன், எம்பி உதயகுமார் ஆகியோர் கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் கலந்துகொண்டனர்.

ஐ.நா. சபையின் சார்பாக இலங்கையின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அதிகாரிகள் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவுடன் கலந்துகொண்டனர்.

 

 

 

இந்திய வம்சாவளி மலையக தமிழரது அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், ஐ.நா. உலக உணவு திட்டம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள், உணவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக கணக்கெடுத்து அடையாளப்படுத்தியுள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்புகளிலும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விளக்கி கூறப்பட்டன.

இச்சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம், பணிப்பாளர் பீட்டர் டியூவுக்கு, கூட்டணி தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, தென்னிலங்கையில், வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் தொடர்பில் ஆராய விரும்புகின்றோம் என கொழும்பில் உள்ள ஐ.நா. காரியாலயம் விடுத்துள்ள அழைப்பின் பேரில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது

யாழ். மாநகர மேயர் ஐ.நா. குழு இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த சந்திப்பின் போது, யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் நிறைவில், ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கு, நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர், பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம் – ஒருவர் கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா. தலைமையகத்திற்கு அருகாமையில் உள்ள பௌத்தலோக மாவத்தையில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, மாணவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெற் பயிர்களை அரச அதிகாரிகள் அழிக்க முற்பட்டமையால் கிளிநொச்சியில் அமைதியின்மை

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான ஒதுக்கீட்டு பிரதேசங்களை ஆக்கிரமித்து பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வியாழக்கிழமை (17) குறித்த செய்கைகளை அழிப்பதற்காக பொலிஸாருடன் சென்ற வேளை நீர்ப்பாசன திணைக்களத்தினருக்கும் நெற் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஒதுக்கீட்டு பிரதேசங்களில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் இவ்வாறு பயிர்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலை காணப்பட்டதுடன் குறித்த பிரதேசத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான அறிக்கைகள் எதுவும் மாவட்ட உயர்நிலை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அறிய முடிந்துள்ளது.

 

இது ஒருபுறமிருக்க கிளிநொச்சி கிழக்கு நீர்பாசன பொறியிலாளர் பிரிவின் கீழுள்ள கல்மடுக்குளததின் கீழ் அரச அதிகாரிகள் உள்ளடங்கிய சிலர் சட்ட விரோதமாக மேற்கொண்ட பயிர் செய்கைகளுக்கு குளத்து நீர் திறந்து வழங்கியது தெடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விவசாய ஆராய்ச்சிக்கு அமெரிக்காவிடம் உதவி கோரும் ஜனாதிபதி

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்குத் தேவையான காணிகளை அடையாளங்கண்டு விவசாயத்தை நவீனமயப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நவீன விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) இணைப்பதன் மூலம் இலங்கையின் விவசாய ஆராய்ச்சித் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய பல அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதில் பேராசிரியர் பிரதீபா பண்டாரநாயக்க போன்ற ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாபெரும் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவிகள் மூலம் இலங்கைக்கு வளவாளர்களை அழைத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் – சீனப்பிரதிநிதி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் கொங்ரியன் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற வகையில் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் மற்றும் ஏனைய வசதிகள் காணப்படுகின்ற போதும், முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷன்ஹோங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை  பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சீன விசேட பிரதிநிதி லிங் கொங்ரியன் இதனைத் தெரிவித்தார்.

தேவையான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, முதலீட்டுக்கு நட்பான சூழல் உருவாக்கப்பட்டால் ஹம்பாந்தோட்டடை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஏனயை பொருளாதார வலயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு சீனா அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் நீண்டகால நட்பு நாடாக சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பாராட்டிய சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன், வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் கொங்ரியன் இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் விசேட கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக விளங்குவதற்குத் தேவையான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொழில்துறை மற்றும் விவசாயத்துறையில் மேம்படுத்துவதற்குத் தேவையான திறமைமிக்க இளைஞர் சமுதாயம் போன்ற வளங்களை இலங்கை கொண்டிருப்பதாக பாராளுமன்ற நட்புறவு சங்கத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இலங்கை சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர்  நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்

பசில் இலங்கை திரும்புகிறார்: பட்ஜெட் வாக்கெடுப்பில் 2/3 பெரும்பான்மை பெற திட்டம்!

வரவு செலவு திட்டத்திற்கு  2/3 பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து மீண்டும் இலங்கை திரும்புகிறார்.

அண்மைய அரசியல் நெருக்கடியின் போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பின்னர் சனிக்கிழமை இலங்கை திரும்பவுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்திற்கான 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ராஜபக்ச, சனிக்கிழமை இலங்கைக்கு வருவார் என்றும், நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தது போல் பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கத் தொடங்குவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், உடனடியாக டிசம்பரில் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பிப்பின் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னெடுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குப் பிறகு புதிய தேர்தலுக்குச் செல்வது என்ற முடிவு எடுக்கப்படும் வரை அரசாங்கம் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்படும் வகையில் வரவு செலவு திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதே முன்னாள் நிதியமைச்சரினதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

பசில் பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பார் எனவும் மற்றும் அடித்தள மட்டத்தில் கட்சியின் பிரபலத்தை மீண்டும் பெறுவதற்காக தரை மட்ட பிரச்சாரத்தை தொடங்குவார். பசில் நாடு திரும்பியவுடன் கட்சியில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது என டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.