ஜனாதிபதியை சந்தித்த ஜப்பானிய நிதியமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி (H.E. Mr. SUZUKI Shunichi) உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? என சஜித், பிரசன்ன சபையில் வாக்குவாதம்

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியது யார் என்பதை நாங்கள் தெரிவிக்க தேவையில்லை. அதனை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டு அறிந்துகொள்ளங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து, நாடு வங்குராேத்து அடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு நடுக்கடலில் விருந்துபசாரம் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன்போது அதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதமகொறடா தெரிவிக்கையில், புள்ளி போட்டுக்கொள்வதற்காக அவசியமற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவ்வாறு கேள்வி கேட்கவேண்டும் என்றால், பிரத்தியேகமாக கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதற்கு பதில் வழங்குவார் என்றார்.

அதற்கு சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், நான் மக்களுக்காகவே இந்த விடயத்தை முன்வைத்தேன். எனது தனிப்பட்ட எந்த விடயத்தையும் முன்வைக்கவில்லை. அதனால் மக்களின் பணத்தில் நடு்க்கடலில் விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் எமக்கும் கருத்து தெரிவிக்க முடியும். உங்கள் சகோதரி திருட்டு பணம் மாற்றியபோது, அந்த சம்பவத்தில் இருந்து அவரை பாதுகாத்தது, மஹிந்த ராஜபக்ஷ் என்பதை மறந்துலிட வேண்டாம்.அது பொருளாதாரத்துக்கு பாதிப்பான விடயம்.

அதேபோன்று உங்கள் தந்தைதான் புலிகளுக்கு ஆயுதம் வழங்கி இருந்தார். இதுபோன்று எங்களுக்கும் தெரிவிக்க முடியும் என்றார்.

அதற்கு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், புலிகளுக்கு பணம் வழங்கியது யார் என்பது தொடர்பில் பொது மக்கள பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். யார் பணம் வழங்கியது. யாருடைய பணத்தை வழங்கியது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அத்துடக் நானோ எனது குடும்பத்தில் வேறுயாரும் திருட்டுப்பணம் மாற்றியதில்லை. இவ்வாறு பொய் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம். அதனை நான் பொறுப்புடனே தெரிவிக்கிறேன், அதனால் துறைமுகத்துக்கு சொந்தமான கப்பலை பயன்படுத்திக்கொண்டு எவ்வாறு விருந்துபசாரம் நடத்த முடியும் என்பது தொடர்பில் பதிவளிக்க வேண்டும் என்றார். என்றாலும் இதுதொடர்பில் பதிலளிக்கவில்லை.

பிரித்தானிய இளவரசி யாழ். நூலகத்திற்கு விஜயம்

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (11) மதியம் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கண்ட அதிதிகள் யாழ்ப்பாண நூலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

இலங்கையின் நண்பனாகவே துறைமுக நகரத்திற்குச் சென்றேன் – டேவிட் கமரூன்

நான் இலங்கையின் நண்பன் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன்தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சீனாவின் கொழும்புதுறைமுக நகரதிட்டத்திற்கு நான் இலங்கையின் நண்பனாகவே விஜயம் மேற்கொண்டேன் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்துதெரிவித்துள்ள டேவிட் கமரூன் தான் சீனாவின் நண்பர் என்பதை நிராகரித்துள்ளதுடன் இலங்கையின் நண்பனாகவே நான் கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் சுற்றுலாவிற்கு சென்றவேளை இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் வந்திருந்தார் நான் அவரை சந்தித்த பின்னர் அதன் பின்னர் நான் கொழும்பு துறைமுக நகரத்தை சென்று பார்வையிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஜனவரி மாதம் டேவிட்கமரூன் கொழும்பின் துறைமுக நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் ஆபத்துக்கள் தொடர்பில் ஆசிய இணைய கூட்டமைப்பு கடும் எச்சரிக்கை

இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் விரிவான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என கூகுள் மெட்டா அமேசன் உட்பட பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆசிய இணைய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆசிய இணைய கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

