வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இம்மானுவேல் ஆர்னோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவரென தெரிய வருகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இனிவருங்காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
அதனையடுத்து அக்கூட்டம் தொடர்பில் இருதரப்பினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டத்தின்போது நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் பிரச்சினைகள், துறைசார் ஒத்துழைப்பு, சர்வதேசப் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பு உறவுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மிகமுக்கியமானதொரு தருணத்திலேயே கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு இடம்பெற்றது.
இதனப்போது கடந்த சில வருடங்களாக சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டியிருப்பதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கைத்தரப்பு விளக்கமளித்தது.
அதேவேளை இலங்கையின் ஜனநாயகக்கட்டமைப்புக்களின் மீண்டெழும் தன்மை குறித்தும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தமது பாராட்டை வெளியிட்டனர்.
மேலும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் குறித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் கேள்விக்குப் பதிலளித்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் முன்னிலையிலுள்ள வழக்குகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
அடுத்ததாகப் பொருளாதார மீட்சியைப் பொறுத்தமட்டில், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எடுத்துரைத்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்புநாடுகளால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தினர்.
அத்தோடு இலங்கை அரசாங்கம் நாணய, நிதி மற்றும் ஆட்சிநிர்வாக மறுசீரமைப்புக்களை ஏற்கனவே மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது குறித்தும், இம்மறுசீரமைப்புக்களின் விளைவாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
அதற்குத் துலங்கலை வெளிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களின் அவசியம் மற்றும் சுயாதீன கட்டமைப்புக்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதுடன் தற்போது திட்டமிடப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளமையைப் பாராட்டினர்.
அதேபோன்று ஜனநாயக நிர்வாகத்தை மேலும் விரிவுபடுத்தக்கூடிய அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஐரோப்பிய அதிகாரிகள் தமது வரவேற்பை வெளிப்படுத்தினர்.
அதுமாத்திரமன்றி ஆட்சிநிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டுக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நினைவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், அக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
மேலும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின்போது, அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அதில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீதியமைச்சானது பொதுமக்களிடமிருந்தும், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்தும் திருத்த யோசனைகளைக் கோரியிருப்பதாக இலங்கைப்பிரதிநிதிகள் மற்றைய தரப்புக்கு எடுத்துரைத்தனர்.
அதுமாத்திரமன்றி வெகுவிரைவில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யவிருக்கின்ற இச்சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைந்திருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதனையடுத்துக் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கான இலங்கையின் கடப்பாடு குறித்து நினைவுபடுத்தியதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் எனவும் வலியுறுத்தினர்.
இதன்போது இலங்கையின் நீதித்துறைசார் மறுசீரமைப்புக்கள் மற்றும் நல்லிணக்க செயன்முறையில் தமது தொடர்ச்சியான ஆதரவை மீளுறுதிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், புதிதாக நிறுவப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ஏற்கனவே இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய அனைத்துக்கட்டமைப்புக்களும் சுயாதீனமாக செயற்படவேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் சுட்டிக்காட்டினர்.
அடுத்ததாக இருதரப்பினருக்கும் இடையிலான வர்த்தகத்தொடர்புகளின் முக்கியத்துவம் குறித்து இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் அவதானம் செலுத்தினர்.
இதில் குறிப்பாக ஐரோப்பிய உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
அதேபோன்று இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை வெகுவிரைவில் இலங்கையில் நடாத்துவதற்கும் இருதரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.
மேலும் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அடுத்த 10 வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான புதிய வழிகாட்டல்களை முன்வைத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், 2020 – 2022 ஆம் ஆண்டு வரையான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு அறிக்கை எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டனர்.
சீனா – யூனான் மாகாண வெளிவிவகாரங்கள் அலுவலகத்துக்கும் , வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தும் இடையில் பொருளாதாரம் , கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
16 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் 20 ஆம் திகதி வரை சீனாவின் யூனான் மாகாண ஆளுநர் வன்(ங்) யூகோவின் இலங்கைக்கான விஜயத்தின் போது, இலங்கை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பரஸ்பர சுற்றுலா, பொருளாதாரம், சந்தை மற்றும் வர்த்தகம், கல்வி, சுற்றுலாத்துறை, விவசாயம், மனிதக் கலாச்சாரப் பரிமாற்றங்கள், மக்களுடைய வாழ்க்கைத்தரம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிறுவனத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்திடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும், மருந்தை கொள்வனவு செய்த முகவர்களிடமும் இதனை அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்களின் அவல நிலை குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், சில சமயங்களில் தர குறைபாடுகள் ஏற்படுகின்றன என்றும் உலக அளவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மருந்தை கொள்வனவு செய்யும் சப்ளையர் கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கைக்கு மருந்துகளை விநியோகித்து வருவதாகவும், இது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி மூன்று அரச மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் பலருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சுமார் 30 நோயாளிகள் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் இழப்பீடும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இன்று (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவிகளிலிருந்து நேற்று நீக்கப்பட்டதையடுத்து புதிய ஆளுநர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம்) திருமதி அஃப்ரீன் அக்தருடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் திருமதி அக்தரிடம் தெரிவிக்கப்பட்டன.
அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
மேலும் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவும் அமெரிக்காவின் முயற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகளை அதன் பாதுகாப்புக் கொள்கையில் முன்வைப்பதற்கான இலங்கையின் முயற்சிகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.
இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில், பிரதி உதவிச் செயலாளர் அக்தர், இராஜாங்க அமைச்சர் தென்னகோனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் இ.சொனெக், தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரச திணைக்களத்தின் தென் மற்றும் மத்திய ஆசிய பணியகத்தின் பிரதி உதவி செயலாளர் அப்ரீன் அக்டரிற்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ்வுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம் வினவிய கேள்விகளுக்கு தெளிவுடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்ததாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம் ஆலோசித்திருந்தார். அதற்கு அமைச்சர், இந்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்கள்,அத்துடன் அவற்றை உள்வாங்குவதற்கான தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தாக்கம் செலுத்திய காரணிகள் ஆகியவற்றை இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பிலும்,இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்படும் மோசடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தை அனுமதிக்கும் போதும் எதிர்க்கட்சியால் தடைகள் வந்தபோதும் , அதனை அனுமதிக்கப்பட்ட பின்னர் நாட்டுக்கு தேவையான சட்ட மூலங்களை அனுமதிக்கும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட சிவில் தரப்பின் பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வேண்டாம் என்றால் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதா என்ற கருத்தாடல் நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கிறது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பிரேரணைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் முடியுமானவகையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதற்போது பிரேரணைகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
மேலும் யுத்தம் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்பு படைகள் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம் வினவியபோது, இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
காணி பிரச்சினை என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல,காணி தொடர்பில் சரியான மதிப்பீட்டை மேற்கொள்ள 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் வனப்பகுதி எத்தனை சதவீதமாக காணப்பட்டது என்பதை ஆராய்வதற்கு காணி அமைச்சு மற்றும் நில அளவை திணைக்களம் ஒன்றிணைந்து காணி அளவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,இதனூடாக நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் நீதி கட்டமைப்பின் அபிவிருத்திக்காக ஐக்கிய அமெரிக்க இராச்சியம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் வழங்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2022 இல் இலங்கையில் மதசிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டார்கள் என அமெரிக்கா மதசுதந்திரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்பின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகள் மோதலுக்கு பிந்தைய நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு பகுதியாக இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களை மதித்து அவர்களை அரவணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர் என அமெரிக்க இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மதசிறுபான்மை குழுக்களை சேர்ந்தவர்களை துன்புறுத்தல் அவர்களிற்கு எதிரான பாரபட்சம் குறித்த கரிசனைகைளை தெரிவிப்பதற்காக தூதரக மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளை சந்தித்தனர் என தெரிவித்தனர் என அமெரிக்கா மத சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என தமிழர்களிற்கான பிரிட்டனின் அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் எலியட் கோல்பேர்ன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆண்டை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏனைய சர்வதேச நாடுகளை பின்பற்றி பிரிட்டன் இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளை விதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு மன்னிப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிவழங்கப்படும்,தமிழர்கள் செழிக்ககூடிய எதிர்காலத்திற்காக நாம் உழைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிபொருள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நிழல் அமைச்சர் பரிகார்டினர் இலங்கையில் நிலைமை இன்னமும் மாற்றமடையவில்லை என தெரிவித்துள்ளார்.
இன்னும் மனித உரிமை பேரவையின் எத்தனை அறிக்கைககள் தேவை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கில் இராணுவபிரசன்னத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள ஹரி பார்டினர் இலங்கை தனது திறமையையும் ஆளுவதற்கான உரிமையையும் இழந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் கட்சியால் இலங்கை மீது கொடுக்கப்படவேண்டிய அழுத்தங்களை கொடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நான் உங்கள் போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்பது குறித்து பெருமிதம் அடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்குமேலாகின்ற போதிலும் எவரும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாதது குறித்து ஆசிய பசுபிக்கிற்கான நிழல் அமைச்சர் கதரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
தொழில்கட்சி வலுவான ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்தை கொண்டுவரும் என தெரிவித்துள்ள கதரின் வெஸ்ட் இலங்கை அரசாங்கத்தின் யுத்தகுற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக ஒரு தடையை கூட பிரிட்டன் விதிக்காதமை குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன்மெக்டொனாக் இது அமெரிக்காவின் நடவடிக்கைகளிற்கு முரணானது அமெரிக்கா இதுவரை இலங்கையின் பல அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது எனவும்குறிப்பிட்டுள்ளார்.
எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இலங்கையில் பொறுப்புக்கூறல் நீதிக்காக தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.