தேர்தல் முறை சீர்திருத்தம் எதிர்வரும் தேர்தல்களை பாதிக்காது; ஜனாதிபதி, நீதி அமைச்சர் உறுதியளித்ததாக மனோ தெரிவிப்பு

தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்புபடுத்தாது. இவ்விவகாரம் புதிய பாராளுமன்றத்துக்கு ஒத்தி வைக்கப்படும். அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் எம்பி இதுபற்றி ஊடகங்களுக்கு கூறியதாவது,

தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது. இதுவே எமது நிலைபாடாக நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது.

அன்றைய அமைச்சர், இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தலைமையில் கடைசியாக இடம்பெற்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில், தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் ஏற்பட்டது போன்ற தோற்றப்பட்டை அரசாங்கம் காட்ட முயல்கிறது. இது பச்சை பொய்.

பதினாறு உறுப்பினர்களில் சரிபாதி எட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்து, அறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டோம். அங்கே ஏற்பட்ட ஒரேயோரு ஏகமனதான தீர்மானம், சட்டத்தை திருத்தி, விகிதாசார முறையில் மாகாணசபைகள் தேர்தல்களை நடத்துவது என்பதாகும். அதையும்கூட அரசாங்கம் செய்யவில்லை.

இந்நிலையில் திடீரென அமைச்சரவையில் தேர்தல் முறை சீர்திருத்தம் வேண்டும் என்று ஒரு நாள், பிறகு இப்போது வேண்டாம் என்று இன்னொரு நாள் தீர்மானிப்பது கேலிக்கூத்து ஆகும்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்த போது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இல்லை என்றார். அதேபோல், சில தினங்களுக்கு முன் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை சந்தித்த போது அவரும் இதையே எனக்கு தெரிவித்தார். ஆகவே இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகிறது.

இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் 60 விகிதமானோர் பல மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். எனவே, எமது மக்களை பாதிக்கும் எந்தவொரு அடாத்தான, தன்னிச்சையான தேர்தல் முறை மாற்றங்களையும் நாம் ஏற்க மாட்டோம்.

விகிதாசார முறையை மாற்றாமல் உள்ளக மாற்றங்களை பற்றி வேண்டுமானால் நாம் பேசலாம். இது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொன்று தொட்டு வரும் நிலைபாடு ஆகும். எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பாடுகள் காணும் போது இதுவும் எமது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும்.

கோட்டாபய ராஜபக்ச தவறுகளில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி – மனோகணேசன்

சிங்கள பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்றுதிரண்டு அரகலவை நடத்தினார்கள் என்று தன் நூலில் கூறும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள ‘சதி’ என்ற நூல் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் கருத்துக் கூறிய மனோ எம்.பி. மேலும் குறிப்பிட்டதாவது:-

கொழும்பிலும், நாடு முழுக்கவும் நடைபெற்ற அரகலவில் பங்குபற்றிய மக்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினர், 2019, 2020 தேர்தல்களில் மொட்டுச் சின்னத்துக்கு, வாக்கு அளித்தவர்கள். அவர்கள்தான், கோட்டாபயவின் முட்டாள்தனமான, பொருளாதாரக் கொள்கைள் காரணமாக வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன் தெருவுக்கு வந்து போராடியவர்கள்.

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூட இவை பிரச்சினைகள்தான். ஆனால், அவற்றையும் மீறிய இன, மத ஒடுக்குமுறைகளால் அவர்கள் துன்பம் அடைந்தார்கள். ஆங்காங்கே ஒரு சில தமிழ், முஸ்லிம் மக்கள் இறுதிக் கால கட்டங்களில் அரகலவில் கலந்து கொண்டார்கள். சில அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அதீத கற்பனை பண்ணிகொண்டு, “இத்தோடு சேர்த்து இந்நாட்டில் இனவாதத்தையும் ஒழித்து விடுவோம்” என முழங்கியதும் உண்மைதான். “நல்லது நடந்தால் சரி” என நாம் அவர்களை வாழ்த்தியதும் உண்மைதான். அவர்கள் இன்று அரசியல் அரங்கில் அந்த அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்களைக் காணவில்லை.