உத்தேசசட்டமூலம் அதன் வடிவத்தில் தற்போது பல ஆபத்துக்களை கொண்டுள்ளது என ஆசிய இணையகூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் தடை செய்யப்பட்ட அறிக்கைகள் என்பதை பரந்துபட்ட அளவில் வரையறை செய்கின்றது இணையவழி கருத்துப்பரிமாறை சட்ட விரோதமாக்குகின்றது என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தணிக்கை மற்றும் கருத்துவேறுபாடுகளை அடக்குதல் குறித்த கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் காணப்படும் குற்றங்கள் என தெரிவிக்கப்படும் விடயங்கள் பல ஏற்கனவே சட்டத்தில் உள்ளன இதன்காரணமாக சட்டநிச்சயமற்ற தன்மைதேவைக்கு அதிகமான தன்மை காணப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தவறான அல்லது தீங்குஏற்படுத்தும் இணையவழி உள்ளடக்கங்களை குற்றமாக்குவது என்பது கருத்துச்சுதந்திரத்தின் மீதான கடுமையான மற்றும் தேவையற்ற தடையாகும் எனவும் என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு என்ற கட்டமைப்பு குறித்து புதிய சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு இது அரசியல் தலையீடுகள் அதிகார துஸ்பிரயோகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ள பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டுப்பாட்டு சட்டங்கள் புத்தாக்கத்தையும் முதலீட்டையும் பாதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளன.

வடக்கு, கிழக்கில் மீள்குடியேறியோரின் காணிப்பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் தீர்வு – பிரதமர் தினேஷ்

வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும். அது தொடர்பில் ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போதும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் மக்களின் காணி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பல வருடங்கள் எடுத்தன. அதனால் சில பிரதேசங்களில் தற்காலிகமாக குடியேறியவர்களை நிரந்தர குடியேற்றவாசிகளாக்குவதற்கு தேவையான பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்த ஒவ்வொரு தடவையும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டன. அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

1600 குடும்பங்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாமலிருந்தன.அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளின் காணிகள் தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்ட பூர்வமற்ற ரீதியில் குடியிருப்போரை அங்கு நிரந்தர குடியிருப்பாளர்களாக்குவதற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதால் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அதன் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு நடுத்தர மக்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அதன் முதல் உரிமையாளர்கள் உரிமை கோரி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்கள். எவ்வாறாயினும் இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் சில காணிகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகி யுள்ளன.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தற்போது வசிக்கும் காணிகளுக்கு சட்டபூர்வமான பதிவுகள் இல்லாத காரணத்தால் அந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

அவ்வாறான குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் காணி உரிமைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கம் கொள்கை ரீதியாக அதனை மேற்கொள்ளவுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டும் அபிவிருத்தி கூட்டங்களில் இதன் குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அவ்வாறான மக்கள் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அனைவருக்கும் நலன்புரி மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். விவசாயம், மீன் பிடி அல்லது வேறு தொழில்களில் ஈடுபடுவோர் அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் எந்த விவசாயக் காணிகளிலும் சட்டபூர்வமானாலும் சரி சட்டபூர்வமற்ற விதத்திலும் சரி குடியிருப்போரை துரத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்றார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு எனும் விஷச்செடியை வேருடன் ஒழிக்க வேண்டும் – உதய கம்மன்பில

தண்டிக்கப்பட வேண்டிய போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்திய இராணுவத்தினரை தண்டிக்கும் வகையில் சட்டமியற்றுவது எந்தளவுக்கு நியாயமானது.

தண்டனை மற்றும் மன்னிப்பு என்பன இருதரப்புக்கும் வழங்க வேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்ற விஷச் செடியை வேரோடு அழிக்க மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நிறுவனங்களை அவமதித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் விருப்பத்துக்கு அமைய எவரையும் விசாரிக்க முடியாது.பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கவும் முடியாது.ஆகவே சிறப்புரிமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் விளக்கம் பெற வேண்டும் அத்துடன் நாட்டு மக்களை போல் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரணமானவர்கள் என்பதையும் மக்கள் பிரதிநிதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளிவிவகார அமைச்சர் கடந்த முதலாம் திகதி வெளியிட்டுள்ளார். உண்மையை கண்டறியும் விவகாரம் நீதியமைச்சுடன் தொடர்புடைய நிலையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஏன் வர்த்தமானியை வெளியிட வேண்டும் . பிரிவினைவாத கொள்கையுடைய மேற்குலக நாடுகளில் நோக்கங்களுக்கு அமையவே வெளிவிவகாரத்துறை அமைச்சர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் உண்மையை கண்டறியும் மாதிரியிலான ஆணைக்குழுவை அமைப்பதாக குறிப்பிடப்படுகிறது.ஆனால் அது உண்மையல்ல,2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளன.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தேசிய மட்டத்தில் இவ்வாறான சட்டங்கள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 17 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டது.தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினரை தண்டிக்கும் வகையில் சட்டமியற்றுவது எந்தளவுக்கு நியாயமானது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டு மக்கள் உயிர் வாழும் சூழலை இராணுவத்தினரே உறுதிப்படுத்தினார்கள்.ஆகவே இராணுவத்தினரை வஞ்சிக்கும் இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கும் சட்டமூலம் என்ற விஷச் செடியை வேருடன் அழிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.

