தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை – சபா குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம். எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில் போராடி வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 29.04.2023 அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கள ஆட்சியாளர்களின் நிலையற்ற பொருளாதார கொள்கையினால் தொழிலாளர்களின் உரிமைகள் பெயரளவில் வரையறை செய்யப்பட்டாலும் பாதிக்கப்படும் போது தொழிலாளர்களுக்கான நியாயங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதுடன், அரசின் அதிகார வர்க்கம் மேற்கொள்ளும் சுரண்டல்களும், ஊழல்களும் தொழிலாளர் வர்க்கத்தை மீண்டெழ விடாது தொடர்ந்து ஒடுக்குமுறையில் வைத்துள்ளது.

தமிழர்களின் மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்கான விடுதலை கிடைக்கும் வரை தமிழர் தேசத்தின் தொழிலாளர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவார்கள். எனவே தமிழின விடுதலையே தொழிலாளர்களின் விடுதலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை கவனத்தில் எடுக்க முடியாது

“வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சியினர் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாகவுள்ளனர். அவர்களின் ஆட்டத்துக்கு ஆட முடியாது” என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாட தொழிலாக உள்ளது.

இதனூடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹர்த்தால் போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது. தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களைத் தமிழ்க் கட்சியினர் நடத்துகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு – கிழக்கில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, ஹர்த்தால் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று நீதிமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த உண்மையை கண்டறியப் போகிறார்கள்? எம்.எஸ்.எம் ஐயூப்

தென்ஆபிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போன்ற உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் நோக்கில், தென்ஆபிரிக்க அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவும் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியும் கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தென்ஆபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அந்நாட்டின் ஜனாதிபதி சிறில் ரமபோஸா மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் சந்தித்தனர். உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை நிறுவுதல் பற்றி, இவ்வருடம் ஜனவரி மாதம் அமைச்சரவை எடுத்த முடிவொன்றின் பிரகாரமே, இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக இதுகுறித்து அரசாங்கம் தெரிவித்திருந்தது.

‘உண்மையயைக் கண்டறியும் பொறிமுறை’ என்று பொதுவாக இதை அழைத்தாலும் இது இனப்பிரச்சினை தொடர்பானது. அதேவேளை, இதில் வெளிநாட்டமைச்சர் சம்பந்தப்படுவதன் மூலம், இது இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொள்வதைப்பார்க்கிலும் வெளிநாட்டு அரங்குகளை நோக்கமாகக் கொண்ட காரியம் என்பதும் தெளிவாகிறது.

இந்த விஜயம் தொடர்பான செய்தி வெளியான போதும், அமைச்சர்கள் நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களில் அதைப் பற்றி பெரிதாக எதுவும் வெளியிடவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அரசாங்கம் அறிவிக்கவும் இல்லை. போரால் பாதிக்கப்பட்டவர்களாவது அதைப் பற்றி எந்தவோர் அக்கறையை செலுத்தவும் இல்லை. ஆணைக்குழுக்கள் பற்றி, இலங்கை மக்களுக்கு இருக்கும் கசப்பான அனுபவமே அதற்குக் காரணமாகும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, சர்வதேச மனித உரிமை அமைப்பு அதைப் பற்றி ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டது. ‘பொறுப்புக் கூறலைப் பற்றிய பிரச்சினையை சர்வதேச சமூகம் எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இலங்கை அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமிக்கும். அக்குழு நீண்ட காலத்தை இழுத்தடித்துவிட்டு, எவ்வித பயனையும் காணாமல் முடிவடைந்துவிடும்’ என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

உண்மைதான்! 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து 1984ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வட்ட மேசை மாநாட்டை கூட்டினார். அதில் ஒரு பயனும் கிடைக்கவில்லை.