எது எப்படி இருந்தாலும், அரகல முழுக்க முழுக்க, வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன், தெருவுக்கு வந்த சிங்கள பெருந்திரள் மக்களால் நடத்தப்பட்டது ஆகும். அதுவும் 2019, 2020 தேர்தல்களில் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களித்த மக்களால் நடத்தபட்டது. இதுதான் உண்மை. சிங்கள – பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு பிடிக்காததாலேயே, அவர்கள் அரகலவை நடத்தினார்கள் என்ற மாதிரி கூறி, உண்மையைத் திரிபுபடுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குக் கடுமையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்” என்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்தது தேர்தல் ஒப்பந்தம் அல்ல – மனோ கணேசன்

“நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என எஸ்ஜேபி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக கூறி எம்முடன் உடன்பாட்டில் கையெழுத்து இட்டுள்ளார். இது எமது தமுகூவின் தூரநோக்கு சிந்தனையின் வெற்றி.

எஸ்ஜேபி அரசு உருவாகுமானால், அப்போது, எமது மக்கள் தொடர்பாக முன்னெடுக்ககூடிய நலவுரிமை திட்டங்கள் என்ன, என்பதுபற்றிய எழுத்து மூலமான உள்ளக சமூகநீதி உடன்பாடு இதுவாகும். இது தேர்தல் ஒப்பந்தம் அல்ல. தேர்தல் ஒப்பந்தம், தேர்தல் வரும்போது வரும்.

தேசிய அளவில் நடந்துள்ள இந்நிகழ்வு பற்றி கேள்வி எழுப்பும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஐதேக கூட்டணி, அனுரகுமாரவின் என்பிபி கூட்டணி, தரப்புகளுக்கு எமது இந்த சமூகநீதி உடன்பாடு விபரங்களை அனுப்பி வைக்க நாம் தயார். அவர்களது பதில் நிலைப்பாடுகள் என்ன என அவர்கள் எமக்கு அறிவித்தால் அவை பற்றியும் கலந்தாலோசிக்க நாம் தயார். ரணிலும், அனுரவும் தயாரா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

இந்நாட்டில் வாழும் 15 இலட்சம், மலையக தமிழ் மக்கள் என்ற இன அடையாளத்துக்குள், சரிபாதி ஜனத்தொகை இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கிறார்கள். இந்நாட்டின் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது, இந்த பெருந்தோட்ட மக்கள், சமூக பொருளாதார வளர்ச்சியில் இந்நாட்டிலேயே பின்தங்கியவர்கள்.

இதற்கு காரணம், மலைநாட்டு அரசியல்வாதிகள் மட்டுமே என்ற கவர்ச்சிக்கரமான பிரசாரம் முன்னேடுக்கப்படுகிறது. இது வரலாற்றை திட்டமிட்டு மூடி மறைக்கும் சூழ்ச்சி. இந்த கண்ணாம்பூச்சி கவர்ச்சி கதையில் நாம் மயங்கி விடக்கூடாது. மலைநாட்டு அரசியல்வாதிகள் மீது பெரும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் உண்மைகளும் உள்ளன. ஆனால், எமது மக்களின் குறை வளர்ச்சிக்கு முதல் மூன்று காரணங்கள், பேரினவாதம், இந்திய அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவை ஆகும்.

சுதந்திரம் பெற்றவுடன் எமது குடியுரிமை, வாக்குரிமைகளை பறித்து எமக்கு இன்று காணி, கல்வி, சுகாதாரம் ஆகிய உரிமைகள் முழுமையாக இல்லாமல், எம்மை பெருந்தோட்ட அமைப்புக்குள்ளே இரண்டாந்தர பிரஜைகளாக வைத்திருப்பது, பேரினவாதம் ஆகும். எம்மை கேட்காமலே, எம்மில் பெரும்பான்மையோரை நாடு கடத்தி, எம்மை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தியது, இந்திய அரசு ஆகும். எம்மை இங்கே அழைத்து வந்து, எமது உழைப்பில் நன்கு சம்பாதித்து விட்டு, எம்மை அம்போ என விட்டு ஓடியது, இங்கிலாந்து அரசு ஆகும். இந்த வரலாற்றால், ஏற்பட்டுள்ள, தாழ்நிலைமைகளில் இருந்து வெளியே வருவது சுலபமான காரியம் அல்ல.