நாட்டில் மாற்றுக் கருத்துடையோரை அடக்கவே பயங்கரவாதச் சட்டம் – விஜித ஹேரத்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் எப்போதும் மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்தி இருக்கிறது. அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலத்தில் பயங்கரமான பல விடயங்கள் இருக்கின்றன என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனால் அரசாங்கத்துக்கு எதிரக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அதன்போது அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். அரசாங்கத்திற்கு எதனையாவது செய்யுமாறு கூறினாலோ, செய்ய வேண்டாமென்று கூறினாலோ பயங்கரவாதியென்று கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கிறது. ஆனால் எமது நாட்டில் மாற்று கருத்துடையவர்களை அடக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கவிதை எழுதியதற்காக இளைஞர் ஒருவரர் பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதேபோன்று அனைத்து பல்கலைக்கழக சங்கத்தின் தலைவர் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் 1983இல் ஜே.வி.பியினரை தடை செய்தனர். ஆனால் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்கின்றோம். வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த தூண்டியது. மக்கள் வீதிக்கு இறங்கும் போது அவர்களை ஒடுக்க இதனை பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர். அதனால் எமது நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் உண்மையான பயங்கரவாதத்தை தடுப்பதற்கு இந்த சட்டம் பயன்படுத்துவதில்லை. மாறாக மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த வருடம்கொண்டுவந்தது. ஆனால அப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்ததால் அதனை அரசாங்கம் அன்று வாபஸ் பெற்றுக்கொண்டது. தற்போது மீண்டும் இந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்திருக்கிறது. இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பயங்கரமானவை. அரசாங்கம் இந்த சட்டத்தை எப்போதும் தனது எதிர் தரப்பினரை அடக்குவதற்கே பயன்படுத்தி வந்திருக்கிறது. எதர்காலத்திலும் அதனையே மேற்கொள்ளப்போகிறது. வரலாற்றில் இதற்கான அனுபங்கள் உள்ளன என்றார்.

ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய இளவரசி

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இளவரசி ஆனின் கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூம் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் கொண்டாடும் வகையில் இளவரசி ஆன் இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.

இந்த ஆண்டு பிரித்தானிய அரச குடும்பத்தின் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவாகும்.

இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருக்கும் இளவரசி ஆன், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்ல உள்ளார்.

மறைந்த எலிசபெத் மஹாராணியாரின் இரண்டாவது மகளும் ஒரேயொரு பெண் வாரிசும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் ஒரே ஒரு சகோதரியும் இவர் என்பது குறிப்பித்தக்கது.

மதிப்பீடுகளை மேற்கொள்ளாது அரசாங்கம் வற்வரியை அதிகரித்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

எந்தவித மதிப்பீட்டு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலே அரசாங்கம் வற்வரி அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (10) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் வற்வரியை நூற்றுக்கு 18வீதத்தால் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அரசாங்கத்துக்கு முறையாக பதில் தெரிவிக்காமல் இருக்கிறது.

ஏனெனில் வற்வரி அதிகரிப்பு மேற்கொள்ளும்போது அதுதொடர்பாக எந்த மதிப்பீட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலே இதனை அரசாங்கம் செய்திருக்கிறது.

வற்வரியை அதிகரித்த பிறகு இதுபோன்ற கணக்கெடுப்பை மேற்கொள்வது கடும் பிரச்சினைக்குரிய விடயமாகும். வற்வரி அதிகரிப்பதற்கு முன்னர் இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மதிப்பிட்டு ஆராய்ந்த பின்னரே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் வற்வரி உயர்வால் கிராமப்புற,நகர்ப்புற மற்றும் தோட்டப்புற சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் தற்போது கணக்கெடுப்பு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது.

முறையான நிதி நிர்வாகத்தில் வரிகளை விதிக்கும் அல்லது அகற்றும் முன் நிதி தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வாறானதொன்றை முன்னெடுக்கவில்லை.

அத்துடன் வற்வரி அதிகரிக்கப்பட்டபோது பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கிறது.