இலங்கை தமிழ் அகதிகளுக்கு வெளிநாட்டில் தஞ்சம்: ஐ.நா.வுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கனடா நாட்டில் தஞ்சம் புகும் நோக்குடன் 306 ஈழத்தமிழ் அகதிகள் பயணித்த கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் புயலில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைத்திருப்பது நிம்மதியளிக்கிறது. சிங்கப்பூர் அரசு காலத்தினால் செய்த உதவி பாராட்டத்தக்கது.

முதலில் போராலும், பின்னர் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாமல், பிற நாடுகளில் தஞ்சமடைய தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு அகதிகள் தகுதியும், கண்ணியமான வாழ்வுரிமையும் மறுக்கப்படுகிறது.

அதனால் கனடா, இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் தேடி பாதுகாப்பற்ற முறையில் கப்பல் பயணம் மேற்கொள்ளும் ஈழத்தமிழ் அகதிகள் பல தருணங்களில் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்; இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தரவும், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயக பொன்’ விருது

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னைஅர்ப்பணித்த மூத்த அரசியல் பிரமுகரை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகின்றது.

‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தின் வருடாந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பாடநெறியை முடித்த 75 பேர் டிப்ளோ பட்டத்தைப் பெற்றனர்.

இந்த வருடாந்த டிப்ளோமா வழங்கும் விழாவில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய பாடங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த புகழ்பெற்ற அரசியல் பிரமுகர்களின் மதிப்பீடு நடத்தப்படுகின்றது.

அதற்கமைய, அதில் இரா.சம்பந்தன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஜனநாயகப் பொன் விருதைப் பெற்றார். நான்கு தசாப்த கால பாராளுமன்ற வாழ்க்கையில் ஜனநாயகத்துக்காகச் சம்பந்தன் காட்டிய அர்ப்பணிப்பை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார்.

அமெரிக்க செனட் சபை குழு வடக்குக்கு விஜயம்

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை நேற்றைய தினம் (07) திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து ஒரு மணிநேரம் வரை தவிசாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சோ.சுகிர்தன், படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், பல ஆண்டுகளாகியும் மக்கள் மீள்குடியேற்றப்படாமை, படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

1614 ஏக்கர் காணியை சுவீகரிப்பது தொடர்பாக கடந்த மாதம் சுற்றுலா மற்றும் காணி அமைச்சால் பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் தொடர்புடைய ஆவணங்களும் அமெரிக்க செனட் சபையின் குழுவினருக்கு கையளிக்கப்பட்டது.

இதன்போது, பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வோமெனவும் அமெரிக்க செனட் சபையின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனை சாவடிகள்

யாழ்ப்பாணத்தின் சோதனை சாவடிகளை அமைத்து, வீதி சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் , யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து , வாகனங்களை பரிசோதிப்பதன் மூலம் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் வியாபாரிகள் அல்லது போதைப்பொருள் பாவிப்போர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் , அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு தகவல்களை தந்து உதவுமாறு மக்களிடம் கோருகிறோம். தகவல்களின் இரகசிய தன்மை பேணப்படும். அதனால் மக்கள் பயமின்றி இராணுவ முகாமில் தெரிவிக்கலாம்.

எமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி சமூகத்தில் இருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்காகவே , வீதி சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். அதனால் பொது மக்கள் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்துள்ளார்

மூழ்கிக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் மீட்பு

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.

படகிலிருந்த இலங்கைப் பிரஜையொருவர் கடற்படையை இன்று தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் ஆபத்திலிருப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்

இந்நிலையில், கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.

அந்தவகையில், படகிலிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும், வியட்நாம் நோக்கிச் செல்வதாகவும் இலங்கைக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த டி சில்வா, ஏனையோரின் அடையாளங்கள், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

இலங்கை அகதிகள் 306 பேருடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்

306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே தத்தளித்துக் கொண்டிருப்பதாக குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இக் குரல் பதிவில் கப்பலில் தத்தளித்து கொண்டிருக்கும் 306 இலங்கையர்களையும் காப்பாற்றுமாறும் ஐ.நாவிடம் இதனை தெரியப்படுத்தும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சர்வதேச செய்தியாளர், பிரான்சிஸ் கரிசன் Frances Harrison மேற்படித் தகவலை உறுதிப்படுத்த முடியுமா என தற்போது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

306 இலங்கை தமிழர்களுடன் (30 குழந்தைகள்) கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடற்கரையில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ் சரிசெய்வது அவசியம் என்று பயணிக்கும் ஒருவரின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது.

எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டின் போது இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது புதிதாக பதவியேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோருக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்றும் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஸ்லோவேனியா ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்க திட்டம் – செல்வம் எம்.பி

எல்லை நிர்ணயம் மூலம் தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியாவில் பல கிராமங்களை அனுராதபுரத்துடன் இணைக்கும் செயற்பாடாகவும், திருகோணமலையின் சில பிரதேசங்களை பொலனறுவையுடன் இணைக்கும் செயற்பாடாகவும், தமிழ் பிரதேசங்கள் பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுக்குள் உள்வாங்குவதற்கான செயற்பாடாகவும், எங்களது பிரதேசங்களை காவு கொள்ளக்கூடிய நிகழ்ச்சி நிரலிலே எல்லை நிர்ணயம் இடம்பெறலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

இந்த எல்லை நிர்ணயம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இருப்பதோடு இது தொடர்பாக மக்களுடனும், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அத்துடன் ஐந்து பேரை உள்ளடக்கிய எல்லை நிர்ணய குழு தனித்து, தன்னிச்சையாக தங்களது முடிவினை எடுத்து செயற்படுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டோம். மேலும் இதன் ஊடாக நகரசபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களினை பிற்போடுவதற்கான நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன் தற்போது நகரசபை மாநகரசபையாகவும், பிரதேசசபைகள் நகரசபைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. எல்லை நிர்ணம் செய்யாமல் எவ்வாறு சபைகளை தரமுயர்தினார்கள் என்பது கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எல்லை நிர்ணயத்தை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடத்தி முடித்து தேர்தலை நடத்துவதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

காலத்தை பின்னடிக்காது உடனடியாக ஒரு கால எல்லைக்குள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு அதனை மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் காணப்பித்து தேர்தலை நடத்த வேண்டும். மக்களது பொதுவான அபிப்பிராயத்தை பெறுவதற்காக தேர்தல்களை பின் போடாது நடத்துவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஸவினர் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீள தமது செல்வாக்கை நிலைநிறுத்த முற்படுபகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் சனநாயகத்தை பேசிக் கொண்டு அவர்கள் சொல்லும் செயற்பாட்டை செய்யக் கூடாது. அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு பலரிடம் இருக்கின்றது. இதனை ஜனாதிபதி மாற்ற வேண்டும்.

இது தவிர, மஹிந்த அமரவீர அமைச்சர் கடந்த 23 ஆம் திகதி வவுனியாவிற்கு விஜயம் செய்தார். விவசாய அமைப்புக்களை அழைத்து வனவளத்திணைக்களங்களின் காணிகளில் உழுந்து சாகுபடி செய்யலாம் என ஆசை வார்த்தை கூறினார். தற்போது காணிகளை துப்பரவு செய்து விவசாயிகள் உழும் மட்டும் பொறுமையாக இருந்த வனஇலாகா அவர்கள் உழுத பின் அதில் காட்டு மரங்களை நடும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

இதனை ஏற்க முடியாது. இது பற்றி நாடாளுமன்றத்திலும் பேசுவோம். பணத்தை செலவு செய்து உழுத பின் வன இலாகா செய்யும் செயற்பாடு ஏற்க முடியாது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வனஇலாகா வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் மௌனம் காட்டாது உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி விவசாயிகளுககு தீர்வைப் பெற்றுப் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டேரஸ்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் – 27’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தேசிய சுற்றாடல் மற்றும் அது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் தெளிவுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் 27’ மாநாடு எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் பங்கேற்கும் அதேநேரம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலும் உரையாற்றவுள்ளார். இதேவேளை, அங்கு நடைபெறவுள்ள உலக உணவு பாதுகாப்பு பேரவை மற்றும் உலக தலைவர்களின் பேரவையிலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் சாசனத்தின் கீழ் இணங்கியுள்ளமைக்கு அமைய காலநிலை தொடர்பான உலகின் கூட்டு இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கோப்-27 இல் நாடுகள் ஒன்றிணைகின்றன.

கிளாஸ்கோவில் நடந்த கோப் – 26 மாநாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அதன் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தமக்குள்ள பொறுப்புகளை மேலும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்காக இம்முறை உலக நாடுகள் கோப்-27 இல் ஒன்றுகூடி தீர்மானம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு வாக்களிப்போம் – ஜீவன்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தை யார் முன்வைக்கின்றார் என்பது முக்கியம் அல்ல அதில் உள்ள விடயங்கள்தான் பிரதானம். அந்தவகையில் வரவு – செலவுத் திட்டதில் உள்ளடக்கங்கள் தொடர்பில் முதலில் ஆராயப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடிய விடயம் இருந்தால் நிச்சயம் ஆதரிப்பதோடு ஏனைய கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்போம். எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததால்தான் தோட்ட நிர்வாகத்துக்கு துணிவு பிறக்கின்றது எனவே தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.