இந்த மூன்றுக்கும் பிறகுதான், மலைநாட்டு அரசியல் கட்சிகளின் பொறுப்பு வருகிறது. அதிலும், தமிழ் முற்போக்கு கூட்டணி, எட்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, ஒரே ஒருமுறை மட்டும் ஆட்சியில் இருந்த முற்போக்கு அரசியல் இயக்கம் ஆகும். தேசிய, சர்வதேசிய அரங்குகளில் எமது பிரச்சினைகளை காத்திரமாக எடுத்து பேசி, முன் வைத்து, தீர்வு தேடும் இயக்கம், எமது கட்சியாகும். அதன் ஒரு அங்கம்தான், “நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என எஸ்ஜேபி தலைவர் சஜித் பிரேமதாசவை, மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக கூறவைத்து, நாம் செய்துகொண்டுள்ள சமூகநீதி உடன்பாடாகும்.

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – மனோகணேசன்

ராஜபக்ஷர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம். கோட்டாபய ராஜபக்ஷ போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16 ஆம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது. அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று முதல் நாள் அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன். ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன். நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை. ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்ஷர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை. எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.

இன்று இந்த ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை. ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும்.

16ம் திகதி நவம்பர் 2019 முதல் இன்றுவரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன். அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள். சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன்.

எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை. ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என்றார்.

பொலிசார் சீருடை இல்லாது சிவில் சமூகத்துடன் தொடர்பாடக்கூடாது! மனோ எம்.பி. அறிவுறுத்தல்

வெள்ளவத்தை பொலிஸ் வலயத்தின் பசல்ஸ் ஒழுங்கை பகுதியில், இரகசிய சுற்றுவளைப்பு தேவைக்காக சீருடை அணியாமல் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதியில் வீதியில் சாதாரண கடமையில் ஈடுபட்டிருந்த மகேஷ்வர குருக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை, பொலிசார் தமது செய்கை தொடர்பில், வண.குருக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டதுடன் சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் இந்து குருக்கள் – பொலிசார் மத்தியில் ஏற்பட்ட பிணக்கு தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

வாகன போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்ட சிறு பிணக்கை இனவாத சொற்பிரயோகம், வாக்குவாதம், உடல்ரீதியான பலவந்தம் வரை பொலிசார் கொண்டு சென்றுள்ளனர்.

குருக்களின் புதல்வர் பலவந்தமாக சீருடை அணியாத பிரிவினரால் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இரு தரப்பும் சமாதான உடன்பாட்டுக்கு வந்து பிரச்சினை, திங்கட்கிழமை (22) மாலையே முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மத குருமார்களுக்கு உரிய பெருந்தன்மையுடன் பொலிசாரை தான் மன்னித்து விட்டதாக, குருக்கள் என்னிடம் தெரிவித்தார்.

குருக்கள் அவ்விதம், கூறி இருந்தாலும், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய மட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இனி பொலிஸ் சீருடை இல்லாமல் பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத்துடன் தொடர்பாடலில் ஈடுபடக்கூடாது எனவும், வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுபாஷ் காந்தவெலவிடம் நான் கண்டிப்பாக கூறியுள்ளேன்.

அதன்படி தனது நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக பொறுப்பதிகாரி காந்தவெல எனக்கு உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்தார்.

பொலிஸார் கிராமசேவகரின் வேலைகளை பார்க்கக்கூடாது – மனோ கணேசன்

பொலிஸார் பொலிஸூற்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதனை விடுத்து கிராம சேகவர் வேலையை பார்க்க கூடாது.

தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன. வாழ்த்து தெரிவிப்பதற்காவா மதம், பிறந்த திகதி உள்ளிட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

ஆகவே தமிழர்களை இலக்காகக் கொண்ட தகவல் திரட்டலை உடன் நிறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிருலபனை,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை, நாரஹேன்பிட்டிய, தெஹிவளை,பம்பலப்பிட்டி, மட்டக்குளி,முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்காக கொண்டு தகவல் திரட்டும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தகவல் கோருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றன. பொலிஸ் கட்டளைச்சட்டம் பற்றி பேசும் இலங்கை பொலிஸூக்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெரியவில்லை.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் நாட்டின் அரசகரும மொழிகளாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் சிங்கள மொழியில் மாத்திரமே சகல விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன.

இது டரான் அலஸின் பொலிஸ் இராச்சியமா, விக்கிரமசிங்கவின் பொலிஸ் இராச்சியமா ? அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா? இந்த நாட்டில் யுத்தம் இல்லை,பயங்கரவாதம் இல்லை அவ்வாறான நிலையில் ஏன் ஏன் வீடு வீடாக செல்கின்றீர்கள். தகவல் திரட்டுகின்றீர்கள்.

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை வழங்குவதை போன்று பொலிஸார் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார்கள்.பொலிஸார் பொலிஸூக்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதை விடுத்து கிராம சேகவரின் வேலையை பொலிஸ் செய்ய கூடாது.

விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் முழு பெயர்,தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மதம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

மதம் தொடர்பான விபரங்களை ஏன் கேட்கின்றீர்கள்.தீபாவளி,நத்தார் மற்றும் தைப்பொங்கள் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து அனுப்புவதற்காகவா ? அதேபோல் பிறந்த திகதி கேட்கப்படுகிறது.பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவா ?அத்துடன் தனிப்பட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

பாதாள குழுக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாட்டாளர்களுடன் பொலிஸூக்கு தொடர்புண்டு.நான் ஒட்டுமொத்த பொலிஸாரையும் குறிப்பிடவில்லை.

ஒருசிலர் சிறந்த முறையில் சேவையாற்றுகிறார்கள்.99 சதவீதமான சிறந்தவர்கள் உள்ளார்கள்.தனிப்பட்ட தகவல்களை கோரும் போது பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்.

தொலைபேசி இலக்கத்தை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியும்.தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் கோரப்படுகின்றன.ஆகவே இதனை உடன் நிறுத்துங்கள் என்றார்.

மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் – மனோ எம்.பி

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்”  என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார். இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.

ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது. இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதியின் அரசு கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன்.

எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது முகநூல், டுவிட்டர் எனும் எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில்,  மட்டக்களப்பு மாவட்ட எம்பிக்களுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் பொலிசில் புகார் செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும்.  அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறை.

இதைவிடுத்து சண்டியன் மாதிரியும். மனநோயாளி மாதிரியும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன்” என்றி ஹிஸ்டீரியாகாரனாக கத்துவது எந்த வகையில் நியாயம்?

ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னை தூற்றிய ராஜாங்கன தேரரை கைது செய்தார்.

இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என அங்கொடையில் அடைத்து விடுங்கள்.

சில காலம் முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது? பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுகளை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.

இன்று இந்த அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை ராணுவம் உதவுகிறது. நாட்டின் இராணுவம் இவருக்கு சோறாக்கி சாப்பாடு போடுகிறது. இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி துவேசமாக பேசி வருகிறார். பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் சட்டையை பிடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் தொப்பியை தட்டி விடுகிறார். மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார். அரச அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அப்படியானால், இவர் யார்?

இனவாதத்தினால் தமிழரை ஒரு போதும் அழிக்க முடியாது – மனோ

“இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் சரி தமிழர்களை ஒழிக்கவோ, அழிக்கவோ முடியாது.”

இவ்வாறு கனடா – டொரென்டோவில் நடைபெற்ற தமிழர் தெருத் திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால், இனவாதம் இருக்கின்றது.

இனவாதத்தை அழித்து, வீழ்த்தி நியாயமான தீர்வைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தமிழக தாயகம், இலங்கை தாயகம் ஆகியவற்றுக்கு வெளியே இங்கே கனடாவில் வாழ்கின்ற தமிழர்கள்தான் அதிக துடிப்புடன் இருக்கின்றீர்கள். இந்நோக்குக்காக நீங்கள் அதிக பங்களிக்க வேண்டும்.” – என்றார்.