1985ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைகளை அடுத்து ஜே.ஆர்., 1986ஆம் ஆண்டு அரசியல் கட்சி மாநாட்டைக் கூட்டினார். அதில் ஓரளவுக்கு அதிகார பரவலாக்கல் ஆராயப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை புலிகள் நிராகரித்து மீண்டும் போரை ஆரம்பித்த போது, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1989ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டை ஆரம்பித்தார். அத்தோடு அவர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவென மங்கள முனசிங்க தெரிவுக்குழுவை நியமித்தார். அவர் காணாமற்போனவர்களைப் பற்றிய ஆணைக்குழுவையும் நியமித்தார்.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் 1995ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தார். அது நூற்றுக்கு மேற்பட்ட அமர்வுகளை நடத்திய பின்னர் கைவிடப்பட்டது. காணாமற்போனவர்களைப் பற்றி அறிய, பிராந்திய ரீதியில் மூன்று ஆணைக்குழுக்களை சந்திரிகா நியமித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கென 2006ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, அதன்மூலம் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்தார். அது பலமுறை கூடி, 2010ஆம் ஆண்டு, அதன் அறிக்கையை மஹிந்தவிடம் கையளித்தது. அறிக்கை காணாமல் போய்விட்டது.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கென, 2006ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதியின் தலைமையில் வெளிநாட்டு நிபுணர் குழுவை மஹிந்த நியமித்தார். அக்குழு, அரசாங்கத்திடம் இருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என்று இடைநடுவில் கலைந்துவிட்டது. அதையடுத்து வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற முக்கிய சில மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பற்றி ஆராய, உதலாகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மஹிந்தவின் காலத்திலேயே காணாமற்போனவர்களைப் பற்றிய பரணகம ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து, போரில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதற்காகவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், புதியதோர் ஆணைக்குழுவை நியமிப்பதாக 2020 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கூறியது. ஒரு வருடம் கடந்து அடுத்த மனித உரிமைகள் பேரவை கூட்டம் நெருங்கிய போது, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸின் தலைமையில் அந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அக்குழு கடந்த பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி, தனது இறுதி அறிக்கை நகலிலுள்ள பரிந்துரைகளின் ஒரு சாராம்சத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது. அதிலும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையின் அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், அவ்வாறானதொரு பொறிமுறையை அமைக்கவென அமைச்சர்கள் தென்ஆபிரிக்காவுக்குச் சென்றிருந்தனர்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைப் பற்றிய கருத்து ஆராயப்படுவது முதல் முறைல்ல! இது அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்தது முதல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் வலியுறுத்தி வரும் ஒரு விடயமாகும்.

கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் இதுவும் காணாமற்போனோருக்கான அலுவலகம் உள்ளிட்ட வேறு சில காரணங்களும் முக்கிய விடயங்களாக மேலெழுந்து வந்தன. ஆயினும் போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறையை உருவாக்க இப்போது தான் படிக்கப் போகிறார்கள்.

இவ்வருடம் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த நவம்பர் மாதம் கூறினார். அதற்காகவென பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தார். பின்னர், இரண்டு வருடங்களில் பிரச்சினையை தீர்ப்பதாக கூறினார். இந்தப் பின்னணியில், இந்த உண்மையைக் கண்டறியும் பொறிமுறை பற்றிய விடயமும், களத்தில் குதித்துள்ளமை முக்கியமாகும்.

இங்கு எழும் பிரதான பிரச்சினை என்னவென்றால், எதைப்பற்றி அரசாங்கம் உண்மையயை கண்டறியப் போகிறது என்பதாகும். இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், நாம் எங்கே பிழை விட்டோம் என்பதைப் பற்றி அரசாங்கம் ஆராயப் போகிறதா அல்லது, போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களைப் பற்றி ஆராயப் போகிறதா?

மனித உரிமைகள் விடயத்தைத்தான் ஆராயப் போகிறது என்றால், எந்தக் கால கட்டத்திலான சம்பவங்கள் ஆராயப்படப் போகின்றன? மக்கள் விடுதலை முன்னணிக்கும் அரச படைகளுக்கும் இடையிலான மோதலின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களும் ஆராயப்படப் போவதாக ஒரு சிங்கள பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது.

அவ்வாறாயின், 1971 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அரசாங்கம் ஆராயப்போகிறதா? இது வேகமாக வளர்ந்து வரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைக் குறி வைத்து ஆரம்பிக்கப் போகும் திட்டமா என்ற கேள்வியும் அதன்படி எழுகிறது.

வடக்கு, கிழக்கு போரை மட்டுமே கருத்தில் கொண்டாலும், போர் முடிவடைந்து 14 வருடங்கள் உருண்டோடிவிட்டன. கருத்தில் கொள்ளப்படப்போகும் சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களில் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாகும். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் எத்தனை பேர் சாட்சியமளிக்க முன்வருவார்கள் என்பது அடுத்த கேள்வியாகும்.

அதேவேளை நீதி, நியாயம் பற்றிய விடயத்தில் இலங்கை மக்கள் இன ரீதியாக வெகுவாக பிரிந்து சிந்திக்கும் நிலையில் உள்ளனர். சிலர் செஞ்சோலை தாக்குதலை நியாயப்படுத்தும் அதேவேளை, சிலர் புறக்கோட்டை குண்டு வெடிப்பை நியாயப்படுத்துகின்றனர். இந்த நிலையில், உண்மையைக் கண்டறிவதானது மிகவும் கடினமான விடயமாகும்.