Posted in Uncategorized

13 ஐ முழுமையாக அகற்றினால் நீங்கள் இதுவரை திருந்தவில்லை என்பதை உலகம் அறியும் – மனோ கணேசன்

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

அதைவிட 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை உமது கட்சி, பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும். அதன் அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், விமல் வீரவன்ச எம்பி தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவை நோக்கி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துக்கொண்ட கூட்டணி தலைவர் மனோ கணேசன், எம்பீக்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான கட்சிகள் கூட்டாக அமைத்துள்ள உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவைவிடம் மேலும் கூறியதாவது;

நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன். அதுவே எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை. நீங்கள் எந்தவொரு தீர்வுக்கும் தயார் இல்லை. அதுதான் உங்கள் கொள்கை. அப்படியானால் உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

இந்த ப்ளஸ், மைனஸ் வெட்டிப்பேச்சுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, உங்கள் கட்சியின் சார்பாக, 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை, பாராளுமன்றத்தில் கொண்டு வாருங்கள். அதை இந்த பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது, எம்பீக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம். உலகமும் தெரிந்துக்கொள்ளும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம்.

உலகம் சொல்வதை கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, சாளரம், கதவுகளை மூடி வைத்து இந்நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால்தான் இன்று இந்நாடு விழுந்து போய் கிடக்கிறது. ஆகவே இப்போதும் நீங்கள் திருந்தவில்லை என உலகம் அறியட்டும்.

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

தமிழரின் தலை பற்றிப் பேசும் மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்ததே! – மனோ கணேசன்

“தமிழரின் தலையைக் கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்குத் தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தைத் திருடர்கள், தரகுப் பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்தக் குடும்பத்துடனேயே மேர்வின் சில்வா குடும்பம் நடத்தினார் என்பதும் நாடறிந்த சங்கதி. ஒருவேளை அத்தகைய திருட்டுத் தரகுப் பணம் பெரும் பிரச்சினையால் ராஜபக்சர்களுடன் நடத்திய குடும்பம் பிரிந்ததோ என்ற கேள்வியும் எப்போதும் இந்நாட்டு மக்கள் மனங்களில் இருக்கும் சங்கதி.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“எல்லாவற்றையும் மிஞ்சிய உலக மகா கேலிக்கூத்து என்னெவென்றால் உலகத்துக்கு அஹிம்சையைப் போதித்த போதிசத்துவர் பெயரில் இவர் தமிழர்களின் தலையை வெட்டுவாராம். இவரைப் போன்றவர்களிடமிருந்து பெளத்தைப் போதிசத்துவர்தான் மீண்டும் பிறந்து வந்து காப்பாற்ற வேண்டும்” என்றும் மனோ எம்.பி. குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

“முன்னையை ராஜபக்ச ஆட்சி காலத்தில், ஊடகவியலாளர்களின் கால்களை உடைப்பேன் என்றும் இந்த மேர்வின் சில்வா சொன்னார். அப்புறம் அரச ரூபவாஹிணிக் கூட்டுத்தாபனத்துக்குச் சென்று தன் தலையையே உடைத்துக்கொண்டு வந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு சிங்கள மக்களாலேயே அரசியலில் இருந்து விரட்டப்பட்டார்.

நாட்டில் விகாரைகளையோ, கோயில்களையோ, பள்ளிகளையோ, தேவாலயங்களையோ கட்டுவிப்பதில், பூஜைகளைச் செய்வதில் இடைஞ்சல்கள் ஏற்பட்டால், அதைச் சட்டப்படி அணுக வேண்டும். அந்தச் சட்டமும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

தமிழர் தலைகளைக் கொய்து வருவேன் என்ற இப்படி தலை வெட்டும் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. இவரைப் பாரதூரமானவராக எடுக்கத் தேவையில்லை. ஆனால், இவரது கருத்து பாரதூரமானது. நாட்டில் இன மத குரோதத்தை உருவாக்கும் கருத்து. இவருக்கு எதிராகச் சட்டம் பாய வேண்டும். அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இது பற்றி தங்கள் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் புகார் செய்ய வேண்டும்.” – என்றார்.