அத்தோடு மனித உரிமைகள் விடயத்தில் எவ்வகையான நியாயத்தை வழங்க வேண்டும் என்பதிலும் மக்கள இன ரீதியாக பிரிந்து சிந்திக்கின்றனர். சிலர் குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமே நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க, வேறு சிலர் குற்றங்களை பரஸ்பரம் ஏற்று ஐக்கியத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

2018ஆம் ஆண்டு அதாவது, ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில் விசாரணைகள் மூலம் உண்மையை கண்டறிந்தாலும் அவற்றைப் பாவித்து எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் பொதுவானதோர் உடன்பாட்டை ஏற்படுத்த எடுக்கும் முயற்சியே மேலும் கருத்து மோதல்களை உருவாக்கும் என்றே தெரிகிறது.

எனினும் கடந்த காலத்தில் அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகளை கவனிக்கும் போது, உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைப் பற்றியும் பெரிதாக எதிர்ப்பார்ப்புகளை வைத்திருப்பதில் பயனில்லை என்றே கூற வேண்டும். அதுதான் இதுவரை கண்டறிந்த உண்மையாகும்.

Posted in Uncategorized

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வாய் திறக்க வேண்டாம்!

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பகிரங்கமாக எதனையும் அறிவிக்க வேண்டாம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் கட்சியின் அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பெரமுனவைச் சேர்ந்தவர்கள் கருத்து வெளியிடுவது சிக்கலாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதிவேட்பாளர் தொடர்பில் அக்கட்சியின் அமைச்சர்கள் பலர் அரசியல் மேடைகளில் கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், கட்சிக்குள் அது தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இனிமேல் ஜனாதிபதிவேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அடுத்த அதிபர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே (28-04-23) இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் கோவிந்தன் கருணாகரம்,ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகளை சந்தித்துள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அவ்விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைவரம் குறித்தும் இப்பிரதிநிதிகள் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்திருந்தனர்.

இந்த சந்திப்பின்போது உயர் ஸ்தானிகரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக்கூறினார் என இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எரிபொருள் விநியோகத்தில் சீனா – மகாநாயக்கர்களுக்கு விளக்கமளித்தார் தூதுவர்!

இலங்கையில் எரிபொருள் விநியோக மற்றும் விற்பனை செயற்பாடுகள் வெற்றியளித்தால் , மசகு எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இவ்வாண்டுக்குள் 120 – 140 மில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொள்ள முடியும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹொங் அஸ்கிரிய பீட மகா நாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேரர்களுக்கு மேலும் தெளிவுபடுத்தியுள்ள சீனத் தூதுவர் ,

கடந்த வாரம் சீனாவின் சினொபெக் நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவரால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விரைவில் , சீன எரிபொருளைக் கொண்ட 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்தால் , நாளாந்தம் 4 மெட்ரின் தொன் மசகு எண்ணெண் சுத்திகரிப்பினை நாட்டில் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றால் , இவ்வாண்டுக்குள் 120 – 140 மில்லியன் டொலர் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

நாம் அறிந்த வகையில் இலங்கை ஒரேயொரு எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மாத்திரமே காணப்படுகிறது. அது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். அதன் இயந்திரங்களும் மிகப் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.

எனவே புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை இலங்கை ஸ்தாபிக்க முடிந்தால் அது இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம். இதனை அமைப்பதன் ஊடாக நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களும் உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை தேரர்களுடனான சந்திப்புக்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சீனத் தூதுவர் , இலங்கை எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பது சீன பெற்றோலிய நிறுவனத்தின் தீர்மானமாகும். அரசாங்கம் என்ற ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதன் பிரதிபலன் நுகர்வோரையே சென்றடையும் என்றார்.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம்

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேசிய கலந்துரையாடல் முடிவடைந்து, தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை காத்திருக்குமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து மேலும் ஆராய வேண்டியமை அவசியமானது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த, உள்நாட்டுப் போரின் அழிவுகளின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு சமூகங்களுக்கு மாத்திரமல்ல என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

70 மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும் ஒரு தேசிய உரையாடலை நிறுவுவது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சட்டமூலத்திற்கான சூழலின் அவசியத்தை சிறப்பாக வரையறுக்கும் என்பதை உறுதியான கருத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலய சிலைகள் மீள் பிரதிஷ்டை

வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் உடைத்தெறியப்பட்டிருந்த நிலையில் குறித்த சிலைகள் இன்று மீளவும் அதே இடத்தில் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதகுருமார்கள், அரசியற் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது – சீன தூதுவர்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நாட்டில் ஸ்தாபிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

மல்வத்த மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது என சீன தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் எரிபொருள் விநியோகத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் 120 முதல் 140 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடு சீனாவினால் நாட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பல புதிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறக்கூடும் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாரி மலையில் வழிபாடுகள் மீள ஆரம்பம்

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத நபரினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆலயம் சார்பில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது வவுனியா நீதவான் நீதீமன்றத்தினால் அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வதையும், ஆலய வழிபாட்டுக்கும் அரச உத்தியோகத்தரினால் தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்றைய தினம் ஜேசுதகுருக்கல் தலைமையில் சுபவேளையில் பூசைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.